செவ்வாய், 15 ஜூன், 2010
புதுச்சேரி அரசின் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இணையம் அறிமுகம்
பயிற்சி பெற்றவர்கள்(ஒரு பகுதியினர்)
14.06.2010 மாலை 3.45 மணி முதல் 5.25 மணி வரை புதுச்சேரி அரசின் பெருந்தலைவர் காமராசர் கல்வி வளாகத்தில் உள்ள அரங்கில் தமிழாசிரியர்களாகப் பணியாற்றச் செல்லும் இருபால் ஆசிரியர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்ததும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.முனைவர் இராச.திருமாவளவன் அவர்களின் பெரும் முயற்சியாலும் திட்டமிடலாலும் நடைபெறும் பயிற்சி வகுப்பில் என்னை அழைத்து ஒவ்வொரு சுற்றும் தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு நல்குகின்றமைக்கு அவர்களுக்கு என்றும் நன்றியுடையேன்.
இன்றைய நிகழ்ச்சியில் 33 தமிழாசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.பயிற்சி பெற்றவர்களுள் பலர் முன்பே என்னிடம் கல்லூரியில் மக்கள் தகவல் தொடர்பியல்,நாட்டுப்புறவியல் சார்ந்த பாடங்களைக் கேட்டவர்கள்.நான் இந்தத் துறையில் ஈடுபட்டு உழைத்து வருவது கண்டு அனைவருக்கும் வியப்பும் மகிழ்ச்சியும் மேலிட்டு நின்றதை அறிந்தேன்.
தமிழ் இணையம் அறிந்தால் கற்றல்,பயிற்றலில் முன்னிற்க முடியும் என்பதைச் சான்று காட்டி விளக்கினேன்.தமிழ் நூல்கள்,மின்னிதழ்கள்,விக்கிப்பீடியா,விக்சனரி உள்ளிட்ட பய்னபாட்டுத் தளங்களை எடுத்துரைத்தேன்.மதுரைத்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை,நூலகம் உள்ளிட்ட தளங்களை எடுத்துக்காட்டி அதன் பயன்பாடுகளை விளக்கினேன். தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல் வசதிகளையும் நேரடியாக விளக்கினேன்.
இணைப்பில் இருந்த நண்பர் திரு.அண்ணாகண்ணன் அவர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்துரைத்ததுடன் இணையம் கற்பதால் ஏற்படும் பயனைப் பின்வருமாறு சென்னையிலிருந்து உரையாடலில் தெரிவித்தார்.
அண்ணாகண்ணன் உரை:
ஆசிரியர்களுக்கு என் முக்கிய குறிப்பு ஒன்று உண்டு.
இன்றைய நுட்ப வளர்ச்சியில் அவர்களின் பணி ஒரே நேரத்தில் எளிதானதாகவும் கடினமானதாகவும் மாறியுள்ளது.
கற்றலின் கேட்டல் நன்று. கேட்டலின் பார்த்தல் நன்று என்பர் இது, காட்சி யுகம்.
எனவே மாணவர்களுக்குக் காட்சி மூலம் எளிதாகப் பாடங்களை நடத்தலாம் இது, அவர்களின் பணியை எளிதாக்கும்.
அதே நேரம், 10 ஆண்டுகளில் படிக்கக் கூடியதை ஓராண்டிலேயே படித்துவிட முடியும் என்ற காலக்கட்டத்தில் இருக்கிறோம்.
அவ்வளவு செய்திகள், ஒரு சொடுக்கில் குவிகின்றன.
எனவே ஆசிரியர்களுக்கு இணையாகவும் அவர்களைத் தாண்டியும் மாணவர்கள் வளர்வதற்கான வாய்ப்புகளை நுட்பம் அளித்துள்ளது.
எனவே ஆசிரியர்கள், தங்களை நாளும் புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
அதற்கு இந்த இணையம், உங்களுக்குப் பேருதவி புரியும்.
குறைவான நேரத்தில் அதிகச் செய்திகளைத் துல்லியமாகப் பகிர்ந்திட நம் தொடர்புத் திறன்களைக் கூர்மைப்படுத்துதல் வேண்டும்.
அதற்குப் புதிய உத்திகளைப் பயன்படுத்தி, கற்பிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
அதற்கான தேடலில் தொடர்ந்து ஈடுபடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
இந்தப் பயிற்சி அமர்வு சிறப்புற நிகழ்ந்திட என் வாழ்த்துகள்.
இந்த முயற்சியில் ஈடுபடும் முனைவர் மு.இளங்கோவனுக்குப் பாராட்டுகள்.
வெல்க தமிழ்.
வாய்ப்பிற்கு நன்றி.
அ.க.
தமிழ் இணையம் பயிற்றுவிக்கும் வாய்ப்பில் மகிழ்ந்தபடி அனைவரிடமும் விடைபெற்று வந்தேன்.
முனைவர் இராச.திருமாவளவன்
முனைவர் திருமாவளவன் அவர்களும் நானும்
பயிற்சி பெற்றவர்கள்(ஒரு பகுதியினர்)
நன்றியுரைக்கும் ஆசிரியர்
அரங்கில் அனைவரும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
புதுச்சேரி தமிழாசிரியர்கள் புண்ணியம் செய்து உள்ளனர்.
கருத்துரையிடுக