மருத்துவர் மதுரம் சேகர்
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரிக்குச் செல்வது இது முதல்முறை என்பதால் நண்பர்களிடம் வழி வினவிக்கொண்டு,
நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முதல்நாள் சென்று சேர்வதற்குத்
திட்டமிட்டிருந்தேன். காலையில்
புதுவையில் புறப்பட்ட நான் பகலுணவுக்குத் திருவண்ணாமலை சென்று சேர்ந்தேன். உணவகத்தில் பகலுணவு முடித்து,
அங்கிருந்து பேருந்தேறி மாலையில் திருப்பத்தூர் சென்று சேர்ந்தேன். அருகில் உள்ள நாட்டறம்பள்ளியில்
ஆய்வுத்தொடர்பாக ஒரு வேலை இருந்தது. அந்த வேலையை ஆறு மணியளவில்
முடித்துக்கொண்டு மீண்டும் திருப்பத்தூர் பேருந்து நிலையம் வந்து, ஏலகிரிப் பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டேன்.
சற்றொப்ப ஒன்றரை மணிநேரத்தில் ஏலகிரியைப்
பேருந்து அடையும் என்று சொன்னார்கள்.
இரவு நேரம் என்பதால் மலையிலிருந்து சுற்றுப்புற ஊர்களைப் பார்வையிடும்பொழுது,
வண்ண விளக்கொளி கண்ணுக்கு இனிய விருந்தளித்தது. இரவுக்காட்சியைச்
சுவைத்தவண்ணம் சென்றுகொண்டிருந்தேன். மலைமீதிருந்த 14 வளைவுகளை ஊர்ந்து, ஏறிக் கடந்து, பேருந்து ஏலகிரியை அடையும்பொழுது சிறிதளவு சாரல் காற்று வீசத் தொடங்கியது.
‘நிக்ரிஸ்’ என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளதைச்
சொன்னவுடன் வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரிப் பேராசிரியர் ப.
சிவராஜி அவர்கள் அடுத்த ஐந்து நிமையத்தில் என்னை எதிர்கொண்டு அழைத்தார்.
அருகிலிருந்த விடுதிகளில் பாட்டும் கூத்துமாக
அமர்க்களப்பட்டது. குடும்பம் குடும்பமாக மக்கள் அமர்ந்து விடுதிகளில் உண்பதும் உரையாடுவதுமாக
இருந்தனர். ஊர்வன, பறப்பன எல்லாம் மக்கள்
வயிற்றில் அடைக்கலம் புகுந்தவண்ணம் இருந்தன. இட்டளியும்,
தோசையும் கிடைக்குமா? என்று வினவினேன். இல்லை என்று கைவிரித்தனர். வேறு கடையில் வாங்கிக்கொண்டு
வருகின்றோம் என்று நண்பர்கள் சொல்லி, அருகில் இருந்த வளமனை அறையில்
தங்க வைத்தனர்.
வளமனையின் உரிமையாளர் திரு. சேகர் அவர்களும் அவர்களின்
துணைவியார் மருத்துவர் மதுரம் அம்மாவும் அன்புடன் வரவேற்று உரையாடினார்கள்.
ஓய்வெடுக்கும்படி விடைகொடுத்தனர். இருட்டில் வளமனையின்
முழு வனப்பும் தெரியவில்லை. காலையில் பார்த்துக்கொள்வோம் என்று
அறைக்குச் சென்று, குளித்து முடிப்பதற்கும் உணவு வருவதற்கும்
சரியாக இருந்தது. உண்டு முடித்து, நண்பர்களுடன்
செல்பேசியில் என் ஆய்வுத்தொடர்பாக உரையாடிக்கொண்டிருந்தேன். நள்ளிரவில்
கண்ணயர்ந்தேன்.
காலையில் எழுந்து ஏலகிரியில் நடைப்பயிற்சியில்
ஈடுபட்டோம். குளிர்ந்த காற்றும், அமைதியும் உள்ளத்தை அமைதிப்படுத்தின.
நெடுமரங்களும் பசுமை போர்த்திய குறிஞ்சிநில வனப்பும் கண்ணையும் கருத்தையும்
மயக்கின. அண்டை மாநிலத்தார் ஓய்வுப்பொழுதைக் கழிக்க வந்து போவதும்
நம் மக்கள் இதுபோன்ற சுற்றுலா இடங்கள் குறித்து அறியாமல் இருப்பதும்
எண்ணி எண்ணிக் குமைந்தேன். அங்கிருந்த தொன்போசுகோ கல்லூரிக்குப் பேராசிரியர்
சு. இராஜா அழைத்துச் சென்று அருட்தந்தையர்களால் நிருவகிக்கப்படும் கல்லூரியின் வனப்பையும்
அங்கிருந்த மழைநீர்ப் பாதுகாப்பு அமைப்பையும் காட்ட, கண்டு மகிழ்ந்தோம்.
நான்
தங்கியிருந்த வளமனைக்கு எதிரில் அமைந்திருந்த அரங்கில் முனைவர் மு.
தமிழ்க்குடிமகனார் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் திட்டமிட்டவாறு காலைப்பொழுதில்
மிகச் சிறப்பாக நடந்தது. தனித்தமிழ் ஈடுபாடும்
ஆய்வார்வமும் கொண்ட பேராளர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஒரு மூத்த பேராசிரியரின் தமிழ் வாழ்க்கையை அனைவரும் நினைவுகூர்ந்தோம்.
பகலுணவு வாணியம்பாடிப் புலவுச்சோற்றால் மணந்தது.
நிகழ்ச்சிக்கு வந்த அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட அணியமானேன்.
மருத்துவர் மதுரம் சேகர் அவர்கள் தாம் குடும்பத்தாருடன்
சென்னை செல்வதாகவும், விரும்பினால் தம் வண்டியில் மலையடிவாரம் வரை வரலாம் என்று
கூறியவாறு, உணவு செரிப்பதற்கு ஒரு சாற்றினை வழங்கினார்கள்.
சுவை கருதி மீண்டும் அச்சாற்றினைக் கேட்டு வாங்கி
உண்டேன். இயற்கைப் பொருளால் அமைந்த அந்தச் சாற்றினைப் பற்றிச்
சொன்ன மருத்துவர் மதுரம் சேகர் அவர்கள் தம் வளமனையில் உள்ள மூலிகைச் செடிகள் இருந்த
தோட்டத்தைப் பார்க்க வருமாறு ஓர் அன்பு அழைப்பு விடுத்தார்.
நானும் அதனைப் பார்க்கும் பெரு விருப்பத்துடன்
தயாரானேன். மூலிகைச்
செடிகள் இருந்த பகுதியின் கதவினைத் திறந்து, உள்ளே பாதுகாக்கப்படும்
ஒவ்வொரு செடியையும் ஒரு குழந்தையைப் போல் பாதுகாத்து வருவதைக் கண்டு வியப்புற்றேன்.
இது மிளகுச்செடி என்றார்; அது ஏலச்செடி என்றார்:
அது அதிமதுரம் என்றார்: அதன் அருகே இருப்பது நீரிழிவு
நோயைக் குறைக்கும் மூலிகை என்று ஒரு தழையைப் பறித்துத் தந்தார். இதனை உண்ணுங்கள் என்று ஆர்வமாக வழங்கவும், வாயில்போட்டேன்.
புளிச்சைக் கீரையின் சுவை இருந்தது. மீண்டும் ஓர்
இலையைக் கேட்டு வாங்கி உண்டேன். ஒரு செடியை எடுத்துக்கொடுத்து
இதனை வீட்டில் கொண்டுபோய் நட்டுவையுங்கள் என்று அன்புக் கட்டளை போட்டார்கள்.
வாங்கிக்கொண்டேன். அது சந்தனச்செடி; இது கற்றாழை; இது நிலவேம்பு; இது வில்வம்; என்று அனைத்தையும் இனம்காட்டியதுடன் ஒவ்வொரு மூலிகையின் நோய்நீக்கும் தன்மைகளையும்
மருத்துவர் மதுரம் சேகர் விளக்கினார். இவரின் இயற்கை மருத்துவப்
பேரறிவு என்னைத் திக்குமுக்காட வைத்தது. தமிழர்கள் வாழ்ந்த இயற்கை
வாழ்க்கையை நன்கு அறிந்து வைத்துள்ள மருத்துவர் மதுரம் சேகர் சென்னையில்
புகழ்பெற்ற இயற்கை மருத்துவராகத் தம் மருத்துவப் பணியை இருபத்தைந்து
ஆண்டுகளாகச் செய்துவருகின்றார்.
மருத்துவர்
மதுரம் சேகர் திருப்பத்தூர் மாவட்டம் செலந்தம்பள்ளி என்ற ஊரில் 31.07.1962 இல் பிறந்தவர்.
பெற்றோர் தேவராஜன், செந்தமிழ்ச்செல்வி. ஐந்தாம் வகுப்பு வரை பிறந்த ஊரிலும், மடவளம்
பள்ளியில் 11ஆம் வகுப்பு வரையிலும் பயின்றவர். புகுமுக வகுப்பினைச் சேலத்தில் பயின்றவர்.
ஆய்வுக்கூடத் தொழில்நுட்பம், இயற்கை மருத்துவம் உள்ளிட்டதுறைகளில் பட்டயச் சான்று பெற்றவர்.
திருப்பத்தூரில் மருத்துவப்பணியைத் தொடங்கிய மதுரம் சேகர் பல முகாம்கள் நடத்தி மருத்துவத்தை
மக்கள் மருத்துவமாக மாற்றியவர். செய்தி ஏடுகளில் இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வுக்
கட்டுரைகளை எழுதியதால் மக்கள் நடுவே செல்வாக்குப் பெற்றார். தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும்
இவர் உரை விரும்பி ஒலி-ஒளிபரப்பானது.
“செய்வதைச்
சொல்வோம், சொல்வதைச் செய்வோம்” என்ற மூலமந்திரத்தைப் பின்பற்றி மருத்துவம் பார்த்ததால்
உலகப் புகழ் இவர்களைத் தேடி வந்தது. மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல நோயர்கள் இவர்களின்
இயற்கை மருத்துவத்தால் குணமடைந்தனர். பல ஆங்கில மருத்துவர்கள் இவர்களின் மருத்துவமுறைகளைப்
பரிந்துரைத்தனர்.
“இல்லந்தோறும்
இயற்கை உணவுகள்” (தமிழ் வளர்ச்சித் துறை பரிசுபெற்ற நூல்) என்ற மதுரம் சேகரின் நூல்
புகழ்பெற்ற நூலாகும். மதுரம் அவர்களின் கணவர் சேகர் இயற்கை ஆர்வலர். தம் மனைவியின்
மருத்துவப் பணிகளில் இணைந்து உதவி வருபவர். இவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள் வாய்த்தனர்;
இருவரும் மருத்துவர்கள்.
‘பிறந்தது
முதல் இறப்பது வரை உணவு தேவை! மருந்து தேவையா?’ என்று வினா எழுப்பும் மருத்துவர் மதுரம்
சேகர், “ஆகாததும் அருகம்புல்லில் ஆகும்” என்கின்றார். பழைய சோற்றினை ‘அன்ன ரச சஞ்சீவி’
என்று கூறி அதன் மருத்துவ குணத்தினை விளக்கிக்கொண்டு வருவதற்கும் ஏலகிரி மலையடிவாரம்
வருவதற்கும் சரியாக இருந்தது.
மருத்துவர் குடும்பத்தினருடன் மு.இ.
1 கருத்து:
மருத்துவர் குடும்பத்தினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அவர்களது பணி சிறக்க வாழ்த்துகள்.
கருத்துரையிடுக