நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

புதுவைப் படைப்பாளர்கள் - தேசியக் கருத்தரங்கம்


புதுச்சேரி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத் தமிழ்த்துறை சார்பில் புதுவைப் படைப்பாளர்கள் - தேசியக் கருத்தரங்கம் கீழ்வரும் நிகழ்ச்சி நிரலின்வண்ணம் நடைபெற உள்ளது. தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

தொடக்க விழா
நாள்: 16. 04. 2014, புதன் கிழமை நேரம்: காலை 10 மணி
இடம்: மையக் கருத்தரங்க அறை, பட்ட மேற்படிப்பு மையம், 
இலாசுப்பேட்டை., புதுச்சேரி

தலைமை: முனைவர் இரா. சுவாமிநாதன்

வரவேற்புரை: முனைவர் சிந்தா நிலா தேவி

சிறப்புரை: தமிழ்மாமணி மன்னர்மன்னன்

ஆய்வுரைகள்

பாவேந்தர் பாரதிதாசன் : முனைவர் மறைமலை இலக்குவனார்
கவிஞரேறு வாணிதாசன் : கவிஞர் கல்லாடன்
கவிஞர் தமிழ் ஒளி : திரு. . இராசரத்தினம்

நிறைவு விழா (16.04. 2014) பிற்பகல் 3 மணி

சான்றிதழ் வழங்கிச் சிறப்புரை : முனைவர் வி. முத்து

நன்றியுரை: முனைவர் மு.இளங்கோவன்

அனைவரும் வருக!


சனி, 12 ஏப்ரல், 2014

அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுடன் ஒரு சந்திப்பு…


சந்திரயான் திட்ட இயக்குநர் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களை வரவேற்று நூல்களைப் பரிசாக வழங்கும் முனைவர் மு.இளங்கோவன், திரு. பெ. பூபதி, முனைவர் சிவக்குமார்(இடம்- புதுச்சேரி, 12.04.2014)

இன்று விடியற்காலையில் செல்பேசியில் ஓர் அழைப்பு. என் அருமை நண்பர் பொதட்டூர்ப்பேட்டைப் பேராசிரியர் சிவக்குமார் அவர்களின் இனிய குரல் காலையில் என்னை எழுப்பியது. அறிவியல் அறிஞர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் புதுச்சேரி வழியாகப் பயணம் செய்கின்றார். காலையில் புதுச்சேரியில் சந்திப்போம் என்று குறிப்பிட்டார். நல்வாய்ப்பாக நான் புதுச்சேரியில் இருந்தேன். மற்ற பணிகளைப் புறந்தள்ளி, காத்திருந்தேன்.

காலை 10 மணியளவில் புதுச்சேரிக்கு அவர்கள் பயணம் செய்த மகிழ்வுந்து வந்து சேர்ந்தது. தனிப்பட்ட பயணம் என்பதால் மற்ற நண்பர்களுக்குச் செய்தியைத் தெரிவிக்கவில்லை. புதுச்சேரி இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த திரு. பூபதி அவர்களும், ஒளி ஓவியர் நாராயண சங்கர் அவர்களும், நானும் இணைந்து அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களை வரவேற்கக் காத்திருந்தோம்.

புதுச்சேரியில் குறித்த இடத்தில் மகிழ்வுந்து எங்களுக்காக நின்றது. அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் மகிழ்ச்சியுடன் தரையிறங்கினார். அவர்களுடன் பலவாண்டுகளாக இணையத்தொடர்பிலும் நேரடித்தொடர்பிலும் இருந்ததால் அன்பொழுகப் பேசியபடி எங்களுடன் இணைந்துகொண்டார். உடல்நலம் வினவியும், திட்டப்பணிகளை வினவியும், அவர்கள் செய்துவரும் அறப்பணிகளைப் பாராட்டியும் மகிழ்ந்தோம். என் தமிழ் இணையப் பணிகளை அறிந்தவர் ஆதலின் எனக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் சொல்லி ஊக்கப்படுத்தினார்.


இந்திய நாட்டின் பெருமையை வானுயர ஏற்றிய பெருமகனார் தமிழ்வழிக் கல்வி கற்றவர் என்பதும் எங்களைப் போலும் எளிய குடும்பத்தில் பிறந்து உயர் கல்வி பெற்றவர் என்பதும் எங்களுக்கு இடையே உள்ள உறவுக்கு அடிப்படைக் காரணமாகும். பழகுதற்கு இனிய பண்பாளரான அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, நூல்களைப் பரிசாக வழங்கி எங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தோம். பத்து நிமிடம் நடந்த இந்தச் சந்திப்பில் எழுத்தாளர் பூபதி அவர்கள் எழுதிய நூலினைப் பரிசாக அளித்தமையும், பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தமையும் எங்கள் வாழ்வில் நினைக்கத்தக்க பொழுதுகளாம். புன்னகைப் பூக்களை எங்கள் நெஞ்சத்தில் பதியமிட்டு அறிஞர் மயில்சாமி அண்ணாதுரையார் விடைபெற்றுத் தென்திசை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார்…
பெ.பூபதி, முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, மு.இளங்கோவன், வளரும் அறிவியல்  இதழாசிரியர் சிவக்குமார்

தமிழ்வழியில் படித்த இரண்டு நெஞ்சங்களும் தாம்கலந்தனவே...

எழுத்தாளர் பூபதி அவர்கள் சிறப்பித்தல்  

ஒளிஓவியர் நாராயண சங்கர் அவர்களை அறிமுகம் செய்துவைத்தல்