ஆய்வறிஞரும் அகராதியியல் துறை வல்லுநருமான பேராசிரியர் கு. சிவமணி (வயது
89) அவர்களுக்குத் தமிழ்நாட்டு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் வழங்கப்படும் தேவநேயப் பாவாணர் விருதினைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்விருது முதன்முதல்
கு.சிவமணி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
தேவநேயப்
பாவாணர் விருது என்பது ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கப்பதக்கம் அடங்கியது.
தமிழ்நாட்டு முதலமைச்சரால் விரைவில் நடைபெற
உள்ள அரசு விழாவில் இவ்விருது வழங்கப்பட உள்ளது.
பேராசிரியர்
கு. சிவமணி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இந்திய அரசுக்காக தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் சார்பில் தமிழில் மொழிபெயர்த்த
பெருமைக்குரியவர். மேலும். புதுவை அரசுக்காக 1391 பக்கத்தில் இவர் உருவாக்கிய சட்ட-
ஆட்சியச் சொற்களஞ்சியம் இவர்தம் வாழ்நாள் சாதனைப் பணியாகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
தமிழ் பயின்ற பேராசிரியர் கு. சிவமணி, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் புலவர் கல்லூரியில்
முதல்வராகவும், பாபநாசம் திருவள்ளுவர் கலைக் கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றியவர்.
குமாரபாளையம் அரசினர் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சிக்குப் பொறுப்பாசிரியராக
இருந்து 1500 - க்கும் மேற்பட்ட நல்லாசிரியர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். தொல்காப்பியம், சங்க இலக்கியம் சார்ந்த ஆய்வு நூல்களை
ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதிய பெருமைக்குரியவர். பல்லாயிரம் தமிழ் மேடைகளில் தமிழ்ச் சிறப்பு குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும்
உரையாற்றியவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வறிஞராகவும் பணி செய்த
பெருமைக்குரியவர்.
தேவநேயப் பாவாணர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கு. சிவமணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றம், புதுச்சேரி இலக்கிய வட்டம் உள்ளிட்ட தமிழமைப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பேராசிரியர் கு. சிவமணி அவர்களின் தமிழ் வாழ்க்கையை அறிய இங்குச் சொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக