நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 அக்டோபர், 2023

உலகத் தமிழ் மாமணி விருது…

 

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் அரங்க. செல்வம் அவர்களிடம் உலகத் தமிழ் மாமணி விருது பெறும் முனைவர் மு.இளங்கோவன், அருகில் முனைவர் பாஞ். இராமலிங்கம், புலவர் ந. ஆதிகேசவனார், பாரிஸ் பாலகிருட்டினன்

விருது பெற்றோர், பாராட்டினைப் பெற்றோர்
 

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் சார்பில் அண்மையில் (செப். 24 - 26) மொரீசியசு நாட்டில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் உலகத் தமிழ் மாமணி விருது எனக்கு வழங்கப்பட உள்ளதைப் பேராசிரியர் பாஞ். இராமலிங்கம் அவர்கள் மடல்வழித் தெரிவித்திருந்தார்கள். அலுவல் காரணமாக மொரீசியசு நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு அமையாமல் போனதால் அந்த விருதினை என்னால் பெற்றுக்கொள்ள இயலவில்லை. அந்த விருதினை இன்று (28.10.2023) மாலை புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள பால மோகன மகாலில் நடைபெற்ற விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவர் திரு. அரங்க. செல்வம் அவர்கள் தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் முன்னிலையில் எனக்கு வழங்கிப் பாராட்டினார்கள். விருது வழங்கி என் தமிழ்ப்பணிகளை ஊக்கப்படுத்திய உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. இந்த நிகழ்வில் திரு. குமரன் அவர்களுக்கு உலகக் கலைமாமணி விருதும், மொரீசியசு சென்று ஆய்வுக்கட்டுரை வழங்கியவர்களுக்குப் பாராட்டும் செய்யப்பெற்றது.

செவ்வாய், 17 அக்டோபர், 2023

வயல்வெளிப் பதிப்பகம் சார்பில் முனைவர் கி. பாண்டியனின் சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள் நூல் வெளியீடு...

 


வயல்வெளிப் பதிப்பகம் சார்பில் முனைவர் கி. பாண்டியன்   அவர்கள் எழுதிய சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள் என்ற நூல் விரைவில் வெளிவர உள்ளது 

இது சித்தர் பாடல்களை முழுமையாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஆய்வு நூல்; 

1. தமிழ் இலக்கியத்தில் சித்தர்கள், 2. சித்தர்கள் கூறும் சமுதாயச் செய்திகள், 3. சித்தர்கள் உணர்த்தும் இறையுணர்வு, 4. சித்தர்கள் புலப்படுத்தும் அறநெறிகள், 5.சித்தர்கள் சாடும் போலித்துறவும் பொய் ஆன்மீகமும் ஆகிய ஐந்து தலைப்புகளில் உள்ளடக்கம் அமைந்துள்ளது. 

நூல் தேவைக்குத் தொடர்புகொள்ளவும் 

muetamil@gmail.com 

+91 9442029053