நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
புதுவைப் பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுவைப் பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 ஏப்ரல், 2015

புதுவைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினிப் பயிலரங்கு


 முனைவர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை

புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் இன்று (08. 04. 2015) ஒருநாள் தமிழ்க்கணினிப் பயிலரங்கு நடைபெற்றது. புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பயிலரங்கத் தொடக்க விழாவுக்குத் தலைமை தாங்கினார். இன்றையத் தொழில்நுட்ப உலகின் மாற்றங்களை எடுத்துக்காட்டிக் கணினியில் தமிழ் வளர்ந்துள்ள முறைகளை விளக்கினார். தமிழ்க்கணினி வளர்ச்சிக்குக் கடந்த ஆண்டு உத்தமம் அமைப்புப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இணைய மாநாட்டை நடத்தியதையும், அதில் உலகின் பலநாடுகளிலிருந்து பேராளர்கள் வருகை தந்து கலந்துகொண்டதையும் துணைவேந்தர் அவர்கள் தம் உரையில் நினைவுகூர்ந்தார். கணினி அறிவு மாணவர்களின் கல்விக்கு எந்த எந்த வகையில் பயன்படும் என்றும் எடுத்துரைத்துச் சிறப்புரையாற்றினார்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்(பொ) முனைவர் சு. பன்னீர்செல்வம் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். தமிழியற்புலத்தின் முதன்மையர் முனைவர் க. இளமதி சானகிராமன்  வரவேற்புரையாற்றினார். 

முனைவர் நா.இளங்கோ, முனைவர் மு.இளங்கோவன், முனைவர் ஏ.எழில்வசந்தன், முனைவர் தி.அன்புச்செல்வன் ஆகியோர் மாணவர்களுக்குக் கணினி, இணையம் குறித்த சிறப்புரைகளை வழங்கினர்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் கல்விப்பிரிவு இயக்குநர் முனைவர் வி.இந்துமதி அவர்கள் கலந்துகொண்டு பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். இப்பயிலரங்கில் புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட இளங்கலையில் தமிழ் பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர்.

பதிவாளர்(பொ) சு. பன்னீர்செல்வம் அவர்களின் உரை



 புலமுதன்மையர் முனைவர் க.இளமதி சானகிராமன் அவர்களின் வரவேற்புரை

துணைவேந்தர் அவர்கள் முனைவர் நா.இளங்கோ அவர்களைச் சிறப்பித்தல்

துணைவேந்தர் அவர்கள் முனைவர் எழில்வசந்தன் அவர்களைச் சிறப்பித்தல்
துணைவேந்தர் அவர்கள் முனைவர் தி. அன்புச்செல்வன் அவர்களைச் சிறப்பித்தல்

துணைவேந்தர் அவர்கள் மு.இளங்கோவனைச் சிறப்பித்தல்

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் புலமுதன்மையராக முனைவர் க. இளமதி சானகிராமன் பொறுப்பேற்பு…


 முனைவர் க.இளமதி சானகிராமன் அவர்கள்

புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையின் புல முதன்மையராகப் பேராசிரியர் முனைவர் கஇளமதி சானகிராமன் அவர்கள் அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார். புதுவைப் பல்கலைக்கழகம் தொடங்கிய காலம் முதல் தமிழியல் துறையில் துணைப்பேராசிரியர்(1987), இணைப்பேராசிரியர், பேராசிரியர் என்ற நிலைகளில் பணியாற்றியவர். புதுவைப் பல்கலைக்கழகத்தின் விடுதிக் காப்பாளராகத் தொடர்ந்து பணியாற்றுவது இவர்தம் கூடுதல் சிறப்பாகும். இவர்தம் பணிக்காலத்தில் எம்போலும் மாணவர்களுக்கு நல்லறிவும் நற்பண்புகளும் ஊட்டி வளர்த்த பெருமைக்குரியவர்.

பேராசிரியர் கஇளமதி சானகிராமன் அவர்கள் சித்தர் இலக்கியங்கள் குறித்த ஆய்வுகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வருபவர். இத்துறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா வகையில் பெரும் புலமை பெற்றவர். இவரின் மேற்பார்வையில் பலர் இளம் முனைவர் பட்டங்களும், பலர் முனைவர் பட்டங்களும் பெற்றுள்ளனர். தடைகளைத் தகர்த்து, உயர்நிலை எய்திய பேராசிரியர் அவர்களுக்கு அவர்களின் மாணவர்கள்  சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றோம். இவர்தம் பெருமைமிகு வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

முனைவர் கஇளமதி அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் வாழ்ந்த புலவர் கு. கண்ணையா - தனலெட்சுமி  ஆகியோரின் அன்பு மகளாக 18.10.1955 இல் பிறந்தவராவார். தொடக்கக்கல்வி, உயர்நிலைக்கல்வியை உடையார்பாளையம் அரசு பள்ளியில் பயின்றும், புகுமுக வகுப்பு, இளங்கலை வகுப்பு ஆகியவற்றைக் கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் பயின்றும் தம் கல்வியார்வத்தை மெய்ப்பித்தவர். மிகவும் பின்தங்கியப் பகுதியான இவ்வூரில் பிறந்து, உயர் கல்வி கற்று நேரிய வழியில் உயர்நிலைக்கு வருதல் அரிதினும் அரிது. ஏற்பட்ட இடர்களை நீக்கி, உயர்நிலை எய்திய பேராசிரியர் அவர்களின் உழைப்பைப் போல் மாணவர்கள் உழைத்தால் உயர்நிலை எய்தலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர்(1980). சித்தர் பாடல்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் 1987 இல் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் அதே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பொது நிருவாகம் (2005), இளங்கல்வியியல் (1984), மொழியியல் - சான்றிதழ் (1982) தெலுங்கு - சான்றிதழ் (1983), சைவ சித்தாந்தம் பட்டயம் (2001), மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் முதுகலைப் பட்டம் (1991), பெண்ணியவியல் - முதுகலைப் பட்டயவியல் (2003) ஆகிய பட்டங்களையும், பட்டயங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுத் தம் பல்துறைப் புலமையைப் பெருக்கிக்கொண்டவர்.

சித்தர் இலக்கிய அகராதி என்னும் தலைப்பில் ஆய்வுத்திட்டம் மேற்கொண்டவர். பன்னாட்டுக் கருத்தரங்குகளை நடத்தியவர். பல்கலைக்கழகத்தின் சார்பில் இரண்டுமுறைப் புத்தொளிப் பயிற்சிப் பணிகளைக் கவனித்தவர். பல்வேறு பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு பங்களிப்பு செய்தவர். பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு ஆய்வுரைஞர் குழு,  பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாடத்திட்டக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் தேர்வுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருபவர்.

பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா சென்றுவந்தவர்.

பேராசிரியர் க. இளமதி அவர்களின் தமிழ்க்கொடை:

  • பேரின்பப் பெருவாழ்வு( 1988)
  • சித்தர்களும் சமூகப் பார்வையும்
  • சித்தர்களின் சிந்தனைகள்
  • ஓம் சத்குரு அப்பா பைத்திய சுவாமிகளின் வாழ்வும் பணியும்
  • நல்லாசிரியர் புலவர் கு.கண்ணையா வாழ்வும் பணியும்
  • நம்மைப் போல் (சிறுகதைகள்)
  • எரிமலையாய் (சிறுகதைகள்)
  • மெழுகுவர்த்திகள் (சிறுகதைகள்)
  •  சிவவாக்கியார் பாடல்கள் செம்பதிப்பு
  • கொங்கணிச் சித்தர் பாடல்கள் தொகுப்பும் திறனாய்வும்
  • சித்தர் இலக்கியம்
  • பெண்ணியம் பேச..
  • சமயத்தமிழ்


உள்ளிட்ட பல நூல்களைத் தந்தவர். இவற்றுள் பல நூல்கள் பல்வேறு பரிசில்களைப் பெற்றுள்ளன.

  முனைவர் க.இளமதி அவர்களின் கணவர் பெயர் திருவாளர் சானகிராமன் ஆகும். இவர் பேராசிரியர் அவர்களின் அனைத்துப் பணிகளுக்கும் ஆய்வுகளுக்கும் துணைநிற்கும் பேருள்ளம் படைத்தவர். மாணவர்களைத் தம் உடன் பிறந்தாராக நினைந்து பழகும் இந்த இணையர் நீடுவாழ நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.


வெள்ளி, 23 மார்ச், 2012

தொல்லியல் அறிஞர் பேராசிரியர் கா. இராசன்


பேராசிரியர் கா.இராசன் 

  அண்மையில் பேராசிரியர் கா. இராசன் அவர்களின் தமிழகத் தொல்லியல், அகழாய்வு குறித்த உரையைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல மாதங்களாக நண்பர் ஒரிசா பாலு அவர்கள் பேராசிரியர் கா. இராசன் அவர்களைக் கண்டு உரையாடும்படி அன்புக்கட்டளை இடுவார். எனக்கிருக்கும் மலையளவு வேலைகளில் எங்கும் அசையமுடியாதபடி அழுத்தம் இருந்து வந்தது. பலநாள் திட்டமிட்டது அண்மையில் கைகூடியது. எதிர்பாராமல் கிடைத்த அரிய வாய்ப்பாகப் பேராசிரியர் கா.இராசன் அவர்களின் உரையைக் கருதினேன்.

  பேராசிரியர் கா. இராசன் அவர்கள் அகழாய்வுப் பணிக்கெனத் தம் வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்ட மூத்த ஆய்வாளர் ஆவார். இவரின் முப்பதாண்டுக்கால உழைப்பால் தமிழகத்தின் தொன்மையை விளக்கும் பல அரிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ்ச் சான்றுகளைத் தொகுப்பதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர். இவர்தம் அகழாய்வுப்பணிகளுள் பொருந்தல் அகழாய்வு, தாண்டிக்குடி அகழாய்வு, கொடுமணல் அகழாய்வு குறிப்பிடத்தக்கன. இதுவரை ஆங்கிலத்தில் 12 நூல்களை எழுதியுள்ளார். தமிழில் தொல்லியல் நோக்கில் சங்க காலம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

 கோவை மாவட்டம் கரடிமடையில் 12.04.1955 பிறந்த பேராசிரியர் கா. இராசன் அவர்களின் பெற்றோர் திருவாளர் காரைக் கவுடர், முத்தம்மாள் ஆவர்.

 சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தொல்லியல் பயின்ற பேராசிரியர் கா.இராசன் அவர்கள் மைசூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். “கோவை மாவட்டப் பெருங்கற்படைப் பண்பாடு” என்பது இவர்தம் முனைவர் பட்ட ஆய்வாகும்.

 புதுவைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணிபுரிகின்றார். பல நாடுகளில் இவர் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த பட்டறிவுடையவர். இவர் பணியேற்ற நாள்முதல் கோடைவிடுமுறையை அகழாய்வுப் பணிக்கெனத் திட்டமிட்டு ஒதுக்கிப் பணிபுரிகின்றமையை அறிந்து நானும் நண்பர்களும் வியந்து போனோம். எந்த வகையிலாவது விடுப்பெடுத்துக்கொண்டு வாழ்நாளை வீழ்நாளாகக் கழிக்கும் பொழுதுபோக்கு ஊழியர்களைப் போல் அல்லாமல் குடும்பம், உறவு மறந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் பேராசிரியர் இராசன் போன்றவர்கள் வளரும் தலைமுறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

பேராசிரியர் கா.இராசன் உரையில் தெறித்த சில அறிவுப்பொறிகள்:

இதுவரை 300 சங்க கால ஊர்ப்பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரில் 600 சதுரமீட்டரில் 160 முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இந்த முதுமக்கள் தாழிகளைக் கணக்கிட்டு இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள்தொகையைக் கண்டுபிடித்துவிடமுடியும்.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனை நினைவூட்டும் ஒல்லையூரில் 300 -  இற்கும் மேற்ட்ட கற்பதுக்கைகள் இருந்தன. இன்று 30 பதுக்கைகள்தான் உள்ளன. ஊரிலிருந்து பல கல்பதுக்கைகளை வரலாற்று உணர்வு இல்லாமல் தரைமட்டமாக்கிவிட்டனர்.

 சவ்வாது மலைப்பகுதியில் உள்ள கீழ்ச்சேப்புளி என்னும் ஊரில் ஆயிரக்கணக்கான கற்பதுக்கைகள் உள்ளன. முன்பு நடுகல் வேலிபோல் ஊரில் இருந்துள்ளன. பனைமரத்தைவிட உயரமான நடுகற்கள் உண்டு.

 கொடைக்கானல் அருகில் உள்ள ஊர் தாண்டிக்குடி ஆகும். இது தான்றிக்குடி என முன்பு அழைக்கப்பட்டது. தான்றி என்பது மரமாகும். தான்றி மரத்தின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவக்குணம் கொண்டவை.

 தமிழகத் தொல்லியல் சின்னங்கள் பல வெளிநாடுகளில் உள்ளன. பனை ஒறி என்னும் பெயர் பொறித்த மட்பாண்டம் எகிப்துநாட்டில் உள்ளது. கொற்றப்பூமான் என்னும் பெயர் பொறித்த இலங்கைநாட்டு தொல்பொருள் கெய்ரோ காட்சியகத்தில் உள்ளது.

 வத்தலகுண்டு அருகில் உள்ள தாதப்பட்டி என்னும் ஊரில் கிடைத்துள்ள தொல்பொருளில் “அடி ஓன் பாகல் பானிய் கல்” என்ற குறிப்பு உள்ளது. அடியோன் என்பதை அடி ஓன் என்று எழுதியுள்ளதைப் பேராசிரியர் விளக்கினார்.

 மேலும் வத்தலகுண்டு அருகில் உள்ள ’புலிமான் கோம்பை’ என்ற இடத்தில் கிடைத்துள்ள நடுகல்லில்(இந்தியாவில் கிடைத்துள்ள காலத்தால் முந்திய முதல் நடுகல்) “ பேடு தீயன் அந்தவன்” “கூடல் ஊர் ஆகோள்” என்று எழுதப்பட்டுள்ளது.

 உம்பற்காடு என்பது பாலக்காடு பகுதியில் உள்ள பகுதியாகும். பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் ஊராகும். வேழம் தாவளம் என்று இன்றும் ஊர் உள்ளது.

 முத்துக்கள் மன்னார் வளைகுடாப் பகுதியில் விளைவதற்குரிய இயற்கைச்சூழல் உண்டு.

 வீர சேகரப் பெருவழி, அதியமான் பெருவழி என்னும் பெயரில் அக்காலத்தில் பெருவழிகள் இருந்துள்ளன.

 அதியன் பெருவழி 27 காதம் என்ற குறிப்பு உள்ளது.
 ஒரு காதம் என்பது 5 மைல் அதாவது 8 கி.மீ. ஆகும்.

 வயல்நாடு என்பது இன்று வயநாடு என்று அழைக்கப்படுகின்றது.

 பொருந்தல் என்னும் ஊர் பழனி அருகில் உள்ளது. “பொருந்தலான இராஜராஜபுரம்” என்று இந்த ஊர் அழைக்கப்பட்டது. பொருந்தல் அகழாய்வில் கிடைத்துள்ள நெல்மணிகள் பயிரிடப்பட்டதை அறிவியல் அடிப்படையில் உறுதிசெய்த்தள்ளார். இதற்கு நெல்மணிகள் Beta Analytic Laboratory, U.S.A ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு, இந்த நெல்மணிகளின் காலம் கி.மு. 490, கி.மு.450 என்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட பிறகு இந்த நெல் விதைக்கப்பட்டுத் தயாரானதா? நாற்றாக உற்பத்தி செய்து பயிரிடப்பட்டதா என்று உறுதிப்படுத்தும் பணியில் உள்ளார்.

 அகழாய்வில் கரூர் பொன்வணிகன், எண்ணெய் வணிகன், மணிய வண்ணக்கன், திருமணிக்குயிலன் என்னும் பெயர்கள் கிடைத்துள்ளன.

 ஆப்கான் பகுதியில் கிடைக்கும் வைடூரியம் என்னும் நீலமணிகள் கொடுமணல் பகுதியில் மிகுதியாகக் கிடைத்துள்ளன.


 நம் கொற்கை முத்து சகாரா பாலைவனத்தில் கிடைக்கின்றன. அசோகர் அரண்மனையில் பாண்டிய நாட்டு முத்துகள் இருந்தன. பெரும்படை என்பது படையல் பொருள்களாகும். இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் இந்தப் பெரும்படை என்னும் படையல் பொருள்கள் இருந்துள்ளன. சாதவாகனர்கள் முன்பு நூற்றுவன் கண்ணர்(சிலப்பதிகாரம்) என்று அழைக்கப்பட்டனர்.

 பழைய பூம்புகார் கடலுக்கு அடியில் 65 அடி ஆழத்தில் தடயங்களைக் கொண்டுள்ளது. சேந்தமங்கலம் என்னும் ஊர் கோச்செங்கனான் வரலாற்றுடன் தொடர்புடையது.

 இன்றைய இந்திய அரசின் சின்னமான நான்கு சிங்கத் தலைக்கு மேலே ஒரு தருமச்சக்கரம் இருந்துள்ளது. இதனைத் தாய்லாந்தில் காணும் சிங்கத்தலைச் சிற்பத்தில் காணலாம். அந்த தருமச்சக்கரம் நீங்கிய அமைப்பில்தான் இன்றைய அரசின் சிங்கத்தலைகள் உள்ளன.

சங்க இலக்கியத்தில் காணப்படும் தொழில்நுட்பம், சங்க காலத்தில் குறிப்பிடப்படும் ஊர்கள், இடங்கள், முத்து, மலைவளம், வணிக உறவு, அயலக உறவுகள் குறித்த மேலாய்வுகளுக்குச் சங்க இலக்கியம் இடம்தருவதாக உள்ளது என்று பேராசிரியர் கா.இராசன் அவர்கள் பல செய்திகளை முன்வைத்தார்.


பேராசிரியர் கா.இராசன் அவர்களுடன் மு.இளங்கோவன்

செவ்வாய், 16 செப்டம்பர், 2008

முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் தமிழ்வாழ்க்கை

முனைவர் அ.அறிவுநம்பி

முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் புதுவைப்பல்கலைக்கழகத்தின்  தமிழியல்துறைத் தலைவராகவும்,புல முதன்மையராகவும் விளங்குபவர். 1992-இல் நான் இளம் முனைவர் பட்டம் படிக்க புதுவைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றபொழுது மாணவர்களின் உள்ளங்கவர் பேராசிரியராக விளங்கியவர்களுள் அவரும் ஒருவர்.அவர்தம் நகைச்சுவை கலந்த பேச்சும்,எடுத்துரைக்கும் சில நறுக்குகளும் எங்களை அவர்மேல் மதிப்பு ஏற்படும்படி செய்தன.

மாணவர்களுடன் மாணவராக இருந்து உரையாடுபவர்.எச்சூழலிலும் அவர் சினமடைந்து யான் கண்டதில்லை.அது அவர்தம் வெற்றிக்குரிய காரணங்களுள் ஒன்றாகக் கருதுகிறேன். நாகரிகமாக இடித்துரைக்கும் அவர் பண்பும் கைக்கொள்ளத்தக்கதே.

அப்பொழுது பேராசிரியராக விளங்கிய முனைவர் க.ப.அறவாணனார் மாணவர்களை நூலெழுதத் தூண்டிய வண்ணம் இருப்பார்கள்.தக்க உதவிகளைச் செய்வார்கள்.உரியவர்களிடம் நெறிப்படுத்தி வளர்ப்பார்கள். அப்படி மாணவர்களாகிய நாங்கள் நூலெழுதி முடித்ததும் க.ப. அறம். அவர்களிடம் அணிந்துரை பெறுவதும் அ.அறிவுநம்பி அவர்களிடம் அட்டைப்பட அறிமுகம் வாங்குவதும் எங்கள் இயல்பு.

அந்த அட்டைப்பட அறிமுகம் ஏறத்தாழக் கணியன் ஒருவர் வாழ்க்கையைக் கணித்துக் குறித்து வழங்குவதுபோல் ஒரு மாணவனை அப்படியே மதிப்பிட்டுக் கண்முன்கொண்டுவந்து வைத்துவிடும் ஆற்றலுடையது.அந்த அளவு எங்கள் பேராசிரியர் ஒருவரை நுட்பமாக மதிப்பிட்டுவிடுவார்.அப்படி அறிமுக வரிகள் பெற்றவர்களுள் யானும் ஒருவன்.எனக்கு எழுதப்பெற்ற வரிகளும் வைர வரிகளேயாகும்.அத்தகு பெருமைக்குரிய எங்கள் பேராசிரியரின் வாழ்க்கையை இணையத்தில் பதிந்து வைப்பதில் மகிழ்கிறேன்.

முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் குடும்பம் மிகச்சிறந்த தமிழ்க் குடும்பம்.தமிழ் அவர்களின் பரம்பரைச் சொத்து என அழுத்தமாகக் குறிப்பிடலாம்.அறிவுநம்பி அவர்களின் முன்னோர் இராமநாதபுரம் அரண்மனையில் அரசவைப் புலவராக இருந்த பெருஞ்சிறப்பிற்கு உரியவர்கள்.சேதுபதி மன்னரின் மேல் பல சிற்றிலக்கியங்களை எழுதிய பெருமை மிக்க புலவர்களுள் இவரின் முன்னோர் குறிப்பிடத்தக்கவர்.

அவர்தம் திருப்பெயர் சரவணப்பெருமாள் என்பதாகும்(இச் சரவணப் பெருமாள் என்ற பெயரின் அடிப்படையில் தம் மகனுக்குச் சரவணன் எனப் பேராசிரியர் அறிவுநம்பி பெயரிட்டுள்ளமை அவர்தம் மரபு பேணும் பழக்கத்தைக் காட்டும்).தனிப்பாடல் திரட்டில் இவர்தம் பல பாடல்கள் உள்ளன.சேதுபதி மன்னர் மேல் விறலிவிடு தூது பாடியமையும் கந்த வருக்கச் சந்த வெண்பா உள்ளிட்டவை பாடியமையும் புலமை நலம் மெய்ப்பிக்கும் சான்றுகளாகும்.

புலவர் சரவணப்பெருமாள் அவர்களின் மகனார் பூவார்சாமி என்பதாகும்.அவர் மகன் பேராசிரியர் பூ.அமிர்தலிங்கனார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பணிபுரிந்து ஒய்வுபெற்றவர். இவர்களும் வள்ளுவர் கண்ட உயிரினங்கள்,கம்பன் கவியரங்கில் மலரமுதன், கருத்தும் கற்பனையும் என்னும் தமிழ் நூல்களை வழங்கியவர். பேராசிரியர் பூ.அமிர்தலிங்கனார் அவர்களுக்கும், இராசலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர்தான் (10.11.1952) நம் மதிப்பிற்குரிய முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள்.பிறந்த ஊர் காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்.

தொடக்கக் கல்வியைக் காரைக்குடி சுபாசுநகர் நகராட்சிப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை காரைக் குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர்.கவியரசு முடியரசனார், புலவர் ஆ.பழனி ஐயா உள்ளிட்டவர்கள் இங்கு இவருக்கு ஆசிரியப் பெருமக்களாக விளங்கியவர்கள் ஆவர்.புகுமுக வகுப்பை அழகப்பர் கல்லூரியிலும்,இளம் அறிவியல்(கணக்கு) பட்ட வகுப்பையும் நிறைவு செய்த பின்னர் முதுகைலத் தமிழ் இலக்கியம் பயின்றவர்(1976).

பின்னர் முனைவர் பட்டத்திற்குத் தமிழகத்தில் நடைபெறும் தெருக்கூத்துகள் பற்றிய தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்(1980). மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர் பணியைத் தொடங்கி(1981-86),புதுவைப் பல்கலைக் கழகத்தில் இணைப்பேராசிரியர் பணியேற்று(1986-97),பேராசிரியராக மிளிர்ந்து(1997-98),துறைத்தலைவராக, இயக்குநராக,முதன்மையராக(Dean) பணியாற்றும் பெருமை பெற்றவர்.

இதுவரை இவர் நெறிப்படுத்த 18 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இளம் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 20 ஆகும். முதுகலையில் பாடம் பயிற்றுவித்த பட்டறிவு இவருக்கு 26 ஆண்டுகளாக உண்டு. தமிழக, புதுவை அரசுகளின் பல்வேறு அமைப்புகளிலும், பல்கலைக் கழகங்களிலும் உறுப்பினராக இருந்து பல பணிகளைச்செய்து வருபவர்.

கல்விக்குழு.பாடத்திட்டக்குழு,ஆட்சிக்குழு என இப்பொறுப்புகள் அமையும். பல்வேறு கருத்தரங்குகளின் அமைப்பாளராக இருந்து நடத்திக் காட்டியவர். பயிற்சியரங்குகள் பலவற்றிற்குப் பொறுப்பேற்று நடத்திக் காட்டியவர்.
உலக அளவில் நடைபெற்ற 13கருத்தரங்குகளில் கட்டுரை படித்த பெருமைக்கு உரியவர்.தேசிய அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் 40 ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார்.உலக நாடுகள் பலவற்றிற்குக் கல்விப் பயணம் மேற்கொண்டவர். இலங்கை, சிங்கப்பூர்,மலேசியா, உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

நாட்டுப்புறவியல்,சங்க இலக்கியம்,அரங்கக்கலை,சொற்பொழிவுக்கலை பற்றிய பல பயிலரங்குகளில் பயிற்றுநராக விளங்கியவர்.பல்வேறு கல்வி நிறுவனங்களில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்திய பெருமைக்கு உரியவர்.

முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் பல்வேறு தமிழ்ப் பணிகளை, திறன்களை அறிந்த நிறுவனங்கள் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்துள்ளன.அவற்றுள் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றபொழுது முதல் வகுப்புப் பெற்றமைக்குத் தங்கப்பதக்கம் பெற்றதும். கம்பவாணர் பரிசில்,சிறந்த உலக மாந்தன் விருது(1999), தொல்காப்பியர் விருது(புதுச்சேரி அரசு) பெற்றமையும் குறிப்படத் தக்கனவாகும்.

பேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்கள் வழங்கிய தமிழ்க்கொடை


01.கூத்தும் சிலம்பும், 1977
02.தமிழகத்தில் தெருக்கூத்து, 1986
03.நாட்டுப்புறக் களங்கள்,1989
04.தமிழரின் வழிபாட்டுச் சிந்தனைகள்,1990
05.தமிழர் மறந்த தமிழர் மரபுகள்,1991
06.பாவேந்தரின் பன்முகங்கள்.1992
07.தமிழரின் தெய்வநெறிச் சிந்தனைகள்,1993
08.இலக்கிய வித்தகங்கள்,1994
09.தமிழ் வளர்ச்சி சிக்கல்களும் தீர்வுகளும்,1995
10.வளர்தமிழ்க் களங்கள்,1996
11.கம்பரின் அறவியல்.1997
12.பல்துறைத் தமிழ்,1998
13.கம்பர்காட்டும் மள்ளர் மாண்பு,1999
14.புள்ளிகள்(கவிதை நூல்),2000
15.இலக்கியங்களும் உத்திகளும்,2001
16.தமிழியல் சிந்தனைகள்,2002
17.செந்தமிழ்ச் செம்மல்கள்,2003
18.இலக்கிய நோக்குகள்,2004
19.சிலம்பின் எதிர்க்குரல்,2005
20.பொருள் புதிது,2006
21.இலக்கியத் தளங்களில்,2007

பேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்களின் முகவரி:

முனைவர் அ.அறிவுநம்பி
புல முதன்மையர்& பேராசிரியர்,
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்,
புதுவைப்பல்கலைக்கழகம்,
புதுச்சேரி - 605 014

இல்ல முகவரி :

முனைவர் அ.அறிவுநம்பி
15,கலைவாணி நகர்,இலாசுப்பேட்டை,
புதுச்சேரி- 605 008

பேசி :
இல்லம் 0413- 2256699
அலுவலகம் : 0413-2654464
செல்பேசி : 94431-17769

மின்னஞ்சல் : arivunambi@tamilid.com