நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழிசைக் கலைக்களஞ்சியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழிசைக் கலைக்களஞ்சியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மார்ச், 2016

இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் நினைவுநாள்…

பேராசிரியர் வீ..கா. சுந்தரம்  அவர்கள்

    2003, மார்ச்சு 9 இல் நம் இசைமேதை வீ..கா. சுந்தரம் அவர்கள் நம்மையெல்லாம் பிரிந்து, இயற்கை எய்தினார். இன்று அவரின் நினைவுநாள். ஐந்தாண்டுகள் தூரத்திலிருந்தும் ஓராண்டு உடனுறைந்தும் அவரிடம் நான் கற்ற செய்திகள் மிகுதியாகும். அவரின் உழைப்பையும், ஆராய்ச்சி வன்மையையும் நினைக்கும்பொழுதெல்லாம் நான் வியப்படைவேன். தமிழிசையை மீட்பதில் அவர் மேற்கொண்டிருந்த பணிகள் என் நினைவில் தோன்றி, கண்ணில் நீர் உகுக்கின்றன. மிகப்பெரும் இசைப் பெருமையைக் கொண்டிருந்த இத்தமிழினத்தார் தன் சிறப்பை உணராமல் இன்றும் இருந்துவருகின்றனர். இச் சூழலில் ஆபிரகாம் பண்டிதர். சுவாமி விபுலானந்தர், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார், வீ..கா. சுந்தரம் போன்ற அறிஞர்களின் உழைப்பைத் தமிழர்கள் போற்றிக் கொண்டாடாமல் வீணர்களின் ஆர்ப்பாட்ட இரைச்சல்களுக்கு மயங்கிக் கிடப்பது வருத்தம் தருகின்றது.

  இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் விட்ட இடத்திலிருந்து தமிழிசை ஆய்வினைத் தொடர்வதற்கு அறிஞர்கள் யாரும் இன்று நம்மிடையே இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு யாரேனும் ஆய்வில் ஈடுபட முன்வந்தாலும் அவர்களைப் போற்றிப் பாதுகாக்க அண்ணாமலை அரசர், அருட்செல்வர் நா. மகாலிங்கம் போன்ற வள்ளல்களும் இன்று இல்லை.

  திரைக்கூத்தர்கள், அரசியல்காரர்கள், பணத்தில் புரளும் கல்வியாளர்கள் நடுவே வீ.ப.கா.சுந்தரம் போன்ற இசை மேதைகளின் ஆராய்ச்சியை விளங்கிக்கொள்ள நூற்றாண்டுகள் தேவைப்படும். அவர்தம் தமிழிசைக் கலைக்களஞ்சியத்தை ஒருவர் புரிந்துகொண்டால் அவர் வழியில் ஆய்வை முன்னெடுக்க இயலும். அவர்தம் பிற நூல்களைப் புரிந்துகொண்டால் பரந்துபட்ட ஆராய்ச்சிக் களங்களை அடையாளம் காணலாம். உலக அளவில் எந்த மொழியிலும் இசைக்கெனக் கலைக்களஞ்சியம் இல்லை என அறிகின்றேன். குறிப்பாக இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும் கலைக்களஞ்சியம் இல்லை என்று வீ.ப.கா.சுந்தரம் கூறி, தமிழில் மட்டும் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளதைப் பெருமிதம் பொங்க எடுத்துரைப்பார்.

  வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் பணிகளை மதிப்பிடும்பொழுது, மறைந்து கிடந்த பழந்தமிழிசை உண்மைகளைத் துலக்கிக் காட்டியமையை முதன்மைப் பணியாகக் குறிக்கலாம். அதுபோல் அறிஞர்கள் இசைகுறித்துத் தவறான விளக்கம் சொன்ன இடங்களை நமக்கு அடையாளம்காட்டி, அதற்குரிய உண்மையை நிறுவியுள்ளமையை அடுத்ததாகக் குறிப்பிடலாம்.


  மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டினை(1981)ஒட்டி வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் ஆக்கிய, “இன்று இசைக்கல்லூரிகளில் வழங்கும் வடசொல்களுக்கு உரிய இசைத்துறைத் தமிழ்ச்சொல்கள்” என்னும் நூலில் நமக்குத் தொகுத்து வழங்கியுள்ள இசைத்துறையில் புழக்கத்தில் உள்ள வடசொற்களும், அவற்றிற்கு நிகரான தமிழ்ச்சொற்களும் அவர்தம் தமிழிசைப் பற்றைக் காட்டும் சான்றாக உள்ளன.

  தமிழக அரசு பலதுறை அகராதிகளை வெளியிட்டது. ஆனால் இசைத்துறை அகராதியை வெளியிடவில்லை என்று கவலைகொண்டு இந்த அகராதியை வீ.ப.கா.சு. வெளியிட்டுள்ளார். 1.கோவை(சுரம்) 2. ,பண்ணுப் பகுப்பு இயல், 3. பண்ணுப்பெயர்த்தல் இயல், 4. பொருந்து இசைக் கோவை இயல், 5. பண்ணில் சில இயல்கள், 6. ஆளத்தி இயல், 7. தாள உறுப்பு இயல், 8. முழக்குக் கோல இயல், 9. முழக்குப் பரப்பு இயல் என்ற தலைப்புகளில் இசையுலகில் செல்வாக்குடன் உள்ள வடசொற்களை அடையாளம் காட்டி, அவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களைத் தந்து தென்னக இசையை மீட்கும் ஒரு கருவி நூலாக இதனை ஐயா அவர்கள் தந்துள்ளார்.

  வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் தமிழிசைப் பணியையும் வாழ்வையும் இத் தமிழுலகுக்கு ஆவணப்படுத்தி வழங்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என்று அவரின் நினைவுநாளில் உறுதியேற்போம்!


திங்கள், 5 ஜூலை, 2010

படம் சொல்லும் கதை

மு.வளர்மதி, மு.இ. ,வீ.ப.கா.சுந்தரம், ஒப்பிலா, கண்ணன். 

 சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நான் ஆராய்ச்சி உதவியாளனாகப் பணிபுரிந்தபொழுது (1997-98) இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் ஐயா அவர்கள் ஒரு கருத்தரங்கிற்கு வந்தார்கள். இசைமேதை அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பு எனக்கு அப்பொழுது அமைந்தது. முனைவர் மு.வளர்மதி, முனைவர் ஒப்பிலா.மதிவாணன், உ.த.நி. கணிப்பொறித் தட்டச்சராகப் பணியேற்ற திரு.கண்ணன் யாவரும் ஐயாவுடன் நெருங்கிப் பழகினோம். 

 வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் அப்பொழுதுதான் முனைவர் மு.வளர்மதி அவர்களைப் பறை என்ற ஒரு நூலினை எழுத ஊக்கப்படுத்தினார்கள். தொடர்ந்து வளர்மதி அக்காவுக்கு ஐயாவிடமிருந்து நாளும் ஒரு கடிதம் வரும். நூலை முடிக்க வேண்டும் என்பது அவரின் கட்டளை. அக்கா அவர்களின் நல்ல நூல்களுள் இதுவும் ஒன்று. நானும் ஒப்பிலா.மதிவாணன் அவர்களும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றினோம். தங்குவதற்கே எங்களுக்கு உரிய ஊதியம் போதுமானதாக இல்லை. இருப்பினும் எங்கள் இயக்கத்திற்கு உரிய இடமாக உ.த.நி. இருந்தது. எங்களின் பெருகிய வளர்ச்சிக்கு உ.த.நி யில் பணியாற்றியது பேருதவியாக இருந்தது. 

  இந்த நிறுவன நிகழ்ச்சிக்கு வந்தபொழுதுதான் ஐயா கழிவறைக்குச் சென்ற பொழுது வழுக்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். மருத்துவமனையில் ஐயா இருப்பதறிந்து அங்கு விரைந்தேன். அவர்களுக்குப் பணிவிடை செய்து ஐயா உயிரைக் காத்தேன். இதனை அவர்களே ஒரு அஞ்சல் அட்டையில் "என் உயிர் காத்த கடவுளல்லவா நீ" என நன்றியுடன் எழுதினார்கள். ஐயாவுடன் பழகிய அந்த நாட்களை நேரம் கிடைக்கும்பொழுது எழுதுவேன். வேறு ஒரு படத்தைத் தேடிக்கொண்டிருந்தபொழுது ஐயாவின் இந்த அரிய படம் கிடைத்ததால் அனைவரின் பார்வைக்கும் உட்படட்டும் என்று என் பக்கத்தில் பதிந்தேன்.

வெள்ளி, 30 ஜனவரி, 2009

இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் நினைவுகள்...1


மு.வளர்மதி,மு.இளங்கோவன்,வீ.ப.கா.சு,ஒப்பிலா.மதிவாணன்,கண்ணன்(1997,மார்ச்சு)

இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் பல ஆண்டுகள் நான் பழகியிருந்தாலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அவரின் உதவியாளராகப் பணியமர்த்தப்பட்டுப்
பணிபுரிந்த காலம் குறைவுதான்(01.04.1997-31.12.1998).ஆனாலும் குறைந்த காலம் பணி செய்தாலும் அந்தக் காலத்தில் அவருக்கு உற்றுழி உதவி உயிர்காத்தது நான் எனில் மிகையன்று. ஐயா அவர்களின் உயிர்காத்தவன் யான் என்பதை ஐயா அவர்கள் எனக்கு நன்றியுரைத்து எழுதிய மடல் உறுதி செய்யும்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் யான் பணிசெய்துகொண்டிருந்தேன்.அப்பொழுது நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு(மார்ச்சு 97) ஐயா அவர்கள் வந்திருந்தார்.பேராசிரியர் பே.க. வேலாயுதம் அவர்கள் உடன் வந்ததாக நினைவு.கருத்தரங்கம் முடிந்து ஐயா மட்டும் தனியாகத் திரும்புவதாகத் திட்டம்.தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள இசைப்பகுதிகள் பற்றி கட்டுரை படித்தார்.

கருத்தரங்கிற்கு வந்திருந்த அறிஞர்கள் கருத்தரங்கம் நிறைவுற்றதும்அனைவரும் தத்தம் ஊருக்குத் திரும்பிவிட்டனர்.

ஐயாவுக்கு இரவு பத்து மணியளவில் திருச்சிராப்பள்ளித் தொடர்வண்டி.எனவே இரவு ஏழுமணியளவில் புறப்பட்டால் நிலையம் சென்று உணவுமுடித்து வண்டியேற
வாய்ப்பாக இருக்கும் என நிறுவனத்தில் இருந்தார்.நான் கருத்தரங்கம் முடிந்து இரவு ஒன்பது மணியளவில் புறப்பட்டால் என் ஊர் செல்ல நேரம் வாய்ப்பாக இருக்கும் என நினைத்து அறைக்குச் சென்று என் பெட்டிகளை எடுத்துவர எண்ணினேன்.அதன்பொருட்டு அறைக்குச் சென்று பெட்டி எடுத்துக்கொண்டு உ.த.நிறுவனம் வந்தேன்.அப்பொழுது நிறுவனத்தில்
பணிபுரிந்தவர்கள் விவரம் சொல்லத் திடுக்கிட்டேன்.

வீ.ப.கா.சுந்தரம் ஐயா அவர்கள் கழிவறைக்குச் சென்றதாகவும் தண்ணீரில் கால் பதிக்கும் பொழுது தவறி விழுந்து பின்பகுதியில் அடிபட்டுக் கிடந்ததாகவும் அங்குச் சென்ற ஊழியர் கண்டு அவரை நிறுவன உந்தில் அருகில் உள்ள வி.எச்.எசு.மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் சொன்னார்கள்.

உடனே புறப்பட்டு மருத்துவமனைக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்றேன். மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு அனைவரும் வந்துவிட்டனர். ஊழியர்களுக்கோ, மருத்துவர்களுக்கோ ஐயாவின் அருமை தெரியாது.எளிய நோயாளிகளுக்கு என்ன நிலை கிடைக்குமோ அதே நிலைதான் ஐயாவுக்கும்.

மருத்துவரைத் தனியே நான் கண்டு இவரை மற்றவர்களைப் போல் நினைக்கவேண்டாம்.இவர் மிகச்சிறந்த தமிழறிஞர் எனவும்,இசைமேதை எனவும் கூறினேன்.ஐயா அவர்கள் அரசர் முத்தையாவேள் பரிசு பெற்றவர் என்பதைச் சொல்லி,அரசர் குடும்பத்துக்கு வேண்டியவர் என எடுத்துரைத்தேன்.அந்த மருத்துவமனை அரசர் குடும்பத்துக்கு உரியது.ஐயா இங்கு மருத்துவம் பார்க்கிறார் என்ற செய்தி அரசர் குடும்பத்துக்குத் தெரிந்தால் உடன் உதவுவார்கள் எனவும் கூறினேன்.இதன் பிறகு ஐயாவுக்குச் சிறப்பு மருத்துவம் நடந்தது.

அண்ணன் ஒப்பிலா.மதிவாணன் அவர்கள் செய்தி அறிந்து வந்து சேர்ந்தார்.முனைவர் மு.வளர்மதி அவர்களுக்குத் தகவல் தந்தேன்.அவரும் பதறியடித்து வந்தார்.பின்னர் பேராசிரியர்கள் நிர்மல் செல்வமணி,வீரபாண்டியனார் உள்ளிட்டவர்களுக்குத் தகவல் தந்தேன்.அந்நாளைய பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் சி.தங்கமுத்து அவர்களுக்கும் தகவல் தந்தேன்.ஏனெனில் ஐயா அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்தார்கள்.பதிவாளர் அவர்கள் ஐயாவை உயிர் காப்பாற்றி அனுப்ப உள்ளமைக்கு நன்றி தெரிவித்தார்கள்.இரவு முழுவதும் ஐயாவுக்குக் காவல்,ஏவல் பணிசெய்தோம். கண்விழித்துக் காத்தோம்.

மறுநாள் காலை முதல் முனைவர் வளர்மதி அவர்கள் இல்லத்திலிருந்து ஐயாவுக்குக் கஞ்சியுணவு கொண்டுவருவேன்.

மறுநாள் காலை பேராசிரியர் நிர்மல்,வீரபாண்டியனார் உள்ளிட்டவர்கள் வந்தனர்.ஓரிருநாள் ஐயா மருத்துவம் பார்த்துக்கொண்டு நிர்மல் இல்லம் சென்று ஓய்வெடுத்தார்.இதன் இடையே என் பணிநிலை கண்ட இசைமேதை அவர்கள் ஒரு விருப்பம் தெரிவித்தார்.தாம் தமிழிசைக் கலைக்களஞ்சியம் உருவாக்கி வருவதாகவும் நான்காம் பகுதி எழுதத் தொடங்கியுள்ளதாகவும், இதுபோன்ற உடல் நலிவுற்ற நிலையில் நான் அருகில் இருந்தால் களஞ்சியம் பணி நிறைவுறும் எனவும் கூறினார்.

எனக்கும் உ.த.நி.பணி நிறைவுற்றதால் நானும் ஐயாவுடன் பணிபுரிய இசைவு தெரிவித்தேன். பல்கலைக்கழக ஆணையும் வாங்கித் தந்தார்.ஐயா மருத்துவம் முடித்து
பேராசிரியர் நிர்மல் இல்லத்தில் ஓய்வில் இருந்தபொழுது என்னைப் பல்கலைக்கழகத்தில் பணியேற்க இசைவுமடல் வழங்கியும் நான் செய்யவேண்டிய பணிகள் இன்னன
எனவும் சொல்லித் திருச்சிராப்பள்ளிக்கு அனுப்பினார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்று பதிவாளர் அவர்களைக் கண்டு வணங்கினேன். வீ.ப,கா.சு அவர்களின் உடல்நிலை கேட்ட பதிவாளர் எனக்குப் பணி ஆணை வழங்கிட, பணியில் இணைந்தேன்.ஐயாவின் அறை திறந்தேன். நிலைப்பேழைத் திறவிகளை ஐயா முன்பே வழங்கியிருந்தார்.உரிய நூல்களை எடுத்து என் வேலைகளைத் தொடங்கினேன். ஒரு கிழமைக்குப் பிறகு ஐயா திருச்சிராப்பள்ளி வந்து சேரந்தார்கள்.

ஒவ்வொரு நாளும் பதிவாளர் அவர்களின் இசைவுடன் காலையில் அலுவலகத்தில் பணிபுரிவேன்.பிற்பகல் உணவுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள
ஞானசம்பந்தர் மனையில் உள்ள ஐயா வதிவிடம் செல்வேன்,திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையத்தில் இறங்கிச் சற்றொப்ப மூன்று கல்லுக்கு மேலிருக்கும் ஐயா இல்லம்
செல்வேன். கடுங்கோடை வெய்யிலில் அடைந்து, பணிமுடித்து மீள்வது மிகவும் சிக்கலாகவே இருந்தது.என்றாலும் தமிழிசை வரலாற்று மீட்சிப்போரில் என் பணி தேவை
என்பதால் உவப்புடன் செய்தேன்.

இதற்கிடையே பதிவாளர் அவர்கள் மாறிப் புதிய பொறுப்புப் பதிவாளர் ஒருவர் வந்தார். அவருக்கு ஐயாவின் அருமை தெரியாது.அவர் தமிழறிவு நிரம்பாதத் தமிழ்ப் பேராசிரியர். எனக்கு அவர் ஓர் ஆணை தந்து என் ஊதியத்தை நிறுத்த ஆணையிட்டார். அவர் தந்த தமிழ் வடிவ ஆணையில் ஐந்து வரியில் நான்கு எழுத்துப்பிழை இருந்தது. ஐயா வருகை தந்த பிறகு என் பணியைத் தொடரலாம் எனவும் அதுவரை ஊதியத்தை நிறுத்திவைக்கவும் அவர் ஆணையிட்டார்.

ஆனால் அலுவலகம் வருவதும் பிற்பகல் ஐயா இல்லம் சென்று இன்று நடைபெற்ற பணிகள் காட்டி ஒப்புதல் பெறல்,நாளை நடைபெற வேண்டிய பணிகளைத் தெரிந்து வருவதுமாக இருந்தேன்.ஐயாவுக்கு இன்று வந்த மடல்களைச் சேர்ப்பேன்.விடைதரவேண்டிய மடலுக்கு விடை எழுதுவேன்.ஐயா கையொப்பம் இடுவார்கள்.சில நேரம் அவருக்காக நானே மடல் எழுதவும் இசைவு தந்திருந்தார்.அவர் மடல்தாள்கள் என்னிடமே வைத்திருக்க வேண்டினார்.

ஐயாவிடம் ஒரு கிழமை பணி செய்வது மற்றவர்களால் முடியாது.நான் அவர் மன உணர்வு புரிந்தவன் என்பதாலும்,நாங்கள் செய்வது தமிழிசைப்பணி என்பதாலும் பல்வேறு இடையூறுகளைத் தாங்கிக்கொண்டு பணிசெய்தேன்.

எங்களுக்குப் பணிவிடை செய்யும் பணிப்பெண்கள் எங்களை விடவும் மும்மடங்கு அதிகம் ஊதியம் பெற்றனர்.எனக்கு ஊதியம் 2500 உரூவா தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது. முனைவர் பட்டம் முடித்த என் நிலை இவ்வாறு இருந்தது. உணவு, தங்குமிடம், இதழ்கள், நூல்கள் வாங்குதல்,போக்குவரவு செலவுக்கு இது போதுமானதாக இல்லை. என் தந்தையார் எனக்குப் பணம் அனுப்பிக்கொண்டிருந்தார்.

கைச்செலவுக்குக் கிடைத்த குறைந்த தொகையும்(2500 உரூவா) பொறுப்புப் பதிவாளர் அவர்களின் தயவால்(!)நின்றது.இதற்குப் பின்புலமாகத் தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் இயங்கினார் என்பதையும் இங்குச் சுட்டியாக வேண்டும்.ஐயாவும் நானும் மிகப்பெரிய சிக்கலுக்கு இடையில்தான் தமிழிசைக் கலைக்களஞ்சியப் பணிகளில் மூழ்கிக் கிடந்தோம்.