நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 7 பிப்ரவரி, 2013

தமிழூர் கண்ட தமிழர் ச.வே.சுப்பிரமணியன்




அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள் (ஆராய்ச்சிக்கூடத்தின் அருகில்)

முனைவர் ச. வே. சுப்பிரமணியன் ஐயா அவர்கள் சென்னையில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல உயராய்வுகள் நடைபெறவும், அரிய நூல்கள் வெளிவரவும் முன்னின்று உழைத்தவர் என்றவகையில் அவர்மேல் எனக்கு மிகப்பெரிய மதிப்பு என்றும் உண்டு. இயக்குநராக அவர் பணியாற்றிய காலத்தில் மிகச்சிறந்த ஆய்வாளர்களை உருவாக்கித் தமிழ் ஆராய்ச்சி உலகம் சிறந்த பாதையில் செல்லத் துணைநின்றவர் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.

இவர் அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்களின் மாணவர் என்ற வகையிலும் என் பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்களின் ஆசிரியர் என்றவகையிலும் மேலும் மதிப்பு வைத்திருந்தேன். முனைவர் ச.வே.சு. அவர்களின் சிலப்பதிகாரம் உரை கற்று அவரின் சிலம்பு ஈடுபாட்டை அறிந்தேன். பேராசிரியரின் மூத்த மாணவர்கள் பலரும் ஐயாவுக்குச் சிலப்பதிகாரத்தில் மிகப் பெரிய புலமை உண்டு எனவும் வகுப்பறைகளில் சிலப்பதிகாரத்தை இசையுடன் பாடியே பாடம் நடத்துவார் என்றும் கூறக்கேட்டு வியப்படைந்தேன். சிலப்பதிகாரத்தை இவர் வழியாகக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் இந்த நொடி வரை உண்டு.

சிலப்பதிகாரத்திற்கு ஐயா அவர்கள் உரை வரைந்ததுடன் மட்டும் அமையாமல் கானல்வரி, அரகேற்றுகாதை உள்ளிட்ட சிலம்பின் பகுதிகளுக்கும் உரைகண்ட பெருமைக்குரியவர். என் மகள்களுக்குக் “கானல்வரி”, “கண்ணகி” என்று பெயரிட்டுள்ளமையே அறிந்து ஒவ்வொரு சந்திப்பிலும் மழலைகளை நலம் வினவியும், வாழ்த்துரைத்தும் மகிழ்வார். ஒவ்வொரு சந்திப்பிலும் தாம் இந்த ஆண்டு வெளியிட உள்ள நூல்களைப் பட்டியலிடுவார். அவர் சொன்னபடியே அந்த அந்த நூல்கள் அந்த அந்த மாதங்களில் வெளிவரும். கடும் உழைப்பையும் தமிழ்ப் பற்றையும் இரு கண்களாகப் போற்றும் ச.வே. சுப்பிரமணியன் அவர்கள் எம்மைப்போலும் இளையாருக்கு ஒருவழிகாட்டி.

குற்றாலம் பயிலரங்கில் நிகழ்ச்சியை முடித்ததும் நண்பர் பட்டாபி அவர்களிடம் தமிழூர் செல்ல வேண்டும் எனவும் அறிஞர் ச.வே.சு அவர்களைக் காண வேண்டும் எனவும் குறிப்பிட்டேன் இரண்டு மணி நேரத்தில் சென்று திரும்புவதில் உள்ள இடர்ப்பாட்டால் முனைவர் பட்டாபி அவர்கள் சற்றுத் தயங்கினார்கள். போகவும், வரவும் ஒன்றரை மணி நேரம் ஆகும் எனவும், அரை மணி நேரத்தில் ஐயாவிடம் இருந்து விடை பெறுவது இயலாது எனவும் கருத்துரைத்தார். இலக்கை அடையும் வரை ஓய்வறியா எனக்கு முனைவர் பட்டாபியின் தயக்கம் தெரிந்தது. தொடர்வண்டியை விட்டால் பேருந்தில் செல்லலாம் என்று குறிப்பிட்டுவிட்டு வண்டியைத் தமிழூருக்குச் செலுத்தும்படி கேட்டுக்கொண்டேன். தமிழூரை நோக்கி எங்கள் வண்டி வேகமாக முன்னேறியது.

நெல்லை – குற்றலாம் பெருவழிச்சாலையில் தமிழூர் அமைந்துள்ளது. சாலையை ஒட்டிச் ச.வே.சு அவர்களின் இல்லம் ஒரு “தமிழ் மாளிகை” போல் இருந்தது. வீட்டில் இருந்தவர்களிடம் எங்கள் வருகையைத் தெரிவித்தவுடன். அருகில் இருக்கும் அலுவலகத்தில் ஐயா அவர்கள் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பதாக உரைத்தார்கள். முன் மடல் அனுப்பாமல் ஐயாவைச் சந்திப்பதில் எங்களுக்குத் தயக்கம் இருந்தது. என்றாலும் “உலகத் தமிழ்க் கல்வி இயக்கம்” அலுவலகத்தை அடைந்தோம்.

எங்களைப் பார்த்தவுடன் ஐயா அவர்கள் தம் உதவியாளர் திரு. ஆறுமுகம் அவர்களை அனுப்பி எதிர்கொண்டு அழைத்தார். ஐயா அவர்களின் தமிழ்த் திருவடிகளை வணங்கினேன்.

பெரும்பான்மையான மக்கள் பணம் சம்பாதிக்கவும், மளிகைக் கடை நடத்தவும், சீட்டுப் பிடிக்கவும், கேளிக்கைகளில் ஈடுபடவும் அலுவலகம் அமைக்கும் இன்றைய உலகில் தமிழ் ஆராய்ச்சிக்காக ஒரு அலுவலகத்தைக் கட்டி முடித்து அதில் தமிழ் ஆராய்ச்சி வாழ்க்கை மேற்கொண்டு தொடர்ந்து நூலாக்கப் பணிகளில் ஈடுபடும் ச.வே.சு அவர்களை நினைத்துப் பெருமை கொண்டேன்.

ஐயாவிடம் சுருக்கமாக நலம் வினவினோம் அவர்கள் வீடு வரை உரையாடியபடி வந்தார்கள். தாம் தமிழூர் என்று பெயர் வைக்க 100 ஏக்கர் நிலம் வாங்கிய வரலாற்றை நினைவுகூர்ந்தார்கள். அந்தப் பெருநிலத்தில் பெரிய வீடுகள் கட்டிக் குடிக்கூலிக்கு மாணவர்களுக்கு வழங்கியுள்ளதைக் குறிப்பிட்டார்கள். தம் உதவியாளர் ஆறுமுகம் அவர்களின் சிறப்புகளின் வினைத்திட்பத்தையும் எடுத்துரைத்தார்கள்.

நினைவுக்குச் சில படங்களை எடுத்துக்கொண்டோம். இரவு 7 மணிக்குத் தொடர்வண்டி என்பதால் ஐயா அவர்கள் எங்களுக்கு அவரின் நூலகத்தைப் பருந்துப் பார்வையாகக் காட்டி மகிழ்ந்தார். முன்னமே எங்களுக்கு இளநீர் வரச்செய்து விருந்தோம்பினார். தம் கையெழுத்திட்டுச் சில நூல்களை வழங்கினார். தொல்காப்பியம், தமிழ் மொழி குறித்துத் தாம் எழுதி வரும் ஆங்கில நூலின் அமைப்பை எடுத்துரைத்தார்.

சிலப்பதிகாரத்தில் மிகச் சிறந்த புலமை பெற்ற மார்க்கபந்து சர்மா என்ற அறிஞரைத் தெரியுமா என்றார். விழித்தேன், அவரின் சிறப்புகளையும் அவர் தம் சிலப்பதிகாரப் புலமையையும் எடுத்துரைத்தார். மார்க்கபந்து சர்மா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிவதில் என் உள்ளம் ஈடுபட்டது. ஐயாவிடம் இருந்து பிரியாவிடை பெற்றுத் தென்காசித் தொடர்வண்டி நிலையத்தை அடைந்தபொழுது பொதிகைத் தொடர் வண்டி எனக்காக ஒரு நிமையம் காத்திருந்தது.




தமிழூர் கண்ட ச.வே.சு.


தமிழகம் எழுப்பிய ச.வே.சு



நூலக அரங்கில் ச.வே.சு.




மு.இளங்கோவன், ச.வே.சுப்பிரமணியன்


                        மு.இளங்கோவன், ச.வே.சுப்பிரமணியன்


ச,வே.சுப்பிரமணியன் அவர்களின் வாழ்வியலையும் நூல்களின் பட்டியலையும் இணைப்பில் இணைத்துள்ளேன். பயன்படுத்துவோர் எடுத்த இடத்தைக் குறிப்பிடுக.

 அறிஞர் ச.வே.சு. அவர்களின் தமிழ் வாழ்க்கை.

83 அகவையாகும்  ச. வே. சுப்பிரமணியன் அவர்கள் 31. 12. 1929 இல் வீரகேரளம்புதூரில் பிறந்தார். தந்தை சண்முக வேலாயுதம் பிள்ளை. தாய் இராமலக்குமி அம்மாள்.

கல்வி

தொடக்கக் கல்வி விக்கிரமசிங்கபுரம் புனித இருதய மேல்நிலை தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலைப் பள்ளிக் கல்வி தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியிலும் அமைந்தது (அம்பாசமுத்திரம்). ம. தி. தா. இந்துக் கல்லூரியில் இடைநிலைக்கல்வி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி. ஏ. ஆனர்ஸ் 1950-53. முனைவர் பட்டம் கேரளப்பல்கலைக்கழகம் திருவனந்தபுரம்.

பணி

தூத்துக்குடி வ. உ. சி கல்லூரியில் 1953-56 தமிழ் பயிற்றுநர். சில மாதங்கள் சவேரியர் கல்லூரி பாளையங் கோட்டையில் பணி. திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர். தமிழ்த்துறைத் தலைவர், சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர்.

நூல்கள்

இதுவரை எழுதப்பெற்ற நூல்கள் தமிழில் 160 ஆங்கிலத்தில் 8, மலையாளத்தில்-1  தமிழகத்தில் எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் 20 அறக்கட்டளைச் சொற்பொழிவு ஆற்றி, அவற்றை நூல்களாக வெளியிட்டமை. வானொலிப் பேச்சுகளாக 100க்கு மேல், ஆய்வுக்கட்டுரைகள் 200க்கு மேல்.

உலக அரங்கில் 

இந்தியாவிலும் உலக அரங்குகளிலும் பல கருத்தரங்குகளில் கலந்து கொள்ளுதல். தமிழின் வளர்ச்சிக்காகவும், கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்காகவும், இலங்கை, மொரீசியஸ், மேற்கு ஜெர்மனி, போலந்து, செக்கோஸ் லோவோகியா, ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, மணிலா, சிங்கப்பூர், மலேசியா, பாரிஸ், இலண்டன், ஏதென்ஸ், கெய்ரோ போன்ற நாடுகளுக்கும் நகரங்களுக்கும் சென்று வருதல்.

            இவர் வழிகாட்டலில் கேரளம், மதுரை காமரார், சென்னை, பெங்களூர் ஆகிய பல்கலைக்கழங்களில் 44 பேர் முனைவர் பட்டம் பெறுதல்.

            1985இல் தமிழகத்தில் தமிழூர் என்ற ஊரை உருவாக்கினமை. தமிழகம் வீட்டின் பெயர், தமிழ்நகர் இடத்தின் பெயர், தமிழூர் ஊரின் பெயர்.

            நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லூரியை 1969இல் தோற்றுவித்தல்.

பரிசுகளும் பாராட்டும்


1. 1984இல் கம்பன் இலக்கிய உத்திகள் என்ற நூலுக்குத் தமிழக அரசின் முதல் பரிசைப் பெறுதல்.


2. குன்றக்குடி ஆதீனத்தால் திருப்பத்தூர் தமிழ்ச்சங்கத்தின் வழி தமிழாகரர் பட்டம் பெறுதல்.


3. 1996இல் தமிழகப் புலவர்குழு செந்தமிழ்ச் செம்மல் என்ற விருதினைத் தருதல்.


4. 16. 11. 1997இல் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் விருது பெறல்.


5. 1999இல் இந்திய சாகித்ய அகாதெமி வழங்கிய பாஷாசம்மான் என்ற விருதினைப் பெறல் (சாகித்ய அகாதெமி வழி தமிழுக்கு பாஷாசம்மான் என்ற விருது ச. வே. சு வைத் தவிர வேறுயாருக்கும் இதுவரை வழங்கப்பெறவில்லை)


6. 2000இல் நல்அறிஞர் என்ற விருதினை இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் வழிப்பெறுதல்


7. 2001இல் கோவை சைவவேளாளர் சபையின் சார்பில் திருநாவுக்கரசர் விருதாகிய சைவநன்மணி என்ற விருதினைப் பெறுதல்.


8. 2001இல் திருவாவடுதுறை ஆதீனம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை நினைவுப்பரிசு பெறுதல்.


9. 26.05.2003இல் திருவையாறு ஒளவைக்கோட்டத்தின்  வழி ஒளவைத் தமிழ் அருளாளர் விருதினைப் பெறுதல்.


10. 27.06.2003இல் தமிழ் இயக்கச் செம்மல் என்ற விருதினைச் சிதம்பரம் மெய்யப்பன் தமிழாய்வகம் தருதல்.


11. 05.08.2003இல்  இராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளைச் சார்பில் இராஜா சர். முத்தையாச் செட்டியார் பிறந்த நாள் நினைவுப் பரிசாகத் தமிழறிஞர் என்ற முறையில் ரூபாய் 1 இலட்சமும் விருதும் பெறுதல்.


12. 28.05.2004 இல் தொல்காப்பியச் செம்மல் என்ற விருதினைப் பெறல்.


13. 13.08.2004இல் கம்பன் விருது - கம்பன்  கழகம் சென்னை  மூலம் பெறுதல்.


14. 17.09.2004இல் தமிழக அரசின் கி. ஆ. பெ. விசுவநாதம் பெயரில் அமைந்த ரூ. 1 இலட்சம் விருது பெறல்.


15. 26.06.2006இல் இராசபாளையம் திருவள்ளுவர் மன்றம் பொதுமறை அறிஞர் விருது பெறல்.


16. 2006இல் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் புலவர் மாமணி என்னும் சிறப்புப்பட்டம் தருதல்.


17. 2008இல் அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் அனைத்துலக அறவாணன் சாதனை விருது பெறல்.


18. 30.12.2009இல் கலைஞர் பொற்கிழி விருது - புத்தகக் கண்காட்சி (1 இலட்சம் ரூபாய்).


19. 15.01.2010இல் தமிழ் நிகண்டுகள் - தமிழக அரசின் முதற்பரிசு பெறல்.


20. 03.04.2010இல் இஸ்லாமியத் தமிழ் இலக்கியமன்றம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறல்.


21. 24.07.2010இல் கோவை இளங்கோவடிகள் இலக்கியமன்றம் சார்பில் உ. வே. சா விருது பெறல்.


22. 30.07.2010 இல் சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில் சேக்கிழார் விருது பெறல்.


23. 2010இல் தருமபுர ஆதீனம் மூலம் செந்தமிழ்க் கலாநிதி என்ற விருதினை பெறல்.


24. 2011இல் திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம் சார்பில் கபிலர் விருது - கபிலவாணர் பட்டம் பெறல்.




நூல்கள்

1. இலக்கிய நினைவுகள் (1964,69, 74, 75,87)         
2.சிலம்பின் சில பரல்கள்   (1972)                         
3.இலக்கிய கனவுகள் ( 1972, 79)                
4. மாந்தர் சிறப்பு      ( 1974, 78, 81)                      
5. ஒன்று நன்று       (1976)                         
6. அடியார்க்கு நல்லார் உரைத்திறன் (1976)     
7. இலக்கிய உணர்வுகள்    (1978)                                  
8. கம்பன் கற்பனை   (1978, 2004)   
9. காப்பியப் புனைத்திறன் (1979)                            
10.கம்பனும் உலகியல் அறிவும் (1981, 2004)     
11. கம்பன் இலக்கிய உத்திகள் (1982, 2002)        
12. கம்பன் கவித்திறன் (2004)                         
13. இளங்கோவின் இலக்கிய உத்திகள் (1984) 
14. இலக்கிய வகையும் வடிவும் ( 1984)             
15. தமிழ் இலக்கிய வரலாறு (1999-2004) 416
16. சிலப்பதிகாரம் மூலம்   (2001)                         
17. சிலப்பதிகார இசைப்பாடல்கள் (2001)                       

ஒப்பியல் இலக்கியம்
18. சிலம்பும் சிந்தாமணியும் (1977,79)                   
19. திராவிட மொழி இலக்கியங்கள் (1984, 2003)          
20.இளங்கோவும் கம்பனும் (1986)                         
21. தொல்காப்பியம் திருக்குறள்  சிலப்பதிகாரம்  

நாட்டுப்புற இயல்
22.தமிழில் விடுகதைகள் (1975. 77, 80)      
23. தமிழ் விடுகதைக் களஞ்சியம் (2003)

வாழ்வியல் நூல்கள்
24. காந்தி கண்ட மனிதன்   (1969, 71)                
25. பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள்
                                                            (1982, 2011)               
26. நல்வாழ்க்கை (1992, 97)                                         

தத்துவமும் உளவியலும்
27. மனிதம் ( 1995)                                                          
28. மனமும் உயிரும் (1996)                                      
29. உடல் உள்ளம் உயிர் (2004)                               
30. மனம்       
31. தாயுமானவர்                

தாவர இயல்
32. தமிழர் வாழ்வில் தாவரம் (1993)
                       
மண்வள ஆய்வு
33. கூவநூல் (1980)
                                                           
கனவு நூல்
34. பொன்னவன் கனாநூல் (2004)  
           
உரைகள்
35. சிலப்பதிகாரம் தெளிவுரை (1998, 2001)          
36.சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துப்பாடல்(1993)        
37. தொல்காப்பியம் தெளிவுரை  (1999-2010)     
38. சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை ( 2001)  
39.       திருக்குறள் நயவுரை ( 2001)                                   
40. திருமுருகாற்றுப்படை தெளிவுரை (2002)   
41. கானல்வரி (2002)                                                     
42. சிலப்பதிகாரம் குன்றக்குரவை (2002)
43.பத்துப்பாட்டு மூலம் ( 2002)                                            
44. பத்துப்பாட்டு உரை - கோவிலூர் ஆதீனம்     

இலக்கணநூல்கள்
45. இலக்கணத் தொகை எழுத்து ( 1967)            
46. இலக்கணத் தொகை சொல் (1970)                             
47. இலக்கணத்தொகை யாப்புபாட்டியல்     (1978)             
48. வீரசோழியம் குறிப்புரையுடன் (1977, 79)                 
49. தொன்னூல் விளக்கம் (1978)                                         
50. குவலயானந்தம் சந்திராலோகம் (1979)                   
51. பிரபந்த தீபம் (1980)                                                            
52. தொல்காப்பியப் பதிப்புகள் (1992)                                
53. மொழிக்கட்டுரைகள் (1974, 78)                           
54. சங்க இலக்கியம் (2006)                                        
55. மெய்யப்பன் தமிழ் அகராதி (2006)                              
56. தமிழ் இலக்கண நூல்கள் (2007)                                  
57. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (2007)                  
58. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் உரையும் (2008)            
59. பன்னிரு திருமுறைகள் (2007)             
60.  தமிழ்ச் செவ்வியல் நூல்கள் (2008)                          
61. தமிழ் நிகண்டுகள் தொகுதி -1 (2008)                          
62. தமிழ் நிகண்டுகள் தொகுதி-2                                        
63. மாணவர் செந்தமிழ் அகராதி (2008)               
64. திருவள்ளுவர் பல்துறை அறிவு (2008)                    
65. திருவருட்பா முழுவதும் (2009)                                    
66. தொல்காப்பியம் அறிமுகம் (2009)                              
67. தொல்காப்பியம் - நூன்மரபு        (2009)             
68. தொல்காப்பியம் -மொழிமரபு                   
69. தொல்காப்பியம் -பிறப்பியல்       
70. தொல்காப்பியம் -புணரியல்        
71. தொல்காப்பியம் -தொகைமரபு     
72. தொல்காப்பியம் -உருபியல்             
73.  தொல்காப்பியம் -உயிர்மயங்கியல்      
74. தொல்காப்பியம் -புள்ளி மயங்கியல்    
75. தொல்காப்பியம் -குற்றியலுகரப்புணரியல்     
76. தொல்காப்பியம் -கிளவியாக்கம்         
77. தொல்காப்பியம் -வேற்றுமையியல்
78. தொல்காப்பியம் -வேற்றுமைமயங்கியல்      
79. தொல்காப்பியம் -விளிமரபு                                     
80. தொல்காப்பியம் -பெயரியல்            
81. தொல்காப்பியம் -வினையியல்          
82.தொல்காப்பியம் -இடையியல்      
83. தொல்காப்பியம் -உரியியல்        
84.தொல்காப்பியம் -எச்சவியல்            
85.தொல்காப்பியம் -அகத்திணையியல்
86.தொல்காப்பியம் -புறத்திணையியல்
87.தொல்காப்பியம் -களவியல்           
88.தொல்காப்பியம் -கற்பியல்              
89.தொல்காப்பியம் -பொருளியல்     
90.தொல்காப்பியம் -மெய்ப்பாட்டியல்  
91.தொல்காப்பியம் -உவமவியல்      
92.தொல்காப்பியம் -செய்யுளியல்     
93. தொல்காப்பியம் -மரபியல்              
94.தொல்காப்பியம் -இளம்பூரணர் உரை     
95.தொல்காப்பியம் -நச்சினார்க்கினியர் உரை     

சங்க இலக்கியம் - பத்துப்பாட்டு (2009)
96. திருமுருகாற்றுப்படை            
97.பொருநர் ஆற்றுப்படை            
98.சிறுபாண் ஆற்றுப்படை           
99.பெரும்பாண் ஆற்றுப்படை         
100.முல்லைப்பாட்டு                 
101.மதுரைக்காஞ்சி                   
102.நெடுநல்வாடை                  
103.குறிஞ்சிப்பாட்டு                  
104.பட்டினப்பாலை                   
105.மலைபடுகடாம்                  

சங்க இலக்கியம் எட்டுத்தொகை (2009)
106. நற்றிணை                       
107. குறுந்தொகை                    
108. ஐங்குறுநூறு                     
109. பதிற்றுப்பத்து                    
110. பரிபாடல்                        
111. கலித்தொகை                      
112.  அகநானூறு                       
113.     புறநானூறு                         

சிலப்பதிகாரம் (2009)
114. மங்கலவாழ்த்துப்பாடல்          
115.     மனையறம் படுத்த காதை      
116. அரங்கேற்றுகாதை                    
117. அந்திமாலைச் சிறப்புச்செய்காதை
118. இந்திரவிழவு ஊர் எடுத்தகாதை   
119.     கடலாடு காதை                
120. கானல்வா                       
121. வேனில் காதை                  
122.கனாத்திறம் உரைத்த காதை      
123. நாடுகாண் காதை                
124. வேட்டுவ வரி                   
125. புறம்சேரி இறுத்த காதை         
126. ஊர்காண் காதை                 
127.அடைக்கலக் காதை              
128. கொலைக்களக் காதை           
129.ஆய்ச்சியர் குரவை                    
130. துன்பமாலை               
131.ஊர்சூழ்வரி                       
132.வழக்குரை காதை                
133. வஞ்சின மாலை                 
134.அழல்படு காதை            
135.கட்டுரைகாதை                   
136.குன்றக் குரவை                  
137.காட்சிக் காதை                   
138. கால்கோள் காதை               
139.நீர்ப்படைக் காதை                
140.நடுகல் காதை                   
141.வாழ்த்துக் காதை                 
142. வரம்தரு காதை                 
143. புகார்க்காண்டம்            
144. மதுரைக்காண்டம்           
145. வஞ்சிக்காண்டம்           
146. தெளிவுரை முழுவதும்      
147.திருக்குறள் நயவுரை             
148.பதினெண் கீழக்கணக்குநூல்கள் உரையுடன்       
149. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்         ,,                                 
150.சங்க இலக்கியம் மூலமும் முழுவதும்       
151. தொகுதி 1  நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு
152. தொகுதி 2 பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை
153.  தொகுதி 3 அகநானூறு, புறநானூறு    
154. தொகுதி 4 பத்துப்பாட்டு
155. சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப்பாடல்கள்         
156.                 ,,                      முல்லைப்பாடல்கள்      
157.                 ,,                      மருதப் பாடல்கள்         
158.                 ,,                      நெய்தல் பாடல்கள்       
159.                 ,,                      பாலைப் பாடல்கள்       
160. பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள்        
161. ஐம்பெருங்காப்பியங்கள் மூலமும் உரையும்       

ஆங்கில நூல்கள்
 162. Descriptive Grammar of Cilapatikaaram                                              
163.Grammar of Akananuuru      
164.Studies of Tamil Language and Literature                                             
165.Studies of Tamilology                       
166.Tolkaappiyam in English      
167.Tolkaappiyam and Other Indian Grammatical treatises             
168. An Introduction of Tolkaappiyam         
169.Tolkaappiyar & Aristotle      
170. Introduction of Tamil Literary Genres                                      
171. தொல்காப்பியச் சுவடிகள், பதிப்புகள்,
            பாடவேறுபாடுகளுடன் மூலமும் உரையும்
            பாடவேறுபாட்டு வகைகள்-2012   

மலையாள நூல்
172. சிலப்பதிகார வஞ்சிகாண்டம் மொழிபெயர்ப்பு - 1966   
                     
தொடர்பு முகவரி:

முனைவர் ச. வே. சுப்பிரமணியன்
தமிழூர்,
அடைக்கலப்பட்டணம் அஞ்சல் - 627 808
நெல்லை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

தொடர்புடைய பதிவுக்கு இங்கே செல்க



2 கருத்துகள்:

-/சுடலை மாடன்/- சொன்னது…

ச.வே.சுப்பிரமணியன் ஐயா வ.ஐ.சு அவர்களின் மாணவர் என்பதையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்தார் என்று அறிந்திருக்கிறேன். அவர்கள் எழுதிய சிலப்பதிகாரம் மற்றும் இலக்கண நூல்களை இன்றும் பாவித்து வருகிறேன். ஆனால் ஐயாவின் அனைத்துப் பெருமைகளையும் இப்பொழுதுதான் அறிகிறேன். தொகுத்து வழங்கிய உங்களுக்குப் பாராட்டுகள்.

ஈராயிரம் ஆண்டுகளாக ஒற்றுமையின்றி தமிழினம் நிலத்தை இழந்து வந்திருந்தாலும் மொழியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதன் முக்கிய காரணம் ச.வே.சு ஐயா போன்று தன்னலமில்லாமல் தம் பொருளைச் செலவழித்துத் தொண்டாற்றிவரும் உழைப்பாளிகளால்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

கடந்த வாரத்தில்தான் பெருமழைப்புலவர் பற்றி கேப்டன் தொலைகாட்சிக்கு நீங்கள் அளித்த நேர்காணலைக் கண்டேன். மிக அருமை!

நன்றி - சொ.சங்கரபாண்டி

Prof.A.Sanmugadas சொன்னது…

தமிழ் வளர்ச்சிக்கு உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பதவியை நன்கு பயன்படுத்திய பெருமைமிகு பேரறிஞர். நீண்ட காலத்தின்பின் இளங்கோவனுடன் அவரைப் படத்தில் பார்த்து மகிழ்ந்தேன்.
பேராசிரயர் அ. சண்முகதாஸ்