கருத்தரங்க ஆய்வுக்கோவை வெளியீடு
படத்தில்: சுநைதா நாதன்(Juanita Nathan), குமரகுரு, சண்முகராசா, செல்வநாயகி சிறிதாசு, மரு. இலம்போதரன், மு.இளங்கோவன், இல. சுந்தரம், இரா. அருள்தாசு
கனடாவில் தமிழ்ப் பெருங்குடிமக்கள் நலத்தோடும் வளத்தோடும் வாழ்ந்து வருகின்றனர். கனடா நாட்டின் அரசியல், வணிகம், கல்வி, மருத்துவம், ஊடகம் முதலிய துறைகளில் தமிழர்களின் பங்களிப்பு மிகுதி எனலாம். தமிழ்க் கல்வியும் கற்பிக்கப்பட்டு, பலரும் தமிழை ஆர்வமுடன் கற்றுவருகின்றனர். கனடாவில் ஆண்டுதோறும் சனவரி மாதம் தமிழ்ப் பண்பாட்டு மாதமாகக் கொண்டாடப்படுகின்றது (பொங்கல் திருவிழா சனவரியில் வருவதை நினைவிற்கொள்ளவும்). கனடாவில் இயங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகம் தமிழ்க் கல்விக்குப் பெரும் பங்காற்றியது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரும் இளங்கலை, முதுகலைத் தமிழ் இலக்கியம் பயில்வதற்குப் பெருந்துணையாக இருந்த அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் அண்மைக்காலமாகத் தொய்வு ஏற்பட்டதால் தமிழ்க்கல்வி கனடாவில் பாதிப்புற்றுள்ளது. இக்குறை விரைவில் சரிசெய்யப்படவேண்டும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்து மாணவர்களுக்குத் தொல்காப்பியம் நூல் ஆசிரியர்கள் வழியாக அறிமுகமாகியிருந்தது. 2016 (சூன் 4, 5 காரி, ஞாயிறு) ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளையின் கருத்தரங்கு, மாதக் கூட்டங்கள், ஆண்டு விழாக்களின் வழியாகத் தொல்காப்பிய அறிமுகம் இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை பரவலாக உள்ளது. இந்த நிலையில் தொல்காப்பியத்தை அடுத்த நிலைக்கு உயர்த்திப் பரப்பும் முயற்சியில் கனடா – தொல்காப்பிய மன்றத்தின் தலைவர் முனைவர் செல்வநாயகி சிறிதாசு அவர்களின் முயற்சியால் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக்கான கால்கோல் பணி தொடங்கப்பட்டது. அதன் காரணமாக கனடா உலகத் தொல்காப்பிய மன்றம், தமிழகத்தின் இலக்குவனார் இலக்கிய இணையத்தின் துணையுடன் பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டை 2024, செப்டம்பர் 20, 21, 22 ஆகிய மூன்று நாள்களில் நடத்தியது.
உலகு தழுவிய மாநாட்டை நடத்துவது எனில் பலரின் அறிவுரையும் வழிகாட்டலும், பெரும் பொருட்செலவும் இருக்கும் என்பது யாவரும் அறிந்த உண்மையே ஆகும். அவ்வகையில் முனைவர் செல்வநாயகி சிறிதாசு அவர்களின் தலைமையில் இயங்கிய அறிவார்ந்த குழு மாநாட்டுக்கான பெருந்திட்டமிடலுடன் மூன்று நாள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.
முதல் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2024 செப்டம்பர் 20, 21 ஆகிய இரண்டு நாளும் கனடா, இசுகாபுரோ நகரில் இசுகாபுரோ குடிமை நடுவத்தில் (Scarborough civic Centre) நடைபெற்றது. மூன்றாம் நாள் (செப். 22) மாநாட்டின் நிறைவு விழாவாகத் தமிழ்க் கலா மன்றத்தின் அரங்கில் நடைபெற்றது.
தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் ஆய்வரங்கம், சிறுவர் பேச்சு, கண்காட்சி, விநாடி வினா(சிறுவர்), விநாடி வினா(பெரியவர்), தமிழ்த்திறன் போட்டிகள், பரிசளிப்பு எனவும், சதிராட்டம், நடனம், குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகம், அன்பின் ஐந்திணைக் கவியரங்கம், பறையிசை, காத்தவராயன் கூத்து, தொல்காப்பியம் வில்லுப்பாட்டு எனவும் பல்வேறு வடிவங்களில் நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டு அனைவரையும் ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன.
முதல் நாள் நிகழ்ச்சி குற்றுவிளக்கேற்றலுடன் (குற்று=குத்து) தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா கீதம், மன்றப்பாடல், நாட்டுக்கு நன்றியுடன் நிகழ்வுகள் தொடங்கின. அஃகேனம் கலைக்குழுவின் பறையிசை ஒலிக்கப்பட்டது. குமரகுரு கணபதி பிள்ளை வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர் செல்வநாயகி சிறிதாசு அவர்கள் தலைமையுரை நல்கினார். அறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் இணையம் வழி தலைவர் உரையாற்றினார். முனைவர் இல. சுந்தரம் ஆய்வரங்க அறிமுகவுரையாற்றினார். மருத்துவர் இராமநாதன் இலம்போதரன் முதன்மை விருந்தினர் உரையை வழங்கினார். மருத்துவர் விசய் சானகிராமன் இணையம் வழியாக வாழ்த்துரை வழங்கினார். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் செயலாளர் முனைவர் மு. இளங்கோவன் தொல்காப்பியம் குறித்த சிறப்புரை வழங்கினார். தமிழ்த்திறன் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் நடன நிகழ்வுகளும் நடந்தன. நிகழ்ச்சியின் நிறைவில் கனடா - தொல்காப்பிய மன்றத்தின் செயலாளர் சண்முகராசா சின்னதம்பி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
தொல்காப்பியக் கண்காட்சியை முனைவர் செல்வநாயகி சிறிதாசு முன்னிலையில், மருத்துவர் இரகுராமன் திறந்துவைத்தார். முனைவர் மு.இளங்கோவனின் முயற்சியால் தொல்காப்பியம் குறித்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் தொல்காப்பிய ஆவணங்களை ஆர்வமுடன் கண்டுகளித்தனர். ஓலைச்சுவடி முதல் இன்றைய இணையத்திரை வரை தொல்காப்பிய ஆவணங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
கண்காட்சி அரங்கினை ஊடகத்தினர் காணொலி வழியாக மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தினர். உதயன் உள்ளிட்ட இதழ்களில் மாநாட்டுச் செய்திகள் சிறப்பாக வெளியிடப்பட்டன. பேராளர்கள் கண்காட்சி அரங்கில் நின்று படம் எடுத்து மகிழ்ந்தனர். கண்காட்சி அமைப்பில் தொல்காப்பிய மன்றத்தின் துணைத்தலைவர் வல்லிபுரம் சுகந்தன், முனைவர் இரா. அருள்ராசு, “கணியம்” த. சீனிவாசன் உள்ளிட்டோர் பெரும்பங்களிப்பு நல்கினர்.
முதல் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டிற்கு வந்திருந்த கட்டுரைகளில் 64 ஆராய்ச்சிக் கட்டுரைகள் அறிஞர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றுள் 21 கட்டுரைகள் நேரில் படிக்கப்பட்டன (21/27). இணையம் வழியாக 25 கட்டுரைகள் படிக்கப்பட்டன (25/37). தொல்காப்பிய அரங்கில் முதன்மை நிகழ்வுகள் நடைபெற்றன. இளம்பூரணர் அரங்கம், சேனாவரையர் அரங்கம், நச்சினார்க்கினியர் அரங்கம், பேராசிரியர் அரங்கம், தெய்வச்சிலையார் அரங்கம், கல்லாடனார் அரங்கம் ஆகிய அரங்குகளில் முனைவர் மைதிலி தயாநிதி, சண்முகலிங்கம் கந்தையா, முனைவர் பார்வதி கந்தசாமி, முனைவர் இல.சுந்தரம் ஆகியோர் தலைமையில் ஆய்வரங்குகள் சிறப்பாக நடைபெற்றன.
நிறைவு நாள் நிகழ்வில் கனடாவுக்கான இந்தியத் தூதர் சித்தார்த் நாத்து கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில் கலந்துகொண்ட பேராளர்களுக்கு மாநாட்டு மலர், சான்றிதழ், தொல்காப்பியர் சிலை உள்ளிட்ட நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. மூவேளையும் உணவு வழங்கப்பட்டன. குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகளைத் தொடங்கியும் குறித்த நேரத்தில் முடித்தும் நிகழ்வுகள் தரப்படுத்தப்பட்டன. தொண்டர்கள் தொல்காப்பிய மாநாட்டின் வெற்றிக்கு மிகச் சிறந்த பங்களிப்பை நல்கினர்.
முனைவர் செல்வநாயகி சிறிதாசு அவர்களும் தொல்காப்பியத் தொண்டர்களும் இணைந்து மூன்றுநாள் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டை நடத்தி, கனடா நாட்டில் தொல்காப்பியப் பயிர் வேர்பிடிக்க வழிசெய்துள்ளனர்.
தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினைக் கனடிய மண்ணில் முதன்முதல் நிகழ்த்திக் காட்டிய வகையில் முனைவர் செல்வநாயகி சிறிதாசு அவர்களின் பெயர் என்றும் உலகத் தமிழர்களால் நினைவுகூரப்படும்.
கண்காட்சியைப் பார்வையிடும் ஆர்வலர்கள்
கலைநிகழ்ச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக