நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 26 டிசம்பர், 2023

தென்தமிழக வரலாறுரைக்கும் முகிலை இராசபாண்டியனாரின் அருள்பதி ஆற்றுப்படை



நூல் அணிந்துரை

பேராசிரியர் முகிலை இராசபாண்டியனாரை என் மாணவப்பருவம் தொடங்கி, நன்கறிவேன். கண்ணியம் என்ற மாத இதழை நடத்திய எம் உறவினர் – ஊரினர் கண்ணியம் ஆ.கோ. குலோத்துங்கன் ஐயா அவர்கள் முகிலையாரின் ஆற்றலையும் அருந்தமிழ்ப் பணிகளயும், இதழியல் துறையில் ஆய்வு நிகழ்த்திய இவர்தம் அருமை பெருமைகளையும் எடுத்துரைத்தார். அன்று தொடங்கிய நட்பு கடந்த முப்பது ஆண்டுகளாக வளர்பிறையாய் வளர்ந்துள்ளது. பணியின் பொருட்டு, நான் பல ஊர்களில் வாழ நேர்ந்தாலும் அதே அன்புடனும் பாசத்துடனும் கலந்துரையாடும் முகிலையாரின் பண்புநலன் அனைவரும் பின்பற்றத் தகுந்தது. “பலநாள் பழகினும் தலைநாள் பழகிய” அதே உணர்வினை அவர்வயின் பெறலாம்.

முகிலை இராசபாண்டியன்

முகிலை இராசபாண்டியனார் பேராசிரியர்; தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் துணை இயக்குநர்; செம்மொழி நிறுவனப் பதிவாளர்; கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதினப் படைப்பாளர்; பன்னூலாசிரியர்; கேட்டார் வியக்கும் வகையில் சொற்பொழிவாற்றும் பேராற்றல் பெற்றவர். இவற்றையெல்லாம் கடந்து மிகச் சிறந்த மாந்தநேயம் கொண்ட பெருமகனார். இன்னோரான்ன பண்புநலன்களால் என் உள்ளத்தில் எப்பொழுதும் இவரை நான் போற்றி மதிப்பதுண்டு. 

முகிலையார் ஒரு நாள் தாம் இயற்றிய அருள்பதி ஆற்றுப்படையை மின்னஞ்சலில் அனுப்பி, அதனை மதிப்பிட்டு, அணிந்துரை வழங்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டார். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் முகிலையார் எதனையும் காலத்தில் செய்யும் கருத்துடையவர். நானோ மடியில் உழலும் குடியினன். எதனையும் ஒத்திப்போடும் உள்ளமுடையவன். பார்வைக்கு வந்த அருள்பதி ஆற்றுப்படையை உடனே படித்து முடித்திருந்தாலும் அதுபற்றிய கருத்தினை வழங்குவதில் காலத்தாழ்ச்சி செய்துவந்தேன். எனக்கு இயற்கை ஒப்புதல் தந்தது. ஆம் தொடர் மழை விடுமுறை தந்த மகிழ்வில் மீண்டும் அருள்பதி ஆற்றுப்படையைப் படித்து அதில் இடம்பெற்றிருக்கும்  அரிய கருத்துகளையும் வரலாற்றையும் கற்று மகிழ்ந்தேன். 

அருள்பதி ஆற்றுப்படை வெறும் செய்தியுரைக்கும் ஆற்றுப்படையாக அமையாமல் தகவல்களின் களஞ்சியமாக உருப்பெற்றுள்ளது. தென் தமிழக மக்களின் வழிபடு தெய்வமாக விளங்கும் அய்யா வைகுண்டரின் அருள் வரலாற்றினையும், அவர் கோவில் கொண்டிருக்கும் அருள்பதி மேன்மையையையும் இந்த நூல் கொண்டு விளங்குகின்றது. 

தமிழகத்தின் தென்முனையாகவும் தொன்முனையாகவும் விளங்கும் கன்னியாகுமரியும் அதன் தென்பரப்பில் விரிந்து கிடக்கும் கடல்கொண்ட இலெமூரியாக் கண்டமும் தொல் தமிழர்களின் தாய்நிலமாகும். “குமரிக்கோடு கொடுங்கடல் கொண்ட” பிறகு தமிழர்கள் வடதிசை நோக்கி நகர்ந்தனர் என்பதை இலக்கியங்களும் தொன்மரபுச் செய்திகளும் தெரிவிக்கின்றன. அத்தகு “பதியெழுவறியாப் பழங்குடிகள்” நிறைந்த தமிழ்நிலம் வந்தேறிகளின் சூழ்ச்சியால் பலவகையில் தாழ்வு நிலையை அடைந்தது. மாந்தர்களிடம் கீழ் மேல் வேறுபாடுகளைக் கற்பித்து, உணவு உடை இருப்பிடம் சார்ந்து பல்வேறு இடர்ப்பாடுகளை அனுபவிக்கும் நிலைக்குப் பழங்குடியினர் தள்ளப்பட்டனர். அவ்விழிநிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் சமூகத் தலைவர்கள் பலர்  ஈடுபட்டு, இன்றைய அறிவுத் தெளிவுக்கு வழிவகுத்தனர். அத்தகு அறிவுத்தெளிவு பெற்ற மக்கள் தங்கள் வரலாறுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு தங்கள் முன்னோர் வரலாறுகளை ஆவணங்களாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாவணமாக்கும் முயற்சியே முகிலை இராசபாண்டியனாரின் அருள்பதி ஆற்றுப்படை. 

அருள்பதி ஆற்றுப்படை ஆசிரியப்பாவால் அமைந்துள்ள நூல். எளிய, இனிய சொற்களால் இந்த நூலின் நடை யாக்கப்பெற்றுள்ளது. 511 ஆசிரிய அடிகளில் அரியதோர் ஆவணப்படுத்தலை நூலாசிரியர் செய்துள்ளார். நூலின் முகப்பில் அய்யா வைகுண்டர் அவர்களின் அருள் வரலாறும், அருள்பதியின் சிறப்பும் உரைநடையில் உவகையுடன் வரையப்பட்டுள்ளன. இவை நூலைக் கற்போர்க்குப் பாயிரம் போல் பல நூறு செய்திகளை வழங்குகின்றன. 

நூலின் தொடக்கப் பகுதி குமரிக்கண்டத்தின் மாண்பினையும் தொல்தமிழரின் சிறப்புகளையும் பாண்டியர் ஆட்சியின் பான்மையினையும் நமக்குத் தெரிவிக்கின்றது. குமரியாறு, பஃறுளியாறு யாவும் தென்தமிழகத்தை வளமுறச் செய்த ஆறுகள் என்பதைப் புறநானூறும், இளங்கோவடிகளாரின் சிலப்பதிகாரமும் நமக்கு எடுத்துரைக்கும். இத்தகு இலக்கியங்களை எழுத்தெண்ணிக் கற்ற முகிலை இராசபாண்டியனார் தம் ஆற்றுப்படையுள் முன்னோர் மொழிபொருளைப் பொன்னேபோல் போற்றியுள்ளமை புலனாகின்றது. சங்க காலச் சால்பும், இன்றைய தமிழ் நாட்டின் எல்லையும் குமரி மாவட்டத்துச் சிறப்புகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. 

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகையில் பெருமைகுரியன. அவ்வகையில் தமிழகத்தின் தென்பகுதி என்பதுடன் இந்தியாவின் தென்முனை என்ற பெருமையும் கன்னியாகுமரிக்கு உண்டு. கன்னியாகுமரி என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது வான்தொட்டு நிற்கும் திருவள்ளுவர் திருச்சிலையும் காந்தி மண்டபமும், விவேகானந்தர் பாறையும், காமராசர் மணிமண்டபமும் ஆகும். 

குமரி மாவட்டம் சான்றோர் பெருமக்களை அளவின்றி வழங்கி, நிலைத்த புகழ்பெற்றுள்ளது. அவர்களுள்  கவிமணி, செய்குதம்பி பாவலர், ஜீவா உள்ளிட்ட பெருமக்களை ஆசிரியர் நன்றியுடன் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளமை போற்றத்தக்கது. 

கன்னியாகுமரிக்கு அண்மித்து உள்ள ஊர் சாமித்தோப்பு ஆகும். இவ்வூர் அய்யா வைகுண்டர் அவர்களால் பெருமை பெற்ற ஊராகும். இங்குதான் அஞ்சா நெஞ்சம் படைத்த பால பிரஜாபதி அடிகளார் அருந்தமிழ்ப் பற்றுடன் அளவிறந்த தமிழ்ப்பணிகளைச் செய்து வருகின்றார். முந்திரிக்கிணறு என்னும் பொதுமைக்கிணற்றின் சிறப்பினையும் நூலாசிரியர்  இந்நூலுள் அழகுடன் புனைந்துள்ளார். 

அய்யா வைகுண்டர் கோவிலுள் எளிமையான வழிபாட்டு அமைப்பு மட்டும் உள்ளது என்றும் இங்கு வேறு சிலைகள் ஏதும் இல்லை என்றும் வழிபட வருவோர் தலையில் தலைப்பாகை அமைத்து வழிபட வேண்டும் என்றும் அங்குள்ள நடைமுறை வழிபாடுகளை நமக்குத் தெரிவிக்கின்றார். அய்யா தொடங்கிய பதிகள் அவர் வழியில் பின்னாளில் உருவான பதிகள் குறித்தெல்லாம் முகிலை இராசபாண்டியனார் சிறப்பாகத் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 

இத்தகு ஊரை எவ்வாறு அடைவது? தொடர்வண்டி, பேருந்துகளில் கன்னியாகுமரி வந்து, அங்குத் தங்கி அங்குள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு மகிழ்ந்தபடி அருள்பதியை அடையலாம் என்று வழிகாட்டும் முகிலை இராசபாண்டியனார் தாம் பிறந்த ஊரான முகிலன்குடியிருப்பின் மாண்பினைப் பலபடப் புனைந்துகாட்டுகின்றார். 

வேளாண்மைத் தொழிலுடன் தொடர்புடைய பிற தொழில்களால் வளங்கொழிக்கும் ஊர் முகிலன்குடியிருப்பு. தென்னை மரங்களும் வயல்வெளிகளுமாக விளங்கும் இவ்வூரின் அருகே கடற்கரை கவினுடன் காட்சி நல்கும். இங்கு மீன்வளம் மிகுதி. “நண்டும் சிப்பியும் நகர்ந்தே வந்துநம் காலினைத் தொட்டே கடந்து செல்லும்” என்று இவ்வியற்கை வனப்பை நூலாசிரியர் நமக்குக் காட்சிப்படுத்திக் காட்டுவர். 

வெண்கலராஜன்கோட்டை, பழையாறு என்னும் பஃறுளியாறு, முகிலன்குடியிருப்பில் தோன்றிய அருள்பதி, அதனை நிர்வாகம் செய்யும் நிர்வாகக் குழுவினர், அங்கு நடைபெறும் அன்னதானம், அய்யாவின் பிற்றந்த நாளில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள், அங்குள்ள திருக்கிணற்றின் சிறப்பு, முதலிய சிறப்புச் செய்திகள் இந்த நூலை அழகுசெய்கின்றன. அருள்பதியின் மேன்மையை நூலாசிரியர், 

“அன்பும் அறிவும் ஆருயிர் காக்கும்

ஒற்றுமை என்னும் உணர்வே உயிரென

உலகோர் உணரும் இடமே அருள்பதி” (437-439) 

என்று குறிப்பிட்டுள்ளார். 

அய்யா வைகுண்டர் இந்த உலகுக்கு நல்ல நெறிகளைத் தம் வாழ்வின் வழியாக உணர்த்தியுள்ளார். அவர்தம் அருள்நெறிகள் இந்த நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.  இதனை, நூலாசிரியர் “தன்னலம் அற்றோர் தரணியை ஆள்வர்; தன்னலம் கொண்டோர் தானே வீழ்வர்” ( 445-446) என்று குறிப்பிடுவதன் வழியாகவும் உணரலாம்.  மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும். நன்றி மறவாத தன்மை வேண்டும். நேர்மைப் பண்பு வேண்டும். தன்னலம் அகற்றி, பொதுநலம் பேணும் உள்ளம் வேண்டும். உலக அமைதியே உயர்ந்த வழி என்று வாழ்ந்து காட்டிய அய்யா வைகுண்டரும், அவர் வழியில் வாழ்ந்துவரும் அவர்தம் தொண்டர்களும் இவ்வுலகில் அமைதி வழியில் அரும்பணிகள் ஆற்றி வருவதைப் பேராசிரியர் முகிலை இராசபாண்டியன் சிறப்பாக இந்த நூலில் பதிவுசெய்துள்ளார். 

போரும் பகையுமாக இப் புவிப்பந்து சீரழிந்து வருவதைக் கண்ணுறும் நூலாசிரியர், 

“உலகில் போரே ஒழிந்தி வேண்டும்

உண்மை நெறியே தழைத்திட வேண்டும்

உயிரை வதைக்கும் பசியாம் கொடுமை

உலகினை விட்டே ஒழிந்திட வேண்டும்

அன்பே இறையென அறிந்த மனிதர்

அவனி எங்கும் நிறைந்திட வேண்டும்

பொய்யும் களவும் அழிந்திட வேண்டும்

பொறுமை எங்கும் நிலைத்திட வேண்டும்…” (481-488) 

என்று வேண்டுகோள் வைப்பது அய்யா வைகுண்டரின் வழியில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருவபவர் முகிலை இராசபாண்டியனார் என்பதற்குச் சான்றாக அமைகின்றது. 

முகிலன்குடியிருப்புப் பேராசிரியர் முகிலை இராசபாண்டியனார் நூலின் வழியாக அய்யா வைகுண்டனாரின் அருள்வாழ்வையும்,  பணிகளையும் தவத்திரு பிரஜாபதி அடிகளாரின் அஞ்சாநெஞ்சத்தையும் அருந்தமிழ் உணர்வையும் அறிந்துகொள்ளமுடிகின்றது. மேலும், தென்தமிழகத்து மக்களின் வாழ்வியலையும் வழிபாட்டு முறைகளையும் இந்த நூலின்வழியாக  அறிந்துகொள்ள கிடைத்த வாய்ப்பு எண்ணித் தமிழ்த்தாயின் திருவருளைப் போற்றுகின்றேன். முகிலை இராசபாண்டியனாரின் தமிழிலக்கியப் பணியைப் போற்றி வாழ்த்துகின்றேன்.

பணிவுடன் 

மு.இளங்கோவன்

புதுச்சேரி

15.11.2023

கருத்துகள் இல்லை: