நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 27 டிசம்பர், 2012

தமிழ் இணைய மாநாடு, மக்கள் அரங்கம் நிகழ்வுகள்



சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையமாநாடு 2012, டிசம்பர் 28,29,30 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் மக்கள் அரங்கம் என்ற அரங்கில் தமிழகத்தின் முன்னணித் தமிழ் இணைய வல்லுநர்கள் கலந்துகொண்டு தமிழ் இணையத்தை மக்களிடம் அறிமுகம் செய்ய உள்ளனர்.


சிதம்பரம், கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, கும்பகோணம், செயங்கொண்டம், அரியலூர் சார்ந்த பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மக்கள் அரங்கில் கலந்துகொள்ள எந்தவிதக் கட்டணமும் இல்லை.

மக்கள் அரங்கத்தில் தமிழ்த்தட்டச்சுப் பயிற்றுவிக்கப்படும். அதுபோல் மின்னஞ்சல் கணக்குத் தொடங்குவது, மின்னஞ்சல் அனுப்புவது, வலைப்பூ(பிளாக்) உருவாக்குவது. பதிவிடுவது பயிற்றுவிக்கப்படும். மேலும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டரில் கணக்குத் தொடங்கி எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பயிற்சியளிக்கப்படும். ஸ்கைப் என்ற தளத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டில் உள்ளவர்களுடன் எவ்வாறு பேசுவது என்றும் பயிற்றுவிக்கப்படும்.

பள்ளி, கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும், மின் நூலகங்கள், மின் நூல்கள் அறிமுகம் செய்யப்படும். மழலைக்கல்வி குறித்த இணைய தளங்களும் அறிமுகம் செய்யப்படும். ஆய்வு மாணவர்கள் எவ்வாறு இணைய தளங்களைப் பயன்படுத்தித் தங்கள் ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்யலாம் என்றும் விளக்கப்படும். 

மின்பலகை(டேப்லட்), இணைய வானொலி, இணையத் தொலைக்காட்சிகள், மின் இதழ்கள், மின் புத்தகங்கள் தயாரிப்பது பற்றியும் இணையத்துறை வல்லுநர்கள் பயிற்சி வழங்குவார்கள். விக்கிப்பீடியா தளத்தைப் பயன்படுத்துவது, எவ்வாறு பங்களிப்பது என்றும் காட்சிவிளக்கம் தரப்படும்.

மக்கள் அரங்கத்தின் தலைவராக முனைவர் மு.இளங்கோவன்(புதுச்சேரி) இருந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உள்ளார். முனைவர் துரை.மணிகண்டன், ஒரிசா பாலு, செல்வமுரளி, தகவல் உழவன் உள்ளிட்ட முன்னணி இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயிற்சி வழங்க உள்ளனர்.

செல்பேசிகளில் தமிழ்ப்பயன்பாடு, குறுஞ்செய்திகள் வழியாக நடத்தப்படும் இதழ்கள், தமிழ் மென்பொருள்கள், தேடுபொறிகள், வலைப்பூ வளர்ச்சி, இணைய விளம்பரங்கள் பற்றிய 25 ஆய்வுக்கட்டுரைகள் மக்கள் அரங்கில் படிக்கப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை: