குடைவரைச்சிற்பம்(நரசிங்கப்பெருமாள்)
விழுப்புரம் மாவட்டம் புளியங்காட்டிலிருந்து(திண்டிவனம்) வந்தவாசி செல்லும் சாலையில் 12 கல் தொலைவில் உள்ளது கீழ்மாவிலங்கை என்னும் ஊர். பத்துப்பாட்டு நூலுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் வரும் ஒய்மாநாட்டு நல்லியக்கோடன் என்ற அரசனின் நகரமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக “மாவிலங்கை” விளங்கியது. இந்த “மாவிலங்கை” என்பதுதான் இன்று கீழ்மாவிலங்கை, மேல்மாவிலங்கை என்று அழைக்கப்படுகிறது (சிற்றூர்களில் கீழைத்தெரு, மேலைத்தெரு என்று அழைப்பதுபோல்). மாவிலங்கை பற்றியும் அதனை ஆண்ட நல்லியக்கோடன் பற்றியும் சிறபாணாற்றுப்படை.
“தொன்மா இலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா இலங்கை மன்னருள்ளும்
மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்
உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்” (சிறுபாணாற்றுப்படை 119-122)
என்று குறிப்பிடுகின்றது.
மாவிலங்கை பற்றிய குறிப்பு புறநானூற்றிலும் உண்டு.
”இழுமென வொலிக்கும் புனலம் புதவிற்
பெருமா விலங்கைத் தலைவன்” (புறம் 176: 5-6)
நான் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தபொழுது கிழமைக்கு இருமுறை பேருந்தில் இந்த ஊரைக் கடந்துசெல்வேன். அப்பொழுதெல்லாம் பல்லவர்காலக் குடைவரைக்கோயில் ஒரு கல் தொலைவில் இருப்பதை முதன்மைச்சாலையில் உள்ள கைகாட்டிப் பலகை வழியாக அறிந்து, அந்தக் கோயிலை என்று பார்ப்பது? என்று வேட்கை மீதூரச்செல்வது உண்டு. புதுச்சேரிக்குப் பணிக்கு வந்த பிறகு அந்தச் சாலையைக் கடக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. என்றாலும் பத்துப்பாட்டு நூல் நினைவுக்கு வரும்பொழுதெல்லாம் மாவிலங்கை நினைவு அடிக்கடி வந்துபோகும்.
இன்று(01.05.2012) மேநாள் விடுமுறை நினைவுக்கு வந்தது. காலை எட்டுமணிக்குக் கணினி வல்லுநர் திரு.முருகையன் அவர்களிடம் மாவிலங்கைச் செலவு பற்றி நினைவூட்டினேன். காலை பத்துமணிக்கு வீட்டிற்கு வருவதாக உரைத்தார். ஆயத்தமாக இருந்தேன். அவரின் உந்துவண்டியில் காலை 10 மணிக்குப் புறப்பட்டோம்.
காலை 7 மணிக்கெல்லாம் புதுவையில் வெயிலின் வெப்பம் வாட்டி எடுத்துவிடுகின்றது. பத்துமணிக்கு வெயிற்கொடுமையைக் கேட்கவே வேண்டாம். புளியங்காட்டை(திண்டிவனம்) ஒருமணி நேரத்தில் கடந்தோம். நிழலுக்குக் கூட ஒதுங்க மரம் இல்லை. பெருவழிப்பாதைக்கு அனைத்தையும் வெட்டிவீழ்த்திவிட்டனர். சிற்றூர்மக்கள் பேருந்து ஏறக்கூட நிழற்குடை இல்லாமல் பெரிதும் வாடுகின்றனர். நீண்டதூரம் செல்பவர்களுக்குக் கொண்டாட்டம். உள்ளூர் மக்களின் நிலை வருந்துவதற்கு உரியதாகும். புளியங்காட்டில் குளிர்க்குடிப்புக்கு ஐந்து நிமையம் வண்டியை நிறுத்தினோம்.
மீண்டும் பன்னிருகல் தூரத்திற்கு வண்டி ஓடியது. கீழ்மாவிலங்கை பலகை தெரிந்தது. முதன்மைச்சாலையில் வண்டியை நிறுத்திப் படம் எடுத்துகொண்டோம். கிளைச்சாலை வழியாக ஊரை அடைந்தோம். அன்று ஊரில் ஒரு கூட்டம் நடப்பதாகவும், ஊருக்குத் தில்லியிலிருந்து அதிகாரிகள் வருவதாகவும் அறிந்தோம். ஊர் மாக்கோலம் இட்டு அழகுசெய்யப்பட்டிருந்தது.
ஊர் முகப்பில் பல்லவர்காலக் குடைவரை கண்ணுக்குத் தெரிந்தது. துருப்பிடித்த கைகாட்டிப்பலகை சாலையில் இருந்தது. குடைவரையை ஒட்டி அரசின் எச்சரிக்கைப் பலகை ஒன்று இருக்கின்றது. குடைவரைக் கல் சிறிய அளவில் இருக்கின்றது.இக்கல்லின் ஒரு பகுதியில் நரசிங்ககப்பெருமாள் சிலையாக வடிக்கப்பெற்றுள்ளார். இந்தச்சிலையைப் பாதுகாக்கும் நோக்கில் இரும்புக்கதவு ஒன்று அமைத்துள்ளனர், பூட்டு இல்லாததால் அதனைத் திறந்து நரசிங்கப்பெருமாளைப் படம் எடுத்துக்கொண்டோம். கற்பாறையைச் சுற்றி நோட்டமிட்டோம்.
நண்பர் முருகையன் ஆசீவகச் சமயம் சார்ந்தும் அதன் இறைநிலை வளர்ச்சி குறித்தும் நல்ல அறிவுடையவர். அதுபோல் இயக்கி, இயக்கர் பற்றியும் நன்கு அறிந்தவர். கற்படுக்கைகள் குறித்த நல்லறிவும் அவர்க்கு உண்டு. அவர் கற்பாறையைச் சுற்றிப்பார்த்து இங்குக் கற்படுக்கைகள் இருந்திருக்க வேண்டும் எனவும், பிற்காலத்தில் இவை அழிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார். கற்படுக்கைகள் இருக்கும் இடத்தில் பாறைகளில் பெய்யும் மழைநீர் படுக்கைக்கு வராதபடி வெட்டி நீர் வெளியேறும் வழி அமைப்பது உண்டு என்றார். அதற்கான தடயங்கள் உள்ளன என்று காட்டினார். பாறையின் பின்பகுதி உடைக்கப்பட்டுள்ளமைக்கான தடயங்கள் தெரிந்தன. பல கோணங்களில் படம் எடுத்துக்கொண்டோம். அந்தக் குடைவரைச் சிற்பத்தில் உள்ளூர் மக்கள் சங்கு சக்கரம் உள்ளிட்டவற்றை இப்பொழுது வரைந்துள்ளனர். பலவாண்டுகளாகப் பராமரிக்கப்படாததால் உருவம் தேய்ந்து காணப்படுகின்றது.
குடைவரைச் சிற்பத்தைப் பார்த்தபிறகு ஊர் மக்கள் சிலரைப் பார்த்து உரையாடினோம். இந்தச் சாமி சிலையை மூக்கறுத்தான் சாமி என்று அழைப்பதாகக் கூறினர். அதிக அளவில் பாறைகள் இருந்ததாகவும் இதனை மக்கள் வெடிவைத்து வெட்டி எடுத்துவிட்டனர் என்றும் கூறினர். அருகில் சில பாறைகள் உள்ளன. அங்கும் இதுபோல் சிற்பங்கள் உள்ளனவா என்று கேட்டோம். அங்கு உழவுத்தொழிலில் ஈடுபட்டுவரும் திரு.சுப்பிரமணியன் என்பவர் எங்களுக்குச் சில விளக்கங்களைச் சொன்னதுடன் அவர் மனைவியைத் துணைக்கு அனுப்பி அங்குள்ள சில பாறைகளைக் காட்டும்படி கூறினார்.
நாங்கள் வயல்வரப்புகள் வழியாகச்சென்று ஒரு பெரும் பாறையைப் பார்த்தோம். அங்குக் கன்னிமார் சுவாமிகள் வழிபாடு நடந்துள்ளதை அந்த அம்மா குறிப்பிட்டார்(கன்னிமார் சுவாமிகள் வழிபாட்டில் ஈடுபடும் இருளர் இன மக்கள் அருகில் உள்ள ஊரில் உள்ளதையும் நினைவூட்டினார்). கன்னிமார் சுவாமிகளுக்கு மஞ்சள் அறைக்கும் இடம் இது என்று சில இடங்களைக் காட்டினார். அங்குப் பாறையில் சுனைநீர் என்றும் வற்றாமல் இருக்கும் என்றும் அந்த அம்மா குறிப்பிட்டார்கள். மழைக்காலங்களில் பாறையின் பள்ளமான பகுதியில் தேங்கும் மழைநீரைத்தான் சுனைநீராகக் குறிப்பிடுகின்றனர் என்று அறிந்தோம்.
அருகில் இருந்த ஆழ்துளைக் கிணற்றின் நீரில் முகம் கழுவி வெயில் களைப்பைப் போக்க நினைத்தோம். பகல் ஒரு மணிக்கு வெயில் கண்ணை மறைத்தது. ஊர் பற்றிய மேலும் சில விவரங்களைத் திருவாளர் சுப்பிரமணி குறிப்பிட்டார். நாங்கள் பேசிக்கொண்டிருந்த இடம் ஊரின் எல்லைப்பகுதியாக இருந்தது.
இங்கு ஒரு நடுகல் இருப்பதை நண்பர் முருகையன் கவனித்து அங்குச்சென்று பார்த்தோம். ஆனால் அந்த நடுகல்லை அடையாளம் காணமுடியாதபடி ஊரார் மஞ்சள் பூசி, பொட்டு இட்டு ஆடை அணிவித்து வைத்திருந்தனர். சற்று உற்றுநோக்கிய நாங்கள் இது நடுகல்லாக இருப்பதற்கு வாய்ப்பு மிகுதி என்று முடிவுக்கு வந்தோம். அந்தக் கல்லைத் தூய்மையாகக் கழுவி அந்தக் கல்லில் உள்ள வெட்டு உருவங்களை அடையாளம் கண்டால்தான் இது நடுகல்லா, அல்லது புதிய உருவமா என்று முடிவுக்கு வர இயலும். ஆர்வமுடைய தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டால் சில உண்மைகள் கிடைக்கும். இந்தச் சிலையை ஊர்மக்கள் அம்மனாகப் பார்க்கின்றனர்.வழிபடுகின்றனர். திருமணம் ஆகாத பெண்கள் இந்தச் சிலையை வழிபட்டால் திருமணம் நடக்கும் என்று நம்புகின்றனர்.
எட்டியம்மன் என்ற ஒரு கோயிலும் இந்த ஊரில் உள்ளது. இது இடக்கி என்று முன்பு அழைக்கப்பட்டது. எட்டியம்மன் என்று தெய்வத்தை அழைக்கின்றனர். இங்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு எட்டியம்மா, எட்டியப்பன் என்று பெயர் சூட்டுவது வழக்கம் ஆணாக இருந்தால் எட்டியப்பன், பெண்ணாக இருந்தால் எட்டியம்மா என்று பெயர் வைப்பது உண்டு. அதன் பிறகுதான் வேறுபெயர்கள் வைக்கப்படும். இங்கு வன்னியக்கவுண்டர்கள் வாழ்கின்றனர். 470 குடும்ப அட்டைகள் உள்ளன. 350 குடும்ப அட்டைகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளதாக அறிந்தோம். படித்தவர்கள் வெளியூரில் வாழ்வதாக அறிந்தோம்.
ஊரல், பட்டணம் என்ற பெயரில் இன்றும் அங்கு ஊர்கள் உள்ளன. மாவிலங்கையும் வரலாற்றைச் சுமந்து நிற்கின்றது இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இந்த மாவிலங்கை ஊர் பற்றியும், இங்கு வாழும் மக்கள் பற்றியும் ஆய்வு செய்ய மானுடவியல், தொல்லியல், வரலாற்றியல்துறை சார்ந்த மாணவர்கள் ஆய்வாளர்கள் ஆண்டுக்கணக்கில் தங்கி ஆய்வுசெய்ய முன்வந்தால் பழமையை வெளிக்கொண்டுவரமுடியும்.
பகல் ஒன்றரை மணிக்கு அந்த மாவிலங்கை மாநகரை விட்டுப் புறப்பட்டோம். வெயிலுக்கு வாய்ப்பாக வழியில் பனை நுங்கு விற்பனையைக் கண்டோம். ஒரு சிறுமி பனங்காயைக் கூடையில் வைத்து வெட்டி விற்பனை செய்தாள். பனங்காயை வெட்டித்தரும்படி கேட்டோம். ஆர்வமுடன் வெட்டித்தந்தாள். படிக்கின்றாயா? என்றேன். ஒன்பதாம் வகுப்பு இந்த ஆண்டுமுடித்துள்ளதாகக் கூறினாள். பெயர் என்ன என்றேன். இளவெயினி என்றாள். அந்த நேரத்தில் சிறுவன் ஒருவன் மிதிவண்டியில் பனங்காயை வைத்துகொண்டுவந்தான். அவன் அந்தப்பெண்ணின் உடன்பிறப்பு என்று அறிந்தேன். அவன்பெயர் கேட்டேன். வளையாபதி என்றான். இன்னும் வீட்டில் உடன்பிறந்தார் உண்டா? என்றேன். அக்காள் பெயர் இளமதி என்றும் பொறியியல் படிப்பதாகவும் குறிப்பிட்டனர். இவ்வளவு அழகான தமிழ்ப்பெயர் சூட்டியுள்ள அவர் தந்தையாரைப் பற்றியும் வினவினோம். குறைந்த அளவு படித்த அவர்களின் தந்தையார் உழவுத்தொழில் செய்வதாகக் குறிப்பிட்டனர். ஊரல் என்ற ஊரைச்சேர்ந்த அந்தத் தந்தையாரின் தமிழ்ப்பற்றைப் போற்றினேன். அவர்களின் தமிழ்ப்பற்றைப் போற்றும் முகமாக அதிக அளவு பனங்காயை வாங்கி உறிஞ்சினோம். அந்தச் சிறுவர்களுக்குப் பயன்படும்வகையில் உரிய காசைக் கொடுத்து மகிழ்ச்சியுடன் விடைபெற்றோம். வெயில் வெப்பத்தையும் மீறி அந்தத்தமிழ்ப்பெயர்கள் வீசுதென்றலாக மனதை இதப்படுத்தின.
வழிகாட்டிப் பலகை
திசைகாட்டி
கீழ்மாவிலங்கை நுழைவுவாயில்
குடைவரை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு
அரசின் பாதுகாப்பு அறிவிப்பு
பல்லவர் காலக்குடைவரையின் தூரக்காட்சி
குடைவரைச்சிற்த்தின் அருகில் முருகையன்
குடைவரைச்சிற்பம் அருகில் மு.இளங்கோவன்
நடுகல்(ஒப்பனையில்)
நடுகல்
தண்டுமாரியம்மன் பின்புறம்
இடக்கியம்மன்
கீழ்மாவிலங்கைப் பள்ளி