நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
பாவேந்தர் பாரதிதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவேந்தர் பாரதிதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 டிசம்பர், 2016

'வைணவ இலக்கியச்செம்மல்' பாவலர்மணி சித்தன்


பாவலர்மணி சித்தன்

புதுவையின் பழைய வரலாற்றை நெஞ்சில் சுமந்து, வாழ்ந்துகொண்டிருக்கும் அறிஞர்களுள் பாவலர்மணி சித்தன் குறிப்பிடத்தக்கவர். 96 அகவையைக் கடந்தபோதிலும் தமிழ்ப்பணிகளைத் தொய்வின்றிச் செய்துவருபவர். வைணவ இலக்கியத்தில் நல்ல புலமையும், பயிற்சியும் உடைய பாவலர்மணி சித்தன், பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்ற பெருமைக்குரியவர். இவர்தம் தமிழ்ப்பணியை அறிவதற்குப் பல நாட்களாகத் திட்டமிட்டும் இயலாமல் இருந்தது. கல்வெட்டு அறிஞர் வில்லியனூர் வேங்கடேசனாருடன் இன்று சித்தன் அவர்களின் இல்லம் சென்றேன். மூன்று மணி நேரம் உரையாடி, அரிய செய்திகள் பலவற்றை அறிந்துகொண்டேன். வழக்கம்போல் காணொளியில் இவர் பேச்சைப் பதிவுசெய்தேன்.

பாவலர்மணி சித்தன் 1920 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஆறாம் நாளில் புதுச்சேரியில் பிறந்தவர். இயற்பெயர் இராதாகிருஷ்ணன். இவர்தம் பெற்றோர் திருவாளர்கள் முத்துசாமிப்பிள்ளை என்ற முதலியாண்டான், ஆதிலட்சுமி அம்மாள். தொடக்கக் கல்வியாக எழுத்துப் பயிற்சி முதல் எண்சுவடி வரை புதுச்சேரி காந்தி வீதியில் இருந்த பஜனை மடத்தில் பயின்றவர். கல்வே கல்லூரியில் பிரெஞ்சுப் படிப்பைப் படித்தவர். கல்வே கல்லூரியில் பாவேந்தர் பாரதிதாசனின் மாணவராகப் பயின்றவர். தனிப் பயிற்சியாகவும் பாவேந்தரிடம் இலக்கண இலக்கியங்களைப் பயின்றவர். புதுவையில் இருந்த புதுவைக் கல்விக் கழகத்தில் தேசிகம் பிள்ளை, தில்லை கோவிந்தன் உள்ளிட்டவர்களிடம் மொழிப்பயிற்சி பெற்றவர். 19 அகவையில் தமிழாசிரியராகத் தேர்வுபெற்றாலும் மருத்துவத்துறையில் ஊதியம் அதிகம் என்பதால் ஆசிரியர் பணிக்குச்  செல்லாமல் மருத்துவமனையில் உதவி மருத்துவராகப் பணியில் இணைந்தவர். தமிழார்வம் காரணமாகப் பண்டிதர் வீ. துரைசாமி முதலியார் அவர்களிடம் பயிற்சி பெற்று, வித்துவான் தேர்வு எழுதி, 22 ஆம் அகவையில் வித்துவான் பட்டம் பெற்றவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதர் தேர்வெழுதி வெற்றிபெற்றவர்.

சித்தன் அவர்களின் குடும்பம் மரபு வழியான வைணவக் குடும்பம். எனவே இளம் அகவையில் ஆழ்வார் பாசுரங்களை நாளும் மனப்பாடம் செய்ய வேண்டிய சூழல். அதற்காகப் புதுவை வரதராசலு நாயுடு என்பவரிடம் வியாழன், ஞாயிறு கிழமைகளில் காலை எட்டுமணி முதல் 12 மணிவரை பாசுரங்களைப் படித்து நெட்டுருப்படுத்தியவர். திருவரங்கம் மீ. கோ. இராமாநுச சுவாமிகளிடம் ஆழ்வார்களின் பாசுரங்களைச் சிறப்பாகப் பயின்றவர். 18 அகவைக்குள் ஆழ்வார்களின் நாலாயிரம் பாடல்களும் சித்தனுக்கு மனப்பாடமானது. பெற்றோர் இதற்காக ஒரு விழா எடுத்துப் பாராட்டினர். இதனை அறிந்த பாவேந்தர் பாரதிதாசன் தம்மைச் சந்திக்க சித்தனை அறிவுறுத்தினார். பாவேந்தரின் தொடர்பு அமைந்ததும் சித்தனுக்கு இலக்கிய இலக்கண ஈடுபாடு மிகுதியானது. ஆழமாகத் தமிழ் கற்கத் தொடங்கினார். வைணவ அமைப்புகள் பலவற்றில் இணைந்து இலக்கிய - சமயப் பணியாற்றவும் வாய்ப்புகள் அமைந்தன.

பாவலர்மணி சித்தன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பல் அறுவை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். புதுவையில் வாழ்ந்த அறிஞர்கள், தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த சித்தனின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டிப் புதுவை அரசு தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகளை அளித்துச் சிறப்பித்தது. பல்வேறு கல்வி நிறுவனங்களில் வைணவ இலக்கியங்கள் குறித்தும் கம்ப ராமாயணம் குறித்தும் அரிய சொற்பொழிவுகளாற்றியுள்ளார். பல்வேறு கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைபாடியுள்ளார். இலக்கியப் பயணமாக இலங்கை, பிரான்சு, சுவிசு, உரோமாபுரி உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அரிய உரையாற்றி மீண்டவர்.

பிரான்சு நாட்டு அறிஞர் பிலியோசா அவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த சித்தன் பிலியோசா அவர்களின் பன்மொழிப் புலமை, இலக்கிய ஈடுபாடு, தமிழாராய்ச்சித் திறத்தினை அறிந்து, அவர்மேல் உயர்ந்த மதிப்பினைக் கொண்டவர்.

புதுவையில் பாவேந்தர் பாரதிதாசனைச் சந்தித்து நாளும் உரையாடும் வாய்ப்பினைச் சித்தன் பெற்றிருந்தவர். காமராசர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது, தமிழர் ஒருவர் முதலமைச்சாரனமையைப் பாராட்ட நினைத்துப் பாவேந்தர் விழாவெடுத்தார். அந்தநாளில் கவியரங்கம் ஒன்று நடந்தது. அப்பொழுது காமராசரின் சிறப்பினைக் கவிதையாகப் பாடிய சித்தனைப் புகழ்ந்து பாவேந்தர்,

வித்துவான் புதுவைச் சித்தர்
இராதா இந்நேர மிங்கே
நத்துவார்க் கெலாமி னிக்க
நறுங்குறிஞ் சித்தேன் பெய்தார்;
அத்தவக் கவிஞர் நன்னூல்
ஆய்ந்தவர், தமிழ்க்காப் பாளர்!
முத்தமிழ்ச் செல்வர் வாழி;
மொழிகின்றோம் அவர்க்கு நன்றி!

என்று பாடினார்.

குயில் இதழில் சித்த மருத்துவம் சார்ந்த பாடல்களை இராதாகிருஷ்ணன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தவரைச் சித்தன் எனப் பெயரிட்டுப் பாவேந்தர் எழுதவைத்தார். அன்றுமுதல் சித்தன் என்ற புனைபெயரே நிலைபெறலாயிற்று.

சித்தன் புதுவைப் பல்கலைக்கழகத்திலும், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திலும், புதுவைக் கம்பன் கழகத்திலும் அறக்கட்டளையை நிறுவி வைணவ இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றி வருபவர். பல்வேறு  வைணவ மாநாடுகளை ஏற்பாடு செய்து திறம்பட நடத்தியவர். சைவ இலக்கிய ஈடுபாடும் இவருக்கு உண்டு.

பாவலர்மணி சித்தனின் தமிழ்க்கொடை:

1.   அருட்கவி சுத்தானந்தர்
2.   புதையுண்ட நாகரிகம்
3.   தாமரைக்காடு(கவிதைகள்)
4.   பாவேந்தருடன் பயின்ற நாள்கள்
5.   புதுமை நயந்த புலவர்
6.   துரை வடிவேலனார்
7.   பங்காரு பத்தர்
8.   வேளாளர்
9.   பாரதி கண்ட பைந்தமிழ் வள்ளல்கள்
10. கம்பன் பிள்ளைத்தமிழ்
11. கம்பனும் திருமங்கை மன்னனும்
12. மேதை கம்பனும் கோதைப் பிராட்டியும்
13. கம்பன் கற்பகம்
14. பாட்டரங்கில் கம்பன்
15. கம்பனில் மனிதம்
16. கம்பனின் கற்பனைத் திறன்
17. கடல்கடந்த கம்பன்
18. கம்பர் வித்தகம்
19. தேவ தேவி(குறுங்காப்பியம்)
20. வைணவ மங்கையர்(கவிதை)
21. திருமால் திருநெறி
22. வஞ்சி விடுதூது
23. பாலகர்க்குப் பாட்டமுதம்
24. களம் கண்ட கவிதைகள்
25. இராமாநுசர்(புரட்சித்துறவி)


புலவர் அரசமணியின்  அன்புவிடு தூது நூலினைச் சித்தன் உரையுடன் பதிப்பித்துள்ளார்.


புதுவையில் வாழ்ந்த இலக்கியப் புலவர்கள், பாவலர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுடன் பழகியும், தமிழ்ப்பணியாற்றியும் தமிழுலகுக்குப் பன்னூல்களைத் தந்தும் பாவலர்மணி சித்தனின் தமிழ் வாழ்க்கை தொடர்கின்றது. வைணவ இலக்கியங்களைப் பயின்று கற்றுத் துறைபோகிய அறிஞராக விளங்குவதுடன் பாவலராகவும் நாவலராகவும் விளங்கும் இவரைப் போற்றுவதும் பாராட்டுவதும் தமிழர் கடன்!
பாவலர்மணி சித்தன்

மு.இ, பாவலர்மணி சித்தன், வில்லியனூர் வேங்கடேசனார்

குறிப்பு: கட்டுரை, படங்களை எடுத்தாள விரும்புவோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

வியாழன், 24 நவம்பர், 2016

தனித்தமிழ் இலக்கிய ஆய்வரங்க நினைவுகள்…


முனைவர் வி. முத்து அவர்கள் சிறப்பிக்கப்படுதல்

இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழிக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. இவற்றைச் சமற்கிருத வல்லாண்மை, இந்திமொழித் திணிப்பு, ஆங்கிலத் திணிப்பு, ஊடகப் பெருக்கத்தால் ஏற்பட்டுவரும் மொழிச்சிதைவு என்று பட்டியலிடலாம். இவ்வாறு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும் தனித்தமிழ் இயக்கத்தாரின் எழுச்சி இவற்றை அடையாளம் கண்டு, தடுத்து நிறுத்துவதில் துணைசெய்துள்ளது.

மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எழுத்தாலும், பேச்சாலும் மக்களிடம் தனித்தமிழ் என்ற சுடரை ஏற்றி வைத்துள்ளனர். இவர்களின் வழியில் வந்த அறிஞர்கள் தொடர்ந்து ஆய்வுகளாலும், உரைகளாலும் தமிழ் மலர்ச்சிக்குப் பாடுபட்டு வருகின்றனர். நூற்றாண்டைக் கடந்து இப்பணி தொடர்ந்து நடந்து வருகின்றது.

அயலகத்தில் இருக்கும் தமிழர்கள் தனித்தமிழ் இயக்கப் பணிகளை நினைவுகூர்ந்து, தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடினாலும் நம் நாட்டில் இருக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தமிழாய்வு நிறுவனங்களில் பணிபுரிவோர்க்குத் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு குறித்த விழிப்புணர்வோ, ஆர்வமோ இருப்பதாகத் தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கில் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு தமிழ் வளர்க்கும் அமைப்பினர் உள்ளனர்ஆனால் அங்கொன்றும் இங்கொன்றும் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிகழ்வுகள் நடந்து வருகின்றனவே தவிர ஒட்டுமொத்தமான தமிழகத்திலும் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு குறித்த நிகழ்வுகள் நடைபெறாமை எம் போலும் இளையரைக் கவலைகொள்ளவே செய்கின்றது.

தவத்திரு மறைமலையடிகளார் தம் அனைத்துத் துறை ஆராய்ச்சியையும் தமிழ் நலம் நோக்கி அமைத்தமையை இங்குக் கவனத்தில்கொள்ள வேண்டும். மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் பல்துறை ஆய்வுகளைபணிகளைச் செய்தமையை இங்கு எண்ணிப்பார்த்தல் வேண்டும். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் படைப்பிலக்கியங்கள் வழியாக, குறிப்பாகப் பாட்டு இலக்கியங்கள் வழியாக ஒரு மிகப்பெரும் தமிழ் எழுச்சியைத் தமிழகத்தில் உண்டாக்கியமையை இங்கு நினைத்துப் பார்த்தல் வேண்டும். தமிழுக்கு இவர்களால் மிகப்பெரும் அடித்தளம் அமைக்கப்பட்டாலும் தனித்தமிழ் என்னும் காலத்தேவைக்குரிய மொழிக்காப்புப் பணிக்கு மக்கள் முன்வராமைக்குரிய காரணத்தைக் கண்டுணரவேண்டும். அரசு இந்த முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும்; அரசுசார் நிறுவனங்கள் பன்மடங்கு முன்வந்து பணியாற்ற வேண்டும். தமிழமைப்புகள் ஒன்றுதிரண்டு தனித்தமிழின் தேவை குறித்துப் பொதுமக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். ஊடகத்தில் இதுகுறித்த உரையாடல்கள் நிகழ்த்தப்பெற வேண்டும் என்று கூறத் தோன்றுகின்றது.

பண்பாடு காக்கும் நம் திருவிழாக்களைக் கல்வி நிறுவனங்கள் கொண்டாட முன்வருதல் போல மொழிக்காப்பு முயற்சியையும் ஆர்வமுடன் கொண்டாட முன்வரவேண்டும். அப்பொழுதுதான் தமிழ்மொழியின் வளர்ச்சி ஏறுமுகத்தில் இருக்கும். இந்த நினைவுகளுடன் புதுவையில் தனித்தமிழ் இலக்கியங்களை மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தனித்தமிழ் குறித்த ஆய்வரங்கம் நடைபெற்றது. புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இந்த நிகழ்ச்சிக்குத் திரளாக வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து அவர்கள் தலைமையேற்க, ஆணையர் திரு. . தியாகராசன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். பாவலர் மு. பாலசுப்பிரமணியன் முன்னிலையுரையாற்றவும், பேராசிரியர் இரா..குழந்தைவேலனார் வாழ்த்துரை வழங்கினார். பெருஞ்சித்திரனாரின் பாவியங்கள் என்ற தலைப்பில் மு.இளங்கோவன் உரையாற்றினார். பெருஞ்சித்திரனாரின் ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து என்ற மூன்று நூல்களையும் அறிமுகம் செய்வதாக இவர் உரை அமைந்தது.

முனைவர் நிர்மலா கிருட்டினமூர்த்தி அவர்களின் உரை பாவேந்தரின் பாவியங்கள் என்ற தலைப்பில் அமைந்து, கண்ணகி புரட்சிக்காப்பியம், மணிமேகலை வெண்பா என்னும் இருநூல்களை அறிமுகம் செய்வதாக இருந்தது.

மேற்குறித்த பாவியங்கள் குறித்த வினாக்களுக்கு விடைபகரும் நிகழ்வும் இடம்பெற்றது.


முனைவர் க. தமிழமல்லன் அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது

முனைவர் க. தமிழமல்லன் உரை

மு.இளங்கோவன் உரை

முனைவர் நிர்மலா கிருட்டினமூர்த்தி உரை

புதுவைத் தமிழறிஞர்கள்

பார்வையாளர்கள்

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகள் வசந்தா தண்டபாணி மறைவு

வசந்தா தண்டபாணி

பாவேந்தரின் அன்புமகள் வசந்தா தண்டபாணி அவர்கள் தம் 84 ஆம் அகவையில் புதுச்சேரியில் 13.08.2014 பிற்பகல் இரண்டு மணியளவில் இயற்கை எய்தினார். இன்று 14.08.2014 வியாழன், முற்பகல் 11 மணியளவில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. வசந்தா அம்மா அவர்களின் உடல் புதுச்சேரி முத்தியால்பேட்டை, வசந்தம் நகரில் உள்ள மருத்துவர் சேரன் இல்லத்தில் பொதுமக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆர்வலர்கள், பாவேந்தர் பற்றாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் இறுதி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
                           

வசந்தா அம்மா அவர்களைப் பலவாண்டுகளாக நான் நன்கு அறிவேன். தனித்துப் பலமுறை உரையாடியுள்ளேன். உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் கலந்துகொண்டு எனக்குப் பாவேந்தர் மரபுப்பாவலர் பட்டம் சென்னையில் வழங்கியபொழுது அம்மா வசந்தா தண்டபாணி அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். அந்த அரிய படம் ஒன்று  இருப்பில் இருந்தது. கூடுதல் படங்களைப் பிறகு பார்வைக்கு வைப்பேன்.

உவமைக்கவிஞர் சுரதா, மு.இ., வசந்தா அம்மா

வெள்ளி, 27 டிசம்பர், 2013

பாவேந்தர் பாரதிதாசன் குறித்த அரிய செய்திகள்


திரையுலகில் பாவேந்தர்
திரைப்படத்துறையில் பாவேந்தர் பாரதிதாசன் பணியாற்றிய திரைப்படங்களின் விவரம்.

(திரைக்கதை - வசனம் - பாடல்கள்)
.எண்.            திரைப்படத்தின் பெயர்     கதாநாயகன்               ஆண்டு
1.            பாலாமணி () பக்காத்திருடன் , டி.கே.சண்முகம்   1937
2.            இராமானுஜர்             சங்கு சுப்ரமணியம்              1938
3.            கவிகாளமேகம்       டி.என்.ராஜரத்தினம்            1940
4.            சுலோசனா   டி.ஆர்.சுந்தரம்           1944
5.           ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி,       பி.எஸ்.கோவிந்தன்  1947
6.            பொன்முடி   பி.வி.நரசிம்மபாரதி             1949
7.            வளையாபதி              ஜி.முத்துக்கிருடடிணன்  1952
8.            பாண்டியன் பரிசு     சிவாஜி கணேசன்  (வெளிவரவில்லை)
9.            மகாகவி பாரதியார்                              (வெளிவரவில்லை)

திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாவேந்தரின் பாடல்கள்

.எண்.            பாடல்கள்      பாடல் இடம் பெற்றுள்ள ஆண்டு
                                        திரைப்படம்
1.        அனைத்துப் பாடல்களும்       பாலாமணி () பக்காத்திருடன்               1937
2.            அனைத்துப் பாடல்களும்                               ஸ்ரீ ராமானுஜர்           1938
3.            அனைத்துப் பாடல்களும்                               கவிகாள மேகம்      1940
4.            வெண்ணிலாவும் வானும் போல...       பொன்முடி   1950
5.            துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ... ஓர் இரவு        1951
6.            அதோ பாரடி அவரே என் கணவர்...        கல்யாணி     1952
7.            வாழ்க வாழ்க வாழ்கவே...                            பராசக்தி         1952
8.            பசியயன்று வந்தால் ஒரு பிடி சோறு...              பணம்                1952
9.            அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்?...               அந்தமான் கைதி   1952
10.          குளிர்த்தாமரை மலர்ப் பொய்கை...      வளையாபதி              1952
11.          குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி...      வளையாபதி              1952
12.          தாயகமே வாழ்க தாயகமே வாழ்க...    பூங்கோதை 1953
13.          பாண்டியன் என் சொல்லை.....                   திரும்பிப்பார்              1953
14.          ஆலையின் சங்கே நீ ஊதாயோ...            ரத்தக் கண்ணீர்         1954
15.          எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்        என் மகள்       1954
16.         நீலவான் ஆடைக்குள் உடல் ...கோமதியின்காதலன்               1955
17           ஆடற் கலைக்கழகு தேடப் பிறந்தவள்...          நானே ராஜா                1955
18           தலைவாரி பூச்சூடி உன்னை-பாட...       ரங்கோன் ராதா        1956
19.          கோரிக்கை யற்றுக் கிடக்கு தண்ணே...             குலதெய்வம்             1956
20.          ஒரே ஒரு பைசா தருவது பெரிசா...        பெற்ற மனம்              1960
21.          பாடிப் பாடிப் பாடி வாடி...  பெற்ற மனம்              1960
22.          மனதிற்குகந்த மயிலே வான்விட்டு...               பெற்ற மனம்              1960
23.          தமிழுக்கும் அமுதென்று பேர்-அந்த...                பஞ்சவர்ணக்கிளி  1965
24.          எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்...    கலங்கரை விளக்கம்          1965
25.          வலியோர் சிலர் எளியோர் தமை...       மணிமகுடம்              1966
26.          புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட            சந்திரோதயம்           1966
27.          எங்கெங்குக் காணிணும் சக்தியடா !...          நம்ம வீட்டுத் தெய்வம்    1970
28.          சித்திரச் சோலைகளே-உமை நன்கு....       நான் ஏன் பிறந்தேன்            1972
29.          புதியதோர் உலகம் செய்வோம் -             பல்லாண்டு வாழ்க               1975
30.          காலையிளம் பரிதியிலே ...         கண்ணன் ஒரு கைக் குழந்தை  1978
31.          அம்மா உன்றன் கைவளையாய் ...        நிஜங்கள்        1984
32.          கொலை வாளினை எடடா... சிவப்பதிகாரம்
32.          பெண்சிங்கம்
33.      உடும்பன்

பாவேந்தர் பாரதிதாசன் உரிமையாளராகவும் ஆசிரியராகவும்
பொறுப்பேற்று நடத்திய இதழ்களின் பெயர்ப் பட்டியல்

1.            புதுவை முரசு (வார இதழ்)             10-11-1930  -  9-11-1931
                பாண்டிச்சேரி, பிரஞ்சிந்தியா.

2.           ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்            1935 ( பவ வருடம் பங்குனி
                (மாதாந்தக் கவிதைப் பத்திரிக்கை)       முதல் யுவவருடம்
                புதுச்சேரி.      புரட்டாசி வரை )

3.            குயில் (புத்தகம்) குயில் நிலையம்,      சனவரி 1946
                திருவல்லிக்கேணி, சென்னை.

4.            குயில் ( ஒரு பெயர்ப்பன்னூல் )                ஜூன் 1947
                பாரதிதாசன் பதிப்பகம்,
                95, பெருமாள் கோயில் தெரு.
                புதுச்சேரி, பிரஞ்சிந்தியா.

5.            குயில் (திங்கள் இதழ்)       1-9-1947   -  1-10-1948
                பழநியம்மா அச்சகம், பாண்டிச்சேரி.

6.            குயில் (தினசரி)       13-9-1947 - 26-10-1948
                பழநியம்மா அச்சகம், பாண்டிச்சேரி.

7.            குயில் (கிழமை இதழ்)      1-6-1958    -   7-2-1961
                பழநியம்மா அச்சகம், பாண்டிச்சேரி

8.            குயில் (திங்களிருமுறை)             15-4-1962   -  1-8-1962
                10, இராமன் தெரு, தி.நகர், சென்னை‡17.

 வள்ளுவர் உள்ளம் எனும் தலைப்பில் குயில் கிழமை இதழில்
பாரதிதாசன் எழுதிய திருக்குறள் உரைகள் பற்றிய விவரம்

( 1-12-1959 முதல் 22-07-1960 வரை )
அறத்துப்பால் / அதிகாரம்
                               
                               
1.            உலகின் தோற்றம்  (கடவுள் வாழ்த்து)              10
2.            வான் சிறப்பு                10
3.            நீத்தார் பெருமை    10
4.            அறன் வலியுறுத்தல்         10
5.            இல்வாழ்க்கைத் துணை நலம்  10
6.            வாழ்க்கைத் துணை நலம்             10
7.            மக்கட்பேறு 10
8.            அன்புடைமை           10
9.            விருந்தோம்பல்      3

பொருட்பால் / அதிகாரம்
10           கொடுங்கோன்மை              2
                உரை எழுதப்பட்ட திருக்குறளின் எண்ணிக்கை       85

பாரதிதாசன் ஆசிரியராகப் பணியாற்றிய இடங்கள்
.எண்ஊர்ப்பெயர்கள்    பகுதிகள்        ஆண்டு
1.            நிரவி,                காரைக்கால்               16-7-1907
2.            முத்திரைப்பாளையம்,     புதுச்சேரி       12-1-1912
3.            கூனிச்சம்பட்டு,       புதுச்சேரி       29-6-1914
4.            வில்லியனூர்,          புதுச்சேரி       29-3-1916
5.            ஆலங்குப்பம்,           புதுச்சேரி       7-7-1916
6.            திருநள்ளாறு,            காரைக்கால்               11-4-1917
7.            திருபுவனை                , புதுச்சேரி     27-9-1918
8.            திருமலைராயன்பட்டினம்,          காரைக்கால்               11-11-1921
9.            முத்தியால்பேட்டை,         புதுச்சேரி       13-5-1924
10.          புதுவை மிசியோன் வீதி ஆண்கள் பள்ளி,       புதுச்சேரி       17-8-1926
11.          புதுவை சுய்ர்கூப் வீதி பள்ளி,      புதுச்சேரி       26-11-1931
12.          கூனிச்சம்பட்டு,       புதுச்சேரி       10-8-1934
13.          நெட்டப்பாக்கம்,      புதுச்சேரி       19-9-1935
14.          புதுவை சுய்ர்கூப் வீதி பள்ளி,      புதுச்சேரி       5-1-1939
15.          நிரவி காரைக்கால்,              20-7-1944
16.          புதுவை மிசியோன் வீதி ஆண்கள் பள்ளி,       புதுச்சேரி       26-7-1944

நன்றி: புதுச்சேரி அரசு, கலை பண்பாட்டுத்துறையின் வெளியீடான விளக்கக் கையேடு