நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 4 ஜூலை, 2020

தமிழிசைத் துறைக்கு ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு – சிறப்புரை



 ஆபிரகாம் பண்டிதர்

     கருணாமிர்த சாகரம் என்ற தமிழிசை ஆய்வு நூலினை உருவாக்கித் தந்தவரும், தமிழிசை ஆய்வுக்கு ஏழு இசை மாநாடுகளைத் தம் பொருட்செலவில் நடத்தியவரும், பரோடாவில் 1916 இல் நடைபெற்ற அனைத்து இந்திய இசை மாநாட்டில் சுருதிகள் குறித்து, மூன்று மணிநேரம் உரையாற்றியவருமான தஞ்சையில் வாழ்ந்த ஆபிரகாம் பண்டிதரின் வாழ்வியலையும், தமிழிசைப் பணிகளையும் முழுமையாக அறிந்துகொள்ள கடந்த இரு கிழமையாக உழைத்தேன். பல நூல்களைப் பயின்றேன். அறிஞர்கள் பலரிடம் உரையாடி மேலதிக விவரங்களைப் பெற்றேன். இசைமேதை வீ..கா.சுந்தரம் அவர்களிடம் பெற்ற பயிற்சி இந்த நேரத்தில் மிகுதியும் உதவியாக இருந்தது.

     கருணாமிர்த சாகரத்தைக் கற்று அதில் இடம்பெறும் இசைநுட்பங்களை அறிந்துகொள்ள முயன்றேன். தமிழ்க் கடல் மறைமலையடிகளார், தமிழ்த் தாத்தா .வே.சாமிநாதையர் உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள்  உள்நுழைய இடர்ப்பட்ட இந்த நூலைப் பயிலத் தொடங்கிய பொழுதுதான் இதன் மேன்மை புலப்பட்டது. தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், தெலுங்கு உள்ளிட்ட மொழி, இலக்கிய அறிவும், இசை அறிவும், இசைக்கருவிகள் குறித்த அறிவும், தாள அறிவும், சோதிட அறிவும், கணக்கு அறிவும்,  தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், பரத சாத்திரம், சங்கீத இரத்தினாகரம் உள்ளிட்ட நூல்களில் பேரறிவும், தியாகையர் பாடல்களில் பயிற்சியும் இருந்தால்தான் கருணாமிர்த சாகரத்தை விளங்கிக் கொள்ள இயலும் என்பது புலனாயிற்று. குறிப்பாக சிலப்பதிகாரம் அடியார்க்குநல்லார் உரையைக் கற்றுத் தேர்ந்தவர்களுக்கே கருணாமிர்த சாகரம் விளங்கும் என்பது என் நம்பிக்கை.

     அவ்வகையில் கருணாமிர்த சாகரக் கடலை நோக்கி அடியெடுத்து வைத்த எனக்குக் கரையோரத்தில் சில முத்துகள் கிடைத்தன. எடுத்துக் கோர்த்து, சற்றொப்ப ஒருமணி நேரம் சிறப்புரையாக அமைத்துள்ளேன். என் சிறு முயற்சியை ஊக்கப்படுத்துமாறு இசையார்வலர்களையும், தமிழறிஞர்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.

     திருநெல்வேலி, சாராள் தக்கார் கல்லூரியின் (தன்னாட்சி), தமிழ்த்துறை சார்பில் ஏற்பாடு செய்த இணையவழித் தேசியக் கருத்தரங்கிற்காக அமைக்கப்பட்ட இவ்வுரை 04.07.2020, காரிக்(சனி) கிழமை முதல் யூடியூப் முகவரியில் அனைவரும் காணலாம். வாய்ப்பு நல்கிய சாராள் தக்கார் கல்லூரியின் முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர்கள், மாணவிகள் என அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

                                          கருத்துரையைக் கேட்க

கருத்துகள் இல்லை: