நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
#பெருமழைப்புலவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#பெருமழைப்புலவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 செப்டம்பர், 2013

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் பிறந்தநாளும் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற பேராசிரியர் ஆ.மணி அவர்களுக்குப் பாராட்டு விழாவும்!




இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி
நாள்: 05.09.2013(வியாழன்)  நேரம்: மாலை 6.30- 7.30

தலைமை: வி. முத்து அவர்கள் (தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்)
வரவேற்பு: பெரிய.பூபதி அவர்கள்
அறிமுகவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்
சிறப்புரை: முனைவர் ஆ. மணி அவர்கள், தாகூர் கல்லூரி, புதுச்சேரி
பொருள்: பெருமழைப்புலவரின் உரைச்சிறப்புகள்

நன்றியுரை: முனைவர் க.திருமலைவாசன்  அவர்கள்

நிகழ்ச்சி ஏற்பாடு: புதுச்சேரி இலக்கிய வட்டம், புதுச்சேரி

தொடர்புக்கு: 9442029053

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

பெருமழைப்புலவர் குடும்பத்துக்குப் பத்து இலட்சம் நிதி உதவி வழங்கிய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நன்றி…


பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்(05.09.1909-03.01.1972)


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரும் குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட சங்கப் பனுவல்களுக்கு உரை வரைந்த பேரறிஞருமான மேலைப்பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பம் வறுமையில் வாடுகிறது என்ற செய்தியைத் தமிழ் உலகின் கவனத்துக்கு நான் கொண்டு வந்தேன். இந்தச் செய்தி தினமணி நாளேட்டில் வெளிவந்ததும் தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கவனத்துக்குச் சென்றது.

இதனிடையே பெருமழைப்புலவருக்கு அவ்வூர் மக்களின் ஒத்துழைப்புடன் தமிழறிஞர்கள் கலந்துகொண்ட நூற்றாண்டு விழாவும் நடந்தது(05.09.2010). அந்த நூற்றாண்டு விழாவிலும் புலவர் குடும்பத்துக்கு அரசு உதவ வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தைக் குறிப்பிட்டோம்.

இச்செய்திகள், வேண்டுகோள்களை ஏற்று இன்று(17.09.2010) தந்தை பெரியார் பிறந்த நாளில் பெருமழைப் புலவர் குடும்பத்தின் வறுமையைப் போக்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பத்து இலட்சம் உருவா கொடையாக வழங்கியுள்ளார். தமிழாய்ந்த தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு எங்கள் பணிவார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பெருமழைப் புலவரின் பிறந்த ஊரில் ஒரு மணி மண்டபம் அமைத்து, அதனை முத்தமிழறிஞர் அவர்களின் பொற்கையால் திறந்து நாட்டுக்கு ஒப்படைக்கவும் பணிந்து வேண்டுகிறோம். அதுபோல் திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்குப் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் அவர்களின் பெயரைச்சூட்டி அவரின் தமிழ்ப்பணியை என்றும் நினைவுகூரப் பல்கலைக் கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் அவர்களையும் ஆட்சிக் குழுவினரையும் வேண்டுகிறோம்.

நன்றி:தினமணி, நக்கீரன், குமுதம், மேலைப் பெருமழை ஊராட்சி மன்றம் (22.09.2010)

திங்கள், 6 செப்டம்பர், 2010

திராவிடஇயக்க, தமிழ்த்தேசிய எழுச்சிக்கு வித்திட்டவை பெருமழைப்புலவரின் உரைகள்- பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் கருத்து


வரவேற்புத் தட்டிகள்

 தமிழர்களின் அறிவுக் கருவூலமாக இருக்கும் சங்க இலக்கியங்களை எல்லாத் தரப்பு மக்களும் புரிந்துகொள்ளும்படி தெளிவாகவும் திட்பமாகவும் உரைவரைந்தவர் பெருமழைப்புலவர் என்று பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.

 இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரான பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் நூற்றாண்டு விழா அவர் பிறந்த ஊரில் 05.09.2010 ஞாயிறு மாலை 4 மணி முதல் 7 மணி வரை மேலைப்பெருமழை அருள்மிகு அம்மன் திருமண அரங்கத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேலைப்பெருமழை ஊர் மக்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்த அறிஞர்களும் பெருமழைப்புலவரின் பெருமைகளை எடுத்துப் பேசினர்.

 நூற்றாண்டு விழாவுக்குப் மேலைப் பெருமழையின் பெருநிலக் கிழார் திரு.அரங்கசாமியார் அவர்கள் தலைமை தாங்கினார்.தஞ்சாவூரின் முதன்மை ஒப்பந்தக்காரர் திரு.சி.சிவபுண்ணியம் அவர்கள் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை நினைவுகூர்ந்து, பெருமழைப்புலவரின் சிறப்புகளை அவைக்கு எடுத்துரைத்து, அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார்.ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு மா.கல்யாணசுந்தரம் அவர்கள் பெருமழைப்புலவரின் எழிலார்ந்த திருவுருவப் படத்தைத் திறந்துவைத்துப் புலவரின் சிறப்புகளை நினைவுகூர்ந்தார்.


பெருமழைப்புலவரின் படத்திறப்பு-திரு.மா.கல்யாணசுந்தரம்

 முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் திரு.ந.உ.சிவசாமி அவர்கள் தாம் பெருமழைப்புலவரின் தலைமையில் திருமணம் செய்துகொண்ட சிறப்பை விளக்கினார். முன்னிலையுரையாகப் புலவர் சிவகுருநாதன் அவர்கள் புலவரின் உரைச்சிறப்பையும் மேன்மையையும் எடுத்துரைத்தார். வழக்குரைஞர் தாயுமானவன் பெருமழைப்புலவரின் பெருமைகளை நினைவுகூர்ந்தார்.

 முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சோ.இராசமாணிக்கம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்குச் சந்தனமாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அடிப்படைக்காரணங்களையும்,பெருமழைப்புலவரின் சிறப்புகளையும் நினைவுகூர்ந்தார். மேலும் பெருமழைப்புலவரின் மகன்கள் சோ.பசுபதி, சோ.மாரிமுத்து ஆகியோரும் புலவரின் எழுத்துப்பணிக்கு உதவிய அன்பர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.

 புலவரின் குடும்ப நண்பரான திரு.வடிவேல் அவர்கள் (உதயமார்த்தாண்டபுரம்) பெருமழைப்புலவரின் இளமை வாழ்க்கையையும், அவர்களின் குடும்பச் சூழலையும் விளக்கினார். புலவரின் மாணவர் புலவர் நாச்சிகுளத்தார் அவர்கள் தமக்கும் பெருமழைப்புலவரும் சதாசிவ அடிகளுக்கும் உள்ள தொடர்பை நினைவுகூர்ந்தார்.

 புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் பெருமழைப்புலவரின் உரைச்சிறப்புகள், பெருமழைப்புலவரின் நூற்றாண்டுத் தொடக்கவிழா ஏற்பாடுகளை நினைவுகூர்ந்தார்.

 பெருமழைப்புலவரின் மிகப்பெரிய உரை வரையும் ஆற்றலுக்கு அடிப்படையாக அமைந்த அவரின் இலக்கிய இலக்கண நூல் பயிற்சி, சமய நூல் பயிற்சி, படைப்பாற்றல், உரை வரையும் ஆற்றல் யாவற்றையும் நினைவுகூர்ந்து தமிழுலகம் போற்றும்படியாகப் பெருமழைப்புலவர் உரைவரைவதற்கு உரிய பயிற்சி பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்கள் வழியாகக் கைவரப்பெற்றமையை அறிஞர் அவைக்கு நினைவுப்படுத்தினார்.

 மேலைப்பெருமழையில் இந்த நூற்றாண்டு விழா நடைபெறுவது போல் புதுச்சேரியிலும் சென்னையிலும் நடைபெற உள்ளதையும் தமிழர்கள் பரவி வாழும் கடல் கடந்த நாடுகளிலும் இந்த நூற்றாண்டுவிழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளதை நினைவுகூர்ந்து இணையத்தில் இந்த விழா அழைப்பிதழ் வெளியானதும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழன்பர்கள் வாழ்த்துரைத்தனர் எனவும் இவர்களுள் முனைவர் பொற்கோ, சிங்கப்பூர் திரு.முஸ்தபா, நாசா விண்வெளி ஆய்வுமையப் பொறியாளர் முனைவர் நா.கணேசன், கனடாவில் வாழும் பேராசிரியர் செல்வா,மலேசியா பேராசிரியர் கார்த்திகேசு,சென்னை அண்ணாகண்ணன், உள்ளிட்டவர்கள் அன்பான வாழ்த்துரைத்ததை நினைவூட்டிப், பெருமழைப்புலவரின் நூற்றாண்டு விழா பற்றிய செய்திகளை உடனுக்குடன் வெளியிட்ட தினமணி,தட்சு தமிழ், தமிழன்வழிகாட்டி (கனடா), சங்கமம் லைவ் உள்ளிட்ட இணையதளங்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

 புலவர் உதயை மு.வீரையன் அவர்கள் தாம் தினமணியில் புலவரின் வாழ்க்கையை எழுதியதை நினைவுகூர்ந்ததுடன் தம் ஊரான உதயமார்த்தாண்டபுரத்திலிருந்து நடந்துவந்து பெருமழைப்புலவரின் உரைப்பணிகளுக்குத் துணை செய்ததையும் நினைவுகூர்ந்தார். மேலும் சர்க்கரைப்புலவர், பின்னத்தூர் நாராயணசாமி உள்ளிட்ட அருகில் உள்ள ஊர்களில்வாழ்ந்த புலவர் பெருமக்களின் உரைப்பணிகளுயும் தமிழ்ப்பணிகளையும் நினைவுகூர்ந்தார்.

 கரந்தைக் கல்லூரியின் மேனாள் பேராசிரியர் அரங்க சுப்பையா அவர்கள் பெருமழைப்புலவர் உரை வரைந்த காலத்தில் இருந்த சமூக அமைப்பை எடுத்துக்காட்டி இந்தச்சூழலில் இவரின் உரைப்பணி போற்றத்தக்கதாக இருந்ததை எடுத்துரைத்தார்.

 முனைவர் தனராசன் அவர்கள் பெருமழைப்புலவரின் உரைப்பணிகளையும், ஊர்ப் பெருமைகளையும் நினைவுகூர்ந்தார்

 கரந்தை உமாமகேசுவரனார் கலைக்கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மு.இளமுருகன் அவர்கள் பெருமழைப்புலவரின் நூற்றாண்டு விழாவின் நிறைவுப் பேருரையாற்றினார்.

 பெருமழைப்புலவரின் பல்துறைப் புலமைகளை நினைவுகூர்ந்த பேராசிரியர் புலவர் அவர்கள் எழுதிய உரை எளிய மக்களுக்கும் புரியும்படியும் அதே சமயம் ஆழமாகவும் இருந்ததைப் புறநானூறு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, மானனீகை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு உள்ளிட்ட நூல்களில் படிந்து கிடக்கும் உரை நயங்களை அழகுதமிழில் எடுத்துரைத்தார். புலவரின் உரைகளில் தமிழ்த்தேசியச் சிந்தனைக்கான வித்து ஊன்றப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டினார். பிறசொல் கலவாத ஆழம் படர்ந்த புலவரின் உரை உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுக்குப் பயன்படுவதால் உலகத் தமிழர்கள் அனைவரும் புலவருக்கு விழா எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் புலவருக்கு மணிமண்டபம் கட்ட அரசியல்துறையில் சிறப்புடன் விளங்கும் அரசியல்வாணர்கள் முன்வர வேண்டும் எனவும் நூல்கள் விரைந்து நாட்டுடைமை ஆக்கப்பட்டுப் புலவர் குடும்பம் ஆதரிக்கப்படவேண்டும் என்று சிறப்புடன் பேசினார்.

 விழா நிறைவில் பெருமழைப்புலவரின் மகன் சோ.பசுபதி அவர்கள் நன்றியுரையை உணர்வு வெளிப்பாட்டுடன் வெளிப்படுத்தினார்.தம் குடும்பத்துக்கு நிதியுதவி என்பதை இரண்டாவதாக வைத்து,தம் தந்தையாருக்கு ஒரு நினைவு மண்டபம் அமைப்பதை முதன்மையாக்க வேண்டும் என அரசையும், தமிழன்பர்களையும் கேட்டுக்கொண்டார்.

 விழாத் தொகுப்புரையை மயிலாடுதுறை, மன்னம்பந்தல் அ.வ.கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் சு.தமிழ்வேலு வழங்கினார்.


சி.சிவபுண்ணியம் அவர்கள் வரவேற்புரையாற்றுதல்


முனைவர் மு.இளமுருகன்


புலவர் உதயை மு.வீரையன் உரையாற்றுதல்


பேராசிரியர் சு.தமிழ்வேலு சிறப்பிக்கப்படுதல்


ந.உ.சிவசாமி அவர்கள் உரையாற்றுதல்


பேராசிரியர் அரங்க.சுப்பையா உரையாற்றுதல்


தினமணி செய்தியாளர் இரவிக்குச் சிறப்புச் செய்தல்


முனைவர் மு.இளங்கோவனுக்குச் சிறப்புச் செய்கிறார் சோ.இராசமாணிக்கம்


சோ.இராசமாணிக்கம் முனைவர் மு.இளமுருகனுக்குச் சிறப்புச் செய்தல்


பேராசிரியர் நா.தனராசன்


பார்வையாளர்கள்-மகளிர்


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்


பெருநிலக்கிழார் அரங்கசாமி அவர்கள்


சோ.பசுபதியின் நன்றியுரை