நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழ் இணையமாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் இணையமாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜூன், 2011

தமிழ் இணையமாநாடு நிறைவுநாளும் அமெரிக்கச் சுற்றுச் செலவின் தொடக்கமும்…


பிலடல்பியாவில் உள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க மணி அருகில் மு.இளங்கோவன்

 பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழ் இணைய மாநாட்டின் நிறைவுநாளான 19.06.2011 காலையில் ஆம்டன் இன் (HAMPTO INN) தங்குமனையில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு பல்கலைக்கழக அரங்கத்திற்குச் சென்றோம். நண்பர் வைரம் அவர்கள் அரங்கத்திற்கு முதல் ஆளாக வந்திருந்தார்.

 குறிஞ்சிப்பாட்டுப் பூக்களை அடையாளம் கண்டு நிறுவும் முயற்சியில் ஈடுப்பட்டவர். பல ஆண்டுகளாக மின்னஞ்சலில் தொடர்புகொண்டுள்ளோம். அன்றுதான் நேரில் பார்த்தோம். பார்த்த கையுடன் அவரின் திருமண அழைப்பினைக் கொடுத்தார். இன்னும் ஒரு கிழமையில் அமெரிக்காவில் பார்த்துவரும் தொலைத்தொடர்புத்துறைப் பொறியாளர் பணியை விட்டுவிட்டு, பிலிப்பைன்சில் மேல்படிப்புக்காகச் செல்ல உள்ளார். செல்வதற்குமுன் பெற்றோர்கள் பையனுக்குத் திருமணம் செய்து அனுப்பவேண்டும் என்று நினைத்தனர் போலும். வரும் சூலைமாதம் தேவக்கோட்டையில் திருமணமாம்.


முனைவர் மு.இளங்கோவன், பொறியாளர் வைரம்

 வைரத்தின் திருமண அழைப்பிதழைப் பார்க்கும் தமிழர்கள் ஒவ்வொருவரும் அவரின் தமிழ்ப்பற்று கண்டு உண்மையில் மனம் திறந்து பாராட்டுவார்கள். திருமண அழைப்புடன் சங்க இலக்கிய அகக்காட்சிகள் இரண்டையும் பாடல் உரையுடன்-படத்துடன் வைத்துள்ளார். ’செம்புலப்பெயல்நீர் போல’ எனும் குறுந்தொகைப் பாடலும் பொருளும் ஆங்கில விளக்கமும், பெருநன்று ஆற்றின்(115) என்ற குறுந்தொகைப் பாடலும் பொருளும் ஆங்கில விளக்கமும் வரைந்துள்ளார். அவருக்குத் திருமண வாழ்த்துச்சொல்லி என் நூல்கள் சிலவற்றைத் திருமண அன்பளிப்பாக வழங்கி மகிழ்ந்தேன். இது நிற்க.

 மாநாட்டின் நிறைவுநாள் என்பதாலும் அன்று அமெரிக்காவில் தந்தையர்நாள் கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும் என்பதாலும் கூட்டம் சிறிது குறைந்தே இருந்தது. காலையில் நடந்த முதல் அமர்வில் பேராசிரியர் செல்வா அவர்கள் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிவரங்களைத் தந்து அறிமுகம் செய்தார். இரசனி இரசித் அவர்கள் இணையம், கணினி வழியாகத் தமிழ்க் கல்வி பயிற்றுவித்தல் தொடர்பான கட்டுரையைப் படித்தார். அடுத்து பழனியப்பன் வைரம் அவர்கள் சங்க இலக்கியங்களைச் சமூகப் பயன்பாட்டுக்குத் தக இணையத்தில் ஏற்ற வேண்டும் என்பது குறித்த கட்டுரையை வழங்கினார். இவர் கட்டுரை அனைவராலும் பாராட்டப்பட்டது. கதைகள், பாடல்கள் வழியாகச் சங்கப் பாடல்கள் மக்களிடம் சென்றுசேர வேண்டும் என்று இவர் எடுத்துவரும் முயற்சியை அனைவரும் மனம்திறந்து பாராட்டினர்.

 அடுத்து சிவா பிள்ளை (இலண்டன்), சீதாலெட்சுமி (சிங்கை), பரமசிவம் (மலேசியா) உள்ளிட்டவர்கள் கட்டுரை வழங்கினர். மதன்கார்க்கி வேறொரு அரங்கில் கட்டுரை படித்தார். ஒரு அரங்க நிகழ்வை மட்டும் நான் கண்டு கேட்டதால் இன்னொரு அரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரையைக் கேட்க முடியவில்லை. தேநீர் இடைவேளையின்பொழுது எளியநிலையில் தந்தையர்நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முனைவர் மு. அனந்தகிருட்டினன், முனவைர் இ.அண்ணாமலை உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 அமர்வுகள் நிறைவுற்றதும் நிறைவு விழா தொடங்கியது. மாநாட்டைச் சிறப்பாக நடத்திய முனைவர் வாசு, வாசுவின் துணைவியார் திருவாட்டி விஜி, கவி, முனைவர் கல்யாண் உள்ளிட்டவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். விழாவுக்கு உதவியாக இருந்த மருத்துவர் சோம.இளங்கோவன், முனைவர் முத்துமணி உள்ளிட்ட அன்பர்கள் பாராட்டப்பட்டனர். முனைவர் மு.அனந்தகிருட்டினன், முனைவர் மு.பொன்னவைக்கோ உள்ளிட்டவர்கள் மாநாட்டின் சிறப்பினை எடுத்துரைத்தனர். அனைவரும் மதிய உணவு உண்டு விடைபெற்றோம்.

 என்னை அழைத்துச் செல்ல முதல்நாளே வந்திருந்த மருத்துவர் சித்தானந்தம் முனைவர் குணா ஆகியோருடன் விடுதிக்குச் சென்று பொருள்களை எடுத்துக்கொண்டு அமெரிக்க உலாவுக்கு ஆயத்தம் ஆனோம்.

 முதலில் நாங்கள் வரலாற்றுச்சிறப்பு மிக்க இடமான பிலடல்பியாவின் பழைய ஆளவை அரங்கம், பழைய முறை மன்றம் உள்ளிட்டவற்றைக் கண்டோம். மிகப்பழைய கட்டடங்களைப் பேணிப் பாதுகாக்கின்றனர். அங்குக் குதிரை வண்டிகள் மிகுதியாக இருந்தன. எங்களைக் குதிரை வண்டி ஓட்டத்துக்கு அழைத்தனர். கொழுத்து நின்ற அந்தக் குதிரைகளின் வனப்பை விரித்துரைத்தபடி கால்நடையாகவே அந்தப் பகுதியைப் பார்த்து மகிழ்ந்தோம். பழையவற்றைப் பாதுகாப்பதில் அமெரிக்க மக்களும் அரசும் கொண்டிருக்கும் பேரீடுபாடு கண்டு மகிழ்ந்தேன்.


அமெரிக்காவின் முதல் முறைமன்றம்


அமெரிக்கச் சட்டங்கள் உருவாக்கப்பட்ட அவையம்

சற்றொப்ப இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் விடுதலை, சட்ட உருவாக்கம் பற்றிய ஆவணக் களஞ்சியமாக இந்த இடம் உள்ளது. சட்டம் உருவாக்குவதற்குத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் அமர்ந்து கலந்துரையாடிய இருக்கைகள், மிசைகள், கூண்டுகள் யாவும் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. நெறியாளர் ஒருவர் எங்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அமெரிக்கா வரக்கூடியவர்கள் பார்க்க வேண்டிய இடங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த இடங்களைப் பார்க்க நுழைவுச்சீட்டு வாங்க வேண்டும். எங்களுக்கு இது தெரியாது. பெரும்பாலானவர்கள் வாங்கியிருந்தனர். நாங்கள் திரும்பிச்சென்று நுழைவுச்சீட்டு வாங்க நினைத்தோம்.ஆனால் நெறியாளர் பரவாயில்லை உள்ளே வாருங்கள் என்று அனுமதித்தார். இங்கு ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நெறிமுறைகளை அனைவரும் மதிக்கவேண்டும் அதேபொழுது மாந்தவிருப்பம் போற்றப்பட வேண்டும் என்பதே இங்குள்ளவர்களின் எண்ணமாக உள்ளதை உணர்ந்தேன். பிற இடங்களில் சட்டம், நெறிமுறைகள் இருக்கும். மாந்த விருப்பம் இருக்காது.

 மாலைப்பொழுது ஆனதும் நாங்கள் பென்சில்வேனியாவிலிருந்து புறப்பட்டு, டெலவர் மாநிலங் கடந்து மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் வாழும் மேரிலாந்து மாநிலப் பகுதிக்கு வந்தோம்.

 வரும் வழியில் இந்தியக் கறிகாய்க் கடை கண்டு வீட்டுக்கு வேண்டிய பழங்கள் கறிகாய்கள் வாங்கினோம். பின்னர் அருகில் இருந்த உட்லண்ட் உணவகத்தில் உணவுக்கு நுழைந்தோம். தந்தையர் நாள் என்பதால் பெற்றோருடன் பலர் வந்திருந்தனர். இந்திய முகங்களைக் காணமுடிந்தது. ஒரு தோசை உண்டேன். குளிர்க்குடிப்பும் இணைப்பாக அருந்தினேன். ஒரு வார இடைவெளியில் நம்மூர் உணவு உண்டதில் மகிழ்ச்சி. தயிர்ச்சோற்றுக்கு அடிமையான என் நாக்கு அங்கும் இங்கும் பார்த்தும் எதுவும் கிடைக்காமல் சிறிது அவல்பொறியை உண்டு ஆறுதல் அடைந்தது. அங்கிருந்து புறப்பட்டோம்.

 சிறிது தொலைவில் ஒரு “பார்மசி” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பலகை கொண்ட கடையருகில் சித்தானந்தம் ஐயா மகிழுந்தை நிறுத்தினார். மருத்துவர் ஏதோ மருந்து வாங்கப் போகின்றார் என்று நினைத்துத் தயங்கி நின்றேன். வாருங்கள் சில பொருட்கள் வாங்கிவருவோம் என்றார். கடையின் கதவு தானே  திறந்தது. மிகப்பெரிய வளிக்கட்டுப்பாட்டுக் கூடங்களால் அமைந்த அரங்கில் பசுமை மாறாத கறிகாய்களும், பழங்களும், வெதுப்புப்பொருட்கள், மளிகைப்பொருட்களும், சிறுவர்களுக்குரிய விளையாட்டுப் பொருட்களும் குளிர்க்குடிப்புகளும், எழுதுபொருள் உள்ளிட்டவைகளும் இனிப்பு, காரம் உள்ளிட்டவைகளும் கண்டு வியந்தேன்.

 அடுத்திருந்த அழகிய ஞெகிழித் தாள்கள் கொண்டு மூடப்பட்ட “ பிறந்த நாள்கேக்” போன்ற ஒரு பொருளை ஐயா அவர்கள் எடுத்தார்கள். என்ன இது? என்றேன். கோழிக்கறி என்றார். அவ்வளவு தூய்மையாகப் பாதுகாப்புச் செய்யப்பட்டுள்ளது கண்டு வியந்தேன். அருகில் இருந்த இடங்களில் மீன், பன்றி, மாட்டு இறைச்சி, காடை, கௌதாரி என்று இன்னும் பெயர் தெரியா பலவற்றின் இறைச்சிகள் பாதுகாப்பாக இருப்பது கண்டு வியந்தேன். அவை வீணாகாத வகையில் குளிரூட்டப்பட்டு இருந்தது.

 எனக்குப் புதுச்சேரியின் பெரியக்கடை மீன் அங்காடியும், நெல்லித்தோப்பு மீன் அங்காடியும், கடலூர் முதுநகர் மீன்அங்காடியும் நினைவுக்கு வந்தன. மனத்தில் லேசானா மீன்வாடை அடித்தது. எல்லாப் பொருள்களையும் எடுத்துவந்து நாங்களே அவற்றுக்குரிய விலைப்பட்டி உருவாக்கி, கடனட்டையிலிருந்து காசை இறக்கிப், பையில் பொருள்களைப் போட்டு எடுத்து வந்தோம். இத்தனைக்கும் அங்கு கடையாள் அவர்கள் வேலைகளைத்தான் பார்த்தார்கள். அமெரிக்க மக்களின் நேர்மையும் சட்டம் ஒழுங்கின் சிறப்பையும் கண்ணால் கண்டு போற்றினேன்.

 20.06.2011 காலை ஒன்பது மணிக்கு நானும் மருத்துவர் சித்தானந்தம் ஐயாவும் வாசிங்டன் நோக்கிச் சென்றோம். பத்து மணியளவில் நகரை அடைந்தோம். சித்தானந்தம் ஐயா வீட்டிலிருந்து வாசிங்டன் நகரம் வரை சாலைகள் மிகச்சிறப்பாக இருந்தன. போக்குவரவு விதிகளை அனைவரும் போற்றுகின்றனர். ஊட்டி, குன்னூர் போன்ற மலைப்பகுதிகளில் மழை, சாரல் நடுவே பயணம் செய்வது போன்று இயற்கை அன்னையின் இதமான குளிர்க்காற்றில் மகிழ்ச்சியுடன் சென்றோம்.


ஆளவைப் பேராய மாளிகையில் மு.இளங்கோவன்

 முதலில் நாங்கள் அமெரிக்க ஆளவைப் பேராயத்தின் கட்டடத்தைக் கண்டு மகிழ்ந்தோம். பழைய கட்டடங்களை எவ்வாறு புதுப்பித்து, கண்காணிக்கின்றனர் என்பதை அறிந்து வியந்தேன். எங்களுக்கு ஒரு பெண் நெறியாளர் இருந்து அந்தக் கட்டடத்தின் சிறப்புகளைச் சொல்லியவண்ணம் வந்தார். அவர் பேச்சு மட்டும் கேட்கும்படியான ஒரு காதுக்கருவி தந்தனர். அதனை அணிந்துகொண்டு அந்த அம்மா சொன்னவற்றைத் தெரிந்துகொண்டோம்.

 கோபுரத்தின் உட்புறத்தில் வரையப்பட்டுள்ள படங்கள் பலவும் பல்வேறு செய்திகளைச் சொல்கின்றன. அங்குள்ள தலைவர்களின் சிலைகள் சிறப்பு.


லிங்கன் சிலையருகில் மு.இளங்கோவன்


மார்ட்டின் லூதர் கிங் சிலையருகில் மு.இளங்கோவன்


 அனைத்து மாநில மக்களின் உணர்வுகளையும் மதிக்கும் வகையில் பல மாநிலத்தைச் சேர்ந்த புகழாளர்கள் கல்லில் வாழ்கின்றனர். அதனைப் பார்த்தபடி அமெரிக்க நூலகப் பேராயத்தையும் பார்வையிட்டோம். உலகில் உள்ள நூல்கள் பற்றிய விவரங்கள், நூல்கள் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. சிலர் அமைதியாக அமர்ந்து படித்துக்கொண்டுள்ளனர்.


அமெரிக்க நூலகப் பேராய அரங்கின் முகப்பில் மு.இளங்கோவன்

 சில காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டுப் பகலுணவுக்கு வந்தோம். அருகில் உள்ள தொடர்வண்டி நிலையில் இந்திய உணவான புலவும் கோழிக்கறிக் குழம்பும், வெண்டைக்காய்ப் பொறியலும் இருந்தன. உண்டு மகிழ்ந்தேன்.

 அமெரிக்கர்களின் அறிவியல், விண்ணியல் ஆய்வுகளுக்குச் சான்றாக அமைந்துள்ள அறிவியல் காட்சிக்கூடத்தைப் பார்வையிட்டோம். அமெரிக்கர்களின் விண்ணியல் ஆய்வு, இராக்கெட் தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றைக் காட்டும் பல காட்சிப்பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பலவகையான வானூர்திகளின் மாதிரிகள், இராக்கெட் மாதிரிகள், நிலவில் மாந்தன் கால் வைத்த அரிய படங்கள், இராக்கெட்டில் விண்வெளிக்கு ஆய்வுக்குச் சென்றவர்கள் பயன்படுத்திய பொருள்கள் யாவும் சிறப்பாக இருந்தன. அங்கு நடைபெற்ற மும்மடங்குப் படக்காட்சி எங்களைப் புது உலகிற்கு அழைத்துச்சென்றது.


அறிவியல் காட்சியகத்தில் மு.இளங்கோவன்


அறிவியல் காட்சியகத்தில் மு.இளங்கோவன்(வேறு ஒரு கோணம்)

 விண்வெளிவீரர்கள் விண்வெளி ஆய்வுக்குச் செல்லும்பொழுது நடக்கும் முன்னேற்பாடுகள், விண்வெளிக்குச் செல்பவர்களின் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி, இராக்கெட் புறப்படும் இயல்புக்காட்சி, வான்வெளியில் மிதந்தபடி விண்வெளி வீரர்கள் உரையாடும் காட்சி, உணவு உண்ணும் காட்சி யாவும் பார்த்து வியப்புற்றேன்.

 கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயங்கிவரும் இயற்கையின் பெருவியப்பை ஒவ்வொருவரும் காண வேண்டிய முக்கிய இடம் இதுவாகும். இவற்றை மிகச்சிறப்பாகப் படமாக்கியுள்ள திரைக்கலைஞார்கள், ஒளி ஓவியர்கள், ஒலிக்கோப்பாளர்கள் யாவரும் போற்றி மதிக்கத்தக்க அறிவாளிகளே ஆவர்.

 இவற்றைக் காணும்பொழுது நம் நூல்களில் இயற்கை பற்றியும், அறிவியல் பற்றியும் அறியாது மூடத்தனமாகப் பதிந்துவைத்துள்ள புராணக்கதைகள் நினைந்து என் தமிழுள்ளம் மெதுவாகச் சிரித்துக்கொண்டது. இப்படி நினைத்துப்பார்த்தேன். தமிழகத்தின் திரைப்படம், தொலைக்காட்சிகளில் அழுமுகப் பெண்களை உருவாக்கும், வேப்பிலைக் கொத்துகளை வைத்துச் சாமியாடும், பேய் பிசாசுக் கதைகளை இன்னும் சொல்லிக்கொண்டிருக்கும், பாம்புகளை, முட்டைகளைக் காட்டியும் யானையை இரந்துண்ணும்படியாகவும் படம் எடுத்துக்கொண்டிருக்கும் இயக்குநர்கள், ஒளி ஓவியர்கள், கதையாசிரியர்கள், தயாரிப்பாளர்களை அழைத்து வந்து இந்தக் காட்சிகளைக் காட்டி, வியப்பூட்டும் அறிவு கொளுத்தும் இத்தகு படங்களை உள்வாங்கிக்கொண்டு படம் எடுங்கள் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அறிவியல் அரங்கை முழுமையாகப் பார்வையிட ஒருநாள் வேண்டும். பருந்துப் பார்வையாகத்தான் அனைத்தையும் பார்த்தோம். குளிர்க்குளம்பி ஒன்றை வாங்கிக் குடித்தோம்.


கென்னடி சதுக்கம் மற்றும் போர்வீரர்கள் நினைவிடத்தில் மு.இளங்கோவன்

 அதன் பிறகு கென்னடி சதுக்கம், போர்வீரர்களின் நினைவுத்துயிலிடம், லிங்கன் நினைவகம் உள்ளிட்டவற்றைப் பார்த்து மகிழ்ந்தோம். கென்னடி சதுக்கத்தில் கென்னடியின் கல்லறை, பொன்மொழிகள் யாவும் மதிப்புக்கு உரிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உலகப்போர், வியட்நாம்போர் உள்ளிட்ட போர்களில்  இயற்கை எய்திய வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் தூய்மையாகப் பாதுக்கப்படுகின்றது.

 அதுபோல் இலிங்கள் சதுக்கத்திலும் அவரின் பொன்மொழிகள், சிலைகள் சிறப்பாக உள்ளன. அடுத்து எங்கள் மகிழ்வுந்து வெள்ளை மாளிகை நோக்கி விரைந்தது.


இலிங்கன் நினைவிடத்தில் மு.இளங்கோவன்



வெள்ளை மாளிகையின் முகப்பில் மு.இளங்கோவன்

 அழகிய ஆற்றங்கரையைக் கடந்து வெள்ளை மாளிகை இருக்கும் நகர்நோக்கிச் சென்றோம். உலகையே திரும்பிப் பார்க்கச் செய்யும் அந்த மாளிகை சிறிய அளவில் அமைதியாகக் காட்சி தருகின்றது. காட்சிக்கு எளியன் என்று திருவள்ளுவர் அரசருக்குச் சொன்னபடி வெள்ளை மாளிகை தெரிந்தது. அருகில் ஒரு பூங்கா உள்ளது. அந்தப் பூங்காவில்தான் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அணிவகுப்புகள் நடக்கும் என்று சொன்னார்கள். எல்லாவற்றையும் பார்த்தப்படியும் படங்கள் எடுத்தபடியும் இரவு 7.30 மணிக்கு ஐயா சித்தானந்தம் அவர்களின் வீட்டுக்கு வந்தோம். நம்மூரில் மாலை மூன்று மணிக்கு வெயில் அடிக்குமே அதுபோல் இரவு 7 .30 மணிக்கு வெயில் அடித்தபடி இருந்தது…

சனி, 18 ஜூன், 2011

தமிழ் இணையமாநாடு முதல்நாள் நிகழ்வு

பென்சில்வேனியா தமிழ் இணைய மாநாட்டில் முனைவர் மு.ஆனந்தகிருட்டினன், முனைவர் மு.இளங்கோவன், முனைவர் பொன்னவைக்கோ, முனைவர் தாவூத் அலி 

   பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தென்னாசிய மையமும் உத்தமம் அமைப்பும் இணைந்து நடத்தும் தமிழ் இணைய மாநாட்டில் முதல்நாள் நிகழ்வுக்கு உரிய நேரத்திற்குச் சென்றோம். உலகின் பல பகுதிகளிலிருந்தும் கணினி, இணைய ஆர்வலர்கள் வந்திருந்தனர். கனடாவிலிருந்து செல்வா, மலேசியாவிலிருந்து இளந்தமிழ், பரமசிவம், இலண்டனிலிருந்து சிவா பிள்ளை, சுவிசிலிருந்து கல்யாண், சிங்கப்பூரிலிருந்து சிவகுமாரன், சீதாலெட்சுமி உள்ளிட்டவர்களைக் கண்டு அளவளாவினேன். பேராசிரியர் ஆனந்தகிருட்டினன், பேராசிரியர் பொன்னவைக்கோ உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர். உரையாடி மகிழ்ந்தோம். பேராசிரியர் கெரால்டு சிப்மன் அவர்களை முதன்முதலாகக் கண்டு அறிமுகம் ஆனேன். அவருக்கு என் நூல்களை அளித்து மகிழ்ந்தேன். தமிழ் இணைய மாநாடு காலை 9.30 மணியளவில் தொடங்கியது. பேராசிரியர் வாசு அரங்கநாதன், முனைவர் கல்யாண், கவி உள்ளிட்ட அன்பர்கள் நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வாசு உத்தமம் அமைப்பைப் பற்றி எடுத்துரைத்து அனைவரையும் வரவேற்றார். முனைவர் கல்யாண் அவர்களும், கவி அவர்களும் அவரவர் சார்ந்த குழுவின் சார்பில் வரவேற்றனர். 

வாசு வரவேற்பு 

கல்யாண் நோக்கவுரை 

  

முனைவர் பொன்னவைக்கோ அவர்களுக்குப் பேராசிரியர் ஆனந்தகிருட்டினன் நினைவுப்பரிசு வழங்கல் அருகில் கவி பேராசிரியர் கெரால்டு சிப்மன், பேராசிரியர் தாவூத் அலி உள்ளிட்ட அறிஞர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தனர். 

  அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஆனந்தகிருட்டினன் அவர்கள் சிறப்புரையாற்றினார். நிறைவாக ஆண்டோபீட்டர் நன்றியுரையாற்றினார். முதல் உரையைப் பேராசிரியர் கெரால்டு சிப்மன் வழங்கினார். அவரை அடுத்து முனைவர் பொன்னவைக்கோ தலைமையில் பெங்களூர் பேராசிரியர் ஆ.க.இராமகிருட்டினன் அவர்கள் இசுகைப் வழியாக உரையாற்றினார். அவருடைய உரை அனைவராலும் பாராட்டப்பட்டது. பேராசிரியர் கீதா அவர்களின் உரையும் சிறப்பாக இருந்தது. பேராசிரியர் ஆண்டவர், பேராசிரியர் டெனிசு, பேராசிரியர் தாவூத் அலி, டிக்சன் ஆகியோரின் உரைகளும் சிறப்பாக இருந்தன. பேராசிரியர் டிக்சன் அவர்கள் இணையவழிப் பயிற்றுவித்தல் தொடர்பான கட்டுரையைச் சிறப்பாக வழங்கினார். தமிழ் டைசசுடு நிறுவனத்தின் தமிழ் அறிமுகக் குறுவட்டுகள் அதன் உரிமையாளர் சரவணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. மாலையில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர்கள் வழங்கிய இன்னிசை அனைவரின் உள்ளத்தையும் ஈர்த்தது. இரவு விருந்துக்குப் பிறகு நண்பர்கள் பலரும் நகருலா வந்தோம். 

முனைவர் கெரால்டு சிப்மன் அவர்களுடன் முனைவர் மு.இளங்கோவன்

வியாழன், 16 ஜூன், 2011

அமெரிக்காவின் பென்சில்வேனியா வந்துசேர்ந்தோம்…

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தமிழ் இணையமாநாட்டில் கலந்துகொள்ளும் தமிழகப் பேராளர்கள் எட்டுப்பேர் அமெரிக்க நேரப்படி 16.06.2011 காலை 6.10 மணிக்கு நியூயார்க் நகரில் உள்ள சான் கென்னடி பன்னாட்டு விமானநிலையத்திற்கு ஏர்இந்தியா வானூர்தியில் வந்துசேர்ந்தோம். அதன்பிறகு காக்சு அண்டு கிங்சு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சிற்றுந்தில் பென்சில்வேனியாவில் உள்ள ஆம்டன்(HAMTON) விடுதிக்கு மூன்றுமணி நேரப் பயணத்தில் வந்துசேர்ந்தோம். பயணக்களைப்பு அனைவருக்கும் ஏற்பட்டது. மதிய உணவுக்குப் பிறகு விரிவான செய்திகளைத் தெரிவிக்க இயலும்.