நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
Folly Beach லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Folly Beach லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 செப்டம்பர், 2011

அதுவும் நடந்தது…


தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முகப்பில் மு.இளங்கோவன்

 அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் நிறைவுநாள் நிகழ்வில் உரையாற்றி மேடையிலிருந்து இறங்கிய உடன் விடுதி அறையை ஒப்படைக்க வேண்டும் என்ற செய்தி கிடைத்தது. நாளை காலைதானே நாம் புறப்படுகின்றோம் என்று என் பொருட்களை ஒழுங்குபடுத்தாமலிருந்தேன். ஆனால் திடுமெனக் கிடைத்த செய்தியால் நானும் நண்பர் ஒருவரும் அறையில் இருந்த பொருட்களை ஐந்து நிமிடங்களுக்குள் என் பெட்டிக்குள் திணித்தோம். வரவேற்பறையில் கொண்டு வந்து அவற்றை வைத்தோம். நிறைவாக நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பிரியா விடைபெற்றேன். இந்த நேரத்தில் சென்னை மணிமேகலை பிரசுரத்தின் உரிமையாளர் ரவி தமிழ்வாணன் அவர்களின் அறிமுகம் அமைந்தது. இடைப்பட்ட நேரத்தில் நாங்கள் இருவரும் பேராசிரியர் சந்தோஷ் அவர்களின் விருந்தோம்பலில் இருக்கும்படி திட்டம் இருந்தது. பகலுணவுக்குத் திரு. சந்தோஷ் இல்லம் சென்றோம்.

 எளிமையான முறையில் சிறப்பான உணவு வழங்கினர். அவர்களின் வீட்டில் இருந்த குழந்தைகள் சுவரில் இடைவெளியில்லாமல் கிறுக்கி இருந்ததைப் பார்த்ததும் என் குழந்தைகள் நினைவு வந்தது. எங்கள் பிள்ளைகள் இவ்வாறு கிறுக்கியதால் நாங்கள் ஒரு வீடுமாறும் அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போனதையும் நாங்கள் கொடுத்த முன்தொகையைப் பெறுவதில் இழுபறி ஏற்பட்டதையும் நினைத்துக்கொண்டேன். இரவி தமிழ்வாணன் அவர்கள் இரவு தொடர்வண்டியில் பயணம் செய்ய உள்ளதை நினைவூட்டிச் சிறிது ஓய்வெடுக்க விரும்பினார். அவரை ஓய்வுகொள்ளச்செய்து நானும் திரு. சந்தோஷ் அவர்களும் புகழ்பெற்ற தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றோம்.

 இன்று(04.07.2011) அமெரிக்கத் தன்னுரிமைநாள் என்பதால் பல்கலைக்கழகம் விடுமுறை. என்றாலும் ஓய்வு இல்லாமல் ஆய்வு மாணவர்கள் இங்கும் அங்கும் ஆய்வில் மூழ்கிக் கிடந்தனர். இவர்களைப் பார்த்தபொழுது ஓய்வுநாளிலும் ஆய்வில் ஈடுபட்டிருந்த செயல் நினைத்து மகிழ்ந்தேன். என் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் தமிழகப் பல்கலைக்கழகங்களைப் பார்த்து, “இரவில் விளக்கெரியாத பல்கலைக்கழகங்கள் குட்டிச்சுவராகிக்கொண்டிருக்கும்” என்று சாபமிட்டது நினைவுக்கு வந்தது. தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகம் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாகும்.

 இங்குதான் நம் ஐயா தண்டபாணி குப்புசாமி அவர்கள் பேராசிரியராகப் பெருமையுடன் பணிபுரிகின்றார் என்பது அறிந்து பூரித்துப் போனேன். நண்பர் சுந்தரவடிவேல், ஒளி ஓவியர் கண்ணன், நம் சந்தோஷ் உள்ளிட்ட அன்பர்கள் அங்குப் பணிபுரியும் நிலையை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன்.

 இந்த இடத்தில் ஒரு குறிப்பு: இங்குதான் என் மாணவர் நாகேசுவரன் அவர்கள் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு வருவதைத் தமிழகம் திரும்பிய பிறகு அறிந்து வருந்தினேன். ஆனாலும் செய்தி அறிந்தவுடன் அவர்க்கு உதவும்படி என் பேராசிரியர் நண்பர்களுக்குப் பிறகு வேண்டுகை மடல் விடுத்தேன். திரு நாகேசுவரன் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் என்னிடம் பயின்ற உயர் பண்பு வாய்த்த மாணவர். அவர்போல் உலகின் பல பகுதிகளில் என்னிடம் கலவையில் பயின்ற மாணவர்கள் இருப்பதும், இணையம் வழியாகப் பெரும்பான்மையானவர்கள் தொடர்பில் இருப்பதும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

 தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகம் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கு முதன்மையான பல ஆய்வுகள் நடைபெற்று வருவதாக நண்பர் சந்தோஷ் குறிப்பிட்டார். அவர் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் என்ற முறையில் அவரின் ஆய்வுக்கூடத்தைப் பார்வையிட்டேன். நானும் மேல்நிலைக் கல்வியில் அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்ததால் ஆய்வுக்கூடப் பட்டறிவு எனக்கு உண்டு.


மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி

 சற்றொப்ப முப்பதாண்டுகளுக்கு முன்பு மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் வேதிக்கூடத்தில் நடந்த பல நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. எங்கள் வேதியியல் பேராசிரியர் கலியமூர்த்தி ஐயா அவர்கள் இல்லாதபொழுது எம் உடன் பயின்ற மாணவர்கள் செய்த ஒவ்வொரு சிறுசெயலும் நினைவுக்கு வந்து என்னைத் திருத்தின. அங்குள்ள பல ஆய்வுக்கூடங்களைச் சுற்றிப் பார்த்தோம். ஆய்வுக்கு முதன்மையளிக்கும் உயர்கல்வித்துறையினரின் ஈடுபாடு மகிழ்ச்சி தந்தது. ஒவ்வொரு துறையிலும் ஆய்வாளர்கள் வரைந்த ஆய்வுக்கட்டுரைகள் அறிக்கைப் பலகையில் இருந்தது. ஆய்வாளருக்கு அந்த நாடு தரும் முதன்மை வியப்பைத் தந்தது. நம் நாட்டில் உள்ள இருட்டடிப்பு, அழுக்காறு, சேறுபூசல் நினைத்து வருந்தினேன். மீண்டும் சந்தோஷ் இல்லம் திரும்பினோம்.

 இரவி தமிழ்வாணன் அவர்கள் ஓய்விலிருந்து மீண்டு எங்களுக்காகக் காத்திருந்தார். சந்தோஷ் மகிழ்வுந்தில் போளி பீச் எனப்படும் அழகிய கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். எங்கள் மகிழ்வுந்து ஒரு மணி நேரம் ஓடி நின்றது.

 அன்று அமெரிக்கத் தன்னுரிமை நாள் என்பதால் கடற்கரையெங்கும் மக்கள் தம் குடும்பத்தாருடன் பொழுதைக் கழிக்க வந்திருந்தனர். கடற்கரையெங்கும் ஒரே திருவிழாக் கோலம். காற்று வாங்கும் உடையில் அனைவரும் கதிரவக் குளியலில் கிடந்தனர். சேற்றில் புரண்டு தங்கள் செம்மேனியை அழுக்காக்கினர்.. சிலர் படகுகளைக் கையில் கொண்டு வந்து கடலில் போட்டு உல்லாசமாகக் கடற்பரப்பில் சுற்றி வந்தனர். சிலர் தம் வரியிளஞ்செங்காற் குழவியினருடன் வந்து அவர்களைக் கடல் மணல் பரப்பில் நடை பழக்கினர். சிலர் சிறு சிறு குழுக்களாக அமர்ந்து உரையாடியபடி இருந்தனர். இளம்பெண்டிர் பலர் தங்கள் காதற் கிழவனுடன் மணற்பரப்பில் மனம்போன போக்கில் நடந்து உலா பயின்றனர். அங்கு எங்கள் நண்பர் பழமைபேசி தம் குடும்பத்தாருடன் களித்துக் குளித்தார். நானும் இரவி தமிழ்வாணனும் சந்தோஷும் மாறி மாறிப் படங்கள் சில நினைவுக்காக எடுத்துக்கொண்டோம்.

 கடற்கரை மணலில் காலார நடந்தோம். அமெரிக்கர்கள் உருவாக்கி வைத்திருந்த சில தற்காலிகப் படுக்கையில் உடல் சாய்த்துக் கிடந்தோம். பின்னர் மரத்தில் அமைத்திருந்த பாலத்தில் ஏறி கடலின் உட்பகுதிக்குச் சென்றோம். அங்குச் சிலர் மீன்பிடிக்கும் காட்சிகளைப் பார்த்தோம். சிறுவர்களுக்கு இணையாகப் பெரியவர்களும் அமர்ந்து மீன்பிடித்தனர். மக்கள் நடப்பதால் உருவாகும் அழுக்குகளை அவ்வப்பொழுது பணியாளர்கள் துடைத்துத் தூய்மை செய்தனர். அவ்வாறு செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் இறுதிப்பகுதியில் அடுக்குமாடி போன்ற அமைப்பில் காற்று வாங்க வசதியாக மரத்தால் கட்டியிருந்தனர். அங்கிருந்து பார்த்தால் நெடுந்தொலைவுக் கடல் கண்ணுக்குத் தெரிந்தது. எல்லாவற்றையும் எங்கள் புகைப்படக்கருவியில் காட்சிகளாக எடுத்துக்கொண்டோம். அந்த இயற்கைப் பேரழகைச் சுவைத்தபடி நாங்கள் கரைக்குத் திரும்பினோம்.

 கரையில் அமைக்கப்பட்டிருந்த கடையில் எங்களுக்குப் பனிக்குழம்பையும், நினைவுப் பரிசிலையும் நண்பர் சந்தோஷ் அவர்கள் வாங்கி மகிழ்ச்சியுடன் தந்தார். அந்த இயற்கைக் காட்சியை இனி என்று காண்போம் என்ற ஏக்கத்துடன் நாங்கள் திரும்பினோம். எங்களை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நண்பர் சந்தோஷ் அவர்கள் தம் மகிழ்வுந்தை எடுத்து வரச்சென்றார்.

 அப்பொழுது இரவி அவர்களுடன் அவர்களின் பதிப்பக வளர்ச்சி, அவர்களின் தந்தையார் திரு.தமிழ்வாணன், இரவி அவர்களின் உடன்பிறப்பு எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பற்றி பல செய்திகளைத் தெரிந்துகொண்டேன். திரு. இரவிதமிழ்வாணன் அவர்கள் மணிமேகலை பிரசுரம் வழியாகப் பல நூல்களை வெளியிட்டுள்ளமையும், அந்த நூல்களை உலக அளவில் பலரின் பார்வைக்கு வைத்து வருகின்றமையும் அனைவரும் அறிவோம். அவர் அயல்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளைச் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியிட்டு வருவதை இந்தப் பயணத்தில் முழுமையாக அறிந்தேன். அந்த வகையில் எங்கள் அம்மா யோகரத்தினம் செல்லையா, தங்கேசுவரி, ஈழத்துப்பூராடனார் உள்ளிட்ட அன்புக்குரியவர்களின் நூல்களை வெளியிட்டுள்ளமை இங்குக் குறிப்பிடத்தகுந்தது.

 அதுபோல்தான் இந்தப் பயணத்தில் அடுத்து அவர் இலண்டன் மாநகரில் நடக்கும் தம் பதிப்பகம் வெளியிட்ட புத்தக வெளியீட்டு விழாவுக்குச் செல்வதைச் சொன்னார்கள். அதுபோல் குமுதம் இதழின் உரிமையாளர் திரு ஜவஹர் பழனியப்பன் அவர்கள் நெஞ்சாங்குலை மாற்று அறுவைப் பண்டுவத்தில் உலக அளவில் வல்லுநர் என்ற செய்தியையும் என்னிடம் தெரிவித்தார்கள். ஒவ்வொரு முறை அமெரிக்கா வரும்பொழுதும் திரு ஜவஹர் பழனியப்பன் அவர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதைத் தெரிவித்தார். பல நினைவுகளை அசைபோட்டபடி இருந்தபொழுது சந்தோஷ் அவர்களின் மகிழ்வுந்து எங்களை அழைக்க வந்து நின்றது.

 சந்தோஷ் அவர்கள் மகிழ்வுந்தை ஓட்டினார். முன்னிருக்கையில் இரவி தமிழ்வாணன் அமர்ந்திருந்தார். நான் பின்னிருக்கையில் இருந்தேன். சாலைகளில் முறையான போக்குவரவு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டாலும் அன்று தன்னுரிமைத் திருநாள் என்பதால் மக்கள் சிறிய அளவில் விதிமுறைகளில் கவனம் செலுத்தாமல் இருந்தனர். எங்கள் வண்டியை மக்கள் நெரிசலில் இருந்து தவிர்க்கப் புறவழியில் ஓட்ட சந்தோஷ் முயன்றார். அப்பொழுது நான்கு வழிச்சந்திப்பில் எதிர்பாராத வகையில் எங்கள் வண்டியில் வேறொரு வண்டி வந்து மோதியது. இரவி அவர்கள் செய்வதறியாது கதறினார். நல் வாய்ப்பாக இருவர் வண்டியும் நின்றது. இன்னும் ஒரு நொடி முன்னே சென்றிருந்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும். நல்வாய்ப்பாக சந்தோஷ் வண்டியின் முன்பகுதியில் சிறு பள்ளம்.

 பக்கவாட்டிலிருந்து வந்த வண்டியை ஓட்டி வந்தவர் ஓர் இளம்பெண். அவரும் இறங்கினார். அவருடன்இன்னொரு இளம் பெண்ணும் இறங்கினார். இருவரும் இந்தியக் குடிவழியினர் என்று பின்பு அறிந்தோம். அவர்களின் அன்புக்காதலர்களாக இரண்டு இளைஞர்கள் வண்டியிலிருந்து இறங்கினர். அவர்கள் அனைவரும் குடித்திருக்க வேண்டும். வண்டியை ஓட்டிய இருவர் மேலும் தவறு என்பதால் அமைதியாகப் பிரிய நினைத்தோம். வழிப்போக்கன் ஒருவன் நாங்கள் வந்த வண்டியை ஓட்டியவர் செய்தது பிழை என்றதால் காவல்துறைக்குத் தகவல் சொன்னோம். காவலர்கள் அடுத்த சில மணித்துளிகளில் எங்களுக்கு அருகில் இருந்த தீயணைப்புத் துறையினர்க்குத் தகவல் சொல்ல, அந்தத் துறை சார்ந்த இருவர் வந்து வினவினர். சற்றுப் பொறுத்திருங்கள். காவலர் வருவார் என்று சொன்னார்கள்.

 அரை மணி நேரத்தில் காவலர் வந்தார். எங்களிடம் சில புள்ளி விவரங்களைக் கேட்டு வாங்கினார். எங்களைப் பாதுகாப்பாக ஓட்டிச்செல்லுங்கள் என்று வாழ்த்தி அனுப்பினார். நாங்கள் சார்ல்சுடன் நகரின் முதன்மையான குடியிருப்புகளையும் கடற்கரையையும் பார்த்தபடி வண்டியில் வந்தோம். மாலை ஐந்து மணிக்கெல்லாம் அமெரிக்கத் தன்னுரிமை நாளுக்கு மக்கள் வான வேடிக்கை பார்க்க குவிந்தனர். நம் ஊர்போல் ஆள் ஆளுக்கு வெடி வெடிக்க அனுமதி இல்லை. குறிப்பிட்ட இடத்தில் அரசு சார்பில் பாதுகாப்பாக வான வேடிக்கை நடக்கும். அதனைப் பார்க்க நம்மூர்த் தேர்விழாவுக்குக் குவிவதுபோல் மக்கள் வண்டிகளில் வந்து குவிந்திருந்தனர்.

 அங்கு ஆப்பிரிக்க மக்களை விலங்குகளைப் போல் வாங்கி அடைத்து வைத்திருந்த சில சந்தைக்காட்சிக் கட்டடங்கள் இன்றும் நினைவிடமாக இருப்பதைப் பார்த்தோம். சந்தோஷ் இல்லத்தில் விடைபெற்று அடுத்துப் பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி இல்லம் வந்தோம். அங்கு இரவு உணவுக்கு ஏற்பாடு. அண்ணன் நடிகர் நாசர் அவர்களும் அம்மா கமிலா நாசர் அவர்களும் அங்கு இருந்தனர்.



போளி பீச் என்னும் கடற்கரை


மு.இ, இரவி தமிழ்வாணன் கடலின் உள்ளே உள்ள மரப்பாலத்தில்


சந்தோஷ், மு.இளங்கோவன்


மு.இ, இரவி தமிழ்வாணன்


மு.இ, இரவி தமிழ்வாணன்



மு.இ. கடலில் அமைக்கப்பட்டுள்ள மரப்பாலத்தில்