நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 22 டிசம்பர், 2023

தருமை ஆதீனப் புலவர் வித்துவான் மு. வைத்தியநாதன்…

வித்துவான் மு. வைத்தியநாதன் 

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள உருமு தனலெட்சுமி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், உருமு தனலெட்சுமி கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றித் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் பெருந்தொண்டாற்றிவரும்  வித்துவான் மு. வைத்தியநாதன் அவர்கள் தம் எண்பத்தைந்தாம் அகவையில் தற்பொழுது திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்து வருகின்றார். தமிழிலும் சைவத்திலும் பெரும்புலமை மிக்க அறிஞரான இவர்தம் திருவெம்பாவை உரையைத் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தார் இவரின் இல்லத்துக்கு வந்து பதிவுசெய்து, மார்கழி மாத வைகறைப்பொழுதில் ஒலிபரப்பி வருகின்றமை இவர்தம் அறிவுப் பெருமைக்குச் சான்றாகும். 

 அரியலூர் மாவட்டத்தின் கிழக்கு எல்லைப் பகுதியை வரையறுத்து ஓடும் வடவாற்றங்கரையில் உள்ள ஊர் பிள்ளைப்பாளையம் ஆகும். பொல்லாப்பாளையம் என்று மக்கள் வழங்குவர். இவ்வூரில் வாழ்ந்த “மணியம்” பி. . முத்துக்குமரப் பிள்ளை, திருநாவுக்கரசி அம்மை ஆகியோரின் மகனாக 1940 ஆம் ஆண்டில் வித்துவான் மு. வைத்தியநாதன் பிறந்தவர். இவர்தம் குடும்பத்தினர் யாவரும் தமிழ் கற்ற பெருமைக்குரியவர்கள். 

தம் பிறந்த ஊரில் இடைநிலைக் கல்வி வரை பயின்று, திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான்காண்டுகள் (1956 முதல் 1960 வரை) பயின்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் தேர்வெழுதி, மாநில அளவில் முதல் மாணவராக வெற்றிபெற்றவர். இவரின் ஒருசாலை மாணவராக விளங்கியவர் முனைவர் பொற்கோ ஆவார். மு. வைத்தியநாதன் அவர்களுக்குச் செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியர்களாக வாய்த்தவர்கள் அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய அறிஞர்களான  கே. எம். வேங்கடராமையா, இருமொழிப் புலவர் மு. சுந்தரேசம் பிள்ளை, மு. கோவிந்தராசனார், தி.வே.கோபாலையர்,  தா. ம. வெள்ளைவாரணம், கு. சுந்தரமூர்த்தி, நகராமலை இராமலிங்கம் பிள்ளை ஆகியோர் ஆவர். 

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பெரும்புலவர் சி. புன்னைவனநாத முதலியார் அவர்களைக் கொண்டு நடத்திய புலவர் பட்டத் தேர்வெழுதி, மு. வைத்தியநாதன் முதல் மாணவராகத் தேறியவர். கல்வியியல், மொழியியல், நூலகவியல் தேர்வுகளை எழுதிச் சான்றிதழ்களைப் பெற்றவர். பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 

வித்துவான் மு. வைத்தியநாதன் அவர்கள் தம் தமையனார் மு. சுந்தரேசம் பிள்ளை அவர்களின் பரிந்துரையின்படி, திருச்சிராப்பள்ளியில் புகழுடன் விளங்கிய தனலெட்சுமி மேல்நிலைப் பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கியவர். பின்பு கல்லூரியில் ஆசிரியர் பணியாற்றி, 39 ஆண்டுகள் தமிழ்த்தொண்டாற்றி 2000 ஆம் ஆண்டில் பணிநிறைவு பெற்றவர். பணியின் நிமித்தம் தம் இருபதாம் அகவையில் திருச்சிக்கு வருகைபுரிந்த மு. வைத்தியநாதன் அவர்கள் கடந்த அறுபதாண்டுகளாகத் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளையும், சமய இலக்கிய நிகழ்வுகளையும் அறிந்த பெருமைக்குரியவராக உள்ளார்.

 


தமிழ்நாட்டு அரசின் பாடத்திட்டக் குழு, தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தும் பாட நூல் ஆசிரியராக இருந்தும் தாம் ஏற்றுக்கொண்ட பணிகளைத்  திறம்படச் செய்துள்ளவர். பள்ளிக்கல்வித் துறையின் ஒருங்கிணைத்த புத்தொளிப் பயிற்சிகளில்  ஆசிரியராக இருந்து கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளைப் பயிற்றுவித்துள்ளார். 

பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்களுக்கு 1967 இல் திருமணம் நடைபெற்றது. இவரின் துணைவியார் பெயர் சந்திரா என்ற சந்திரகுமாரி ஆவார். இவர்களுக்கு வள்ளி என்ற ஒரே மகள் மக்கள் செல்வமாக வாய்த்தார். திருமதி வள்ளி அவர்கள் ஆத்திரேலியா மெல்பன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெருமைக்குரியவர். 

வித்துவான் மு. வைத்தியநாதன் அவர்களின் சமயப்பணி 

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தெற்கு வீதியில் உள்ள 150 ஆண்டுகள் பழைமையான திரிசிரபுரச் சைவ சித்தாந்த சபையின் செயலராக முப்பதாண்டுகள் பணியாற்றியவர். இந்தச் சபை யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களால் திறந்துவைத்த பெருமைக்குரியது. இச்சபையின் சார்பில் வாரந்தோறும் முப்புராணங்கள், பன்னிரு திருமுறைகள், பதினான்கு சாத்திர நூல்கள், பிரபந்தங்கள், திருப்புகழ், தாயுமனவர் பாடல்கள் குறித்த விரிவுரைகள் நடைபெறுவதற்குப் பெருந்துணைபுரிந்தவர். 1985 ஆம் ஆண்டில் அந்தச் சபையின் நூற்றாண்டு விழாவை முன்னின்று நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. 

திருச்சிராப்பள்ளியில் திருமுறை மன்றம் அமைத்து அம்மன்றத்தின் வழியாக அன்பர்களின் இல்லங்களில் திருமுறை முற்றோதல், உரை விளக்கங்கள் நடைபெற உதவியவர். காலை 9 மணிக்குத் தொடங்கும் சிறப்புரை மாலை 5 மணி வரை நடைபெறும். அவ்வகையில் பன்னிரண்டரை ஆண்டுகள் சிறப்புரைகள் நடைபெற்று 18286 பாடல்களுக்கும் விளக்கம் சொன்ன பெருமை இவரைச் சாரும். 

மலைக்கோட்டையில் உள்ள தருமபுர ஆதீனத்திற்கு உரிமையுடைய  மௌனமடம் உள்ளது. அதில் இயங்கிய சைவசித்தாந்த மாலை நேரக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி பலர் சைவ சித்தாந்த கலாநிதிகளாக மலர்வதற்கும் பலர் சைவசித்தாந்த புலவர்களாக வளர்வதற்கும் துணைநின்றவர். இவரின் வகுப்புகளில் கற்றுச், சமயப் பெருமை உணர்ந்த மாணவர்கள் சிலர் பின்னாளில் துறவிகளாகத் திருமடங்களில் இணைந்துள்ளனர். 

திரிசிரபுரச் சைவசித்தாந்த சபையில் மாதந்தோறும் நான்காம் ஞாயிற்றுக் கிழமைகளில் திருக்குறள் விரிவுரை, ஆய்வுரைகளை நிகழ்த்தியுள்ளார். பன்னிரண்டு ஆண்டுகள் அவ்வாறு விரிவுரை நிகழ்த்தியுள்ளார். அதன் நிறைவு விழாவில் கலந்துகொண்ட  தருமை ஆதீனம் இருபத்தாறாம் பட்டம் குருமகா சந்நிதானம் அவர்கள் நம் பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்களுக்குத் திருக்குறள் செல்வர் என்னும் விருதளித்தும், ஒரு பவுன் தங்கக் காசு அளித்தும், பொன்னாடை அணிவித்தும் பெருமை செய்தார்கள். 

திருச்சிராப்பள்ளி உறையூரில் அமைந்துள்ள வாகீச பக்த ஜனசபை எண்பது ஆண்டுகள் பழமையுடைய அமைப்பாகும் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் தொடர் விரிவுரைகளில் கலந்துகொண்டு திருக்குறள், திருவாசகம், திருமந்திரம், முப்புராணங்கள், திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள், திருப்புகழ் பற்றிய தொடர் விரிவுரைகளை நிகழ்த்தியுள்ளார். 

தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை, மதுரை பன்னிரு திருமுறை மன்றம், கோவை பன்னிரு திருமுறை ஆய்வு மன்றம், மயிலை திருமுறை மன்றம், மயிலாடுதுறை கோபல் அறக்கட்டளை, சென்னை அரனருள், சென்னை சைவ சித்தாந்த பெருமன்றம், இலால்குடி அறநெறிக் கழகம், சென்னை இராமலிங்கர் பணிமன்றம் உள்ளிட்ட அமைப்பினர் நடத்திய கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கற்றோர் வியக்குமாறு கருத்துரை வழங்கிய பெருமைக்குரியவர். 

தருமபுர ஆதீனம் நடத்திய அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி மாநாடு மற்றும்  பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்வுகளில் இணைப்புரை வழங்கிய பெருமையும் இவருக்கு உண்டு. 

தருமையாதீனம் இருபத்தாறாவது குருமகா சந்நிதானம் அவர்கள் தருமையாதீனப் புலவர் என்னும் விருதினை வழங்கியுள்ளார்கள். மேலும், பொற்கிழியும் பொன்னாடையும் அணிவித்துப் பாராட்டியுள்ளார்கள். திருப்பனந்தாள் காசித் திருமடத்து அதிபர் கயிலை மாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் சைவத் தமிழ்மணி  என்னும் விருதும் பொற்பதக்கமும் அளித்துப் போற்றியுள்ளார்கள் காஞ்சிபுரம் காமகோடி பீடம் சார்பிலும் இவருக்குச் சித்தாந்த வித்தகர் என்ற விருதும் பணமுடிப்பும் வழங்கப்பெற்றுள்ளது. திருவரங்கத்தில் உள்ள இராசவேலு- செண்பகத் தமிழரங்கின் சார்பில் தமிழ் மாமணி விருதளித்துப் பாராட்டப்பெற்றவர். 

பதிப்புப் பணி 

பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்கள் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். திருவையாற்றுப் புராணம், திருகற்குடிமாமலை மாலை, சிராமலையந்தாதி, சிராமலைக் கோவை உள்ளிட்ட பல நூல்களை ஏட்டுச் சுவடியிலிருந்து பதிப்பித்து அச்சு நூலாகக் கொண்டுவந்தவர். 

மலர்ப் பதிப்பாசிரியர் 

திரிசிரபுரச் சைவ சித்தாந்த சபை நூற்றாண்டு விழா மலர், துணைவேந்தர் தி. மூ. நாராயணசாமிப் பிள்ளை நூற்றாண்டு விழா மலர், இலால்குடி இராவ்சாகிப் எல். என். பரமசிவம் பிள்ளை நூற்றாண்டு விழா மலர், இலால்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பொன்விழா மலர், உறையூர் வாகீச பக்த ஜனசபை வைரவிழா மலர் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர் திருக்கற்குடித் திருக்கோயில் குடமுழுக்கு விழா மலர் உள்ளிட்ட சிறப்பு மலர்களை வெளியிட்டு, நிகழ்வுகளை ஆவணங்களாகப் பதிவுசெய்த பெருமைக்குரியவர். 

திருமுறை விளக்க வகுப்பு 

திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல பயிற்சி மையங்களில் திருமுறை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் திருச்சிராப்பள்ளி கைலாசபுரம் கிளைப் பயிற்சி வகுப்பில் பேராசிரியராக இருந்து கடந்த ஏழாண்டுகளாகத் திருமுறை விளக்கம் செய்து வருகின்றார்கள். 


வானொலி உரைகள் 

வித்துவான் மு. வைத்தியநாதன் அவர்கள் திருச்சிராப்பள்ளி வானொலி வழியாகத் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் சைவ சமயச் சிறப்பு குறித்தும் மிகுதியான சிறப்புரைகள் வழங்கியுள்ளார். காலையில் சிந்தனை உரைகளாக அமையும் இவர் உரை, இரவுப் பொழுதில் நால்வர் பதிக அற்புதங்களாகவும், பன்னிரு திருமுறைகளில் தமிழ்க் கலைகளாகவும் திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை பக்திப் பொழிவுகளாகவும் மக்களின் நெஞ்சங்களை மகிழ்வித்துள்ளன.35 நிகழ்ச்சிகள் சமய இலக்கியம் குறித்தும் 18 உரைகள் சங்க இலக்கியம் குறித்தும் 10 உரைகள் திருமுருகாற்றுப்படை குறித்தும் அமைந்து, சற்றொப்ப 50 க்கும் மேற்பட்ட அரைமணி நேரச் சிறப்புரைகளைத் திருச்சிராப்பள்ளி வானொலி ஒலிபரப்பியுள்ளது. 

ஊரன் அடிகளார் திருவருட்பாவினை ஆறு திருமுறைகளாகத் தொகுத்து ஆய்வுப் பதிப்பாக வெளியிட்டார்கள். மேலும் தருமை ஆதீனம் பன்னிரு திருமுறைகளை 20,000 பக்கங்களில் வெளியிட்டனர். இவற்றையெல்லாம் மெய்ப்புப் பார்த்து, நூல் செப்பமாக வெளிவருவதற்குத் துணைநின்ற பெருமைக்குரியவர் நம் பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்கள். 

தமிழ் இலக்கண இலக்கியங்களை முறைப்படக் கற்ற பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்கள் வாழ்நாளெல்லாம் அதன் சுவைகளையும் சிறப்புகளையும் பல வடிவங்களில் மக்கள் மன்றத்திற்குக் கொண்டுசேர்த்த மாமனிதர் என்றும் மேன்மைகொள் சைவநெறியைப் பரப்புவதில் ஆர்வமுடன் செயல்பட்டவர் என்றும் இவரைப் போற்றலாம்.

 

கருத்துகள் இல்லை: