நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 1 மார்ச், 2008

அகநானூறு அறிமுகமும் பாடிய புலவர்களும்

சங்க இலக்கியங்களில் அகப்பொருள் பற்றிய செய்திகளை விரிவாகத் தரும் நூல் அகநானூறு ஆகும்.அகம்+நானூறு என இதனைப் பிரித்துப் பார்க்கலாம். அகப்பொருள் தொடர்பான நானூறு பாடல்களைக் கொண்டது என்ற அடிப்படையில் இந்நூல் நானூறு பாடல்கலைக் கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்தாக ஒரு பாடல் உள்ளது. இதனைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.13 அடி சிறுமையும் 31 அடி பெருமையும் கொண்ட பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நெடுந்தொகை எனவும் இந்நூலை அழைப்பர். இந்நூல் உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர் என்னும் புலவர் பெருமானால் தொகுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொகுக்கச் செய்தவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்னும் பேரரசன் ஆவான்.

இந்நூல் முப்பிரிவாகப்பகுக்கப்பட்டுள்ளது.

1.களிற்றியானை நிரை (1-120 பாடல்கள்)
2.மணிமிடைப்பவளம் (121-300 பாடல்கள்)
3.நித்திலக்கோவை (301-400 பாடல்கள்)

அகநானூற்றைத் தொகுத்த புலவர் சில ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி தொகுத்துள்ளார்.

1,3,5,7,9,11 போன்ற ஒற்றைப்படையில் அமையும் பாடல்கள் பாலைத்திணையில் அமைந்த பாடல்களாகவும் (மொத்தம் 200பாடல்கள்),2,8,12,18 என 2,8 எனவரும் பாடல்கள் குறிஞ்சித்திணையில் அமைந்த பாடல்களாகவும் (மொத்தம் 80 பாடல்கள்),6,16,26,36 என ஆறாம் எண்ணுடைய பாடல்கள் மருதத் திணைப்பாடல்களாகவும் (மொத்தம் 40 பாடல்கள்),4,14,24 என நான்காம் எண்ணுடைய பாடல்கள் முல்லைத்திணைப் பாடல்களாகவும்(மொத்தம் 40பாடல்கள்), 10,20,30 எனவரும் பத்தாம் எண்ணுடைய பாடல்கள் நெய்தல் திணைப்பாடல்களாகவும் (மொத்தம் 40 பாடல்கள்) உள்ளன.

அகநானூறு நூலை முதன்முதல் 1920 இல் பதிப்பித்தவர் கம்பர் விலாசம் வே.இராசகோபால் ஐயங்கார் ஆவார். இந்நூலுக்கு நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும், கரந்தைக் கவியரசு இரா.வேங்கடாசலம் பிள்ளை அவர்களும் உரை வரைந்து வெளியிட்டுள்ளனர். பிற்காலத்தில் பலர் உரை வரைந்துள்ளனர்.

தமிழர்தம் பண்டைய திருமண முறை இந்நூலில் சிறப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது (86,136). குடவோலை முறையில் நடந்த தேர்தல் பற்றிய குறிப்பையும் (77) இந்நூல் தருகின்றது. இலக்கியச் சுவையை மிகுதியாகக் கொண்டுள்ள அகநானூற்றுப் பாடல்கள் உள்ளுறை, இறைச்சி போன்ற குறிப்புப் பொருளுடைய பாடல்களை மிகுதியாகக் கொண்டுள்ளது.

அகப்பொருள் பற்றிய செய்திகளை இந்நூல் தருவதுடன் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளையும் தருகின்றது. வடநாட்டை ஆண்ட மோரியர் (69,251,281), நந்தர்(251,265), வடுகர் (107,213,253, 281,295,375,381) பற்றிய செய்திகளும் தமிழ்நாட்டை ஆண்ட சேரர் (55,127,149,209,347), சோழர் (60,93,96,123,137,201,213 ,336,356,369,375,385), பாண்டியர் (27,201) பற்றிய குறிப்புகளும் அத்தி(44,376,396), கங்கன்(44), கடலன்(81), கட்டி(44,226), காரி (35,209), கோசர்(15,90,113,196, 205,216,251,262), தித்தன்(152,226), நன்னன் (15,44,142,152,173,199,208, 258,349,356,392,396), பாரி(78,303), பண்ணன்(54,177),பிட்டன் (77,143), புல்லி(61,83,209, 295,311,359,393) போன்ற குறுநில மன்னர்களைப் பற்றிய குறிப்புகளையும் வரலாற்றையும் அகநானூறு அறிவிக்கின்றது.

பண்டைத் திருமணம் பற்றிய பாடல்கள் :

உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர,
புதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று
வால்இழை மகளிர் நால்வர் கூடி,
'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர,
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என,
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
மடம் கொள் மதைஇய நோக்கின்,
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே. (86,அகம்.)

கூற்று :வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்.

புலவர் - நல்லாவூர் கிழார்

(பொருள்)

இருள் நீங்கிய விடியல்பொழுழுதில் திங்களை உரோகிணி விண்மீன் சேரும் நல்ல நேரத்தில் உளுத்தம் பருப்பிட்டுச் செய்யப்பெற்ற உணவினை(களி) உறவினர்களுக்கு வழங்கினர். இதனால் ஆரவாரம் இடைவிடாமல் கேட்டது.தி ருமண வீட்டில் புதுமணல் பரப்பி இருந்தனர். விளக்கேற்றி வைத்து மாலைகளைத் தொங்க விட்டிருந்தனர்.தலையில் குடம் ஏந்தியவரும், அகன்ற வாயுடைய மண்பாண்டங்கள் கொண்டவரும், திருமணத்தை நடத்திவைக்கும் முதிய மகளிரும் முன், பின்னாகத் தரவேண்டியவற்றை எடுத்து வழங்கித் திருமணச் சடங்குகளைச் செய்தனர்.

மகனைப் பெற்ற குடும்பம் சார்ந்த மகளிர் ஒன்று கூடி'கற்பினின்று வழுவாமல் நல்ல உதவிகளைச் செய்து நின்னை மனைவியாகப் பெற்ற உன் கணவனை நீ பெரிதும் விரும்புகின்றவள் ஆவாய்' என வாழ்த்தினர். மங்கல நீருடன் கலந்த பூக்கள், நெல் அவளின் கூந்தலில் பொருந்தும்படி வாழ்த்தினர். சுற்றத்தார் தலைவியை நோக்கி, 'நீ பெரிய மனை வாழ்க்கைக்கு உரியவளாகுக என வாழ்த்தினர். அவளை என்னிடம் கூட்டி வைத்தனர்.

தனி அறையில் புணர்ச்சிக்காகக் கூடிய அவள் நாணத்தால் தலை குணிந்து புடவைக்குள் ஒடுங்கிக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்புடன் அவள் முகத்தை மூடியிருந்த புடவையைச் சிறிது நீக்கினேன். அவளின் பெண்மை உணர்வு மேலிட பெருமூச்செறிந்தாள். அவளிடம் உன் உள்ளத்தில் உள்ளவற்றை மறைக்காமல் சொல்வாயாக என வினவினேன். பல்வேறு அழகுகளும் பொருந்திய அவள் மகிழ்ந்தவளாகி, முகத்தைத் தாழ்த்தி வெட்கத்தால் தலைகுனிந்தாள். (பரத்தையர் வீட்டிலிருந்து திரும்பிய தலைவனைத் தோழி வாயில் மறுத்தாள். அதுபொழுது தலைவன், திருமண முதல்நாள் இரவில் இவ்வாறு தலைவி நடந்துகொண்டாள் என்றான்).


மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து,
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி,
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,
தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்,
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி,
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.(136, அகம்.)

கூற்று : உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

திணை : மருதம்
புலவர் : விற்றூற்று மூதெயினனார்

(பொருள்)தலைவி ஊடல்கொண்டிருந்தபொழுது தான் குற்றமற்றவன் என்பதைக் கூறித் தலைவன் தலைவியின் ஊடலைப் போக்க நினைத்தான்.தலைவி ஊடல் நீங்கவில்லை. தலைவி கேட்கும்படி தன் நெஞ்சுக்குச் சொல்லியது. 'என் நெஞ்சமே! நெய் மிக்க உணவை உறவினர் உண்ணுமாறு செய்து,பறவைகளின் நிமித்தம் நன்றாக அமைய,வானம் நல்ல ஒளியுடன் விளங்க, திங்கள் உரோகினியுடன் சேரும் நாளில் திருமண இல்லத்தை அழகுப்படுத்தியிருந்தனர். இறையை வழிபட்டனர். மணமுழவுடன் மங்கல முரசுகள் ஒலித்தன.தலைவிக்கு மகளிர் மணநீர் ஆட்டினர்.தலைவியின் அழகை இமைமூடாமல் பார்த்து மகிழ்ந்தனர்.

அறுகம்புல்லின் கிழங்குடன் அமைந்த அரும்புகளுடன் சேரக்கட்டிய வெண்மையான காப்பு நூலை அணிவித்தனர். தூய திருமணப் புடைவையால் அழகுப்படுத்தினர். மழைபெய்தது போல் விளங்கும் தூய பந்தரில் இவளுக்கு உண்டான வியர்வையை நீக்கினர்.

இவளை நன்கொடையாக வழங்கிய முதல்நாள் இரவில் என் உயிருக்கு உடம்பாக அமைந்த இவள் உடல் முழுவதும் போர்த்தியதால் வியர்வைத் துளிகள் உடலில் தென்பட்டன. அவ்வியர்வைத் துளிகளை நீக்க காற்று வருவதற்கு வாய்ப்பாக ஆடையைத் திறவாய் எனச் சொல்லி அவள் முகத்தைப் பார்க்கும் ஆவலுடன் ஆடையைப் பற்றி இழுத்ததால் உறையிலிருந்து உருவப்பட்ட வாளைப் போன்று அவளின் அழகு விளங்கும் உடல் ஆடையிலிருந்து நீங்கியது. அவள் தன் வடிவம் மறைக்க அறியாதவள் ஆனாள். நாணமுற்றாள்.

தன் இருண்ட கூந்தலையே போர்வையாகக் கொண்டு மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து விரைவாக நாணங்கொண்டாள். வணங்கினாள். (முன் நிகழ்ந்தது இது). அத்தகையவள் நாம் பலமுறை எடுத்துச்சொல்லியும் ஊடல் நீங்காதவளாய் ஊடல் கொள்கின்றாளே! இனி இவள் நமக்கு என்ன உறவினள் எனத் தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறுவதாக இப்பாடல் அமைகின்றது.

பண்டைத்தமிழரின் திருமணமுறைகளை விளக்கும் அரிய பாடல்கள் இவை.

(அகநானூற்றுப் புலவர்களின் பட்டியலைப் பின்பு இணைப்பேன்)

கருத்துகள் இல்லை: