நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 2 ஜனவரி, 2018

சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு


சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். தினகரன் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டினை வெளியிட, ஹனிபா வணிக நிறுவனங்களின் உரிமையாளர் முகமது ஹனிபா பெற்றுக்கொள்ளும் காட்சி.

இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளாரின் ஆவணப்படம் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் உள்ள ஆனந்தபவன் உணவக மாடியில் 31.12.2017 மாலை நான்கு மணிக்கு நடைபெற்றது.

சிங்கப்பூரில் உள்ள கங்கைகொண்டான் கழகமும், கவிமாலை இலக்கிய அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் கவிமாலை மா. அன்பழகன் வரவேற்புரையாற்றினார். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினைச் சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். தினகரன் வெளியிட,  சிங்கப்பூர் ஹனிபா வணிக நிறுவனங்களின் உரிமையாளர் முகமது ஹனிபா முதற்படியினைப் பெற்றுக்கொண்டார். சிறப்புப் படிகளைப் பொறியாளர் வெட்டிக்காடு இரவிச்சந்திரன், திரைப்படத் தயாரிப்பாளர் அருமைச் சந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பன் ஆவணப்படத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து அறிமுகம் செய்தார். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன் தம் படப்பிடிப்பு அனுபவங்களையும், ஆவணப்படத்தின் நோக்கங்களையும் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, கவிஞர் தியாக.இரமேஷ், கவிஞர் தங்க. வேல்முருகன், எழுத்தாளர் இலியாஸ், வழக்கறிஞர் கலாமோகன், பேராசிரியர் ஆ.இரா. சிவக்குமாரன், எழுத்தாளர் சங்கத் தலைவர் நா. ஆண்டியப்பன், கவிஞர் சீர்காழி செல்வராசு உள்ளிட்ட படைப்பாளர்களும், பல்வேறு தமிழமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அதிகமாகக் கலந்து கொண்டனர்.

ஆர். தினகரனிடம் இருந்து, முனைவர் சுப. திண்ணப்பன் ஒளிவட்டினைப் பெறும் காட்சி. அருகில் கவிமாலை மா. அன்பழகன், மு.இளங்கோவன், பொறியாளர் ப.புருஷோத்தமன்

மு.இளங்கோவனைச் சிறப்பிக்கும் முகமது ஹனிபா

ஒளிவட்டினைப் பெற்றுக்கொள்ளும் 
வெட்டிக்காடு சோ.இரவிச்சந்திரன்

திரைப்படத் தயாரிப்பாளர் அருமைச்சந்திரன் அவர்கள் ஒளிவட்டினைப் பெறும் காட்சி

அரங்கு நிறைந்த அறிஞர் பெருமக்கள்

பார்வையாளர்களின் ஒருபகுதியினர்

ஆவணப்படத் திரையிடலை ஆர்வமுடன் கண்டுகளிக்கும் தமிழார்வலர்கள்

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் ஒளிவட்டினைப் பெறும் தொடர்பு முகவரி:
0091 9442029053

படங்கள் உதவி: கவிஞர் தியாக.இரமேஷ்

திங்கள், 11 டிசம்பர், 2017

பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன்...



மு. கலைவாணன்


     திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆய்வு மாணவனாக நான் இருந்தபொழுது சென்னை எனக்கு அறிமுகமானது. எங்கள் அண்ணனுடன் சென்னையை வலம்வரும்பொழுதுதான் நண்பர் அ. தேவநேயன் தொடர்பு கிடைத்தது. அவர்தான் "அடவி வரைகலை" வே. இளங்கோவை அறிமுகம் செய்துவைத்தார். அந்த வரிசையில் இன்னொரு நண்பரும் அறிமுகம் ஆனார். அவர் பொம்மலாட்டக்கலைஞர் மு. கலைவாணன். மாணவர் நகலகத் தந்தை ஐயா நா.அருணாசலம் கண்டெடுத்த அறிவுக்கலைஞர்களுள் மு. கலைவாணன் குறிப்பிடத்தகுந்தவர்.

     மாணவர் நகலகத் தந்தை நா. அருணாசலம் ஐயா செய்த தமிழ்ப்பணிகளுக்குத் துணையாக அழைப்பிதழ் உருவாக்குவது, அச்சிடுவது, ஒட்டுவது, நிகழ்ச்சி வடிவமைப்பது, பதாகை கட்டுவது, படம் வரைவது என்று அனைத்துப் பணிகளையும் சலிக்காமல் செய்த பெருமை மு. கலைவாணனுக்கு உண்டு. தமிழ்ச்சான்றோர் பேரவை விழாக்கள், நந்தன் இதழ் வெளியீடு என்று மு. கலைவாணனின் பணிகள் மாணவர் நகலகத்தில் நீண்டவாறு இருக்கும்.

     சென்னை, தியாகராயர் நகரில் அமைந்துள்ள மாணவர் நகலகத்திற்குச் செல்லும்பொழுதெல்லாம் மு.கலைவாணனின் அறிவுத்துறையின் புதிய படைப்புகளைக் கண்டு கண்டு வியப்புறுவேன். அவருடன் உரையாடித் திரும்பும்பொழுது உலக அதிசயத்தைக் கண்டு வியந்த சிறுவனாக மகிழ்ச்சியுடன் வெளிவருவேன். நான் சிறு குழந்தையாக இருக்கும் குழு ஒளிப்படம் ஒன்றைக் கொடுத்து, இதிலிருந்து இக்குழந்தை வடிவத்தை மட்டும் தனிப்படமாக்கித் தாருங்கள் என்று வேண்டிக்கொண்டேன். அவரும் அறுவைப் பண்டுவத்தில் வல்ல மருத்துவர் ஒருவர், உடலோடும் உணர்வோடும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தையைப் பிரித்தெடுப்பதுபோல் கவனமாக என் குழந்தைப் பருவப் படத்தைப் பிரித்தெடுத்து, உயிர்கொடுத்து வழங்கினார். அதனை இன்றும் என் கண்ணெனக் காத்துவருகின்றேன்.

     மு. கலைவாணன் அவர்களுடன் உரையாடியபொழுதுதான் கலைமாமணி ந.மா. முத்துக்கூத்தன் அவர்கள் இவரின் அன்புத் தந்தையார் என்று அறிந்து என் வியப்புக்கு வரம்புகட்டத் தெரியாமல் அப்பொழுது தவித்தேன். பல இலக்கிய நிகழ்வுகளில் முத்துக்கூத்தன் ஐயாவைக் கண்டு, வணங்கியமையும் உரையாடியமையும் இப்பொழுது என் நினைவுக்கு வருகின்றன.

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே  யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை"

என்ற அரசகட்டளை திரைப்படத்தின் பாடலை இயற்றியும், "நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்! நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்!" என்ற பாடலை இயற்றியும் பெருமைக்குரிய கவிஞராக அனைவராலும் அறியப்பட்டவர் ந. மா. முத்துக்கூத்தன் ஐயா என்பதை இங்கு நினைவுகூர விரும்புகின்றேன். புகழ்பெற்ற திரைக்கலைஞர்களான எம்.ஜி.ஆர், கலைஞர் மு.கருணாநிதி, "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன், எம்.ஆர் இராதா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், எஸ்.எஸ்.இராசேந்திரன் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்தவர் இவர். அரசகட்டளை, நாடோடிமன்னன், இராஜராஜன் (எம்.ஜி.ஆர்) உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதிய "கலைமாமணி" ந. மா. முத்துக்கூத்தன் ஐயா அவர்களைத் தனித்துக் கண்டு அவர்தம் சீரிய பணிகளை எழுத முன்பே நினைத்திருந்தேன். என் விருப்பம் நிறைவேறுவதற்குள் ந.மா. முத்துக்கூத்தனார் 2005 மே 1  இல் இயற்கை எய்தினார். இது நிற்க.

     கலைமாமணி ந.மா. முத்துக்கூத்தன் அவர்களின் அருமைப் புதல்வராக மு. கலைவாணன் பிறந்து வளர்ந்ததால் தந்தையாரின் கலையுணர்வு, கவிதையுணர்வு இவருக்கும் மரபுக்கொடையாகக் கிடைத்தது. எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், ஓவியர், சிறந்த கையுறைப் பொம்மலாட்டக்கலைஞர், வில்லுப்பாட்டுக் கலைஞர் என்ற பன்முகம் கொண்டவர் மு. கலைவாணன்.

     மு.கலைவாணன் மிகச் சிறந்த ஓவியர் என்பதை அறிந்து பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா அவர்களின் எங்கள் வீட்டுச் சேய்கள் நூலுக்கு உரிய அட்டைப்படம், உள்படம் வரைவதற்கு, வேலூர் மாவட்டம் ஆர்க்காட்டுக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அழைத்துச் சென்று பயன்கொண்டேன். புதுச்சேரிக்கு வந்தபிறகு மு. கலைவாணனுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பு அருகியே இருந்தது. அண்மையில் தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகள் குறித்த நூலொன்றை எழுதியபொழுது மு. கலைவாணன் நினைவு நெஞ்சில் வந்து தொற்றிக்கொண்டது. அவர்தம் திறமையை நீள நினைந்து, அவர்தம் ஆற்றலை உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து எழுதுவதில் மகிழ்கின்றேன்.

     கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தன், மு. மரகதம் ஆகியோரின் அருமைப் புதல்வராக மு.கலைவாணன் 20.11.1957 இல் பிறந்தவர். "கலைவாணர்" என் எசு.கிருட்டினன் அவர்களின்மேல்கொண்ட மதிப்பின் காரணமாகத்  தம் மகனுக்குக் கலைவாணன் என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார் நம் முத்துக்கூத்தனார்.

     மு.கலைவாணன் கோபாலபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர். இளமை முதல் தந்தையாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். மு.கலைவாணன் - தமயந்தி திருமணம் 10.10.1982 இல் நடைபெற்றது. இவர்களுக்கு முத்தரசன், பகலவன் என்ற இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.

     மு.கலைவாணன் இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பொம்மலாட்டக் கலை நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார். அத்தனை நிகழ்வுகளிலும் பகுத்தறிவுக்கருத்துகளும், சுற்றுச்சூழல் சிந்தனைகளும், தமிழ் மரபு போற்றும் கருத்துகளும் இடம்பெற்றிருக்கும். பொம்மலாட்டத்தில் வழக்கமாக இடம்பெறும் புராணக் கருத்துகளை இவர் பின்பற்றாமல் மக்களும் மாணவர்களும் அறிவுத்தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கில் தம் பொம்மலாட்ட நிகழ்வை நடத்துவது சிறப்பிற்குரிய ஒன்றாகும்.

     சென்னை பொதிகை தொலைக்காட்சிக்காக இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், "கலை மாமா" என்ற தலைப்பில் மக்கள் தொலைக்காட்சியில் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், வசந்து தொலைக்காட்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். ஆசிரியர்களுக்கு இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும், குழந்தைகளுக்கு இதுவரை அறுநூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும், பெற்றோருக்கான பயிற்சி வகுப்புகள் 54 ஐயும் நிகழ்த்தியுள்ளார். மூன்று திரைப்படங்களிலும், இரண்டு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். 

     மலேசியாவில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அழைப்பினை ஏற்று மலேசியா, சிங்கப்பூர் சென்று கலைநிகழ்ச்சிகளை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கியுள்ளார். இலங்கைக்கு 2008 ஆம் ஆண்டு சென்று, அங்குள்ள தேயிலைத் தோட்டப்பகுதியில் கலைநிகழ்வுகளை நடத்தி வந்துள்ளார். கலை அறப்பேரவை, கலைவாணன் பொம்மலாட்டக் கலைக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை நிறுவித் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார். பல இடங்களில் வில்லுப்பாட்டுப் பயிற்சி முகாம், பொம்மலாட்டப் பயிற்சி முகாம்களை நடத்தி இக்கலைகள் வளர்வதற்கு அருந்தொண்டாற்றியுள்ளார்.

     ஆழிப்பேரலையால் தமிழகத்துக் கரையோர மக்கள் கவலையில் மூழ்கி, கண்ணீருடன் வாழ்ந்தபொழுது, இவரின் பொம்மலாட்ட நிகழ்வுகள் கன்னியாகுமரி முதல், சென்னை வரை நிகழ்ந்து, அவர்களுக்கு மன ஆறுதலையும், துன்ப மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

மு.கலைவாணன் பெற்ற விருதுகள்:

     இலக்கிய வீதி அமைப்பு இவரின் பணியைப் பாராட்டி, சிறந்த பொம்மலாட்டக் கலைஞருக்கான விருதினை 1998 இல் வழங்கியது. தாராபாரதி அறக்கட்டளை 2002 இல் ’பல்கலை வித்தகர்’ விருதினை வழங்கியது. குரோம்பேட்டை திருக்குறள் பேரவை 2010 இல் ’கலைஞாயிறு’ என்ற விருதினை வழங்கியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ’கலைஞர் பொற்கிழி விருதினை’, 2004 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் உரூபாயுடன் வழங்கிப் பாராட்டியுள்ளது. தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 2015 இல் ’பெரியார் விருது’ வழங்கிப் பாராட்டியுள்ளது.

மு.கலைவாணன் நூல்கள்:

1. கதை கேளு
2. பாடலாம் வாங்க
3. அன்புள்ள குழந்தைகளுக்கு ( மரம் வளர்ப்பு)
4. முகமூடி
5. நீர் இன்றி (நீர் மேலாண்மை)
6. யார் வந்தது? (சுற்றுச்சூழல்)
7. சின்னச் சின்ன கதைகள் ( உருவகக் கதைகள்)

     தமிழர் மரபு, தமிழ்ப் பண்பாடு, தமிழ்மொழிச் சிறப்பு, தமிழ் இலக்கியச் சிறப்பு, தமிழ்க்கலை வளர்ச்சி, சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை குறித்துப் பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலைவடிவங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் மு. கலைவாணன் அவர்களை உலகத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் பிள்ளைகளுக்கு இவர் வழியாக, இக் கலைவடிவங்களைக் கற்றுத் தருவதற்குரிய வாய்ப்புகளையும் சூழல்களையும் அமைத்து, வாழும் காலத்தில் இவரைப் போற்றுவது நம் கடமை.

 *** மு. கலைவாணனின் கலைப்பணியைப் பாராட்டி, இன்று (11.12.2017) மாலை மாணவர் நகலத்தின் உரிமையாளர் அண்ணன் அ. சௌரிராசன் ஏற்பாட்டில் பாராட்டு விழா சென்னையில் நடைபெறுகின்றது. மு.கலைவாணனின் "பேசாதன பேசினால்" என்ற தலைப்பிலான நூலும் வெளியிடப்படுகின்றது. அறுபது அகவையைத் தொட்ட மு. கலைவாணன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

மு. கலைவாணன் தொடர்புக்கு:

மு.கலைவாணன்,
கூத்தர் குடில்,
58/89 செல்லியம்மன்கோவில் தெரு,
காட்டாங்குளத்தூர்,
காஞ்சிபுரம் மாவட்டம் - 603 203
பேசி: 9444147373