நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 24 மே, 2020

பொற்கோவின் வாழ்க்கைப் பாதை!




 பேராசிரியர் பொற்கோ அவர்களின் வாழ்க்கை வரலாறு,பொற்கோவின் வாழ்க்கைப் பாதை” என்ற தலைப்பில் 2018 ஆம் ஆண்டில் 446 பக்கம் கொண்ட நூலாக வெளிவந்தது. நீண்ட நாட்களாகப் படிப்பதற்கு எடுத்து வைத்திருந்த இந்த நூலினை இப்பொழுதுதான் படிக்க முடிந்தது. தனிப்பட்ட ஒருவரின் வரலாறாக இல்லாமல் இந்த நூல் தமிழகத்து ஆளுமைகள் பலரைக் குறித்த செய்திகளையும் தாங்கி நிற்கின்றது. தமிழகத்தின் கல்வி வரலாறாகவும் மலர்ந்துள்ளது. இலண்டனில் தமிழ் தழைத்த வரலாற்றையும் இந்த நூல் வழியாக அறிந்துகொள்கின்றோம். தமிழகத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களின் எழுச்சி, தேக்க நிலைகள் யாவும் இந்நூலில் பதிவாகியுள்ளன.

 முந்திரிக் காடுகள் நிறைந்த செம்மண் நிலமான இரும்புலிக்குறிச்சி (உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம்)  என்ற சிற்றூரில் உழவர் குடியில் பிறந்து, திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று, இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைக் கலையியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் (SOAS) நிறுவனம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய பொற்கோவின் பனிமலை நிகர்த்த வாழ்க்கை வரலாறு இந்த நூலில் அருமையாகப் பதிவாகியுள்ளது.

 இலண்டனில் பணிபுரிந்தபொழுது இலண்டன் தமிழ்ச்சங்கம், இலண்டன் முரசு (இதழ்), பி.பி.சி. தமிழோசை உள்ளிட்ட அமைப்புகளின் வளர்ச்சிக்குத் துணை நின்றுள்ளார். கீழைக் கலையியல் நிறுவனத்தில் இவர் தமிழ் கற்பித்த முறை, ஐரோப்பிய நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. இங்கு இவர் உருவாக்கிய பாடத்திட்டமே இன்றும் பயன்பாட்டில் இருப்பதை அறிந்து நமக்குப் பெருமையே ஏற்படுகின்றது. அதுபோல் ரெடிங் பல்கலைக்கழகத்திலும் இவரின் கல்விப்பணி நீண்டு அமைந்தமையை எண்ணும்பொழுது வியப்பு மேலிடுகின்றது. இலண்டன் பணியைத் துறந்து, தாய்நாட்டுக்குத் தம் அறிவு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் திரும்பிய இவருக்கு அமைந்த வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை அறியும்பொழுது இவர்தம் படிநிலை வளர்ச்சி நேர்மையான நிலையில் அமைந்தமை சிறப்பாக எண்ணத்தக்கது.

 பேராசிரியர்கள் மால்கம் ஆதிசேஷையா, ஜி.ஆர். தாமோதரனார். நெ.து. சுந்தரவடிவேலு, தொ.பொ.மீனாட்சிசுந்தரம், மு.வ. ச.அகத்தியலிங்கம், சுசுமு ஓனோ, ஜான் இரால்ஸ்டன் மார் உள்ளிட்ட அறிஞர்கள் இவரின் வாழ்வில் கொண்டிருந்த தொடர்புகள் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

 பேராசிரியர் பொற்கோ அவர்கள் தமிழகத்தின் மிகச் சிறந்த பேராசிரியர்; மொழியியல் அறிஞர். ஆளுமைத் திறம் கொண்ட துணைவேந்தர். இதழாசிரியர். பேச்சாளர். ஆய்வாளர். கல்வியாளர். பகுத்தறிவுச் சிந்தனையாளர். மாந்தநேயம் கொண்டவர். கல்வி, சமூக மேம்பாட்டுக்கான செயல்திட்டங்களை உருவாக்கி, நடைமுறைப்படுத்தியவர். தமிழக அரசு, தமிழகப் பல்கலைக்கழகங்கள் சார்ந்த பல பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு உழைத்தவர். இவரின் நெறிகாட்டலில் பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அமெரிக்க, ஐரோப்பிய, தென்னாப்பிரிக்க, மலேசிய, சிங்கப்பூர், சப்பான், மொரீசியசு உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகைபுரிந்து இவரிடம்  தமிழ் கற்ற மாணவர்களின் எண்ணிக்கை கணக்கற்று நீளும்.

 சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளிலும் இவரின் கல்விப்பணி நீண்டிருந்தது.

 தமிழகத்தின் கல்வி அமைப்புகள், தமிழமைப்புகளின் அழைப்பில் சென்று உரையாற்றித் தமிழாய்வு தழைக்க உழைத்தவர். தமிழகத்து அரசியல் தலைவர்களுடன் இணைந்து பணிபுரிந்த பேறு பெற்றவர். இக்கால இலக்கணம் கண்டவர்; திருக்குறளுக்கு உரைவரைந்தவர்; தொல்காப்பிய அறிமுகம் நூல் தந்தவர். ஆய்வியல் அறிமுகத்தைப் பயிற்றுவித்தவர். பிறமொழி மாணவர்கள் தமிழ் கற்க உதவும் நூல்களை ஆங்கிலத்தில் வரைந்தவர். இவர்தம் நீண்ட நெடிய வரலாற்றினைத் தாங்கி நிற்கும் பொற்கோவின் வாழ்க்கைப் பாதை நூல் தமிழுணர்வாளர்கள் கற்றுப் பாதுகாக்க வேண்டிய கருத்துக் கருவூலம். செய்திகளின் பெட்டகம்.

 இந்த நூலில் பொற்கோவின் கல்விப் பயணம், பயிற்றுவித்த ஆசிரியர்கள், துணை நின்ற நண்பர்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய பட்டறிவுகள், பொதுப்பணியில் ஈடுபட்ட நினைவுகள், நூலாக்கப் பணிகள், இதழ் வெளியீட்டுப் பங்களிப்பு, குடும்ப வாழ்க்கை, தந்தை பெரியார், தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார், அறிஞர் வே.ஆனைமுத்து உள்ளிட்டோருடன் அமைந்த தொடர்புகள் யாவும் நிரல்பட எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

 முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க  மூத்த மொழியியல் அறிஞர் பொற்கோ அவர்களின் வாழ்க்கை வரலாறு விளக்கும் அரிய நூலினைக் கற்ற பிறகு நெஞ்சம் அமைதியில் திளைத்தது. உழைப்பும் நேர்மையும் ஒருவனை உயர்த்தும் என்ற நம்பிக்கை வேர்கொண்டது. உள்ளங் கவர்ந்த இந்த நூலினை முன்மொழிவதில் மகிழ்கின்றேன்.


கருத்துகள் இல்லை: