நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 7 மே, 2010

மகிழ்ச்சி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா

மகிழ்ச்சி படத்தின் காட்சிகள்



மகிழ்ச்சி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிக விரைவில் நடைபெற உள்ளது என்று இயக்குநரும் மகிழ்ச்சிப் படத்தில் கதைத்தலைவராக நடிப்பவருமான வ.கௌதமன் தெரிவித்தார்.சந்தனக்காடு என்ற பெயரில் வீரப்பன் வாழ்க்கையைத் தொடராக எடுத்துப் புகழ்பெற்ற வ.கௌதமன் நீல.பத்மநாபன் தலைமுறை புதினத்தை மகிழ்ச்சி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார்.ஒலிக்கோப்புப் பணிகளில் திரைக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.வித்யாசாகரின் இனிய இசையில் படம் மிகச்சிறப்பாக வெளிவர உள்ளது.



























படத்தின் சில காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன்.

புதன், 5 மே, 2010

வ.கௌதமனின் மகிழ்ச்சி திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது...



எனக்கு அண்ணன் அறிவுமதிதான் திரைக்கலைஞர் வ.கௌதமன் அவர்களைப் பெயர் வழியாக அறிமுகப்படுத்தினார்.

திட்டக்குடி ஊரில் பிறந்த தம்பி என்றார்.பெண்ணாடம்தான் தமிழர்கள் அறிந்த ஊராக இருந்தது. திட்டகுடியிலும் ஒரு தமிழரா? காலம் வரட்டும். கண்டு மகிழ்வோம் என்று காத்திருந்தேன்.

சந்தனக்காடு வழியாக வ.கௌதமன் முன்பே அறிமுகமாகிவிட்டார்.இந்தத் தொடரை உலகில் இருக்கும் தமிழர்கள் வியந்து போற்றி இணையத்தில் எழுதியுள்ளதை, வ.கௌதமன் அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தெரிவித்தேன்.ஓரிரு தொலைபேசி அழைப்புகளுக்குள் நட்பு விதையூன்றி, உறவுப்பயிர் விளைவித்தோம்.

புதுச்சேரி வந்தபொழுது ஓர் இயல்பான சந்திப்பு.பலவாண்டுகள் பழகிய அன்பு கலந்த உறவு மலர்ந்தது.என் வீட்டுக்கு வந்து சந்தனக்காடு வீரப்பன் வெற்றிவிழா அழைப்பு வழங்கினார்.அவர் இருக்கும்பொழுதே அந்த அழைப்பை இணையத்தில் ஏற்றி உலகத் தமிழர்களை நிகழ்ச்சிக்கு வாருங்கள் என்று ஒரு வரவேற்பு வழங்கினேன்.கொரியா திரு.கண்ணன் அவர்களிடம் அண்ணன் தொலைதூர உரையாடல் நிகழ்த்தினார்.அனைவரிடமும் அவர் நட்பாடிய முறை எனக்கு மகிழ்வைத் தந்தது. விழாவுக்குப் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு ஒரு குழுவாகப் புறப்பட்டோம்.விழா நடைபெறுவதை உடனுக்குடன் இணையத்தில் தந்து கொண்டிருந்தேன்.

"சந்தனக்காடு"என்னும் பெயரில் காட்டு ராசா வீரப்பன் உண்மை வரலாறு நமக்குக் கிடைத்தது.இன்றும் சிற்றூர் மக்கள் விரும்பிப் பார்க்கும் தொடராக அது மக்கள் மனதில் ஓடிக்கொண்டுதான் உள்ளது.

இதே வரிசையில் தமிழ் மக்களின் வாழ்வையும் பண்பாட்டையும் மீண்டும் நினைவுகூரத் தக்க வகையிலும்,உலகத் தரத்திற்கான தமிழ்த்திரைக் காவியமாகவும் மகிழ்ச்சி என்ற பெயரில் ஒரு திரைக்காவியம் வெளிவர உள்ளது. இப் படத்தை உருவாக்கிய வரலாற்றை அடிக்கடி இயக்குநர் சொல்வார்.மகிழ்ச்சி நீல. பத்மநாபன் அவர்களின் தலைமுறை புதினத்தைத் தழுவி உருவாக்கப்படும் படமாகும்.இதில் மிகச்சிறந்த கதைத்தலைவனாக வ.கௌதமன் அவர்களே தோன்றுகின்றார்.அண்ணன் சீமான் அவர்கள் இதில் தோன்றி நடித்துள்ளது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.களத்தில் கைகோர்க்கும் இந்த இரட்டைத் தமிழர்களைப் பாராட்டுகிறேன்.

கவிபேரரசு வைரமுத்து,அறிவுமதி,பச்சியப்பன் ஆகியோர் வடித்துள்ள பாடல்கள் தமிழர்களின் இதயம் தழுவும் தரத்தினையுடையன.

படப்பிடிப்பு நாளில்கூட இயக்குநர் அண்ணன் கௌதமன் அவர்களுடன் படப்பிடிப்பு முன்னேற்றம் பற்றி வினவிக்கொண்டிருந்தேன். விரைவில் திரைக்கு வரும் வகையில் முன்னேறிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சி படம் வெற்றியடைய என் வாழ்த்துகள்.படப்பிடிப்பு குழுவினருக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவித்து உலகத் தமிழர்களை வாழ்த்துரைக்க அழைக்கிறேன்.

தமிழ்க்கலைஞன் வ.கௌதமனால் திரையுலகம் பெருமையுறட்டும்...