கிரந்தம் பற்றிய சில அடிப்படையான புரிதல்களுக்காகப் பல அறிஞர்களுடன் நேரிலும், தொலைபேசியிலும் உரையாடி வருகின்றேன்.
இன்று(12.11.2010) புதுவை பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பேராசிரியர் ழான் லூய்க் செவ்வியார் (Jean-Luc Chevillard), பேராசிரியர் விசய வேணுகோபால், அறிஞர் வரததேசிகன் உள்ளிட்ட அறிஞர்களுடன் உரையாடிப் பல விவரங்களைப் பெற்றேன்.
இவர்களுடன் உரையாடும்பொழுது கிரந்தம் தமிழ்நூல்களிலும் தமிழகத்திலும் எந்த அளவுப் பயன்பாட்டில் உள்ளது எனவும், கிரந்த எழுத்துகள் இல்லாமல் நம் மொழி மரபுக்காக தமிழ் ஒலிப்பில் எழுதினால் பொருள் மாறுபடும் இடங்களையும் தெளிவாக எடுத்துரைத்தனர். அறிவியல் தொழில்நுட்ப உலகில் பிறமொழிச் சொற்களைக் கையாளும்பொழுது இந்தக் கிரந்த எழுத்துகள் பயன்படுவதன் தேவையைப் பேராசிரியர் விசய வேணுகோபாலும், திரு வரததேசிகனும், பேராசிரியர் செவ்வியார் அவர்களும் எடுத்துரைத்தனர்.
தமிழ்ப் பாடல்களுக்கான விளக்கங்களைக் கிரந்த எழுத்தில் கலந்து எழுதினால் அந்தப் பகுதியைப் புரிந்துகொள்ள முடிகின்றது எனவும் அதனையே சமற்கிருதத்தை இன்று எழுதும் தேவநாகரி எழுத்துவடிவில் எழுதினால் முற்றாக வேறுபடுகின்றது எனவும் கருத்துரைத்தனர். எனவே பழைய தமிழ் நூல்களைப் படிக்க அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கிரந்த எழுத்தின் இன்றியமையாமையை விளக்கினர்.மூவரும் தமிழும் வடமொழி எழுத்து அமைப்பும் அறிந்தவர்கள்.
நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் உள்ள மணிப்பவள நடையினைப் படித்துப் பார்த்தபொழுது கிரந்த எழுத்துகள் தேவை என்பது போன்ற ஒரு நிலையை உணரமுடிகின்றது. ஆனால் தனிச்சிறப்பு மிக்க தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களும் எழுத்துகளும் கலந்து கிடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வது மொழிக்காப்பாக இருக்காது. அத்தகு பிறமொழிச்சொற்களைக் களைந்து தமிழில் எழுதும்பொழுதுதான் தமிழ் தமிழாக இருக்கும். எனவே நாம் தமிழ்நெடுங்கணக்கில் பிற எழுத்துகளைச் சேர்க்காமலும் (கிரந்தம் உட்பட), தமிழ் எழுத்துகளைப் பிறமொழி எழுத்து அட்டவணைகளில் இணைக்காமலும் இருப்பதே சிறப்பு.
மணிப்பவள நடையைத் தாங்கி நிற்கும் நூல்கள் யாவும் தமிழர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான அறிவைத் தாங்கி நிற்பதாக இல்லை. மாறாக அக்காலத்தில் இருந்த வடமொழியறிந்த தமிழ்ப்புலவர்கள் அரசனிடத்தும், சமூகத்திலும் தம் பெயர்,புலமையை நிலைநாட்ட செய்த வேலைகள் என்ற அளவில் நிறுத்திக்கொள்ளவேண்டும். அவர்களின் அத்தகு உரைவரையும் போக்கினை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வரலாறு காட்டுகின்றது. எனவே இவையெல்லாம் எளிய காரணங்களாகவே தெரிகின்றன.
பிறமொழி எழுத்துகள், சொற்கள் இல்லாமல் எழுதமுடியாது என்ற இந்தக் கருத்துகள் யாவும் மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் காலத்திலேயே தவிடுபொடியாயின என்பதைக் கண்ணெதிரில் கண்டோம். இன்று கிரந்தத்தைத் தமிழில் கலக்க ஒப்பினால் இன்றைய தொலைக்காட்சி, திரைப்படங்களால் தமிழர் வாழ்வில் கலந்துவரும் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை எழுதும் எழுத்துகளையும் தமிழில் கலந்து எழுத எதிர்காலத்தில் மக்கள் முயற்சி செய்வார்கள். இன்றும் இந்த நிலையை ஓரிரு விளம்பரப் பலகைககளில் காணமுடிகின்றது. பண்பலை வானொலிகளில் வலிய ஆங்கிலத் திணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றையெல்லாம் எடுத்துக்காட்டாகக் கூறி ஆங்கிலத்தைத் தமிழில் கலக்க இயலுமா?
தமிழில் பிறமொழிச் சொற்கள், பிறமொழி ஒலிப்புகள் இல்லாமல் ஏடுகள் நடத்தித் 'தென்மொழி'யாகவும், 'தமிழ்ச்சிட்டா'கவும், 'தமிழ்நிலமா'கவும் வெளிவந்த பழைய வரலாற்றையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அதுபோல் மறைமலையடிகளால் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் என்று மும்மொழிப் புலமை பெற்றிருந்தும் தூய தமிழில் எழுதித் தமிழ்ச் சிறப்பை நிலைநாட்டினார். அதுபோல் பாவாணரும் இனிக்க இனிக்க, மணக்க மணக்கத் தமிழில் எழுதித் தமிழ்ச் சிறப்பைப் பல நூல்களாக வெளிப்படுத்தினார். தமிழ் மரபுப்படி எழுதுவதும், இடர்ப்படும் அருகிய இடங்களில் அடைப்பில் பிறமொழிச் சொற்களை, எழுத்துகளை எழுதிப் புலப்படுத்துவதும் தமிழுக்கும் நல்லது தமிழர்களுக்கும் நல்லது என்ற முடிவுக்கு நான் வந்தேன்.

செவ்வியார், விசயவேணுகோபால்

செவியார், விசயவேணுகோபால், வரத தேசிகர்

மு.இ, வரத தேசிகர், செவ்வியார்

கிரந்தம் உயிர் எழுத்துகள்

கிரந்த மெய்யெழுத்துக்கள்
சிறீ இரமணசர்மா(அட்டவணை)