நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
மருதூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருதூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 ஜூன், 2010

மண்மணம் மாறாத மருதூர்...

அரியலூர் மாவட்டம் செம்மண் நிறைந்த பகுதி.ஒரு வரியில் எழுதலாம். பொட்டல்காடு. செம்பறாங்கல் அடுக்குகளால் சிந்தைந்து கிடக்கும் ஊர்கள்;வறண்ட நிலங்கள் எங்கும் தெரியும்.முந்திரித் தோப்புகள் மிகுதி.வேலை வாய்ப்பு குறைந்த பகுதி.எனவே இளைஞர்கள் வெளிநாட்டுக்கும்,வெளி மாநிலங்களுக்கும் புறப்பட்டுவிடுகின்றனர்.எத்தனையோ வரலாற்றுச் சுவடுகளை இந்தப் பகுதி கொண்டுள்ளது.

கங்கைகொண்டசோழபுரம்,உடையார்பாளையம் குறுநிலமன்னர்களின்(ஜமீன்) அரண்மனை, அரியலூர் பாசில்கள்,சுதைமாவுக்குரிய (சிமெண்டு) உருவாக்க உதவும் மண் வளம் கொண்ட பகுதி இது.இங்கு உள்ள நிலக்கரி உலக அளவில் தரமானது.அதனால் இந்தப் பகுதியை நெய்வேலிக்கு அடுத்துக் குறிவைத்து மக்களை வெளியேற்றும் முயற்சி எப்பொழுதோ தொடங்கிவிட்டது.ஒரு வரலாற்றுச்சின்னம் காசுக்கு விலையாகிவிட்டது.

அறிவாற்றலில் சிறந்த எத்தனையோ மேதைகள் இந்தப் பகுதியில் பிறந்தாலும் அவரவர்கள் பணிக்குச் சென்று நகரப்பகுதிகளில் தங்கிவிட்டதால் வறண்டு கிடக்கும் இந்தப் பகுதி வரைபடங்களில் மட்டும் வாழ்ந்துகொண்டுள்ளது.உடையார்பாளையம் வேலாயுதம், ஆயுதக்களம் ஆ.கோ.இராகவன்,சுண்ணாம்புக்குழி தியாகராசன் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்கள் பிறந்து வளர்ந்த இந்தப் பகுதியில் திராவிட இயக்கம் மிகச்சிறப்பாக வளர்ந்தது.தந்தை பெரியார் அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களுக்கு விருப்பமான பகுதியாக இது இருந்தும் அரசால் சரியாகக் கண்டுகொள்ளப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது.

செயங்கொண்டம், ஆண்டிமடம்,மீன்சுருட்டி,தா.பழூர்,உடையார்பாளையம்,செந்துறை என்ற பேரூர்கள் இந்தப் பகுதியில் உண்டு.இவற்றைச் சார்ந்து எத்தனையோ சிற்றூர்கள் உண்டு. ஊராட்சிகள் உண்டு. இந்தப்பகுதியில் உருவான நாடாளுமன்ற உறுப்பினர்களோ,சட்டமன்ற உறுப்பினர்களோ இந்தப் பகுதி மக்களிடம் ஒப்போலை கேட்டு ஊர்வலம் வருவதோடு சரி.அதன் பிறகு மக்கள் வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் உரிய பணிகளைச் செய்ததே இல்லை என்பதை இந்தப் பகுதியில் வளர்ச்சியில்லா நிலைமைகொண்டு உணரலாம்.குறைந்த அளவு அடுத்த தேர்தல் பற்றி கூட சிந்திக்காத இவர்களா அடுத்த தலைமுறை பற்றி சிந்தித்துவிடப் போகிறார்கள். செயங்கொண்டம் தொகுதி தமிழக அரசியலில் அண்மைக்காலமாக நன்கு அறிமுகமான பெயர்தான்.தன்னுரிமை பெற்று மணிவிழா கொண்டாடிய பிறகும் செயங்கொண்டத்தில் அரசு கல்லூரியோ,பல்தொழில்நுட்பக் கல்லூரியோ, தொழில்நுட்பக் கல்லூரியோ,வேறு தொழிற்சாலைகளோ கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லாமல் போனது.மாந்த வளம் வீணாகிப் போவதை யாரும் உணரவில்லை.இக்குறையைப் போக்க இப்பொழுது சில தனியார் கல்லூரிகள் முளைத்துள்ளன.

மிக மிகப் பின்தங்கிய மக்கள் வாழும் பகுதியில் அரசு நிறுவனங்கள் என்றால் குறைந்த செலவில் மாணவர்கள் உயர்கல்வி படிக்கலாம்.தனியார் கல்லூரியில் படிப்பது மாணவர்களுக்கு மிகப்பெரிய சுமையாகவே இருக்கும்.

செயங்கொண்டம் பேருந்து நிலையம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு என் பதிவில் எழுதியிருந்தேன்.இப்பொழுது சிறு முன்னேற்றம் கண்டேன்.மக்கள் ஓய்வெடுக்க கட்டடப் பகுதிகள்,கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.நம் மனக்குறை இந்தப் பகுதியில் அரசு கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள்,சமுதாயக் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும்.கும்பகோணம் அரியலூர் சென்று படிக்கும் மாணவர்கள் செயங்கொண்டம், ஆண்டிமடத்தில், மீன்சுருட்டியில், கங்கைகொண்ட சோழபுரத்தில் கல்லூரிப்படிப்பை நிறைவுசெய்யும் வகையில் புதிய கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும்.இதனால் பல குடும்பங்கள் கல்விக்கண் பெறும். "கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்கு மரம் அங்கே உண்டாம்" என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். இத்தகு ஏக்கப்பெருமூச்சுடன் ஊருக்குச் செல்லும்பொழுதெல்லாம் இந்த நினைவுடன் ஊரை வலம் வருவேன்.

நேற்று(31.05.2010) என் பிறந்த ஊருக்கு வீட்டுப்பணியின் பொருட்டுச் சென்றிருந்தேன்.
தச்சர் சில மரப்பலகைகள் தேவை என்று ஒரு பட்டியல் கொடுத்தார்.மரம் வாங்குவதில் பட்டறிவு எனக்கு இல்லை.இருப்பினும் செயகொண்டத்தை அடுத்த மருதூர் என்ற ஊரில் என் பல்கலைக்கழகப் படிப்பின் ஒரு காலப் படிப்பினராகிய திரு.செ.ஆனந்தக்குமார் அவர்களின் நினைவு எனக்கு வந்தது. அவருக்குத் தொலைபேசியில் என் திட்டம் பற்றி சொன்னேன். அவரும் என்னை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்க ஆர்வமுடன் இருப்பதை உரையால் உறுதிப்படுத்தினார்.

எங்கள் வீட்டருகே 10.50 மணிக்குச் சிற்றுந்து ஏறி-செயங்கொண்டம் சென்றேன்.அங்கிருந்து ஒரு நகரப் பேருந்து பிடித்து மருதூர் தெற்குப்பட்டியில் இறங்கும் பொழுது 12.45 மணி இருக்கும்.(சற்றொப்ப 20 கல் தொலைவை அடைய இரண்டு மணி நேரம் பிடித்தது. அண்மையில் மலேசியாவில் ஈப்போ- நகரிலிருந்து கோலாலம்பூர் வர 202 கி.மீட்டர் இரண்டு மணி நேரத்தில் வந்தேன்).

மருதூர் பற்றி முன்பே அறிவேன்.என் பேராசிரியர்கள் மருதூர் இளங்கண்ணன்(எழிற்பாண்டியம் நூலாசிரியர்),மருதூர் வேலாயுதம் போன்றோர் பிறந்த ஊர் இதுவாகும்.இத்தூய மண்ணில் இன்று கால் பதித்தோமே என்ற பெருமிதம் எனக்கு உண்டானது.நண்பர் ஆனந்தக்குமார் எனக்காகக் காத்திருந்தார்.அவர் என்னை எதிர்கொண்டு அழைக்க ஓர் உந்துவண்டி இரவல் பெற்று வைத்திருந்தார். இந்த வண்டியில் ஏறி அமர்ந்து பட்டை வெயிலில் அலைந்து மரவாடியில் மரம் பார்த்தோம்.

இரண்டு சோடி மாம்பலகை வாங்கினோம்.அதன் பிறகு பூவரசம் பலகை,சட்டம் வாங்க பொன்பரப்பி மரவாடிக்குச் சென்றோம்.பொன்பரப்பி தமிழ் உணர்வாளர்க்கு நன்கு நினைவுக்கு வரும் ஊர்தான்.இந்த ஊரில் பிறந்த திரு.வ.செல்வகணேசன் என்ற நண்பர் ஒருவர் என்னுடன் பனசைக்கல்லூரியில் (1987-90) படித்த்துள்ளார்.அவர் இப்பொழுது ஆசிரியர் பணி கிடைத்து வெளியூரில் இருப்பதாக அறிந்தேன்.

அதனிடையே நண்பர் ஆனந்தக்குமார் இல்லத்தில் பகலுணவு. வீட்டுப்பொருள்கள் கொண்டு அமைந்த உணவு.அன்புடன் விருந்தோம்பல்.என் புகைப்படக்கருவியை ஊரிலேயே வைத்துவிட்டுச் சென்றமை ஒரு பெருங்குறையாகும்.

இயக்குநர் பாரதிராசா அவர்களின் புகைப்படக்கருவிக்குக் கிடைக்காத அரிய சிற்றூர் வாழ்க்கை.ஆனந்தக்குமார் வீடு அத்தகு படத்தில் இடம்பெற வேண்டிய வீடு.செயற்கை இல்லாத வீடு.வீட்டுத்திண்ணையில் ஈன்று அணிமைத்தான ஒரு கன்று கழிந்தபடி படுத்திருந்தது.அருகில் கடலைக்கொடி திண்ணையில் அடுக்கி வைத்திருந்தார்கள்.மூட்டை முடிச்சுகள்;தொம்பை; குதிர்;பத்தாயம்,முந்திரிக்கொட்டை காய்ந்தது.வரகு வைக்கோல்; சோளத்தட்டை;கத்தரி வத்தல்;காய்ந்த முந்திரிப்பழம்;வீடு முழுக்க குழந்தைகள்.எனக்கு நீண்ட நாளுக்குப் பிறகு இந்தக் காட்சியைப் பார்த்தோமே என்ற வியப்பு.

மருதூர் மிகப்பெரிய ஊராகும்.ஆனால் இப்பொழுதுதான் மாடிவீடுகள் கட்டப்படுகின்றன. பெரும்பாலான வீடுகள் கூரை.இயக்குநர் பாரதிராசா படத்தில் வரும் கூரைவீடுகளிலிருந்து வேறுபட்டவை.வீட்டுக்கு வீடு கட்டில்;வைக்கோல் போர்;ஆடு மாடுகள்;மூன்றுமணி நேரத்திற்கு மேல் ஒரு படம் பார்த்த நிறைவு எனக்கு;சந்துபொந்துகளில் நுழைந்து வந்தோம்.இத்தனை நூற்றாண்டான பிறகும் இந்த ஊரின் பழைமையை யாராலும் சிதைக்கமுடியவில்லையே என்ற பெருமகிழ்ச்சியில் ஊரைச்சுற்றிப் பார்த்தோம்.

ஒரு பலாப்பழத்தை உறவினர் வீட்டுத் தோட்டத்திலிருந்து ஆனந்தக்குமார் எனக்கு வாங்கிவந்தார்.நானும் தோட்டத்துக்குப் போனேன்.பலா மரத்தில் பழங்கள் அடுக்கடுக்காக காய்த்துத் தொங்கின."சிறு கோட்டுப் பெரும் பழம்"குறுந்தொகை வரிக்குரிய பொருளை எண்ணி எண்ணி வியந்தேன்.அருகில் இருந்த முந்திரியில் பச்சைக்கொட்டை இருந்தன.பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கிப் போனேன்.என் சிறிய தந்தையார் குளத்தூர் என்ற அவர் ஊருக்கு எங்களைக் கோடைவிடுமுறைக்கு அழைத்துச்சென்று முந்திரிக்காட்டில் ஒரு மாதம் வாழ வாழி செய்வார்.என்னே மகிழ்ச்சி! காய்ந்த முந்திரிக்கொட்டையைச் சுட்டும்,பச்சை முந்திரிக்கொட்டையை வகுந்தும் எங்களுக்கு வாரி வழங்கிய அவர் உருவம் நினைவில் மட்டும் காணமுடிந்தது(இது முப்பதாண்டுகளுக்கு முன் நடந்தவை).

பொன்பரப்பியில் சில மரச்சட்டங்களையும் பலகைகளையும் விலைக்குப் பேசினோம். நாளைதான் அறுத்துத் தரமுடியும் என்றார் மர வணிகர்.முன்தொகை கொடுத்து நண்பர் ஆனந்தக்குமார் இருக்கும் துணிவில் வாங்கி அனுப்பும்படி சொன்னேன்.நான்கு மணிக்கு மரப்பலகையுடன் திரும்பலாம் என்று நினைத்த எனக்கு ஆறுமணி வரை மரம் இருப்பதே தெரியாத நிலை.நான் என் பிறந்த ஊர் சென்று அங்கிருந்து புதுச்சேரிக்கு இரவே திரும்பும் திட்டம்.எனவே ஆனந்தக்குமார் வழங்கிய ஒரு பலாப்பழத்துடன் என் பிறந்த ஊர் சென்று,ஐந்து நிமையம் தங்கிப், புதுச்சேரிக்கு இரவு பதினொரு மணிக்கு வந்து சேர்ந்தேன்.பலாப்பழம் போன்றவர் ஆனந்தக்குமார்.

வியாழன், 24 ஜூலை, 2008

சங்கநூற் சொல்லடியம் கண்ட மருதூர் முனைவர் பே.க.வேலாயுதம் அவர்கள்

<
மருதூர் முனைவர் பே.க.வேலாயுதம் அவர்கள் (11.07.1938)

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யான் முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்த பொழுது (1993-97) எனக்குப் பழகுவதற்குக் கிடைத்த அறிஞர்களுள் பேராசிரியர் பே.க.வேலாயுதம் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர். என் பிறந்த ஊர் செல்லும் பொழுதெல்லாம் அவர்தம் தமையனார் பேராசிரியர் மருதூர் இளங்கண்ணனார் அவர்களுடன் நான் நெருங்கிப் பழகியவன். அது பொழுதில் தம் இளவல் திருச்சிராப்பள்ளியில் பேராசிரியர் பணிபுரிவதையும் அவருடன் தொடர்புகொள்ளும்படியும் என்னைப் பணித்திருந்தார் மருதூர் இளங்கண்ணனார். பல நாள் காண நினைத்தும் எங்கள் சந்திப்பு நிகழாமல் இருந்தது.

ஒருநாள் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கு தொடர்பில் தமிழியல்துறைக்குப் பே.க.வேலாயுதனார் வந்தார்.வரும் வழியில் எதிர்ப்பட்ட என்னிடம் என்னைப் பற்றி வினவினார். அவர்கள் தேடி வந்த ஆள் நான் என்பது அறிந்ததும் அளவிலா மகிழ்ச்சியுற்றார். அண்ணன் மருதூர் இளங்கண்ணன் அவர்கள் எனக்குக் கட்டளையிட்ட வண்ணம் அவருக்கும் கட்டளையிட்டிருந்ததால் மருதூர் வேலாயுதனார் என்னைக் காண வந்திருந்தார். அன்று முதல் கொண்ட நட்பு நாளை வரை வளர்பிறைபோல் வளர்ந்து வருகிறது.

அந்தக் கிழமையே திருச்சிராப்பள்ளி கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்திருந்த வேலாயுதனார் இல்லம் சென்றுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவர்களின் நட்பு கிடைத்த பிறகே திருச்சியில் வாழ்ந்த பல பேராசிரியர்கள் எனக்குப் பழக்கமானார்கள். இவ்வகையில் முனைவர் கு.திருமாறன், பேராசிரியர் திருஞானம்,பேராசிரியர் சி.மெய்கண்டான், அறிஞர் வீ.ப.கா.சுந்தரனார், தமிழ்த்தந்தி சிவலிங்கனார்,முனைவர் சக்திவேல், முனைவர் ச.நாகராசன் உள்ளிட்டவர்களின் தொடர்பு அமைந்தமை நினைத்து மகிழ்கிறேன்.

ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் பே.க.வேலாயுதனாரின் வீட்டு மாடியில் எங்கள் உரையாடல் அமையும்.அங்கு வருபவர்களில் யானே அகவை குறைந்தவன்.அவர்கள் என்னையும் இணைத்துக்கொண்டு பல பொருள் பற்றி உரையாடுவார்கள். சிலநாள் என் நாட்டுப்புறப் பாடல்கள் அரங்கேறும். சில நாள் தமிழ்த்தந்தி சிவலிங்கனார் அவர்கள் கரைநாட்டு இசை வழங்குவார். உரையிடையிட்ட பாட்டாக எங்கள் சந்திப்பு அமைந்தது.

தமிழ்த்தந்தி அவர்களை நம் வீ.ப.கா.சுந்தரம் ஒரு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கச் சொல்லி, அவர் இசைபற்றி உரையாற்றினார் என்றால் தமிழ்த் தந்தியின் இசையறிவை நீங்கள் ஒருவாறு உணரலாம்.தமிழ்த்தந்தி அவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். பட்டம் பெற்றவர். மிகப்பெரிய அறிவாளி. பொதுவுடைமைக் கொள்கையில் பேரறிவு பெற்றவர். சமூகச் சீர்திருத்தக்காரர்.தம் பிள்ளைகளுக்குச் சாதி மறுப்புத் திருமணம் செய்த சால்பாளர்.உலக இலக்கியங்களில் உலா வருவது அவர்தம் வழக்கம்.பல்வேறு இராகங்களை அறிந்து பாடுவதில் வல்லவர்.நடமாடும் அறிவுச்சுரங்கம் எனில் மிகையன்று.

தமிழில் தந்தி அனுப்பமுடியும் என அக் காலத்தில் மெய்ப்பித்து உலகப் புகழ் பெற்றவர். ஒரு முறை குளித்தலையில் நடந்த விழா ஒன்றில் இவர்தம் செய்ம்முறை விளக்கம் கண்ட பாவேந்தர் தமிழ்த்தந்தி அவர்களைப் பாராட்டிப் பேசியதாக அறிந்தேன்.

இத்தகு அறிஞர் குழாம் சூழ இருந்த நம் வேலாயுதனார் பல நாள் அமைதியாக எங்களை உரையாட வாய்ப்பு அமைத்துத் தந்துவிட்டு அவர்மட்டும் கேட்டவண்ணம் இருப்பார்.சிலநாள் தெளிந்த கருத்துகளை வெளியிட்டு எங்கள் உரையாடலில் பங்கேற்பார்.பழகப் பழகத்தான் தெரிந்தது பேராசிரியர் பே.க.வேலாயுதனார் மிகப்பெரும் மேதை என்று.அவர்களுடன் உரையாடிப் பெற்றுத் திருச்சிராப்பள்ளியில் அரிய நூல்கள் எழுதியவர்கள் பலரை அறிவேன்.

அவர் கிரேக்க இலக்கியங்களைப் பற்றியும் கிரேக்க நாட்டு வரலாறு பற்றியும் விரல்நுனியில் செய்திகள் வைத்திருப்பார்.அங்கு இருக்கும் நாடு, நகரம், வழி, வாய்க்கால், ஆறு, அரசன் அவன் மனைவிமார், குழந்தைக் குட்டிகள், அங்கிருந்த பள்ளிகள், படிப்பாளிகள் பற்றியெல்லாம் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் நிரல்படத் தமிழில் சொல்வதில் நம் வேலாயுதனாருக்கு நிகரான அறிஞர் ஒருவரைப் பற்றி இதுவரை யான் கேள்விப்பட்டதும் இல்லை. இனி அறியப்போவதும் இல்லை. அந்த அளவு அவருக்குக் கிரேக்க இலக்கிய வரலாறு கைவயம்.

கிரேக்க வரலாறு மட்டும் தெரியும் என நினைத்தால் அது தவறாகும்.வடமொழி இலக்கியங்கள் பற்றியும் விரிவாகப் பேசுவார். வடமொழிக் காப்பியங்கள், புராணங்கள் பற்றியெல்லாம் நன்கு அறிந்தவர். தமிழ்நூல்கள் வடமொழிக்குச் சென்ற வரலாற்றை நன்கு விளக்குவார். அதுபோல் வடமொழி இலக்கியச் சிறப்புகளை எல்லாம் நன்கு எடுத்து ஓதுவார்.

இவ்வாறு இலக்கிய, இலக்கண, வரலாறு பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வானில் தெரியும் விண்மீன்களைக் காட்டி அதன் வடிவம், இயக்கம்,அமைப்பு இவற்றையெல்லாம் எனக்கு அறிவிப்பார். வானியல் அறிவில் தமிழர்கள் பெற்றிருந்த பேரறிவை விளக்குவார். அவருக்கு ஈடுகொடுத்து மனத்துள் பதிக்கும் வண்ணம் எளியேன் அத்துறைகளில் ஈடுபடாமல் போனமை வருத்தம் தருவதாகவே உள்ளது.நிற்க.

இவ்வாறு பிறதுறைகளில் நம் வேலாயுதனாருக்கு இருந்த அறிவார்வம் பற்றி எண்ணும் பொழுது அவருக்குப் பழந்தமிழ்ச் சங்க நூல்களில் நல்ல பயிற்சி இருந்தது என்பதைக் கவனமுடன் எண்ணிப் பார்க்கவேண்டும். இலக்கண அறிவும் நிரம்பப் பெற்றவர். தமிழில் உள்ள சொற்கள் தோற்றம் பெற்றதை மிக எளிமையாக விளக்குவார். அதற்கான சில 'பார்முலாக்கள்' அவர் உருவாக்கியுள்ளார்.அதில் பொருத்திப் பார்த்தால் தமிழ்ச்சொற்கள் யாவும் அதில் அடங்கிவிடும்.

சங்க இலக்கியங்களின் துணையுடன் சங்ககாலப் புலவர்கள்,அரசர்கள் பற்றிய வரலாறு எழுத வேலாயுதனார் பொருத்தமான அறிஞர். ஒவ்வொரு அரசனின் காலம், புலவரின் காலம், இன்னாருக்குப் பின் இன்னார் என்ற முறையான வரலாற்றை இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகளுடன் நிறுவுவதில் வல்லவர். தம் முனைவர் பட்ட ஆய்வை முன்னிட்டுச் சோழ நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்களுக்கு இவர் உந்துவண்டியில் பயணம் செய்து களப்பணியாற்றி ஆய்வேட்டை வழங்கியவர். இவர் ஆய்வேட்டில் பல உண்மைகள் பொதிந்துள்ளன.இதற்கு முன்னர் வெளிவந்துள்ள பல ஆய்வு முடிவுகள் பொய்யாகும் வண்ணம் இவர் ஆய்வேட்டில் செய்திகள் உள்ளன.

பேராசிரியர் வேலாயுதனார் தமிழுக்கு ஆக்கமாக அமையும் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவற்றுள் சங்கநூற் சொல்லடியம் (Concordance of Sangam Literature) என்னும் நூல் தொகுதிகள் குறிக்கத்தகுந்தன.இந்நூலில் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் சொற்கள் எந்த எந்த இடங்களில் என்ன பொருளில் வந்துள்ளன என்பதை மிக நுட்பமாக வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர் வந்த சொல்லடியங்களில் உள்ள பிழைகள் தவறுகளைப் போக்கும் வண்ணம் இதனைத் தன்னந்தனியாக இருந்து வெளிப்படுத்தியுள்ளமை போற்றுதலுக்கு உரிய ஒன்றாகும். முதல் இரு தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிற தொகுதிகள் வெளிவரவேண்டும்.

பேராசிரியர் பே.க.வேலாயுதனார் வாழ்க்கைக் குறிப்பு

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள மருதூர் என்னும் ஊரில் 11.07.1938 இல் பிறந்தவர். பெற்றோர் கந்தசாமி முதலியார், தனபாக்கியம் அம்மாள். மருதூரில் தொடக்க கல்வியைக் கற்ற வேலாயுதம் அவர்கள் உயர்நிலைக் கல்வியைப் பொன்பரப்பியில் கற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் வகுப்பை நிறைவு செய்தார். பி.ஒ.எல்(1960) பட்டத்தைப் பெற்றார். சைதாப்பேட்டையில் பி.டி பயிற்சி பெற்றார். 1961-62 இல் சுதேசமித்திரன் இதழில் மெய்ப்புத்திருத்துநர் பணி செய்தார். அப்பொழுது சென்னை மூர்மார்க்கெட்டில் நாளும் சென்று ஆங்கில நூல்கள் கிரேக்க நூல்களை வாங்கிக் கற்கத் தொடங்கினார். இதனால் கிரேக்க இலக்கியங்களில் நல்ல பயிற்சி ஏற்பட்டது. அப்பொழுது சங்க இலக்கியச் சொல் தொகுப்பு முயற்சி தொடங்கியது.

1966-72 இல் புதுக்கோட்டைக் கல்லூரிப் பணிக்கு வந்தார். இவர் தம் மாணவர் திரு.  இரகுபதி (நடுவண் அமைச்சர்) அவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது.
1972 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேலூர், பூலாங்குறிச்சி, முசிறிக் கல்லூரிகளில் பணியாற்றிப் பின்னர் திருச்சிராப்பள்ளியில் உள்ள பெரியார் கல்லூரியில் பேராசிரியர் பணியேற்றார். முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் படிப்படியே பெற்றுக் கல்வித்துறையில் தம் தகுதியை நிலைப்படுத்திக்கொண்டார்.

பெரியார் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பிறகு புதுக்கோட்டையில் தமிழ்க் கோட்டம் என்ற அமைப்பை உருவாக்கிப் பல நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்தார். இப்பொழுது திருச்சிராப்பள்ளியில் தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்குத் தமிழிலக்கியம் பயிற்றுவிக்கும் பொறுப்பில் உள்ளார். இவரைப் பயன்படுத்திச் சங்க இலக்கியப் பதிப்புகள், இலக்கண நூல்களின் பதிப்புகளைத் திறம்படச் செய்யலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் பயின்றபொழுது அறிஞர் கா.செல்லப்பன் (ஆங்கிலப் பேராசிரியர், பாரதிதாசன் பல்கலைக் கழகம்), டீலக்சு அப்துல்கபூர் போன்றவர்களின் தூண்டுதலால் ஆங்கில இலக்கியங்களில் கவனம் செலுத்தியவர். இதன் பயனாக கிரேக்க இலக்கியங்களைப் பயின்று அவற்றைத் தொகுத்து தமிழிற்குக் "காவியப் பொன்னிலம்" என்னும் பெயரில் வழங்க நினைத்து சிறு பகுதிகளை வெளியிட்டுள்ளார்.

ஆய்வியல் நிறைஞர் பட்டப் பேற்றிற்குக் கல்லாடனார் உரை பற்றியும் முனைவர் பட்டத்திற்குச் 'சங்க காலச் சோழநாட்டு ஊர்கள்' என்ற தலைப்பிலும் ஆய்வு செய்தவர்.

இவர் மாணவர் யாப்பியம் (சூத்திர வடிவம்), கடமையா? தெய்வமா? (கவிதை நாடகம்), வேல் அட்டவனை, சங்ககால மன்னர் வரிசை, சங்கநூற் சொல்லடியம் (இரு தொகுதிகள்) வெளியிட்டவர்.

சங்க நூற்சொல்லடியம் அறிமுகம்.

பேராசிரியர் வேலாயுதனாரின் கடும் உழைப்பில் வெளிவந்துள்ள நூல் சங்க நூற்சொல்லடியம்(2003). இது 14+314=328 பக்கங்களைக் கொண்ட நூல். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் இருதொகை நூல்களில் உள்ள சொற்கள் எந்தப்பொருளில் ஆளப்பட்டுள்ளன என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும் நூல் இஃது. சங்க இலக்கியத்தில் மீயுயர் பயிற்சியும்,புலமையும் உடையவர்களால் மட்டும் இத்தகுப் பணிகளைச் செய்யமுடியும்.


Thomas Leyman, Thomas Malten இவர்கள் A Word Index for Chankam Literature என்னும் பெயரில் உருவாக்கிய சொல்லடியத்தின் துணைகொண்டு வேலாயுதனார் இச்சொல்லடியத்தை உருவாக்கியுள்ளார். முன்னவர்கள் செய்த சொல்லடியத்தில் உள்ள பிழைகள், குறைகள் நீக்கப்பெற்று இந்நூல் வெளிவந்துள்ளதை வேலாயுதனார் முன்னுரையில் குறித்துள்ளார். சங்க நூல்களில் இடம்பெறும் "அ" முதல் "அரோ" வரையிலான சொற்கள் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

இச்சொல்லடியத்தின் வழியாகச் சங்க காலத்தில் ஒரு சொல் என்ன பொருளில் ஆளப்பட்டது என்பதையும், அக்காலத்தில் அச்சொல் என்ன வடிவத்தில் ஆளப்பட்டது என்பதையும் இச்சொல்லடியம் காட்டுகிறது. சொற்கள் முழுவதையும் ஒட்டுமொத்தமாகப் பார்ப்பதால் பொருள் விரிவு அறிய உதவும். அக்காலத்தில் இருந்து வழக்கு வீழ்ந்த சொற்களையும் அறியலாம். காலந்தோறும் சொல்லுருவங்கள் மாறிவந்துள்ளதை அறியவும் இச்சொல்லடியம் பயன்படும் என வேலாயுதனார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சங்க நூல்களில் இடம்பெறும் பாடல்கள் பலவும் பல காலங்களில் பல புலவர்கள் பாடியன.இவற்றில் பல சொற்கள்,பாடலடிகள் ஒரே தன்மையில் காணப்படுகின்றன.இவற்றை அறிவதற்கு இச்சொல்லடியம் மிகுந்த பயனைத் தருகிறது.

(எ.கா)
சங்க இலக்கியத்தில் "அ" என்ற சொல் அகநானூற்றில் 40 இடத்திலும், ஐங்குறுநூற்றில் 7 இடத்திலும், கலித்தொகையில் 81 இடத்திலும், குறிஞ்சிப்பாட்டில் 7 இடத்திலும், குறுந்தொகையில் 11 இடத்திலும், திருமுருகாற்றுப்படையில் 1 இடத்திலும், நற்றிணையில் 26 இடத்திலும், நெடுநல்வாடையில் 1 இடத்திலும், பதிற்றுப்பத்தில் 7 இடத்திலும், பரிபாடலில்19 இடத்திலும், புறநானூற்றில் 29 இடத்திலும், பெரும்பாணாற்றுப்படையில் 5 இடத்திலும், பொருநராற்றுப் படையில் 2 இடத்திலும் மலைபடுகடாமில் 1 இடத்திலும் ஆக 237 இடங்களில் ஆளப்பட்டுள்ளது எனத் துணிவுடன் பட்டியலிட்டுக் காட்ட இந்நூல் பெரிதும் பயன்படும்.

சங்கநூற் சொல்லடியம் வேலாயுதனாரின் நண்பர் பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்களால் வெளியிடப் பெற்றுள்ளது. (முகவரி : பேராசிரியர் இராசசேகர தங்கமணி அறக்கட்டளை,9 / 3,பாண்டியர் நகர்,கரூர் -639 001)

சங்ககால மன்னர் வரிசை நூல் அறிமுகம்

சங்க கால மன்னர்களின் வரலாற்றை அறிஞர்கள் பலர் தெளிவுப்படுத்த முயன்று பல சான்றுகள் கிடைக்காததால் தங்கள் ஆய்வு முடிவுகளில் வேறுபட்டு நிற்கின்றனர். பதிற்றுப்பத்து நூலில் இடம்பெறும் பதிகங்கள் பல பிற்காலத்தில் எழுந்தன.எனவே இவற்றைக் கொண்டு வரலாற்றை எழுதும்பொழுது பிழை ஏற்படுகின்றது. எனவே இவற்றை ஒதுக்கி விட்டுப்பிற சான்றுகளின் துணையுடன் வேலாயுதனார் சங்ககால மன்னர் வரிசையைத் தெளிவுற எழுத முயன்றுள்ளார்.


சங்க இலக்கியம்கொண்டு சங்ககால வரலாற்றை அறியும் முயற்சியில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.மாமூலனார் தொடங்கி, புலவர்களையும் அவர்களால் பாடப்பட்ட அரசர்களையும் பிணைத்துக்காட்டி தொடரிபோல கி.பி.142 வரையிலான வரலாற்றைச் சான்றுகளுடன் விளக்கும் நூல் இஃது. மன்னர்களையும் அவர்களைப் பாடிய புலவர்களையும் கால அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளமை இந்நூலின் தனிச்சிறப்பு ஆகும்.

கல்வெட்டுகள், காசுகள், இலக்கியச் சான்றுகள் அடிப்படையில் இந்நூல் எழுதப்பெற்றுள்ளது. 32 பக்கம் அளவுள்ள நூல். 1997 இல் வெளிவந்தது. பாரதி நூலகம், 1- 199 ஏ 9, சீதக்காதி தெரு,திருச்சிராப்பள்ளி - 620 019 என்னும் முகவரியிலிருந்து வந்துள்ளது.

பேராசிரியரின் முகவரி :

முனைவர் பே.க.வேலாயுதம்,
33,இராசாராம் சாலை,
கலைஞர் கருணாநிதி நகர்,
திருச்சிராப்பள்ளி -620 021