நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 29 ஜனவரி, 2024

ரியூனியன், யோகக்கலை வல்லுநர், ஆச்சாரியா சுவாமி நீலமேகம்

ஆச்சாரியா சுவாமி நீலமேகம் 

யோகக்கலை வல்லுநர், ஆச்சாரியா சுவாமி நீலமேகம் அவர்கள் ரியூனியன் நாட்டில் வாழ்ந்துவரும் புதுவைத் தமிழர். யோகக் கலையைப் பயிற்றுவிப்பதிலும் பரப்புவதிலும் பெரும்பங்காற்றி வருபவர். இந்தியா, செர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இந்தோனேசியா, கம்போடியா, மொரீசியசு உள்ளிட்ட நாடுகளில் யோகக் கலையைப் பயிற்றுவித்த பெருமைக்குரியவர். நவதுர்க்கா கோவிலை ரியூனியனில் உருவாக்கி ஆன்மீகப் பணியும் செய்து வருபவர். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி அறிந்தவர். எனவே தம் நூல்களை மும்மொழியிலும் எழுதி வெளியிட்டு வருபவர். ரியூனியன் சிறுவர்களுக்குத் தமிழை அறிமுகப்படுத்தும் வகையில் பல குழந்தைப் பாடல்களை எழுதியவர். ரியூனியனில் தமிழ்ப் பண்பாடும், தமிழ் மொழியும் வளர்வதற்குத் துணைநிற்பவர்

சுவாமி நீலமேகம் அவர்கள் புதுச்சேரியில் குயவர்பாளையத்தில் வாழ்ந்த சோலை கோவிந்தராசன், உண்ணாமலையம்மாள் ஆகியோரின் மகனாக 29.07.1949 இல் பிறந்தவர். உடன் பிறந்தவர்கள் ஒன்பதின்மர். நெல்லித்தோப்பு அரசு தொடக்கப்பள்ளியிலும் வ.உ.சி. உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றவர். பின்னர் இளநிலைத் தொழிற்பயிற்சிப் பள்ளியிலும் (JPS), மோதிலால் நேரு பல்தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றவர். பல்தொழில்நுட்பக் கல்லூரியில் அக்காலத்தில் வணிகப் பயிற்சித் தொழில்நுட்பம் (Technical in Commercial Practice) படிக்கும் வாய்ப்பு இருந்தது. அப்படிப்பை நிறைவு செய்த நீலமேகம் அவர்கள் மதகடிப்பட்டு, அரசு பள்ளியில் ஆசிரியர் பணியில் இணைந்தவர். ஏழாண்டுகள் இப்பள்ளியில் இவரின் பணி அமைந்தது. பின்னர் புதுச்சேரி, வீரமாமுனிவர் பள்ளியில் மூன்றாண்டுகள் ஆசிரியர் பணி செய்தவர். 

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே இவருக்கு உடலையும் உள்ளத்தையும் வலிமைப்படுத்தும் ஆர்வம் ஏற்பட்டு, யோகக் கலையை முறைப்படி கற்கும் முயற்சியில் ஈடுபட்டவர்.  அரவிந்தர் ஆசிரமத்து வல்லுநர்களிடமும், கம்பளிசாமி மடத்தைச் சார்ந்த கீதானந்தசாமி உள்ளிட்ட பெரியோர்களிடமும் மரபு வழியில் யோகக் கலையைக் கற்று வல்லுநர் ஆனவர். 

பள்ளி ஆசிரியர் பணியில் நிறைவு காணாத நீலமேகம் அவர்கள் 1980 ஆம் ஆண்டளவில்  விடுப்பு எடுத்துக்கொண்டு, செர்மனி நாட்டுக்குச் சென்று, அங்கு மூன்று மாதம் தங்கிப் பலருக்கும் யோகக் கலையைப் பயிற்றுவித்தவர். 

பிரான்சு நாட்டின் உறுப்புப் பகுதியாக அமையும் ரியூனியன் நாட்டுக்கு நண்பர்களின் அழைப்பின்பேரில் 1981 இல் சென்றார். அங்கிருந்தபடியே மொரீசியசு நாட்டுக்குச் சென்று, அந்நாட்டின் தலைமை அமைச்சர் தொடங்கி, பல்வேறு துறைசார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு யோகக் கலையை அறிமுகம் செய்து, பயிற்றுவித்தார். பின்னர் ரியூனியன் திரும்பி, அங்குள்ள கோவில்களின் வழியாக யோகக் கலையைப் பலருக்கும் பயிற்றுவித்தார். 1986 ஆம் ஆண்டளவில் இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பல மாதம் தங்கிப் பலருக்கும் யோகக் கலையைப் பயிற்றுவித்தார். 

தென்னாப்பிரிக்காவை ஒட்டி இருக்கும் தீவு நாடு ரீயூனியன் ஆகும். கரும்புத்தோட்டங்கள் நிறைந்த இயற்கை வளம் நிறைந்த நாடு இதுவாகும். புதுவையை அந்நாளில் ஆட்சிசெய்த பிரெஞ்சியர்கள் ரியூனியன் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தங்களின் அடிமைநாடுகளிலிருந்து மக்களை அழைத்துச் சென்றனர். அந்த வகையில் புதுச்சேரியிலிருந்து தமிழ் மக்களை அந்நாட்டுக்கு ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அழைத்துச் சென்றனர். ரியூனியன் நாட்டில் ஏறத்தாழ மூன்று இலட்சம் தமிழர்கள் இன்று வாழுகின்றனர். சிவன் கோவில், முருகன் கோவில், காளிக் கோவில், முனீஸ்வரன் கோவில், மதுரைவீரன் கோவில் சுடலைமாடன் கோவில் என்று உருவாக்கி, முன்னோர் வழியில் வழிபாடுகளை ரியூனியன் தமிழர்கள் தொடர்ந்து பின்பற்றுகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி மாதம் விசாகம், பொங்கல், தீபாவளி கொண்டாடுகின்றனர். காவடியாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், தீமிதித் திருவிழா முதலியன நடைபெறுகின்றன. சில சிறுதெய்வக் கோவில்களில் பலிகொடுக்கும் வழக்கம் நிலவுவதாகவும் அறியமுடிகின்றது. 

சைவ உணவுப் பழக்கம்கொண்ட, நீலமேகம் அவர்கள், சைவ வழிபாட்டுக்கு முதன்மையளிக்கும் நோக்கில் நவதுர்க்கா கோவிலை உருவாக்கித்(1992) தமிழ் வழியில் நாளும் வழிபடுவதை ஊக்குவித்து வருபவர். இவரே பூசை, வழிபாடுகளை முன்னின்று நடத்துகின்றார். வழிபாட்டுக்குரிய போற்றிப் பாடல்களை நூல்களாக உருவாக்கி அனைவருக்கும் வழங்கி வருகின்றார்.




ரியூனியன் பல்கலைக்கழகத்தில் கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாகப் பகுதி நேரமாக யோகக் கலையைப் பயிற்றுவித்து வருபவர். யோகக் கலையை இந்தியாவின் சொத்தாக நினைக்கும் நீலமேகம் அவர்கள் ஐ. நா. அவையம் பன்னாட்டு யோகா நாளை அறிவித்தமையைமை மகிழ்ச்சியாகக் குறிப்பிடுகின்றார். 

புதுச்சேரியில் பெரிய காலாப்பட்டுப் பகுதியில் 1984 ஆம் ஆண்டளவில் நிலம் வாங்கி, அறிவியல் அடிப்படையில் யோகக் கலையைப் பயிற்றுவிக்கும் அரங்கம் அமைத்து அப் பணியில் ஈடுபட்டு உழைத்து வருகின்றார். 

ரியூனியனில் இவர் செய்துவரும் சமயப் பணிகள், யோகக் கலைப் பயிற்றுவித்தல், தமிழ்ப் பயிற்றுவித்தல், நூல் வெளியீடுகள் யாவும் இவரின் பெருமையை என்றும் நினைவுகூரும். 

சுவாமி நீலமேகம் அவர்களின் தமிழ்க் கொடைகளுள் சில:

1.   பழகு தமிழில் பக்தி நூல், 2014

2.   தமிழரின் பாரம்பரிய வாழ்க்கைக் கலை, 2014

3.   சமய வழிபாடு, 2023

4.   STYM YOGA, 2024




சுவாமி நீலமேகம் அவர்களுடன் மு.இளங்கோவன்(28.01.2024, புதுச்சேரி)

சுவாமி நீலமேகம் அவர்களுடன் அமைந்த நேர்காணல் காணொலிக் காட்சியைப் பார்க்க இந்த இணைப்பைப் பயன்படுத்துங்கள். 

கருத்துகள் இல்லை: