அந்திமழை மாத இதழ் காதல் செய்திகள் ததும்பும்
சிறப்பிதழாக இந்த மாதம் வெளிவந்துள்ளது (பிப்ரவரி, 2015). திரைப்பாடல்களில் இடம்பெறும்
கவின்மிகு காதல் வரிகளை இனங்கண்டு இந்த இதழில் கட்டுரையாளர்கள் நமக்குச் சுவையாக வழங்கியுள்ளனர்.
ஒவ்வொருவர் உள்ளத்தையும் ஈர்க்கும் கவித்துவமான வரிகளை இந்த இதழ் முழுவதும் கண்டு மகிழலாம்.
திரைப்பா ஆசிரியர்களின் தரமான வரிகளையெல்லாம் இத்துறையில் நல்ல பயிற்சியுடையவர்கள்
எடுத்துக்காட்டி விளக்கியுள்ளனர்.
இளம் பாவலர்களின் இனிய வரிகளை இயக்குநர்
சீனுராமசாமி நமக்குச் சுவைத்த வடிவில் தருகின்றார். கவிப்பேரரசு வைரமுத்துவின் உள்ளம்
உருக்கும் வரிகளைப் பேராசிரியர் இரவிக்குமார் எடுத்து வழங்கியுள்ளார். செல்வன் அவர்கள்
மூத்த பாடலாசிரியர்கள் முத்துலிங்கம், புலமைப்பித்தன், நா. காமராசன், மேத்தா, அறிவுமதி
,டி.இராசேந்தர் உள்ளிட்டவர்களின் புலமைத்திறத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார். பழனிபாரதியின்
திரையுலக வாழ்க்கை இந்த இதழில் அழகாகப் பதிவாகியுள்ளது. முத்துக்குமாரின் நேர்காணலும்
இதழை மெருகூட்டுகின்றது.
பூமாலையில் ஒரு மல்லிகை என்ற தலைப்பில் மீரா
வில்வம் கண்ணதாசனின் உயிரோட்டமான பாட்டுவரிகளை அடையாளம் காட்டுகின்றார். நெல்லை ஜெயந்தா
வாலி அவர்களின் திரைத்துறைப் பணிகளை நினைவுகூர்ந்துள்ளார்.
பமேலாவின் குழந்தைகள் என்ற தலைப்பில் இயக்குநர்
பமேலா ஜூனேஜாவின் வாழ்வையும், திரைத்துறைப் பங்களிப்பையும் விளக்கும் வகையில் அமைந்துள்ள
தொடர் உள்ளம் கவரும் தொடர்.
திரை இலக்கிய ஆர்வலர்களுக்குத் தித்திக்கும் பொங்கல் இந்த
இதழ்!
அரசியல் செய்தி, சிறுகதை ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.
அந்திமழை இந்த இதழில் பண்ணாராய்ச்சி வித்தகர்
குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டையும் வழங்கியுள்ளனர். எங்களின்
எளிய முயற்சியை ஊக்கப்படுத்திப் பண்ணாராய்ச்சி வித்தகரை நினைவுகூர்ந்துள்ள அந்திமழை
ஆசிரியருக்கு நன்றி.
தொடர்புக்கு:
அந்திமழை
24.ஏ,
கண்பத்ராஜ் நகர்,
காளியம்மன்
கோயில் தெரு,
விருகம்பாக்கம்,
சென்னை – 600 092
தொலைபேசி:
044 – 43514540
மின்னஞ்சல்:
editorial@andhimazhai.com