பேராசிரியர் சு. பசுபதி
கனடாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான டொராண்டோ
பல்கலைக்கழகத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மின்னியல்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி
ஓய்வுபெற்ற பேராசிரியர் சு. பசுபதி அவர்களைச்
சற்றொப்ப பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் நன்கு அறிவேன். இவர்தம் யாப்புத்துறை ஈடுபாடே
இவர்மேல் மிகுந்த மதிப்பு எனக்கு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது. கவிதை இயற்றிக்
கலக்கு என்ற தலைப்பில் இவர் இயற்றிய கட்டுரைகளைக் கண்டு அக்காலங்களில் வியப்புற்றேன்.
தொடர்ந்து இவர்தம் பல்துறைக் கட்டுரைகளைப் படித்து மகிழ்ந்ததுண்டு. மின்னஞ்சலில் நட்பு
வளர்பிறைபோல் வளர்ந்தது. அதனால் ஈராண்டுகளுக்கு முன்பாகக் கனடா சென்றபொழுது பேராசிரியர்
அவர்களை நானும் திரு. சிவம் வேலுப்பிள்ளை அவர்களும் தனித்துச் சந்தித்து உரையாடும்
வாய்ப்பும், பல நிகழ்ச்சிகளில் கண்டு உரையாடும் வாய்ப்பும் எங்களுக்கு அமைந்தன. தொடர்ந்து
மின்னஞ்சலில் தொடர்புகொண்டு வேண்டிய விவரங்களைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
பேராசிரியருடன் பழகியதிலிருந்து அவர்தம் பல்துறைப் புலமையை அறிந்துகொள்ள முடிந்தது.
அவர்தம் தமிழ்ப்பணியும், கல்விப்பணியும் தமிழகத்தார் அறிய வேண்டுவன.
பேராசிரியர் சு. பசுபதி, சென்னையில் 1940 செப்டம்பர்
21 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர்: ஜெயலட்சுமி, வாங்கல் எம். சுப்பராயன் ஆவர். சு. பசுபதியின் இளமைக்கல்வி சென்னை இராமகிருஷ்ண மிஷனில் அமைந்தது.
சு. பசுபதி சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிண்டிப்
பொறியியல் கல்லூரியில் படித்துத் தொலைத்தொடர்புத் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்
(1963). இவர் சென்னை ஐ.ஐ.டியில் முது தொழில்நுட்பம் (எம்.டெக்) படித்தவர் (1966). அமெரிக்காவின்
ஏல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு பட்டம் பெற்றவர்(1972).
1972 முதல் 2006 வரை டொராண்டோ பல்கலைக்கழகத்தில் மின்னியல்
கணினித்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தகைசார் பேராசிரியராக அப்
பல்கலைக்கழகத்தில் பணியைத் தொடர்பவர்.
சென்னை ஐ.ஐ.டி-யில் பயின்றபொழுது நோபல் பரிசு விஞ்ஞானி சி.வி. இராமன் அவர்களின் திருக்கையால் பரிசு பெற்ற பெருமைக்குரியவர் (1966). 2010-இல் சென்னை ஐ.ஐ.டி-யின் புகழ்பெற்ற பழைய மாணவருள் ஒருவராய்த் (Distinguished
Alumnus Award) தேர்வு செய்யப் பெற்றவர்.
1951- இல் பரலி சு. நெல்லையப்பர், நாரண. துரைக்கண்ணன் போன்றோரின் முன் தொடங்கப்பெற்ற பாரதி கலைக்கழகத்தின் (சென்னை -1) வாழ்நாள் உறுப்பினர் இவர்.
பேராசிரியர்
சு. பசுபதி அவர்களின் துணைவியார் பெயர் ஜெயா பசுபதி ஆகும். இவர்களுக்கு வாணி என்ற ஒரு
மகள் உண்டு.
‘சந்தவசந்தம்’ இணையக் கவிதைக் குழுமத்தில் பல ஆண்டுகளாகக்
கவிதைகள், யாப்பிலக்கண விளக்கங்கள் எழுதிவருபவர். டொராண்டோவில் 2006 - இல் நடந்த திருமுறை மாநாட்டில் “நாயன்மார்கள்” கவியரங்கம், 2016 - இல் நடந்த தொல்காப்பியக் கவியரங்கம் ஆகியவற்றிற்குத் தலைமை வகித்து
நடத்தியவர். கனடாவில் நடைபெறும் தமிழ் இலக்கியம்
சார்ந்த நிகழ்வுகளில் ஆர்வமாகக் கலந்துகொண்டு, தம் பங்களிப்பை நல்குபவர்.
பேராசிரியர்
சு. பசுபதி அவர்களுக்குத் தமிழிலும் இசையிலும் நல்ல ஈடுபாடு உண்டு. இத்துறை சார்ந்த
பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
1. கவிதை
இயற்றிக் கலக்கு,(இரண்டாம் பதிப்பு, அச்சில்). 2. சங்கச் சுரங்கம் – 1,3.. சங்கச் சுரங்கம் - 2, 4.சொல்லயில் (சொல்+
அயில் = சொல்லயில்; அயில் = கூர்மை/வேல்) இவர்தம் தமிழ்க் கொடையாகும்.
கவிதை இயற்றிக் கலக்கு: நூல் அறிமுகம்
மின்னணுவியல் துறையில் பணிபுரிந்தாலும் தமிழின்மேல்
பேராசிரியர் சு. பசுபதி அவர்களுக்கு மிகுந்த பற்று உண்டு. குறிப்பாகத் தமிழ் யாப்பு
சார்ந்து மிகுதியும் எழுதியவர். முறையாக வகுப்பெடுத்துத் தமிழ் யாப்பிலக்கணங்களை மாணவர்களுக்கு
விளக்கியவர். பல்கலைக்கழகத்தில் தம் பணிகளுக்கு இடையே இவர் பிறதுறை மாணவர்களுக்குத்
தமிழ் யாப்பிலக்கணங்களின் அடிப்படைகளைப் புரியவைத்து, பலரை மரபுப்பாடல் புனைய வைத்தவர்.
யாப்பு என்றால் அஞ்சியோடும் கூட்டத்தை அன்பொழுக அழைத்து, அவர்களுக்கு எழுத்து, சீர்,
அசை, சீர், தளை, அடி, தொடை பயிற்றுவிக்கும் பணியை ஈடுபாட்டுடன் செய்தவர்.
பேராசிரியர்
சு. பசுபதி இணையக் குழுக்களில் தம் யாப்பிலக்கணக் கருத்துகளை எழுதியதால் உலகம் முழுவதும்
பலர் பேராசிரியர் பசுபதியிடம் ஐயங்களை எழுப்பித் தெளிவுபெற்றுள்ளனர். அந்த வகையில்
கவிதை இயக்கிக் கலக்கு என்ற தலைப்பில் ஆறாண்டுகள் பல்வேறு நிலைகளில் எழுதிய கட்டுரைகள்
தொகுக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டில் இந்த நூலை வெளியிட்டுள்ளார். 384 பக்கங்களைக் கொண்ட
இந்த நூல், யாப்பிலக்கணங்களை எளிமையாகப் புரியவைக்கும் நூல். தேவையான விளக்கங்களும்
எடுத்துக்காட்டுகளும் பயிற்சிகளும் இந்த நூலில் இருப்பதால் யாப்பு ஆர்வலர்களுக்கு இந்த
நூல் மிகச் சிறந்த கையேட்டு நூலாகும்.
பேராசிரியர் சு. பசுபதி, யாப்பிலக்கணம் குறித்த
தம் கட்டுரைகளை உருவாக்கும் முன் தம் காலத்திற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த அனைத்துவகையான
இலக்கண நூல்களையும் ஆழமாகக் கற்று, தக்கவாறு சிந்தித்து யாப்பிலக்கணத்தை எளிமைப்படுத்தி
இந்த நூலில் வழங்கியுள்ளார்.
கவிமாமணி இலந்தை சு. இராமசாமியார், பேராசிரியர்
வே.ச.. அனந்தநாராயணன் ஆகியோர் வழங்கியுள்ள முன்னுரையில் நூலாசிரியர் பற்றியும் நூலின்
உருவாக்கம் பற்றியும் அரிய குறிப்புகள் பல கிடைக்கின்றன.
கவிதை இயற்றிக் கலக்கு என்ற இந்த நூல் இரண்டு
பகுதியாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் அறிமுகம், கவிதை உறுப்புகள், எழுத்துகள், நேரசை,
நிரையசை, பாடலை அலகிடுதல், சீர்கள், தளை, அடி, ஓசை, தொடை - 1, தொடை- 2, குறள்வெண்பா:
முதலடி, வெண்பாவின் ஈற்றடி, அலகிடுதல் சில நுண்மைகள், குறள் வெண்செந்துறை, ஆசிரியப்பா,
வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம், கலிவிருத்தம், தரவு கொச்சகக் கலிப்பா, ஆசிரியத் தாழிசை,
கலித்தாழிசை, வெண்பா 1, வெண்பா 2, வெண்பா 3, கலித்துறை 1, கலித்துறை 2, கட்டளைக்கலித்துறை,
அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், கட்டளைக் கலிப்பா, வஞ்சிப்பா,
கலிப்பா 1, கலிப்பா 2, கலிப்பா 3, மற்ற சில பாவினங்கள் என்ற தலைப்பில் அமைந்து ஒவ்வொரு தலைப்பிலும் பொருத்தமான செய்திகள்
விளக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாகக் கட்டளைக்கலித்துறை-1 என்ற
தலைப்பில் பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் கட்டளைக்கலித்துறையின் வரலாற்றை நமக்குக்
கொண்டு வந்து காட்டுகின்றார். காரைக்காலம்மையார்தான் முதன்முதல் இந்த வடிவத்தைப் பயன்படுத்தியுள்ளார்
என்கின்றார் (பக்கம் 149). காரிகை என்று இதற்கு வேறுபெயர் உண்டு என்கின்றார் பக்திக்
காலத்தில் திருவிருத்தம் என்று கட்டளைக் கலித்துறை அழைக்கப்பட்டதை நினைவூட்டுகின்றார்.
இலங்கை நாட்டு அறிஞர்கள் குமாரசாமிப் புலவர், தாமோதரம் பிள்ளையின் பரிந்துரைகளை எடுத்துக்காட்டுகின்றார்.
பட்டினத்தார் தொடங்கி, பாரதி, கவிமணி பாடிய கட்டளைக் கலித்துறைகளை மேற்கோளாக எடுத்தாள்கின்றார்.
கட்டளைக் கலித்துறையில் பின்பற்றப்படும் விதிகளை அடுக்கிக் காட்டுகின்றார். இவ்வாறு
ஒரு பாத்துறைக்கு விளக்கம் தர எடுத்துள்ள முயற்சியே
நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இத்தகு செயற்கரிய செயல் செய்ய வேண்டுமெனில் துறைசார்
ஈடுபாடு இருந்தால் மட்டுமே இயலும். அந்த வகையில் பேராசிரியர் பசுபதியின் யாப்புத்துறைப்
பணி அனைவராலும் போற்றப்படும்.
கவிதை இயற்றிக் கலக்கு நூலின் இரண்டாம் பகுதியில்
சந்தப் பாக்கள், சந்த வஞ்சித்துறை, சந்த வஞ்சி விருத்தம், சந்தக் கலிவிருத்தங்கள்-1,
சந்தக் கலிவிருத்தங்கள்- 2, சந்தக் கலித்தாழிசை,
சந்தக் கலித்துறை, சந்த அறுசீர் விருத்தம், சந்த எழுசீர் விருத்தம், சந்த எண்சீர் விருத்தம்,
விருத்தங்களின் ஒன்பது, பத்து, பதினொரு சீர்கள், பன்னிரு சீர், பதினான்கு சீர், பதினாறு
சீர்கள், பரணித் தாழிசை, வண்ணப்பாடல்கள் - 1, வண்ணப்பாடல்கள் - 2, வண்ணப்பாடல்கள் - 3, சிந்துகள், கும்மி, சிந்துகள்
- 2, கிளிக்கண்ணி, சிந்துகள் - 3, இசைப்பாடல், முடிவுரை என்ற வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.
நான்கு வகைப் பெரும்பாக்களையும், அதன் பிரிவுகளையும்,
பிற்காலத்தில் கிளைத்தெழுந்த சிந்துப்பாக்கள், வண்ணப்பாக்கள், கண்ணி, கும்மி ஆகியவற்றையும்
பெரும்பாடுபட்டு அறிமுகம் செய்துள்ள பேராசிரியர் சு. பசுபதி அவர்களுக்குத் தமிழறிஞருலகம்
மிகுந்த நன்றிக் கடன்பட்டுள்ளது.
கல்லூரியில்
யாப்பிலக்கணம் பயிலும் மாணவர்களுக்கு இந்த நூலைப் பேராசிரியர்கள் அறிமுகம் செய்யலாம்.
வெளியீடு:
எல்.கே.எம் பப்ளிகேஷன்
எல்.கே.எம் பப்ளிகேஷன்
புது எண் 33, ரங்கன் தெரு,
( பழைய GRT அருகில் .
தெற்கு உஸ்மான் சாலை )
தியாகராய நகர்,
சென்னை -600017
சு. பசுபதியின்
படைப்புகளை அறிய:
இணையக் குழுமம்: https://groups.google.com/forum/?hl=en#!forum/yappulagam
வலைப்பூ: http://s-pasupathy.blogspot.com/
படங்கள் உதவி: சிவம் வேலுப்பிள்ளை(கனடா)
1 கருத்து:
நல்ல பேராசிரியரை அறிமுகப்படுத்திய விதம் நன்றி. அறிஞர்களை அறிமுகப்படுத்துகின்ற தங்களின் இத்தகைய போற்றுதற்குரிய பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
கருத்துரையிடுக