நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 7 பிப்ரவரி, 2013

திருக்குற்றாலச் செலவு...



பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவிகளுக்குச் சான்றிதழ் வழங்குதல்

திருக்குற்றாலம் இயற்கை எழில்சூழ்ந்த ஊர். மலையும், மரங்களுமாக நிறைந்தது இந்த ஊர். இந்த ஊரில் பெருமையுடன் விளங்கும் பராசக்தி மகளிர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்தவேண்டிய முன் முயற்சியில் பேராசிரியர் சு. மகாலட்சுமி அவர்கள்  ஈடுபட்டார்கள். இணையத் தமிழ் என்று ஒரு தாள் பாடமாக முதுகலைத் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு அக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. எனவே நேரில் வந்து இரண்டுநாள் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கவேண்டும் என்று கல்லூரி முதல்வர்  சி. இராசேசுவரி அவர்கள் மின்னஞ்சலில் அழைத்தார்கள்.

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா. வேலம்மாள் அவர்களைப் பல ஆண்டுகளுக்கு முன்பே நான் அறிவேன். எனவே பயிலரங்கம் 02,03- 02.2013 (சனி, ஞாயிறு). இரண்டுநாள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.01.02.2013 இரவு விழுப்புரத்தில் பொதிகைத் தொடர்வண்டியில் ஏறி 02. 02. 2013 காலை தென்காசித் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினேன். முனைவர் பட்டாபிராமன் அவர்கள் (புளியங்குடி, மனோக் கல்லூரிப் பேராசிரியர்) எனக்காகக் காத்திருந்தார். முனைவர் பட்டாபி அவர்கள் தமிழ் இணையம் குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர். புதுவையில் நம் இல்லத்துக்குப் பலமுறை வந்து ஆய்வுத்தொடர்பாகக் கலந்துரையாடியவர். நல்ல தொடர்பில் இருப்பவர். அவரும் நானும் உந்துவண்டியில் குற்றாலம் கல்லூரியின் அருகில் இருந்த விடுதிக்குச் சென்றோம். என்னை இறக்கிவிட்டு, கல்லூரிப் பணி நிமித்தம் அவர் உடன் திரும்பிவிட்டார்.

நான் குளித்து, உண்டு முடித்துப் பயிலரங்கிற்கு அணியமாக இருந்தேன். அவ்வமயம் நெல்லை இந்துக் கல்லூரிப் பள்ளியின் தமிழாசிரியரும் என் நெருங்கிய நண்பருமான திரு. சிவசங்கரன் (களக்காடு ஊரினர்) அவர்கள் வருகை தந்தார். இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்து, உரையாடி மகிழ்ந்தோம். திருநெல்வேலி இருட்டுக்கடைத் தீங்களியை (அல்வாவைக்) கையுறைப் பொருளாகக் கொணர்ந்து தம் அன்பை வெளிப்படுத்தினார். அப்பொழுது தமிழ்த்துறைத் தலைவர் உள்ளிட்ட பேராசிரியர்கள் வந்து எங்களை விழா நடைபெறும் அரங்கிற்கு அழைத்துச் சென்றனர். 

பராசக்திக் கல்லூரியின் நூலக அரங்கில் பயிலரங்கத் தொடக்கவிழா நடைபெற்றது.  முனைவர் பா. வேலம்மாள் அவர்கள் வரவேற்கவும், முனைவர் சி. இராசேசுவரி அவர்கள் தலைமையுரையாற்றவும், முனைவர் சு.மகாலட்சுமி அவர்கள் நன்றியுரையாற்றவும், தொகுப்புரையை முனைவர் சோ.பாண்டிமாதேவி வழங்கவும் விழா இனிதே தொடங்கியது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு உரிய அரங்கில் தமிழ் இணையம் குறித்த அறிமுகம் காட்சி விளக்கத்துடன் நடைபெற்றது.

பயிலரங்கு நடைபெற்ற பொழுது தென்காசியில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தியாளர் வருகை தந்து நிகழ்ச்சியைப் படம் பிடித்துத் திங்கள் கிழமை மாலை கற்க கசடற என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பி ஊக்கப்படுத்தினார்.

 ஒருநாள் முழுவதும் தமிழ் இணையத்தில் உள்ள அனைத்துச் செய்திகளும் காட்சி விளக்கத்துடன் மாணவியர்க்கு அறிமுகம் செய்யப்பட்டது. மாலை ஐந்து மணி அளவில் அனைவரும் விடைபெற்றுக்கொண்டோம்.

 விடுதியின் அறைக்குத் திரும்பிய நான் ஒருகல் தொலைவில் உள்ள பேரருவியைப் பார்த்துவர நடந்து சென்றேன். திருக்குற்றாலக் குறவஞ்சியில் படித்த மலைவளம், வசந்தவல்லி பந்தடித்தல்,  குறத்தி குறிசொல்லுதல் உள்ளிட்ட பல இலக்கியக் காட்சிகள் நினைவுத்திரையில் விரிந்தன. வானரங்களின் கூட்டம் கண்டும், இயற்கை செயற்கையான நிலைகளையும் கண்டவனாய்ப் பேரருவி அடைந்தேன். ஐயப்பப் பக்தர்களும் சில வெளியூர் மக்களுமாக அருவியில் நீராடி நின்றனர். மாற்றுடை இல்லாததால் குளிக்கமுடியாமல் அங்கிருந்தவர்களிடம் காலையில் குளிக்க எத்தனை மணிக்கு வாய்ப்பாக இருக்கும் என்று வினவி மீண்டேன். இரவு உண்டு முடித்து ஓய்வெடுத்தேன்.

காலை 5.30 மணிக்கு ஒலி எழுப்பும்படி செல்பேசிக்குக் கட்டளை கொடுத்தேன். காலை 5.30 மணிக்கு எழுந்து கடன்முடித்து, குளியலுக்கு ஆறுமணிக்கு அருவியில் நனைந்தேன். தண்ணென் அருவி நீரில் தலைகாட்டினேன். காலைக்குளியல் குளர்ச்சியாக இருந்தது. ஓரிரு வெளியூர் மக்களும் நீராடி மகிழ்ந்தனர். அரைமணிநேரம் நீராடி, மீண்டும் அறைக்கு வந்தேன்.

 காலை பத்துமணிக்கு மீண்டும் இரண்டாம் நாள் நிகழ்வு கல்லூரி நூலகத்தில் நடைபெற்றது. முனைவர் பட்டாபிராமன் அவர்கள் காலை நிகழ்வில் வந்து இணைந்துகொண்டார். இருவரும் கணினிகளில் தமிழ் மென்பொருள்களை உள்ளிட்டுத் தமிழ்த்தட்டச்சுப் பழக்கினோம். வலைப்பூ உருவாக்கம் குறித்தும், படம் இணைத்தல் குறித்தும் விளக்கினோம். வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்டு, அடுத்த முறை வந்து பேராசிரியர்களுக்கும் பயிற்றுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

நூலகக் கணினிகளில் நச்சுகள் அதிகம் இருந்ததால் திட்டமிட்டபடி படங்களை மிகுதியாக இணையத்தில் ஏற்றமுடியவில்லை. மாணவிகளின் பார்வைக்காகச் சில படங்களை உள்ளிட்டுக்காட்டினோம். பகலுணவுக்குப் பிறகு நண்பர் செல்வமுரளி அவர்கள் தம் சிங்கப்பூர் நண்பருடன் வருகை தந்தார். முரளி அவர்களை இணையதளப் பாதுகாப்பு குறித்து உரையாற்றும்படி சொன்னோம். அவரும் சிறப்பாகச் செய்தார். 

முனைவர் பட்டாபி அவர்களும் இணையம், கணினி வழி வருவாய் ஈட்டுவதற்குரிய வழிகளை எளிமையாகச் சொன்னதும் மாணவிகள் ஆர்வமுடன் அவர் உரையைச் செவிமடுத்தனர். மீண்டும் நிறைவு விழாவில் சில மொழிகளைக் கூறி மாணவிகளை உரையாற்றும்படி முதல்வர் அவர்கள் கூறினார்கள். மாணவிகள் ஆர்வமுடன் வந்து இரண்டுநாள் பயிலரங்கின் சிறப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். மீண்டும் அனைவரிடமும் விடைபெற்றுப் புறப்பட்டேன். 


செல்வமுரளி உரை, முனைவர் பட்டாபி அவர்கள் பார்வையாளர் வரிசையில்


பயிலரங்கில் மாணவிகள்



பயிலரங்கில் மாணவிகள்



பங்கேற்பாளர் வரிசையில் கல்லூரி முதல்வர்



முனைவர் சு.மகாலட்சுமி நன்றியுரை



பயிலரங்கில் மாணவிகள், பேராசிரியர்கள்



பயிலரங்கில் மாணவிகள்



பயிலரங்கில் மாணவிகள்

தமிழூரில் வாழும் பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களைச் சந்திக்க நினைத்தேன். நான் குற்றாலத்தில் நிற்கும்பொழுது மாலை மணி ஐந்து. இரவு 7 மணிக்குத் தொடர்வண்டி. இரண்டு மணிநேரத்தில் அறிஞர்  ச.வே.சு.வின் இல்லம் சென்று பார்த்து, உரையாடிவிட்டுத் தொடர்வண்டியைப் பிடிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் தென்காசியைக் கடந்து, கீழைப்பாவூர் கடந்து தமிழூரை நெருங்கினோம்.


கருத்துகள் இல்லை: