நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
மூன்றாம் உலகப்போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூன்றாம் உலகப்போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 அக்டோபர், 2012

புதுச்சேரியில் மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுகம்


கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக விழா இன்று(12.10.2012) வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்குப் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. சப்தகிரி அறக்கட்டளையும், புதுச்சேரி வெற்றித் தமிழர் பேரவையும் இணைந்து நடத்திய இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

சுற்றுச்சூழலை வலியுறுத்தியும், மக்கள் மரபுகளை வலியுறுத்தியும் எழுதப்பட்ட இந்த நூல் உழவர்களின் வாழ்க்கையை - அவர்களின் துன்பநிலையை எடுத்துரைப்பதாகக் கவிஞர் குறிப்பிட்டார். மொழிப்பற்று, மண்பற்று, பழயை மரபுகளைப் பாதுகாத்தல் குறித்துப் பல செய்திகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன என்றார். காதல், வீரம், இலக்கிய இன்பம், துன்பம் என்று வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இந்த நூல் உள்ளது என்றார். இதில் இடம்பெறும் சுவையான பகுதிகளைக் கவிஞர் நினைவுகூர்ந்ததும் அரங்கம் அதிர்ந்தது. மண்பற்றும் நாட்டுப்பற்றும் கொண்ட இளைஞர்களை உருவாக்கவே இத்தகு நூல்களைப் படைத்து வருவதாகக் கவிஞர் குறிப்பிட்டார்.

மரபின் மைந்தன் முத்தையா கலந்துகொண்டு நூலின் சிறப்புப் பகுதிகளையும் கவிஞரின் படைப்பாற்றலையும் நினைவுகூர்ந்தார். முனைவர் நா.இளங்கோ நூல் குறித்த கருத்துரையை மிகச்சிறப்பாக வழங்கினார். கவிஞர் தி.கோவிந்தராசு அவர்கள் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். சப்தகிரி நிறுவனங்களின் உரிமையாளர் சிவக்கொழுந்து, இராமலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன், புதுவை வாழ் தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கம்பன் கலையரங்கம் நிரம்பியதும் பார்வையாளர்கள் வெளியில் அமர்ந்து நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.










திங்கள், 8 அக்டோபர், 2012

கவிப்பேரரசு வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக விழா




கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய புகழ்பெற்ற நூலான மூன்றாம் உலகப்போர் தமிழக மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நூலின் அறிமுக விழா புதுச்சேரியில் நடைபெற உள்ளது. வெற்றித் தமிழர் பேரவையும், புதுச்சேரி சப்தகிரி அறக்கட்டளையும் இணைந்து இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.

இடம்: கம்பன் கலையரங்கம், புதுச்சேரி.

நாள்: 12.10.2012 வெள்ளி, நேரம்: மாலை 5 மணி

மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக விழாவிற்குத் தொழிலதிபரும் சப்தகிரி அறக்கட்டளை நிறுவுநருமான வி.பி.சிவக்கொழுந்து அவர்கள் தலைமை தாங்குகின்றார். தொழிலதிபர் முத்து பழனி அடைக்கலாம் அவர்கள் முன்னிலையில் விழா நடைபெறுகின்றது. வி.பி.இராமலிங்கம் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.

மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக உரையை வெற்றித்தமிழர் பேரவையின் அமைப்பாளர் தி.கோவிந்தராசு வழங்குகின்றார்.

கலைமாமணி மரபின் மைந்தன் ம. முத்தையா அவர்களும் முனைவர் நா.இளங்கோ அவர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.

 கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்புரையாற்றுகின்றார்.

கவிப்பேரரசு வைரமுத்து கையொப்பமிட்ட மூன்றாம் உலகப்போர் நூல் வாசகர்களுக்கு விழா அரங்கில் கிடைக்கும்.

தொடர்புக்கு:
98947 55557
94431 34108



சனி, 12 மே, 2012

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப்போர் ஓய்ந்தது…


நன்றி: ஆனந்தவிகடன்


ஒவ்வொரு வாரமும் எப்பொழுது வியாழன் இரவு விடியும் என்று உலகம் காத்துக்கிடந்தது உண்மைதான். நாற்பது வாரங்களாக இலக்கிய ஆர்வலர்களைத் தூங்கவிடாமல் செய்தது ஆனந்தவிகடனில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்னும் தொடர் என்றால் அது மிகையில்லை.

ஆனந்தவிகடனில் இடம்பெற்ற மூன்றாம் உலகப்போர் தொடரைப் படித்துவிட்டு மாணவர்கள், நண்பர்களுடன் உரையாடுவதை அண்மைக் காலமாக வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். கவிப்பேரரசு வைரமுத்துவின் வழியாகத் தேனி மாவட்டத்துப் பேச்சுத் தமிழ் உயிர்பெற்று உலக மக்களுக்கு அறிமுகமாகியுள்ளதை நினைத்துப் பூரித்துப் போனேன். பேச்சுத் தமிழை மட்டுமா கவிஞர் பெருமையுறப் பதிவு செய்துள்ளார்?. உழைத்து உழைத்துக் காலங்காலமாகக் களைத்துப்போன சிற்றூர்ப்புற மக்களின் நம்பிக்கைகளை, வாழ்க்கைமுறைகளை, பண்பாடுகளை, பழக்க வழக்கங்களை, உள்மன உணர்வுகளையெல்லாம் கவனமாகப் பதிவு செய்துள்ளார்.

வைரமுத்து அவர்கள் திரைப்பா வடிவில் தெற்கத்தி வாழ்க்கையைப் பல இடங்களில் பதிவு செய்திருந்தாலும் இந்த மூன்றாம் உலகப்போரில் அவர் வாழ்ந்த வாழ்க்கையினை ஈரம் காயாமல் இறக்கிவைத்துள்ளார். கருத்தமாயி, சிட்டம்மா, முத்துமணி, சின்னபாண்டி பாத்திரங்கள் தமிழகத்து உழைக்கும் மக்களின் குடும்ப உறுப்பினர்களின் மாதிரிகள் என்று குறிப்பிடலாம். இவர்கள் வழியாகத் தமிழகத்து மக்களின் மன உணர்வுகளைக் கவிப்பேரரசர் அவர்கள் பக்குவமாகச் சித்திரமாக வரைந்துகாட்டியுள்ளார்.

தேனி மாவட்டத்துத் தேசிய இலக்கியமாக இந்த “மூன்றாம் உலகப்போரை” அறிவிக்கலாம். இன்றைய நாகரிக வாழ்க்கையும் பன்னாட்டு நிறுவனங்களும் சிற்றூர்வரை புகுந்து உறவுகளை வேரறுப்பதைக் கவிப்பேரரசர் நுண்மையாக எடுத்துரைத்துள்ளார். பன்றிக்குக் காயடிப்பதிலிருந்து, பனங்கிழங்கு அவித்து உரித்துத் தின்னுவது வரை நம் இலக்கியப்புலிகளால் பதிவுசெய்யப்படாத பல நிகழ்வுகளைக் கவிப்பேரரசர் தம் தமிழ்வளத்தால் பதிவுசெய்துள்ளார்.

தொடரில் இடம்பெறும் ஊர்ப் பஞ்சாயத்தாரின் உரையாடல்கள் இன்னும் தமிழும் தமிழ்ப்பண்பாடும் வாழ்ந்துகொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றன.

“தாமரை எலையில பச்சைக்கறிய வாங்கி வந்தவன் பாதியிலே பிரிச்சான். கறிக்கு வீங்கிக்கெடந்த பயலுக்கு உள்நாக்கு ஊறுது. ஈரலாப் பொறுக்கி எடுத்தான்; ஒவ்வொரு கொழுப்பா எடுத்து ஒண்ணு சேத்தான். சும்மா ஆவாரங்குழையை ஆடு திங்கற மாதிரி பச்சைக்கறிய நறுச் நறுச்சுனு மென்னு தின்னு முழுங்கிட்டான்” என்று முத்துமணி பின்னாளில் குடும்பச்சொத்தைத் தானே தின்னு உயிர்வளர்க்க உள்ளதைக் குறிப்பாகக் காட்டியுள்ளார் கவிப்பேரரசர்.

இந்தத்தொடரில் வந்துபோகும் எமிலி, இஷிமுரா என்னும் அயலகத்துப் பாத்திரங்கள் வழியாக அட்டணம்பட்டிக்கு வேறாக ஓர் நவீன உலகம் இருப்பதையும் அவர்களின் வாழ்க்கைமுறை வேறாக இருப்பதையும் கவிப்பேரரசர் படைத்துக்காட்டியுள்ளார்.

“இந்த மனிதர்கள் பூமியின் முகத்தில் அறைவதையும், முதுகில் குத்துவதையும், வயிறு கீறுவதையும், கருவறையில் கம்பி நுழைப்பதையும், ஓசோன் கூரை ஓட்டை வழி எட்டி எட்டிப் பார்த்துவிட்டு ஓர் அழுக்கு மேகத்தை இழுத்து முகம் பொத்திக்கொண்டது சூரியன்” என்று கவிப்பேரரசர் இலக்கிய நயம்பட முதல் தொடரில் அறிவியல் அரிச்சுவடி சொல்லியுள்ளார்.

முத்துமணிக்குக் குழந்தை பிறந்தால் முப்பாட்டன் நினைவால் சீனித்துரையின் பெயரை வைக்க நினைத்த கருத்தமாயிக்குத் தன் மகன் முத்துமணி உரைக்கும் “அஜய்தேவ்” என்னும் பெயர் வேம்பாக இருந்ததைக் கவிப்பேரரசர் அவருக்கே உரியமுறையில் கரும்பாகச் சுவைபட எழுதியுள்ளார்.

நிறைவுப்பகுதியில் முத்துமணி, கம்பெனிக்காரர்களுக்கு ஆதரவாக வாங்கிய நிலத்தைச் சமப்படுத்தும் ஜே.சி.பி. மெஷினால் தன் தந்தையை ஏற்றிக் கொன்றுவிடுவான் எனவும், அரிவாளல் வெட்டிச்சாய்க்கப்போகின்றான் எனவும் படிப்பவர்களுக்கு ஆர்வம்கூட்டிப் அச்சம்கொள்ளச்செய்யும் கவிப்பேரரசர் நாம் எதிர்பாராத விதமாகக் கருத்தமாயி, உயிராகப் போற்றிய நிலத்தையும் சாமி மரத்தையும் காக்க, “முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் கவட்டைக்காலனை வெட்டிவிட்டு பூமிக்கடியில் புதைச்சு வைத்திருந்த வீச்சருவாவ எடுத்து, தன்னை வெட்ட வந்த மகனை வெட்டினார் என்று எழுதியுள்ளது கதையின் திருப்புமுனையாக உள்ளது.

இந்த இடத்தில், “தோலக் கிழிச்சு, சதையில எறங்கி, ரத்தநாளம் கடந்து, சவ்வப்பொளந்து, கழுத்தெலும்ப ஒடச்சு, உள்ள புகுந்து, முதுகுத் தண்டு நரம்ப அறுத்து, உசுர வாங்கித் தலையைத் தொங்கவிட்டு சங்குக்குழியில் நின்னுப்போச்சு அருவா. முப்பத்தேழு வருசத் துருவை முத்துமணி ரத்தத்துல கழுவணுமுன்னு கெட்ட வரம் கேட்டு வந்திருக்கு அந்த அருவா” என்று எழுதியுள்ளமை கருத்தமாயியின் கோபத்தை ஒரு தேர்ந்த கலைஞனுக்குரிய முறையில் இந்தத்தொடரில் கவிப்பேரரசர் பதிவுசெய்துள்ளார்.

தேனி மாவட்டத்து மக்கள் வாழ்க்கையை நுட்பமாகப் பதிவுசெய்யும் போக்கில் அமைந்துள்ள இந்தத் தொடர் தமிழகத்தின் ஒரு பகுதி மக்களின் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும், பழக்கவழக்கங்களையும் தாங்கி நிற்கின்றது. கவிப்பேரரசர் வைரமுத்து அவர்களின் இந்தத் தொடரில் மக்களின் வழக்காறுகள், பழமொழிகள், நம்பிக்கைகள், பண்பாட்டு விழுமியங்கள், அறம் என யாவும் பூத்துச் செழித்து நிற்கின்றன.