சனி, 19 ஜூன், 2010
திருக்குறள் ஒலிப் பதிப்பு
திருக்குறள் தமிழர்களின் வாழ்வியல் மேன்மை காட்டும் நூலாகும். இதனை மேல்நாட்டு அறிஞர்கள் மொழிபெயர்ப்புகள் வழியாக வெளியுலகுக்கு அறிமுகம் செய்தனர்.
ஒலிப்பேழைகளாக(கேசட்) முன்பு திருக்குறள் உலகத் தமிழர்களுக்குக் கிடைத்தது.இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிற்கும் தமிழர்கள் தங்கள் அறிவுத்திறமைகளால் திருக்குறளை ஒலிவடிவில் கேட்டு மகிழக் குறுவட்டுகளாக வெளியிட்டுள்ளார்கள்.
1330 அருங்குறட்பாக்களும் எட்டரை மணி நேரம் கேட்டு மகிழும் வகையில் உரையுடன் குறுவட்டில் பதிப்பித்துள்ளனர்.முன்னுரையும்,பால்பகுப்பும் சுட்டி,இயல் பகுப்பு உணர்த்தி,அரிய இசை முன்னோட்டமும்,அதிகாரத்தின் எண்ணும்,அதிகாரத் தலைப்பும்,குறளும் அதற்குரிய பொருளும் இசை நிறைவும் கொண்டு ஒவ்வொரு அதிகாரமும் இந்தக் குறுவட்டில் சிறப்புடன் பதிவு செய்யப்பெற்றுள்ளது.பின்னணி இசையும் மென்மையாக ஒலிக்கின்றது.
திருக்குறளை இனிய குரல்வளத்துடன் பொருள் விளங்கும்படி படித்து, கேட்பவர்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் பதிவு செய்துள்ளமை பாராட்டத்தகுந்த முயற்சியாகும்.
முனைவர் க.ப.அறவாணன் அவர்களின் திருக்குறள் உரை இந்த ஒலிப்பேழையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திரு.டெய்சன் அவர்களின் குரலில் ,ஒலிவல்லுநர் தினேசுகுமார்,(கிருபா எண்மியம்)ஒலிக்கோர்வை செய்ய, அமரர் இரா.இரவிச்சந்திரன் இசையில் இவர்களின் கூட்டுழைப்பில் இந்த ஒலிக் குறுவட்டு கோவையிலிருந்து செம்மொழி மாநாடு நடைபெறும் நாளில் வெளிவருவது பொருத்தமேயாகும்.
திருக்குறள் ஒலிக் குறுவட்டுகள் செம்மொழி மாநாட்டை ஒட்டி நடக்கும் தமிழ் இணையமாநாட்டு அரங்கில் கண்காட்சிக்கூடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.தேவையானவர்கள் குறிப்பாக அயல்நாட்டுப் பேராளர்கள் வாங்கிக்கொள்ளமுடியும்.
நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள்,அல்லது அலுவலகப் பணிகளில் ஈடுபடுபவர்கள் திருக்குறளைக் கேட்டபடி தங்கள் பணிகளைச் செய்ய இத்தகைய ஒலிப்பதிப்புகள் பயன்படும்.அயல்நாட்டுத் தமிழர்கள்,தமிழ் ஆர்வலர்கள் யாவருக்கும் பயன்பட இருக்கும் இந்த ஒலிக்குறுந்தட்டை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன்.
ஒரு குறுவட்டின் விலை (இந்திய உருவா) 150-00
தொடர்புக்கும்,விற்பனைக்கும்:
Universal e Publishers
contactus@universalepublishers.com
+91 96291 88882
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக