இரா. பஞ்சவர்ணம்
கடலூர் மாவட்டம், பண்ணுருட்டி நகராட்சியின் முன்னைத் தலைவரும், தாவரங்கள் குறித்த நூல் எழுதும் பணியில் தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு, தாவரங்கள் குறித்த 360 – இற்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் எழுதி அளித்தவருமான ஐயா இரா. பஞ்சவர்ணம் அவர்கள் இன்று(17.10.2024) தம் 75 ஆம் அகவையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். கடந்த பதினொரு ஆண்டுகளாக நல்ல நட்பில் இருந்தோம். எம் இல்லத்துக்கு வருகைபுரிவதும், அவர்களின் இல்லத்துக்கு நாங்கள் செல்வதுமாக இருப்போம். எங்களின் ஆய்வுப்பணிகளுக்குப் பெருந்துணையாக இருந்த பெருமகனார். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
இரா.
பஞ்சவர்ணம் ஐயாவின் வாழ்க்கைக் குறிப்பு
திரு.
பஞ்சவர்ணம் அவர்கள் கடலூர் மாவட்டம்
பண்ணுருட்டியில் பிறந்தவர் (04.07.1949). பெற்றோர் கொ. இராமசாமி கவுண்டர்,
தைலம்மாள் ஆவர். பள்ளியிறுதி வகுப்பு
வரை பண்ணுருட்டியில் பயின்றவர். பிறகு கடலூர் கல்லூரியில்
புகுமுக வகுப்பு பயின்றவர். 1968 இல்
பேராயக் கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில்
முன்னின்று உழைத்தவர். காமராசர், மூப்பனார் உள்ளிட்ட தலைவர்களின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். இவர்தம்
தன்னலம் கருதாத பணிகளில் ஈர்க்கப்பட்ட
பண்ணுருட்டிப் பகுதி மக்கள் இவரை
இருமுறை நகராட்சித்தலைவராக அமர்த்தி அழகுபார்த்தனர்.
பண்ணுருட்டிப்
பகுதியிலும், நகராட்சியிலும் இருந்த நிலைமைகளை ஊன்றிக்
கவனித்த பஞ்சவர்ணம் அவர்கள் வெளிப்படையான நிர்வாகம்
நடைபெறத் திட்டமிட்டு உழைத்தார். மந்த கதியில் சுழன்ற
நகராட்சி நிர்வாகத்தை விரைவுப்படுத்த மக்களுக்குப் பயன்படும் பிறப்பு இறப்புச்சான்று, குடிநீர்
இணைப்பு, வீடுகட்ட ஒப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கு அலைந்து திரிவதைத் தடுக்க
அனைத்து விவரங்களையும் கணினியில் சேமித்து மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க ஆவன செய்தார்.
இந்திய அளவிலும் உலக அளவிலும் பண்ணுருட்டியின்
நகர நிர்வாகம் பத்தாண்டுகளுக்கு முன்னர்ப் பேசப்பட்டது.
ஊழலிலும்,
சோம்பலிலும் சிக்கி மக்களை இழுத்தடிப்பதில்
விருப்பம்கொண்ட அதிகாரிகளால் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமைப்பணிகளின் கூறுகளை
மிக எளிதாக மாற்றி மக்களுக்கு
வெளிப்படையான ஆளுகையை அறிமுகப்படுத்தியதால் மக்களால் பாராட்டப்பட்டார்.
பண்ணுருட்டிப்
பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களிடையே சுற்றுச்சூழல்
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் பஞ்சவர்ணம். இதனால் தாவரங்கள் குறித்த
ஈடுபாடு இவருக்கு அதிகமானது. மக்கள் இவரின் மரம்
நடும் பணிக்கு ஆதரவாக இருக்க,
காலம் காலமாக மக்களிடம் இருக்கும்
நம்பிக்கைகளை நினைவூட்டும் வகையில் மரத்தால் விளையும்
நன்மைகளைக் கூறி மரம் நடுவதில்
ஆர்வத்தை உண்டாக்கினார்.
தமிழ்
இலக்கியங்களில் தாவரங்கள் குறித்து இடம்பெற்றிருந்த செய்திகளை ஆய்வுசெய்து நூலாக்கிய
பெரும்பணிக்காக இவர் போற்றப்படவேண்டியவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக