நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
மொழிபெயர்ப்பாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழிபெயர்ப்பாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 மே, 2013

மொழிபெயர்ப்பு அறிஞர் கு. பாலசுப்பிரமணியன் அவர்கள்



 கு.பாலசுப்பிரமணியன் அவர்கள்

தமிழ்நாட்டு அரசின் மொழிபெயர்ப்புத்துறையில் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்து ஓய்வுபெற்றவர் மொழிபெயர்ப்பு அறிஞர் கு.பாலசுப்பிரமணியன் அவர்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமையும் பயிற்சியும்கொண்ட கு. பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழுக்கு ஆக்கமான பல மொழிபெயர்ப்புகளை அமைதியாகச் செய்துவழங்கியுள்ளார். ஆர்ப்பாட்டம் இல்லாத இந்த அறிஞரின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

கு. பாலசுப்பிரமணியன் அவர்கள் விருதுநகர் மாவட்டம் வாடியூரில் 09.06.1943 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் மீ.குருசாமி, குருவம்மாள் ஆவர். பள்ளிக்கல்வியைத் தியாகராசபுரத்திலும், உயர்நிலைக் கல்வியை நடுவூர்ப்பட்டியிலும் நிறைவுசெய்தவர். பட்டப் படிப்பைச் செந்தில்குமார நாடார் கல்லூரியில் பயின்றவர். இக்கல்லூரியில் பயிலுங்காலத்தில் ஆங்கிலத்தில் நல்ல பயிற்சி ஏற்பட்டது. பேராசிரியர்கள் வில்லியம்ஸ், நாராயணசாமி நாயுடு உள்ளிட்டவர்களிடம் பயின்ற காரணத்தால் தமிழும் ஆங்கிலமும் நன்கு அறிந்தார்.

1964-65 இல் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1967-69 இல் தமிழ் உரையாளராகப் பணியாற்றினார். 1970 முதல் 2001 வரை மொழிபெயர்ப்புத் துறையில் பணி. மொழிபெயர்ப்பு அலுவலராகவும், உதவி இயக்குநராகவும், துணை இயக்குநராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். இதழியலில் முதுகலைப் பட்டயப்படிப்பு முடித்தவர். பல இதழ்களுக்குத் துணையாசிரியராக இருந்து பணிபுரிந்துள்ளார்.

மாலத்தீவு உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கில் மொழிபெயர்ப்பாளராக இருந்து பணிசெய்த பெருமைக்குரியவர். உழைப்பவர் உலகம் என்ற இதழின் துணை ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் வரவு செலவுத்திட்ட மொழிபெயர்ப்புப் பணியில் மொழிபெயர்ப்புப் பொறுப்பு அதிகாரியாகக் கடமையாற்றியவர்.

அறிஞர் மு.வ. எழுதிய கரித்துண்டு புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான சூளாமணியின் ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பில் இணைப்பதிப்பாசிரியராக இருந்து பணியாற்றியுள்ளார். இரண்டு தொகுதிகளாக வெளிவந்த நூல் இதுவாகும். பெருமழைப்புலவரின் உரையுடன் வெளிவந்த இந்த நூல் பதிப்பில் இவரின் உழைப்பு அதிகம் அமைந்தது.

சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் (பிர்லா கோளரங்கம்) கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு உழைத்து வருகின்றார்.

தமிழுக்குரிய செம்மொழித் தகுதி குறித்து அறிஞர் ஹார்ட்டு வரைந்த மடலினைத் தமிழில் மொழிபெயர்த்த பெருமை இவருக்கு உண்டு. இன்னும் தமிழுக்குப் பயன்படும் பல மொழிபெயர்ப்புகளையும் அறிக்கைகளையும் இவர் உருவாக்கித் தந்துள்ளார். பாரதியார் படைப்புகள் குறித்தும் இவர் பல கட்டுரைகள் வரைந்துள்ளார்.

விளம்பர வெளிச்சம் விரும்பாமல் வேராக இருந்து தமிழ்ப்பணிபுரிவதால் பெரும்பான்மை மக்களுக்கு அறிஞர் கு. பாலசுப்பிரமணியன் அவர்களின் பணி தெரிய வாய்ப்பில்லாமல் போனது. தமிழர்களால் போற்றிக் கொண்டாடப்பட வேண்டிய இத்தமிழ்ப் பற்றாளர் கானவன் என்ற புனைபெயரிலும் எழுதிவருகின்றார். சென்னை குரோம்பேட்டையில் தமிழ் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார் இந்த இருமொழிப் புலமையாளர்.



சனி, 26 ஜூன், 2010

கனடா திருக்குறள் மொழிபெயர்ப்பாளர் யோகரத்தினம் செல்லையா


அம்மா யோகரத்தினம் அவர்களுடன் நான்

கனடாவில் வாழும் திருக்குறள் மொழிபெயர்ப்பாளர் யோகரத்தினம் செல்லையா அவர்கள் கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிக்க வந்துள்ளார்.அவரின் கட்டுரை நாளை காலை 10.30 மணிக்கு வெள்ளிவீதியார் அரங்கில் படிக்கப்பெற உள்ளது.வெள்ளிவீதியார் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்குத் திரு,சேம்சு ஆர்.டேனியல் அவர்கள் தலைமை தாங்குகின்றார்.யோகரத்தினம் அவர்களின் கட்டுரைத் தலைப்பு MY EXPERIENCE IN THE TRANSLATION OF THIRUKURAL.இன்று யோகரத்தினம் அம்மா அவர்களைக் கண்டு பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.72 அகவை ஆகும் அம்மா அவர்கள் கனடாவிலிருந்து தமிழார்வம் காரணமாகக் கோவை வந்துள்ளமை மகிழ்ச்சி தருகின்றது.


யோகரத்தினம் அம்மா,கிருட்டினன்(சிங்கப்பூர்),நான்,பெஞ்சமின் லெபோ(பிரான்சு)


அம்மா யோகரத்தினம் அவர்களுடன் நான்(வேறொரு கோணத்தில்)