நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
#நெல்லை இரா. சண்முகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#நெல்லை இரா. சண்முகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம் (கோலாலம்பூர்) புதிய விளைச்சல்!

 


ஆசிரியர் திருநாளில் அறிமுகம் செய்கின்றோம்.

தொல்காப்பியத் தொண்டர் ஒருவரின் மறைந்து கிடந்த வாழ்வியலை - தமிழ்ப்பணிகளை நூல்வடிவில் இத்தமிழுலகின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்கின்றேன்.

பக்கம்: 144

விலை: 200 உருவா

தொடர்புக்கு: muetamil@gmail.com

புலனம்: +91 9442029053

வியாழன், 31 ஜூலை, 2025

அங்கமங்கலப் பயணம்… (2)

 

 


 நெல்லை இரா. சண்முகம் ஐயாவின் பெயரைக் கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர்த் (செப்டம்பர் 2024) தற்செயலாகப் பார்த்தது முதல் அவரின் தொல்காப்பியப் பணிகளையும் படைப்புப் பணிகளையும் அறியும் வேட்கையில் பல்லாயிரம் பக்கங்களைப் படித்துக் குறிப்பெடுத்தமையும், பல நூறு அறிஞர்களுடன் கலந்துரையாடி விவரங்கள் பெற்றமையும் நெஞ்சில் நிலைபெற்றுள்ளன. 

தொல்காப்பியம் குறித்து மூன்று நூல்களையும் பிற வகையில் நான்கு நூல்களையும் வெளியிட்ட பெருமைக்குரியவர் அறிஞர் நெல்லை இரா. சண்முகம். இவர் நெல்லைப் பகுதியில் பிறந்து வளர்ந்து, கோலாலம்பூரில் நாற்பதாண்டுகள் தொழில் நிமித்தம் தங்கியிருந்து, பணி செய்தாலும் அவரின் உள்ளத்தில் தமிழ்ப்பற்றும், பொதுத்தொண்டும் சுடர்விட்டு நின்றமையை அவரின் வரலாற்றை அறிந்தபொழுது தெரியவந்தது. 

“தேனீ” என்னும் இலக்கிய ஏட்டை மலேசியாவில் நடத்தி, ஒரு இதழாசிரியராகவும் இப்பெருமகனார் விளங்கியுள்ளார். சிங்கப்பூர், தமிழவேள் கோ. சாரங்கபாணியாரின் தொடர்பு, பினாங்கு அப்பாவு பண்டிதரின் தொடர்பு முதலியன இவரின் தமிழ்ப்பற்றுக்கு அரணாக இருந்துள்ளன. தமிழ்த்தென்றல் திரு. வி. க. வின் நூல்களில் தோய்ந்து படித்த, இவர்தம் புலமைநலம் இவரின் நூல்கள்தோறும் பளிச்சிடுகின்றன. நெல்லை இரா. சண்முகனார் மறைமலையடிகளார், பாவாணர், திரு.வி.க, நாவலர் சோமசுந்தரபாரதியார் முதலான தமிழறிஞர்களின் நூல்களைக் கற்றுப் பெற்றிருந்த தமிழ்ப்பற்றை இவரின் நூல்கள் வழியாக ஒருவாறு அறிந்துகொள்ள முடிகின்றது. 

நெல்லை இரா. சண்முகம் குறித்த விவரங்களைத் தமிழகத்து நூலகங்கள் பலவற்றில் தேடிப் பெற்றேன். அவர்தம் ஊரான அங்கமங்கலம் சென்று உறவினர்களிடத்திருந்தும் சிலவற்றைப் பெற்றேன்.  மும்பை சென்று அவரின் உறவினர் பொறியாளர் க. இளங்கோவன் அவர்களைக் கண்டு உரையாடிப் பல படங்களையும் விவரங்களையும் பெற்றேன், சண்முகனார் தம் வாழ்நாளின் பெரும்பகுதியை வாழ்ந்து கழித்த மலேசியா, சிங்கப்பூர் சென்று அவரின்  நூல்கள் – விவரங்களைத் திரட்டினேன்  பல நூறு  மின்னஞ்சல்கள்  என்னிடமிருந்து பறந்து சென்று, இவர் பற்றிய விவரங்களைக் கொண்டுவந்தன. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு நெல்லை இரா. சண்முகம் குறித்த நூலொன்றினை எழுதி, அண்மையில் அணியப்படுத்தினேன். செய்திகளும், படங்களும் நூலுக்கு அணிசேர்த்தாலும் இன்னும் செய்திகள் விடுபட்டிருக்குமோ என்று நெஞ்சம் அலைப்புற்றது. 

அவ்வகையில் சண்முகம் அவர்களின் மகனார் மறைந்த மருத்துவர் தமிழப்பன் குறித்த கூடுதல் விவரங்கள் கிடைக்குமோ?, சண்முகம் அவர்களின் பிறந்த நாள், மறைந்த நாள் குறித்த விவரங்கள் கிடைக்குமோ? நேதாஜியின் போராட்டத்தில் பங்கேற்ற இவர்தம் தியாக வாழ்வு குறித்த கூடுதல் விவரங்கள் கிடைக்குமோ? சண்முகம் அவர்களின் இல்லற வாழ்க்கை குறித்த விவரங்கள் ஏதேனும் கிடைக்குமோ? இரா. சண்முகம் நடத்திய "தேனீ" இதழினை, இதழ் வடிவில் கண்டுவிடலாமோ? என்று பலவாறு சிந்தித்து, நாளும் நாளும் உழைத்துக்கொண்டிருந்தேன். அதனால் எஞ்சிய விவரங்கள் – விடுபட்ட விவரங்கள் ஏதேனும் இன்னும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் நெல்லை இரா. சண்முகனாரின் அங்கமங்கலம் என்ற ஊருக்கு இரண்டாம் முறையாக ஒரு பயணத்தை மேற்கொண்டேன்(19.07.2025). 

புதுச்சேரியிலிருந்து தனியார்ப் பேருந்து ஒன்றில் 18.07.2025 இரவு 7.45 மணியளவில் புறப்பட்டேன். பேருந்தில் படுக்கை வசதி என்றாலும் காற்று இல்லாமல் புழுக்கத்தில்தான் பயணம் தொடர்ந்தது. நான் சென்ற பேருந்து தூத்துக்குடி வழியாகத் திருச்செந்தூர் சென்றது. காலை 7.30 மணியளவில் திருச்செந்தூரை அடைந்தேன். அங்கிருந்து நெல்லை செல்லும் பேருந்தில் ஏறி, குறும்பூரை அடைந்தேன். முன்பே என் வருகையை நெல்லை இரா. சண்முகம் அவர்களின் மகள் வயிற்றுப் பெயரன் திரு. கல்யாணராமன் அவர்களிடம் தெரிவித்திருந்ததால் என்னை எதிர்கொண்டு வரவேற்று, அருகில் இருந்த அங்கமங்கலத்தில் அவரின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். திரு. கல்யாணராமன் மின்சாதனப் பொருட்களைப் பழுதுபார்க்கும் கடையைக் குறும்பூரில் நடத்தி வருகின்றார். அவருக்கு இரண்டு பெண் மக்கள்; பள்ளியில் படிக்கின்றனர். குடும்பத்தினர் அனைவரும் அன்புடன் என்னை வரவேற்றனர். அவர்களின் இல்லத்தில் குளித்து முடித்து, சிற்றுண்டி உண்டேன். 

இரா. சண்முகம் அவர்களின் குடும்ப உறவினர்கள் சிலர் என் வருகையை அறிந்து வந்து, உரையாடிச் சென்றனர். இரா. சண்முகம் அவர்களின் பிறந்த நாள், இறந்த நாள் குறித்த குறிப்புகள் கிடைத்தால் தந்து உதவுங்கள் என்று அவர்களிடம் வேண்டுகோள் வைத்தேன். 

 


  காலை 10 மணியளவில் கல்யாணராமன் இல்லத்தை ஒட்டியிருக்கும். திரு. தமிழரசன் அவர்களைச் சந்தித்து உரையாடும் சூழல் அமைந்தது. தமிழரசன் அவர்கள் நெல்லை இரா. சண்முகம் அவர்களின் தம்பி வேலு அவர்களின் மகனாவார். தம் பெரியப்பா குறித்த பல செய்திகளைத் தமிழரசன் அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டார். தம் அப்பா வேலு அவர்களும் பெரியப்பா சண்முகம் அவர்களும் ஒன்றாக மலேசியாவில் கடை வைத்துத் தொழில் நடத்தியமையையும், அங்கு 1969 அளவில் ஏற்பட்ட கலவரத்தின்பொழுது அங்கிருந்து தப்பி வந்தனர் என்பதையும் தெரிவித்தார். மேலும் சண்முகம் அவர்களின் மகன் மருத்துவர் ச. தமிழப்பன் அவர்களின் மறைவு குறித்த விவரங்களையும் பகிர்ந்துகொண்டார். மேலும் தங்கள் வீட்டில் இருந்த சில புகைப்படங்களையும் என்னிடம் காட்டினார். தேவைப்படும் படங்களைப் படியெடுத்துக்கொண்டேன். தம் தந்தையார் மலேசியாவிலிருந்து கொணர்ந்த சில பொருட்களையும் என்னிடம் காட்டி, நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். எனக்குத் தேவைப்படும் பொருள்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்று மனமாராத் தெரிவித்து, ஊக்கப்படுத்தினார். அவற்றைப் படமாக்கிக்கொண்டேன். அன்பர் தமிழரசனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டேன்.

 

தம்பி வேலுவின் திருமணத்தை முன்னின்று நடத்திய சண்முகம் அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ள திருமண அழைப்பிதழ்(1937)

முன்பே திட்டமிட்டவாறு திரு. கல்யாணராமன் தம் தாத்தா இரா. சண்முகம் குறித்த நூல்கள், அறிக்கைகள், படங்கள் சிலவற்றை என் பார்வைக்கு முறைப்பட வைத்தார். ஒவ்வொன்றாகப் படித்துப்பார்த்து, படமாக்கிக்கொண்டேன். அவ்வகையில் இதுவரைத் தேடிக் கிடைக்காத சில புகைப்படங்கள், நாட்குறிப்புகள், நினைவுப்பொருள்கள், நூல்கள் சிலவற்றைப் பார்க்கவும் படியெடுக்கவுமாகச் சூழல் இருந்தது. தேவையானவற்றைப் படியெடுத்துக்கொண்டு, அனைத்தையும் அவர்களிடம் பாதுகாக்குமாறு சொல்லி, அங்கிருந்து அனைவரிடமும் விடைபெற்றுப் புறப்பட்டேன்.. 

நெல்லை - பாளையங்கோட்டையில் வாழ்ந்துவரும் பேராசிரியர் கட்டளை கைலாசம் என் வருகைக்காகப் பகல்பொழுதில் காத்திருந்தார். நெல்லை. இரா. சண்முகம் குறித்து, சில விவரங்களைப் பெறுவதற்குக் கட்டளை கைலாசம் அவர்களுடன் தொடர்பில் இருந்து உரையாடியபொழுது பல வியப்புக்குரிய நிகழ்வுகள் நடந்தேறின. வண்ணாராப்பேட்டையில் வாழ்ந்த திருவாளர் இராசானந்தம் பற்றிய விவரங்களை அவர் வழியாகப் பெற முயன்றேன். பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுதுதான் நெல்லை இரா. கணபதி முதலியார் என்ற ம.தி.தா.இந்துக் கல்லூரிப் பேராசிரியர் குறித்து அறிய முடிந்தது. அவரின் படத்தைப் பெற முடிந்தது. மேலும் நெல்லை சைவ சபையில் தலைவராக இருந்த தா. பொன்னம்பலம் பிள்ளை பற்றிய விவரங்களையும் அறியமுடிந்தது. இவர்களைக் குறித்த மேலாய்வுகளைத் தொடர்வதற்குப் பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களைச் சந்திப்பது முதன்மை என்று கருதி, அவர்களுக்கு முன்பே என் பயணத்திட்டத்தைத் தெரிவித்திருந்தேன். 

என்னை எதிர்கொண்டு அழைத்த பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்கள் முதலில் பகலுணவு உண்டவாறு உரையாடுவோம் என்று "மதுரம்" என்னும் பெயரிலான சைவ உணவகத்துக்கு அழைத்துச் சென்று விருந்தோம்பினார். உரையாடல் சற்றொப்ப ஒரு மணி நேரம் தொடர்ந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களின் மகாராசாநகர் இல்லம் சென்றோம். அவரின் அறிவார்ந்த ஆராய்ச்சிப் பணிகளைக் கண்ணுறும் வாய்ப்பும், அவர்தம் இலக்கிய வாழ்க்கை குறித்து அறியும் வாய்ப்புகளும் எனக்கு அமைந்தன. 

பேராசிரியர் கட்டளை கைலாசம்

பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களின் இல்லத்தில் திருக்குறள், திருவாசகம் உள்ளிட்ட பல அரிய ஓலைச்சுவடிகள் முறைப்படி பாதுகாக்கப்படுவதைக் கண்ணாரக் கண்டுகளித்தேன். திருக்குறள் ஓரடியில் எழுதப்பெற்ற மூலச்சுவடியும், திருக்குறளுக்கு உரை எழுதப்பட்ட பிறிதொரு மூல ஓலைச்சுவடியும் அங்கு இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். எழுத்துக் கூட்டி ஓலைகளைப் படித்துப்பார்த்தேன். முன்பே மனப்பாடமாக இருந்த திருக்குறள்களை ஓலையில் படிப்பது எளிதாக இருந்தது. பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கிய ஓலைசுவடிகளையும் பேராசிரியர் கட்டளை பாதுகாக்கின்றார். சில சுவடிகளை நூலாக்கம் செய்தும், தமிழுலகுக்கு வழங்கியுள்ளார். செப்பேடுகள் சிலவற்றையும் நம் கட்டளை அவர்கள் பாதுகாக்கின்றார்கள்.

 

திருக்குறள் சுவடி


திருவாசகம் சுவடி

மூன்று மணி நேரம் எங்கள் உரையாடல் நீண்டது. பின்னர் நூற்றாண்டுப் பழைமையுடைய பாளையங்கோட்டை சைவ சபைக்குச் செல்லும் நோக்கில் மகிழுந்தில்  புறப்பட்டோம். இடையில் சபையின் செயலர் திரு. கிருட்டினன் எங்களுடன் இணைந்துகொண்டார். மூவரும் வழியில் இருந்த "அருவி" என்னும் புகழ்பெற்ற கடையில் தேநீர் அருந்தினோம். 

சைவ சபை இப்பொழுது தூய்மை செய்யப்பட்டு, வெள்ளையடிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. சைவ சபையின் நூல்களைப் பார்ப்பதும் அங்குள்ள பொன்னம்பலம் பிள்ளையின் படத்தைப் பார்த்துப் படி எடுப்பதும், அவர்தம் வரலாற்றை அறிந்துவருவதும் என் நோக்கமாக இருந்தது. அடுத்த முறைதான் பார்க்க முடியும் - அறியமுடியும் என்ற வகையில் தொழிலாளர்கள் வெள்ளையடிப்பதில் தீவிரமாக இருந்தனர். 

சைவ சபையின் முகப்பில் மு.இளங்கோவன்

மேம்போக்காகச் சைவ சபையை ஒரு பார்வையிட்டவாறு, அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களின் இல்லத்துக்கு மீண்டும் வந்தோம். பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களிடம் ஓலைசுவடித் தொகுக்கும் அவரின் ஆர்வம் குறித்து, அரைமணிநேரம் ஒரு நேர்காணலைக் காணொலியாகப் பதிவு செய்தோம். நெல்லைப் பயணத்தை நிலைப்படுத்தும் ஆவணமாக இப்பதிவு இருந்தது. 

நெல்லையிலிருந்து விடைபெறுவதற்கு உரிய நேரமும் நெருங்கியது. பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களின் துணைவியார் செய்திருந்த சிற்றுண்டியை இரவு உணவாகச் சுவைத்து உண்டோம். பேருந்து நிலையம் வரை உரையாடிக்கொண்டே பேராசிரியர் கட்டளை கைலாசம் மகிழுந்தை ஓட்டியபடி என்னை வழியனுப்ப வந்தார். அவர்தம் மகிழுந்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று விவரங்களைத் திரட்டியமை புதுப் பட்டறிவாக இருந்தது. தமிழுலகம் போற்றத்தகுந்த ஆய்வுப்பணிகளில் கட்டளை கைலாசம் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றார். 

பேருந்தேறி, நெல்லைச் சந்திப்பை அடைந்ததும் அடுத்த தமிழ்ப்பணிக்கு வாய்ப்பாகச் சீர்காழிக்கு என்னைச் சுமந்துசெல்ல திருச்செந்தூர் விரைவு இரயில் காத்திருந்தது… நெல்லைச் செலவு அடுத்த பல ஆய்வுகளுக்கு வழியேற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும்..

சனி, 18 ஜனவரி, 2025

"தொல்காப்பியத் தொண்டர்" நெல்லை இரா. சண்முகம் – கோலாலம்பூர் (1901 – 1983)

 

நெல்லை இரா. சண்முகம், கோலாலம்பூர் 

["தொல்காப்பியத் தொண்டர்" இரா. சண்முகம் நெல்லை மாவட்டம் குறும்பூரை அடுத்துள்ள அங்கமங்கலத்தில் பிறந்து, கோலாலம்பூரில் வாழ்ந்தவர். தமிழ்ப்பற்றாளர்; திராவிட இயக்க உணர்வினர். தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். இவரின் கட்டுரைகள் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு இதழில் வெளிவந்தவை. மலேசிய வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கியவர்; தமிழ்நெறித் திருமணங்களை நடத்தியவர். இரா. சண்முகம் அவர்களின் மகன் மருத்துவர் தமிழப்பன் விருதுநகரை அடுத்த குன்னூரில் அரசு மருத்துவராகப் பணியாற்றியபொழுது பாம்பு கடித்து இறந்தமையால், அறிஞர் இரா. சண்முகனாரின் குடும்பம் பெருந்துயரத்தைச் சுமந்தது]

கனடாவில் நடைபெற்ற உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில்(2024) தொல்காப்பியக் கண்காட்சி நடத்துவதற்குத் தொல்காப்பிய அறிஞர்களைப் பற்றிய ஆவணங்களைத் திரட்டும் பெரும்பணியில் நான் ஈடுபட்டிருந்தபொழுதுதொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம்” (1957) என்னும் நூலைக் கண்ணுறும் வாய்ப்பு அமைந்தது. அந்த நூலின் ஆசிரியர் நெல்லை இரா. சண்முகம், கோலாலம்பூர் என்று பெயர் இருப்பதைப் பார்த்து வியப்புற்றேன். உடனடியாக, மலேசியாவில் வாழும் ஆசான் மன்னர் மன்னன் மருதை அவர்களிடத்தும், எழுத்தாளர் நவீன் அவர்களிடத்தும் ஊடகவியலாளர் செ. குணாளனிடத்தும், இசைத்தென்றல் மாரியப்பனாரிடத்தும், இன்ன பிற தமிழார்வலர்களிடத்தும் இரா. சண்முகம் ஐயாவின் பெயரைக் குறிப்பிட்டு, தொல்காப்பியர் தமிழ் நிலையம், 126, பெரிய தெரு, கோலாலம்பூர், மலேயா என்னும் முகவரியில் வாழ்ந்துள்ள இப்பெருமகனாரைக் குறித்த மேலதிக விவரம் வேண்டும் என்று கேட்டேன். இரா. சண்முகம் ஐயாவைப் பற்றி முதலில் யாருக்கும் தெரியவில்லை. சில மணித்துளிகளில் இசைத்தென்றல் மாரியப்பனார் மட்டும் தொடர்புகொண்டு, மலேசியாவில் இரா. சண்முகம் ஐயா தமிழ்ப்பற்றுடன் வாழ்ந்துள்ளமையை அங்குள்ள அன்பர்களிடத்து வினவி, உறுதிப்படுத்தினார்கள். 

தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம்”  என்ற அந்த நூலின் முன்னுரையில் இடம்பெற்றுள்ள பினாங்கு அன்பர் கே. ஏ. பண்டிதர் குறித்து, என் பினாங்கு நண்பர் செ. குணாளன் அவர்களிடத்து மேலதிக விவரம் வேண்டினேன். அதன் வழியாக இரா. சண்முகம் ஐயா பற்றி அறியலாம் என்பது என் நோக்கமாக இருந்தது. நண்பர் குணாளனும் பண்டிதர் குறித்த தொடர்பினை அறிய, அவரின் பெயரன் அம்பிகாபதி அவர்களுடன் எனக்குத் தொடர்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் பயன் கிட்டவில்லை. 

தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம் நூலில், இந்நூல் கிடைக்குமிடம் என்று, “தொல்காப்பியர் தமிழ் நிலையம், அங்கமங்கலம், குறும்பூர் அஞ்சல், திருநெல்வேலி” என்று ஒரு முகவரி இருந்தது. இது இரா. சண்முகம் ஐயாவின் ஊர் முகவரியாக இருத்தல் வேண்டும் என்னும் நோக்கில் நெல்லையில் வாழ்ந்துவரும் பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களிடம் விவரம் கேட்டேன். அவர்களுக்கு இரா. சண்முகம் பற்றிய அறிமுகம் இல்லை. அதனை அடுத்து, நெல்லை அன்பர் முனைவர் வே. ஆனந்தன் அவர்களிடம் குறும்பூர் அடுத்துள்ள அங்கமங்கலத்தில் இரா. சண்முகம் ஐயாவின் உறவினர்கள் யாரேனும் உள்ளனரா? என்று வினவிப்பார்க்குமாறும், தொடர்பு எண், முகவரி கிடைத்தால் அனுப்புமாறும் சொல்லியிருந்தேன். 

அருந்தமிழ்ப் பற்றாளரான வே. ஆனந்தன், அடுத்த சில மணி நேரத்தில், அங்கமங்கலத்தில் வாழ்ந்து வரும் இரா. சண்முகம் ஐயாவின் தம்பி மகன் வழியில் அமைந்த பேரனான மு. பாலகுமார் அவர்களின் தொடர்பு எண்ணை அனுப்பினார்கள். திருவாளர் மு. பாலகுமாரிடம் பேசும்பொழுது, இரா. சண்முகம் ஐயாவைப் பற்றிய விவரங்கள் தெரியத்தொடங்கின. இரா. சண்முகம் ஐயாவுக்கு மருத்துவர் ச. தமிழப்பன், ச. தமிழம்மாள், ச. அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி என்னும் மூன்று மக்கள் செல்வங்கள் வாய்த்தனர் எனவும் அதில் தலைமகனார் மருத்துவர் ச. தமிழப்பன் அவர்கள் மருத்துவப் பணியாற்றிக்கொண்டிருந்த பொழுது பாம்பு கடித்து, இறந்துவிட்டார் என்ற விவரமும் தெரிந்தது. 

மருத்துவர் ச.தமிழப்பன்
தமிழம்மாள்


அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி

தலைமகனார் மருத்துவர் ச. தமிழப்பன் பாம்பு கடித்து இறந்த சோகத்தில் இரா.சண்முகம் அவர்களின் ஒட்டுமொத்த வளமார்ந்த குடும்பமும் நிலைகுலையத் தொடங்கியது என்ற விவரங்களை அறிந்து எனக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தது. இவற்றைத் தவிரப் பிற விவரங்கள் எதனையும் அவர்களிடமிருந்து என்னால் பெறமுடியவில்லை. தமிழறிஞர் ஒருவரின் குடும்பக் கோபுரம் ஒன்று இவ்வாறு சரிந்து, நிலைகுலைந்தமை என் நெஞ்சை வாட்டத் தொடங்கியது. கடந்த மூன்று மாதங்களாக இரா. சண்முகம் ஐயாவின் பெரும்பணியை அறிந்துகொள்ள  அவர்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டத் தொடங்கினேன். 

இரா. சண்முகம் ஐயா சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு ஏட்டில் பல கட்டுரைகளை 1951-1952 ஆண்டுகளில் எழுதியுள்ளார் என்பது அறிந்து அந்த ஏடுகளைப் பார்ப்பதற்குச் சிங்கப்பூர் அன்பர் எம். இலியாஸ் அவர்களைத் தொடர்புகொண்டேன். அவரின் வழிகாட்டலின்படி தமிழ் முரசு பழைய ஏடுகளைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. அதுபோல் மலேசியா, கோலாலம்பூரில் வாழ்ந்த “சுதந்தர இந்தியா” நாளிதழ் ஆசிரியர் சி. வீ. குப்புசாமி அவர்கள் நம் இரா. சண்முகம் ஐயாவுடன் நல்ல தொடர்பில் இருந்துள்ளமையை அறிந்து அவரைப் பற்றி அறியும் முயற்சியும் நடந்தது. குப்புசாமியார் பற்றியும் விரிவாக அறியமுடியவில்லை. 

இரா. சண்முகம் ஐயாவின் மகனார் மருத்துவர் தமிழப்பன் அவர்களின் மறைவு அவர் குடும்பத்தை எவ்வாறு தாக்கியதோ அதுபோல் ஈடுசெய்ய இயலாத அவரின் இழப்பு என் மன அமைதியையும் கெடுத்தது. மருத்துவர் தமிழப்பன் எங்கு இறந்தார்? எந்த ஆண்டில் இறந்தார்? மருத்துவக் கல்வியை எங்குப் பயின்றார்? அவருடன் பயின்றவர்கள் – பணியாற்றியவர்கள் யாரேனும் உள்ளனரா? என்று தேடிக்கொண்டிருந்தேன். இரா. சண்முகனார் குறித்தோ, மருத்துவர் தமிழப்பன் குறித்தோ உரிய விவரங்கள் அவர் குடும்பத்தினருக்குச் சரியாகத் தெரியாமல் இருந்தன.

மருத்துவர் தமிழப்பன் குன்னூரில் இறந்தார் என்றும் அவருக்கு அந்த ஊர் மருத்துவமனையில் சிலை ஒன்று உள்ளது என்றும் ஒரு செய்தியைக் குடும்பத்தினர் பொதுவாகச் சொன்னார்கள். ஊட்டியை அடுத்த குன்னூரில் உள்ள மருத்துவமனையில் வினவிப்பார்த்தேன். அங்கு அதுபோல் சிலை எதுவும் இல்லை என்றனர். இராமநாதபுரத்தை அடுத்துள்ள குன்னூர் என்று குடும்பத்தில் ஓரிருவர் தெரிவிக்க, அங்கும் வினவினோம். அங்கும் விவரம் கிடைக்கவில்லை. சென்னையை அடுத்துள்ள குன்னூர் என்றதால் அங்கும் வினவினோம் அங்கும் தமிழப்பன் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. பின்னர்தான் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலை அடுத்த குன்னூர் என்ற ஊரில்தான் மருத்துவர் தமிழப்பன் பணியாற்றினார் என்ற விவரம் தெரிய வந்தது. 

துபாய் நாட்டில் பணியாற்றிவரும் என் அருமை நண்பர் பொறியாளர் சித்தநாதபூபதியிடம் தொடர்புகொண்டு, விருதுநகரை அடுத்துள்ள குன்னூரில் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாரேனும் உள்ளனரா? என்று வினவினேன். மருத்துவர் தமிழப்பன் குறித்த விவரம் தெரிவித்து மேலதிக விவரம் தெரிந்துகொள்ளும் என் விருப்பதைத் தெரிவித்தேன். என் நண்பர் சித்தநாதபூபதி அவர்கள் மருத்துவர் அந்த ஊரில்தான் பணியாற்றினார் என்ற விவரத்தை அவர்தம் உறவினர் வழியாக ஒரு மணி நேரத்தில் அறிந்து உறுதிப்படுத்தினார். மருத்துவருக்கு அங்குச் சிலை இல்லை எனவும், மாறாக ஒரு புகைப்படம் மட்டும் குன்னூர் அரசு மருத்துவனையில் இருந்தது எனவும் இப்பொழுது பராமரிப்புப் பணிக்காக அந்தப் படமும் கழற்றி வைக்கப்பட்டுள்ளது எனவும் அறிந்துகொண்டேன். 

அடுத்து மருத்துவர் தமிழப்பன் தம் மருத்துவப் படிப்பை எங்குப் படித்தார்? என்று வினவியபொழுது அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயின்றவர் என்ற விவரம் தெரிந்தது. தஞ்சையில் உள்ள மருத்துவ வல்லுநர் குலாம் மொகைதீன் அவர்களிடம் தொடர்புகொண்டு ஸ்டான்லி மருத்துவமனையில் 1965- 1968 காலகட்டத்தில் மருத்துவம் பயின்ற மருத்துவ மாணவர்களுள் தமிழப்பன் பற்றி அறிந்தோர் யாரேனும் உள்ளனரா? என்று வினவிப் பார்த்தேன். மருத்துவர் குலாம் மொகைதீன் அவர்களும் தம் மருத்துவத் துறை தொடர்புகொண்டு, மருத்துவர் தமிழப்பன் அவர்களைப் பற்றி அறிவதற்குரிய முயற்சியில் துணைநின்றார். பயனொன்றும் விளையவில்லை. 

இரா. சண்முகம் ஐயாவின் உறவினர் பெங்களூரில் வாழ்ந்துவரும் திரு. சுதந்திரம் அவர்களிடம் உரையாடியபொழுது, மருத்துவர் ச. தமிழப்பன் அவர்களைப் பற்றி வினவியவுடன் ஐம்பதாண்டுகளைக் கடந்த பிறகும் தமிழ்ப்பன் நினைவு மேலிட்டுக் கண்ணீர் கரைபுரள, பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார். 

இரா. சண்முகம் ஐயாவின் முதல் மகள் தமிழம்மாள் இயற்கை எய்திவிட்டார்(2005). கடைசி மகள் அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி சென்னையில் தம் இளைய மகன் இலக்குமணன் அவர்களுடன் வாழ்ந்து வருகின்றார். அவரின் மூத்த மகன் இராம்குமார் நாகர்கோவிலில் உள்ளார். அழகம்மாள் அவர்களிடம் உரையாடித் தந்தையாரைப் பற்றிய சில விவரங்களைத் தொலைபேசியில் பேசித் தெரிந்துகொண்டேன். 

இரா. சண்முகம் என்ற தமிழறிஞரின் ஒரே வாரிசாக எஞ்சியிருக்கும் அழகம்மாள் அவர்களை நேரில் சந்தித்து உரையாடும் நாளுக்குக் காத்திருந்தேன். இரா. சண்முகம் அவர்களின் குடும்பத்தாருடன் தொடர்ந்து உரையாடுவதும் விவரங்களைத் திரட்டுவதுமாக இருந்தேன். அவர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையில் இருப்பதை உணர்ந்து, எப்பொழுது ஓரிடத்தில் ஒன்றுகூடுவார்கள் என்று காத்திருந்தேன். நல் வாய்ப்பாகப் பொங்கல் திருநாளில் அனைவரும் ஒன்று கூடுவார்கள் என்றும் அந்த நாளில் வந்தால் சந்திக்கலாம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர்கள் குறிப்பட்ட நாளில் திருவண்ணாமலையில் தமிழ் வள்ளலாக விளங்கும் சி.சி. துரை அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் திருவிழாவில் நான் உரையாற்ற வேண்டியிருந்தது. இது இரண்டு மாதங்களுக்கு முன்பே ஒப்புக்கொண்ட நிகழ்வு என்பதால் அதனை முடித்துக்கொண்டு 17.01.2025 காலை 10 மணியளவில் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள குறும்பூரை அடுத்துள்ள அங்கமங்கலத்தில் அனைவரும் சந்திக்கத் திட்டமிட்டோம். 

திருச்செந்தூரில் யாரேனும் இரா. சண்முகனாரை அறிந்தவர்கள் இருப்பார்களா? என்ற நோக்கில் மதுரையில் வாழ்ந்துவரும் முனைவர் நேரு அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டேன். திருச்செந்தூரில் வாழ்ந்துவரும் தம் ஆங்கிலப் பேராசிரியர் ஆழ்வார் குறித்த, விவரங்களைச் சொல்லி, அவரின் தொடர்பு எண்ணையும் எனக்கு அனுப்பி உதவினார்கள். பேராசிரியர் ஆழ்வார் அவர்களுடன் தொடர்புகொண்டு உரையாடியபொழுது இரா. சண்முகனாருக்குத் திருச்செந்தூரில் பாவேந்தர் மன்றம் சார்பில் 1972 ஆம் ஆண்டில் பாராட்டு விழா எடுத்த நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். 

என் நண்பர் சித்தநாதபூபதி அவர்களுக்கு வழக்கம்போல் என் திருச்செந்தூர்ப் பயணத்திட்டம் பற்றி சொன்னேன். தொடர்வண்டி, பேருந்து யாவும் பொங்கல் திருவிழாவின் பொருட்டு, முன்பதிவாகிவிட்டதால் மகிழுந்தில்தான் செல்ல வேண்டும் என்று சொன்னேன். பயணத்திற்காக வாடகை மகிழுந்து சொல்லிவிட்டேன் எனவும் திருச்செந்தூரில் யாரேனும் தொடர்புடையவர்கள் இருந்தால் எனக்கு அங்கமங்கலத்திற்கு வழிகாட்டி உதவுமாறும் வேண்டிக்கொண்டேன். 

சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் என் நண்பர் கோ. சந்தன்ராஜ் அவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபொழுது புதுச்சேரியிலிருந்து திருச்செந்தூர் சற்றொப்ப ஐந்நூறு கி.மீ. தூரம் எனவும் எனவே, தொடர்ந்து மகிழுந்தில் பயணிக்காமல் மதுரையில் உள்ள தம் விடுதியில் தங்கிச் செல்லுமாறும் அறிவுறுத்தினார். அத்துடன் தம் விடுதி மேலாளர் ரிச்சர்டு அவர்களிடம் என் வருகையைத் தெரிவித்தார்கள். திரு. ரிச்சர்டு அவர்களும் என்னை அன்புடன் வரவேற்க முன்வந்தார்கள். அவரிடம் அடுத்த முறை கட்டாயம் மதுரை வரும்பொழுது விடுதிக்கு வருகின்றேன் என்று சொல்லிவிட்டு, தொடர் பயணமாக ஒன்பது மணிநேரம் பயணித்து, திருச்செந்தூருக்கு 17.01.2025 வைகறை நான்கு மணிக்குச் சென்றுசேர்ந்தோம். 

முன்பே திட்டமிட்டவாறு விடுதியில் தங்கி, மூன்று மணி நேரம் ஓய்வெடுத்தேன். காலையில் குளித்து முடித்து, விடுதி வரவேற்பறையில் காத்திருந்தோம். 

என் நண்பர் சித்தநாதபூபதி அவர்களின் ஏற்பாட்டில் அவரின் குடும்ப நண்பரும் தமிழ்ப்பற்றாளருமான திருச்செந்தூரில் வட்டாட்சியராகப் பணியாற்றும் இரா. கோபாலகிருஷ்ணன் அவர்கள் எங்களை வரவேற்று, காலையில் விருந்தோம்பினார். 

    மேலும் என்னைத் திருச்செந்தூரில் வாழ்ந்துவரும் பேராசிரியர் ஆழ்வார் அவர்களின் இல்லத்துக்குக் கோபாலகிருஷ்ணன் அழைத்துச் சென்றார்கள். பேராசிரியர் ஆழ்வார் அவர்கள் நம் இரா. சண்முகனார் அவர்களுக்கு 1972 இல் ஒரு பாராட்டு விழாவைத் திருச்செந்தூரில் பாவேந்தர் மன்றத்தின் சார்பில் நடத்திய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். 

19.07.1981, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30  மணிக்குத் திருச்செந்தூர், சரவணய்யர் நடுநிலைப்பள்ளியில் தொல்காப்பியத் தொண்டர் இரா. சண்முகனார்க்குப் பாராட்டு விழா நடந்துள்ளது. ஆதித்தனார் கல்லூரியின் முதல்வரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான பேராசிரியர் இரா. கனகசபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முனைவர் தி. வைத்தமாநிதி, முனைவர் ந. கல்யாணசுந்தரம், முனைவர் அ. அப்துல்ரசாக், பேச்சிமுத்து (தூத்துக்குடி), புலவர் மரியசூசை (நாலுமாவடி), பெ.மு.சுப்ரமண்யம்(சாத்தான்குளம்), பேராசிரியர் அ. பாஸ்கர பால்பாண்டியன், ஜி. இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் கேசவ ஆதித்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  இச்செய்திகளை நாளிதழ்களும் படத்துடன் வெளியிட்டுள்ளன. 

பேராசிரியர் மா.பா.குருசாமி, பேராசிரியர் கி.ஆழ்வார் ஆகியோர் பாவேந்தர் மன்றம் சார்ந்த பொறுப்பாளர்கள் ஆவர். இரா. சரவணன் (திருச்செந்தூர்), பி. கெங்கை ஆதித்த நாடார் (நாலுமாவடி), நெல்லை நெடுமாறன் (நாலுமாவடி) ஆகியோர் பாவேந்தர் மன்றத்தின் புரவலர்களாக இருந்து இந்த விழாவினை நடத்தியுள்ளமையை அறிந்துகொண்டேன். 

அடுத்து நாங்கள் அம்மன்புரத்தில் வாழ்ந்துவரும் வழக்கறிஞர் மா. பாரிக்கண்ணன் அவர்களின் இல்லத்துக்குச் சென்றோம். வழக்கறிஞர் மா. பாரிக்கண்ணன் அவர்களின் தந்தையார் தமிழ்மாறன் என்னும் தமிழாசிரியர் பெருமகனார் ஆவார். தமிழ்மாறன் ஐயாவின் பேச்சைப் பலவாண்டுகளுக்கு முன் கேட்டு மயங்கிய பட்டறிவு எனக்கு உண்டு என்பதையும் அவர்தம் பேச்சுகள் அடங்கிய ஒலிப்பேழை என்னிடம் உள்ளதையும் சொல்லிப் பாரிக்கண்ணன் ஐயாவுடன் உரையாடி மகிழ்ந்தேன். இரா. சண்முகம் ஐயா பயன்படுத்திய நூல்கள் பல அவர்களின் இல்லத்தில் பாதுகாக்கப்படுவது அறிந்து மகிழ்ந்தேன். 


இரா.கோபாலகிருஷ்ணன், மு.இளங்கோவன், மா.பாரிக்கண்ணன்

அந்த நூலகத்தில் இரா. சண்முகம் ஐயா எழுதிய நூல்கள் உள்ளனவா? என்று மோலேட்டமாகத் தேடிப்பார்த்தோம். ஒன்றும் கிடைக்கவில்லை. அவர்களிடம் மீண்டும் வருவதாக விடைபெற்றுக்கொண்டு, அருகில் உள்ள அங்கமங்கலம் சென்றோம். இடையில் எங்களுக்காக, சேரன்மாதேவியை அடுத்த சுத்தமல்லி ஊரைச் சேர்ந்தவரும், தற்பொழுது நியூசிலாந்து நாட்டில் பணியாற்றி வருபவரும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்தவருமான தங்கவேல் அவர்கள் தம் துணைவியார் தேவியுடன் எங்கள் பயணத்தில் இணைந்துகொண்டார். 

எங்களின் வருகையை அறிந்த இரா. சண்முகம் அவர்களின் குடும்பத்தினர் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டுநின்று எங்களுக்கு வரவேற்பு நல்கினர். அவ்வாறு வரவேற்ற அவர்கள் அனைவரையும் அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அனைவரும் உரையாடி மகிழ்ந்தோம். உணர்ச்சியால் ஒன்றுபட்டு நின்ற நாங்கள் இப்பொழுது மீண்டும் இரா. சண்முகம் ஐயாவின் நினைவுகளையும் சிறப்புகளையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து அறிந்துகொண்டோம். 

அழகம்மாளும், குடும்பத்தாரும் சண்முகம் அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்தல்

இரா.சண்முகம் அவர்களின் குடும்பத்தாருடன் குழுப்படம்

குழுப்படம்

இரா. சண்முகம் ஐயாவின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் யாவரிடத்தும் தமிழ்ப்பணியாற்றிய அப்பெருமகனார் குறித்த முழுமையான விவரங்கள் எதுவும் இல்லை. பிறந்த நாள், மறைந்த நாள் விவரங்கள் கூட அவர்களிடம் இல்லை. அவர் இயற்றிய நூல்களும் இல்லை. சில புகைப்படங்கள், சில செய்தித்தாள் வெட்டுருவங்கள், அழைப்பிதழ்கள் மட்டும் இருந்தன. அவற்றையெல்லாம் என் அருமை நண்பர் தங்கவேல் அவர்களும் அவர்களின் துணைவியார் தேவி அவர்களும் எங்களுக்கு எங்கள் புகைப்படக் கருவிகளில் படியெடுத்தும் படமெடுத்தும் வழங்கினர். தங்கவேல் அவர்களின் தமிழ்ப்பற்றை எண்ணி எண்ணி வியக்கின்றேன். 

இரா.கோபாலகிருஷ்ணன், அழகம்மாள், மு.இளங்கோவன்

இரா. சண்முகம் ஐயாவின் மரபுவழியினர்களுடன் நாங்கள்

இரா. சண்முகம் அவர்களின் விரிவான வாழ்க்கையையும் பணிகளையும் எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன்.  அவர் பற்றி நான் அறிந்துகொண்ட சில விவரங்களை முதன்முதலாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன். மேலதிக விவரம் தெரிந்தவர்கள் தெரிவித்தால் அவற்றை நன்றியுடன் பெற்றுப் பயன்கொள்வேன் (என் தொடர்பு எண் +91 9442029053, மின்னஞ்சல்: muetamil@gmail.com ) 

இரா. சண்முகம் அவர்களின் தமிழ் வாழ்க்கை: 

இரா. சண்முகம் அவர்கள் நெல்லை மாவட்டம் (தற்பொழுது தூத்துக்குடி மாவட்டம்) குறும்பூரை அடுத்துள்ள அங்கமங்கலத்தில் வாழ்ந்த இராமன், கனி அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். இவர் பிறந்த ஆண்டு 1901 என்று தெரியவருகின்றது. இவருடன் பரமு அம்மாள், வேலு ஆகியோர் உடன் பிறந்தவர்கள். இரா. சண்முகம் அவர்கள் பர்மா, இலங்கை (கொழும்பு), மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். மலேசியாவில் நீண்டகாலம் தங்கி, தம் வாழ்க்கையைத் தொடர்ந்தாலும், தமிழகத்திற்கு அவ்வப்பொழுது வந்துசெல்லும் வழக்கம் உடையவர். தமிழ்ப்பற்றும், திராவிட இயக்க ஈடுபாடும் நிறைந்தவர். தந்தை பெரியாருடன் அமர்ந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் கிடைக்கின்றது. மலேசிய வானொலியில் உரையாற்றிய பெருமைக்குரியவர்.

இரா. சண்முகம் அவர்களின் மனைவி பெயர் இலட்சுமி அம்மாள். இவர்களுக்கு மருத்துவர் தமிழப்பன்(1938 ? - 1971), தமிழம்மாள், அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி ஆகிய மூன்று மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். மருத்துவர் தமிழப்பன் அவர்கள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குன்னூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப்பணியாற்றியபொழுது பாம்புகடித்து இயற்கை எய்தியவர் (10.12.1971). 

இரா. சண்முகம் அவர்களின் முதல் மகள் தமிழம்மாள், சென்னை, புரசைவாக்கத்தைச் சார்ந்த செல்வராசு அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர்(19.09.1969). இவர்களின் திருமணம் அங்கமங்கலத்தில் தமிழ்முறைப்படி நடந்தது. இத்திருமணத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் பலர் வருகைபுரிந்து, மணமக்களை வாழ்த்தினர். இவர்களுக்கு முரளி, சிவக்கொழுந்து, கல்யாணராமன், உமா மகேஷ்வரி என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். தமிழம்மாளின் திருமணச்செய்தி அந்த நாளில் பத்திரிகைச் செய்தியாகப் பதிவாகியுள்ளது. 

இரண்டாம் மகள் அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி அவர்களுக்குச் சுப்பிரமணியன் அவர்களுடன் திருமண வாழ்க்கை அமைந்தது. இவர்களுக்குச் சுபாஷினி, இராம்குமார், இலெட்சுமணன் என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். சண்முகனார் அவர்களின் பெருமையை நினைவுகூரும் வாரிசாக அழகம்மாள் அவர்கள் இருந்து, தந்தையாரின் பெருமைகளை நமக்கு நினைவுகூர்கின்றார். 

இரா. சண்முகம் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு ஏட்டில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் முரசு ஆசிரியர் கோ. சாரங்கபாணியுடன் நல்ல தொடர்பில் இருந்துள்ளார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அக்காலத்து அறிஞர்களின் கருத்துகளை மறுத்து எழுதியும் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் குறித்த கட்டுரைகளை, நூல்களை எழுதியும் தமிழ்ப்பணியாற்றியுள்ளார். பல்வேறு தமிழ்த் திருமணங்களை மலேசியாவில் நடத்திவைத்துள்ளார். இரா. சண்முகம் அவர்களின் நூல்கள், வாழ்க்கைக் குறிப்புகள் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கும்பொழுது இவரின் தமிழ் வாழ்க்கை முழுமையாக நமக்குத் தெரியவரும். 

தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம் என்ற தலைப்பில்இவர் இயற்றிய நூல் 1957 இல் வெளிவந்துள்ளது. 160+18 = 178 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் 2 ரூபாய் விலைகொண்டது. ரத்தினம்(கிளை) அச்சகம், 65 திருப்பள்ளி தெரு, சென்னை - 1 என்ற அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நூலில் 10 கட்டுரைகள் உள்ளன. இவற்றுள் பெரும்பான்மையான கட்டுரை சிங்கப்பூர் தமிழ் முரசில் வெளியானவை. ஒரு கட்டுரை மலேசியாவில் கோலாலம்பூரில் வெளியான தமிழ்ச்செல்வன் வார இதழில் 1934 இல் வெளிவந்துள்ளது. 



இந்த நூலில் நூலாசிரியர் படம், தொல்காப்பியர் படம், தொல்காப்பியம் அரங்கேற்றப்படும் அவையின் படம் என்று படங்கள் உள்ளன. 

1. தனித்தமிழ் ஆசிரியர்களும் “வ.ரா.” அவர்களும் 2. தமிழ் பாண்டிய மன்னர்களின் சொத்து 3. தொல்காப்பியர் உள்ளம் 4. தமிழ்கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் 5. எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி 6. தொல். பிறப்பியல் 7. எழுத்துக்களின் பிறப்புக்குப் புறனடை 8. தொல்காப்பியரும் நச்சினார்க்கினியரும் 9. தொல்காப்பியரும் குணவீர பண்டிதரும் 10. தொல்காப்பியரும் குணவீர பண்டிதரும் பவணந்தி முனிவரும் என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரைகள் இந்த நூலை அழகுறச்செய்கின்றன. 

இரா. சண்முகம் அவர்களின் தமிழ்க்கொடை: 

1.       காந்தி அடிகளும் நாகரிகமும் (அல்லது) உலக அமைதிக்கு வழி

2.       தொல்காப்பியர் பொருளுக்கு இலக்கணம் வகுத்த தமிழ்ப் பெரியார்

3.       தமிழ் முரசின் சிறந்த தமிழ்த்தொண்டு

4.       தாயின் திருவடியில் தலை சாய்ந்தார் பண்டிதர்

5.       இளைஞர் வாழ்வு (அச்சில்)

6.       தொல்காப்பியரின் தொன்மைத் தமிழ் நெறி

7.       தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம் (1957)

 

இவர்களுக்கு நன்றி:

  • பொறியாளர் சித்தநாதபூபதி (துபை)
  • இரா. கோபாலகிருஷ்ணன், வட்டாட்சியர், திருச்செந்தூர்
  • வழக்கறிஞர் மா. பாரிக்கண்ணன், அம்மன்புரம்
  • பொறியாளர் தங்கவேல், பொறியாளர் தேவி, நியூசிலாந்து
  • செ.குணாளன், மலேசியா
  • முனைவர் கோ. சந்தன்ராஜ், சிங்கப்பூர்
  • பாலமுருகன், ஓட்டுநர், புதுச்சேரி
  • இரா. சண்முகம் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள்

 

குறிப்பு: இக்கட்டுரைக் குறிப்புகளையும் படங்களையும் எடுத்தாள நினைப்போர் எடுத்த இடம் சுட்டுங்கள்.