"அன்புடன்" புகாரி
இணையப் பெருவெளியில் இயங்குபவர்களுக்கு ’அன்புடன்’
புகாரி என்ற பெயர் அறிமுகமான பெயராக இருக்கும். "அன்புடன்" இணையக்குழு, "அன்புடன்
புகாரி" வலைப்பதிவுகளால் இவருக்கு "அன்புடன்" என்னும் முன்னொட்டானது
புகழ்ப்பெயராக ஒட்டிக்கொண்டது. கடந்த ஆண்டு (2016) கனடா சென்றபொழுது நினைவில் குறித்துவைத்துக்கொண்டு
நான் சந்தித்த நண்பர் ’அன்புடன்’ புகாரி ஆவார். இவரைப் பற்றி எழுதுவதற்கு நிறைவான செய்திகள்
உள்ளன. இணையம் வழியாக அறிமுகமான எத்தனையோ நல்ல நண்பர்களில் புகாரியைக் குறிப்பிட்டுச்
சொல்ல வேண்டும். உடன்பிறந்தாரைப் போல் ஒன்றுகலந்து, பழகிய அவரின் நினைவுகள், ஆண்டு ஒன்று
கடந்தாலும் அலை அலையாய் எழுந்து வந்து செல்கின்றன.
நான் கனடாவுக்கு வந்திருப்பதை நண்பர் புகாரிக்குத்
தெரிவித்து, சந்திக்க விரும்புவதைச் சொன்னவுடன் எனக்காக உரிய நாளும் நேரமும் ஒதுக்கிக்
காத்திருந்தார். நானும் அண்ணன் சிவம் வேலுப்பிள்ளை அவர்களும் புகாரி அவர்களின் இல்லம்
சென்றோம். அவரின் உள்ளம் போலவே வீடும் செய்நேர்த்தியுடன் இருந்தது. வளமனை போன்று பரந்து
விரிந்திருந்த அவரின் இல்லத்தில் நுழைந்தவுடன் குடும்பத்தினர் அனைவரும் அன்பொழுக வரவேற்றனர். நண்பர் சுதர்சன் அவர்களும் உடன் இருந்தார். வழக்கமான நலம் வினவலுக்குப் பிறகு புகாரி அவர்களின் கவிதைப் பணியை அறிந்து வியந்தேன்.
கவிதை நூல்கள் பலவற்றைக் கண்முன் வைத்தார். அவர்தம் நூல்கள் ஒவ்வொன்றும் வெளிவந்த சூழலை
எங்களுடன் ஆர்வமாகப் பகிர்ந்துகொண்டார். திருக்குறளுக்கு இவர் புதுக்கவிதை வடிவில்
புதிய விளக்கவுரை வரைந்துள்ளதைப் படித்து உள்ளம் பூரிப்படைந்தேன். தம் நூல் வெளியீட்டுப்
பணிகளைப் பற்றி எடுத்துரைத்தார். கவிதைத்துறையில்
கால்பதித்ததையும் தம் பங்களிப்பையும் அடக்கத்துடன் எடுத்துரைத்தார். தகவல் தொழில்நுட்பப்
பொறியாளரின் உள்ளத்தைத் தமிழும் கவிதையும் ஆட்சிசெய்வதை அறிந்துகொண்டேன்.
பலமணி நேரம் அமைந்த எங்கள் உரையாடலை முறைப்படுத்தி,
என்னுடன் ஒரு நேர்காணலைப் புகாரி அமைத்தார். அனைத்தையும் பதிவுசெய்து கொண்டோம். என்
நாட்டுப்புறவியல் துறை ஈடுபாட்டையும் ஆவணப்பட முயற்சிகளையும், தமிழ் கற்ற வரலாற்றையும்
அந்த நேர்காணலில் குறிப்பிட்டதாக நினைவு. எங்கள் உரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கும்பொழுதே
பழங்களும் பண்ணியங்களும் பரிமாறப்பட்டன. புகாரி அவர்களின் துணைவியாரும் குழந்தைகளும்
சில மணிப்பொழுதில் எங்களுக்கான இனிய புலால் உணவைச் செய்துவைத்துக் கொண்டு விருந்துண்ண
அன்பொழுக அழைத்தனர். நாவை அடிமைப்படுத்தும் சுவையும், பரிந்து விருந்தோம்பிய பாங்கும்
என் வாழ்வில் என்றும் பசுமையாக நிலைத்திருக்கும். அவர்களின் மத ஒழுங்குகளையும் கடந்து
வந்து, நட்புக்கு அவர் தந்த முதன்மையை நன்றியுடன் என்றும் நான் போற்றுவேன்.
புகாரியின் படைப்புகளில் அகச்செய்திகள் அதிகமாக
இடம்பெற்றிருக்கும். உலக நடப்புகளை உற்றுநோக்கி எழுதிய பாக்களும் கணக்கின்றி உள்ளன.
பொருத்தமான சொல்லாட்சிகளைப் பொருத்திக் கவிதை புனைவதில் இவர் உவமைக்கவிஞர் சுரதா போல
நுட்பமாகச் செயல்படுபவர். அகமும் புறமும் உள்ளடக்கமாக அமைந்த இவரின் பாட்டுப் பனுவல்கள்
அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படவேண்டும் என்று அவாவுகின்றேன்.
"கனிவான
உன்முகத்தைக்
கண்ணீரில்
மூழ்கவிட்டு,
வெந்நீரில்
விழும்புழுவாய்
வெளிநாடு
புறப்பட்டேன்!" (அன்புடன் இதயம், பக்கம், 84)
என்று
மனைவியைப் பிரிந்து வெளிநாடு செல்லும் குடும்பத் தலைவர்களின் தேசியகீதம் போன்ற வரிகளைப்
படித்துப் புகாரியின் கவிதை உள்ளத்தைக் கண்டுகொண்டேன்.
போரால்
உலகம் அமைதியிழந்து வருவதை கண்டு,
ஏழை
வயிற்றின்
கூழைப்
பறித்தெடுத்தே
ஏவுகணைகள்
ஆயிரம்
செய்கின்றாய்!
பாலைவனத்தின்
எண்ணைய்க்
கிணறுகளில்
தீயைமூட்டி
நாசம்
செய்கின்றாய்...
உலகம்
எங்கும்
அழுகுரல்
எழுகிறதே
ஓநாய்க்
காதுகளோ?
நிலவும்
வானும்
நிம்மதி
கேட்கிறது
நிறுத்து
மனிதா
நிறுத்து
யுத்தத்தை! (அன்புடன் இதயம், பக்கம் 49)
என்று
உலகச் சிந்தனை கொண்ட உயரிய கவிஞராகப் புகாரி தெரிந்ததால் அவரின் பணிகளை அனைவருடனும்
பகிர்ந்துகொள்ள நினைத்தேன்.
"அன்புடன்" புகாரி போலும் எத்தனையோ
தமிழார்வலர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். பிற துறைகளில் பணியாற்றினாலும்
அவர்கள் தமிழை நேசிப்பதில் தயங்கியவர்கள் இல்லை. அவர்களின் தமிழார்வமும், தமிழ் வாழ்க்கையும்
பதிவுசெய்யப்பெற வேண்டும். அவர்களின் எழுத்துப்பணிகளும், எதிர்காலக் கனவுகளும் மக்களுக்கு
அறிமுகம் செய்யப்பெற வேண்டும். வாழ்க்கையோட்டத்தின் இடையிலும் தம் மொழி, இனம், நாடு
குறித்துச் சிந்திக்கும் நம்மவர்களை நம் இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்துவைக்கவேண்டும்.
அந்த வகையில் கனடாவில் வாழும் அன்புடன் புகாரியின் தமிழ் வாழ்க்கையை இந்தப் பதிவில்
எழுதுகின்றேன்.
உலகத் தொல்காப்பிய மன்றக் கவியரங்கில் புகாரி
புகாரி அவர்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில்
அசன்பாவா ராவுத்தர், உம்மல் பரிதா
ஆகியோரின் அன்பு மகனாக 1960 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 ஆம் நாள் பிறந்தவர். ஒரத்தநாடு
அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி வழியாக 11 ஆம் வகுப்புவரை பயின்றவர்(1975). இளங்கலை வணிக நிர்வாகம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்(1979). மைக்ரோசாப்ட்
சான்றுறுதி வல்லுநர் ,சவூதி அரேபியா, அமெரிக்கா,
கனடா நாடுகளில் படித்துப் பலவகைக் கணினிச் சான்றிதழ்கள்
பெற்றவர். தகவல் தொழில்நுட்ப அறிவுரைஞராகவும், கணினி வல்லுநராகவும் பணிபுரிந்து வருபவர்.
இல்வாழ்க்கை:
புகாரி அவர்கள் 1985 ஆம் ஆண்டு யாஸ்மின் அவர்களைத்
திருமணம் செய்துகொண்டு தம் இல்வாழ்க்கையைத் தொடங்கினார். இவர்களுக்கு ரிஸ்வானா
புகாரி என்ற மகளும், சுகைல் புகாரி என்ற மகனும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர்.
இவர்கள் இருவரும் கனடாவில் கல்வி பயில்கின்றனர்.
1960 முதல் 1981 வரையிலான தமிழ்நாட்டு வாழ்க்கையைக்
கவிஞர் புகாரி கீழ்வருமாறு பகிர்ந்துகொண்டார்.:
வானூறி
மழைபொழியும்;
வயலூறி
கதிர்வளையும்;
தேனூறி
பூவசையும்;
தினம்பாடி
வண்டாடும்;
காலூறி
அழகுநதி
கவிபாடிக்
கரையேறும்;
பாலூறி
நிலங்கூட
பசியாறும்;
உரந்தையில்... நான் பிறந்தேன்.
தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம்
போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான்
செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி, வகிடெடுத்த
தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஒரு பேரழகு. உரந்தை
என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.
ஏழெட்டு வயதிலேயே செவிகளில்
விழுந்த பாடல்களும் பள்ளியில் பயின்ற கவிதைகளும் என்னை
இழுத்து மடியில் வைத்துக் கொண்டு
'எழுது செல்லம்' என்று சொற்களை ஊட்டிவிட்டன.
இசையில் மயங்கினேன், அதன் உயிரோடு இழைக்கப்பட்ட
வழக்குச் சொற்களின் வசமானேன்;
அதனால் எழுதத் தொடங்கினேன். பள்ளியில்
கற்றறிந்த அரிச்சுவடி மரபுக்கும், மனதிலிருந்து மட்டற்று நழுவிவிழும் உரைவீச்சுக்கும் இடையில் ஓர் இருக்கையிட்டு
என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.
உச்ச உணர்வுகளின்
தாக்கத்தில், அடர்ந்த மனவலியை ஓர்
உன்னதச் சுவையுணர்வோடு, சிந்தனை முற்றத்தில் கற்பனை
ஆடைகட்டிப், பெற்றெடுப்பதே எனக்குக் கவிதைகளாயின. என்னை எழுதத் தூண்டும்
உணர்வுகளை, எனக்குப் பிடித்த வண்ணமாய், என்னுடன்
பேசும் உயிருள்ள புகைப்படங்களாய் நான் பிடித்து வைத்தேன்.
கல்லூரி முடித்ததும், நண்பர்களின்
தூண்டுதலால், என் கவிதைகளை இதழ்களுக்கு
அனுப்பத் தொடங்கினேன். தினமும் ஒரு கவிதையேனும்
எழுதாமல் உறங்கியதில்லை.
"அண்டா
கா கசம்! அபூ கா
ஹூக்கூம், திறந்திடு சீசேம்!" என்று நான் குளியளறையில்
நின்று கத்தியதை அலிபாபா பத்திரிகை ஒட்டுக்கேட்டிருக்க
வேண்டும். மகாத்மாவைப் பற்றி நான் எழுதிய
கவிதையை அது வெளியிட்டது. முதன்
முதலில் என் கவிதையை அச்சில்
கண்ட நான் ஓரடி உயர்ந்துவிட்டதாய்
உணர்ந்தேன்.
இலக்கிய
நண்பர்களோடு சேர்ந்து "கயிறு" என்ற கையெழுத்து இதழினை நடத்தினோம்.
1981 முதல் 1999 வரை அமைந்த தம் சவூதி
அரேபியா வாழ்க்கையைப் பற்றி...
1981 ஜூலை
மாதம் சவூதி அரேபியா சென்றேன்.
கல்லூரி முடித்து நான் பணிதொடங்கிய முதல்
நாடு சவூதி அரேபியாதான்.
எண்பதுகளில்
நா. பார்த்தசாரதி அவர்களின் தீபம் என் கவிதைகளைத்
தொடர்ந்து வெளியிட்டது. மாலனின் திசைகள் என்
கவிதைகளை வரவேற்றது.
1984, "அரபு
மண்ணில் இதோ ஓர் அழகு
ஊற்று" என்று தாய் ஆசிரியர்
வலம்புரி ஜான் தன் ஆசிரியர் பக்கத்தில்
என் கவிதைகளை வெளியிட்டு என்னைப் பெருமைப் படுத்தினார்.
1988, இந்தி-தமிழ் ஒப்பீட்டு இலக்கியத்தில்
முனைவர் பட்டம் பெற்று, டெல்லி
பல்கலைக்கழக இந்திப் பேராசிரியராய்ப் பணிபுரிந்த
குமாரி ஜமுனா, 1986 அக்டோபர்-நவம்பர் தீபம் இதழில்
வெளிவந்த 'உலகம்' என்ற என்
கவிதையை அந்த வருடத்தின் தமிழ்
மாநில அடையாளக் கவிதையாய்த் தேர்ந்தெடுத்து இந்தியில் மொழி பெயர்த்து, இந்திய
மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் (Ministry 0f
Human Resources Development - India) ஆண்டு
மலரான வார்சிகி 86 இல் வெளியிட்டார்.
1988, குமுதம்
கவிதைப் போட்டியில் கலந்துகொண்டேன். கவிஞர் நிர்மலா சுரேஷ்
அவர்களால் தேர்வுசெய்யப்பட்டுப் பரிசு பெற்றேன்.
1999 முதல் இன்றுவரை அமைந்த
கனடா நாட்டு வாழ்க்கையைப் பற்றி....
1999 ஆம்
ஆண்டு ஜூலை மாதம் கனடா
வந்தேன். கனடா தமிழ்நாடு கலாச்சாரச்
சங்கம் என் கவிதைகளைக் கனடியத்
தமிழர்களுக்கு மின்னஞ்சல் வழியே அறிமுகப்படுத்தியது.
1999 ஆம் ஆண்டு நிலாவிலும் கற்கள் என்ற என்
வலைத்தளத்தில் மின்கவிதைத் தொகுப்பொன்றைத் தொடங்கினேன்.
2000 ஆம் ஆண்டில் கனடா
தமிழ்நாடு கலாச்சாரச் சங்கத்தின் தமிழோசை என்ற பல்சுவைத்
தமிழிதழின் ஆசிரியராய் இருந்து அதனை வெளியிட்டேன்.
இது என் கணினிப் படி
என்று கூறலாம்.
2001 இல் கனடா
உதயன் தமிழ் வார இதழ் தனது ஆண்டு
விழாவையொட்டி வட அமெரிக்கா மற்றும்
ஐரோப்பாவில் வாழும் கவிஞர்களுக்காக நடத்திய
கவிதைப் போட்டியில் என் கவிதையொன்றை முதல்
பரிசுக்குரியதாகத் தேர்வு செய்து திரு.
லேனா தமிழ்வாணன் அவர்களின் கைகளால் தங்கப் பதக்கம்
வழங்கிச் சிறப்பித்தது.
2002 ஆம்
ஆண்டில் இலங்கையின்
முதன்மைக் கவிஞர்களுள் ஒருவரான கவிநாயகர் வி.
கந்தவனம் அவர்களோடு கவியரங்க மேடைகள் கண்டேன். கனடா உதயனின் தங்கப்பதக்கக்
கவிதைத் தேர்வுக்குழுவில் நடுவராக இருந்தேன்.
கனடா தமிழ்
எழுத்தாளர் இணையத்தின் உறுப்பினராகவும் அதன் கவிதைத் தேர்வுக்குழுவில்
ஒருவனாகவும் இருந்தேன்.
2002 ஆம்
ஆண்டில் ஏப்ரல் தமிழ் உலகம் குழுமத்தின்
'பாரதிதாசன் வைய விரி அவை'
நடத்திய கவிதைப் போட்டியில் 'தோழியரே!
தோழியரே!' என்ற என் கவிதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.
2002 ஆம்
ஆண்டில் என் முதல் கவிதைத் தொகுதியான
வெளிச்ச அழைப்புகளைக் கனடாவில் வெளியிட்டதன் மூலம், தமிழ் நாட்டிலிருந்து
வந்து கனடாவில் குடியேறிய தமிழர்களுள் தமிழ்ப் புத்தகம் வெளியிடும்
முதல் தமிழன் என்ற பெருமை
பெற்றேன்.
வெளிச்ச அழைப்புகள் தொகுதிக்குக்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அணிந்துரை வழங்கி
என்னைச் சிறப்பித்தார்.
கனடியன் தமிழ் ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம், கனடா கீதவாணி போன்ற
24 மணிநேர கனடிய தமிழ் வானொலிகளிலும்
கனடா வேங்கூவர் வானொலியிலும் கவிதைகள் வழங்கினேன். பதிவுகள், கீற்று, திண்ணை, திசைகள்,
நிலாச்சாரல், எழில்நிலா போன்ற பல இணைய
மின்னிதழ்களிலும் என் கவிதைகள் வெளிவருகின்றன.
அன்புடன், தமிழ்-உலகம், சந்தவசந்தம்,
உயிரெழுத்து, அகத்தியர் போன்ற யாகூ தமிழ்
மின்குழுமங்கள் பலவற்றிலும் தொடர்ந்து எழுதிவருகிறேன்
இணையத்தில் பல கவியரங்கங்களிலும்
கலந்துகொள்கிறேன். கவியரங்கத் தலைவராகவும் இருந்திருக்கிறேன்.
புத்தகப்புழு
இணையக் குழுவில் மட்டுநராக இருந்தேன். உயிரெழுத்துக் குழுவின் உரிமையாளராகவும் மட்டுநராகவும் இருக்கிறேன். கனடாவின் தமிழ் ஆரம் தொலைக்காட்சி
என்னை நேர்காணல் செய்து ஒளிபரப்பியது. பிப்ரவரி
14, 2003 ஆஸ்தான கவிஞராக தமிழ்-உலகம்
மின்குழுமம் என்னை அறிவித்தது. தினம்
ஒரு திருக்குறள் என்று வள்ளுவனுக்கு என்
புதுக்கவிதைப் பூமாலையைக் கோத்து வருகிறேன்
2003, இணையத்தில்
தமிழ்-உலகம் என்ற யாகூ
குழுமம் வாயிலாகப், பாரதிதாசன்
வைய விரி அவை நடத்திய
கவிதைப் போட்டியில் என் 'அவன்தான் பாரதிதாசன்!'
கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது.
2003, இணையத்தில் புத்தகப்புழு நடத்திய காதல் கவிதைப்
போட்டியில் 'கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை' கவிதைக்கு முதல்
பரிசு கிடைத்தது.
கனடாவில் தமிழன் என்ற பெயரில் இணையத்தில்
தொடர் கட்டுரை எழுதி வருகிறேன்.
2003 ஏப்ரல்
4 இல் மொன்றியல், கனடாவில் என் வெளிச்ச அழைப்புகள்
மீண்டும் வெளியிடப்பட்டது. 2003 ஏப்ரல் 13 இல் 'அன்புடன் இதயம்'
என்ற என் இரண்டாம் கவிதைத்
தொகுப்பின் வெளியீடு சென்னையில் நடந்தது.
கவிதை உறவு
- ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து
வழங்கும் சிறந்த கவிதை நூல்களுக்கான
துரைசாமி நாடார் இராஜம்மாள் விருதுக்கான
போட்டியில் என் 'வெளிச்ச அழைப்புகள்'
கவிதை நூல் சிறப்புப் பரிசு
பெற்றிருக்கிறது. மே மாதம் 18 ஆம்
தேதி சென்னையில் நடைபெற்ற கவிதை உறவின் 31 ஆம்
ஆண்டு நிறைவு விழாவில் பரிசு
வழங்கப்பட்டது. 2003 இலக்கியபீடம் தீபாவளி இதழில் 'வெட்டிப் பயல்கள்
பேச்சு' என்ற என் கவிதை
வெளியானது
டிசம்பர் 13, 2003, என் இரண்டாவது கவிதைத்
தொகுதியான 'அன்புடன் இதயம்' கனடாவில் வெளியிடப்பட்டு
அனைவரின் வரவேற்பையும் பெற்றது. இணைய இதழான திண்ணையிலும்,
கனடிய நாட்டுத் தமிழ்ச் செய்தித்தாள்களிலும், வானொலிகளிலும் இவ்விழா
பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் கவிதைகளும் வெளியாயின.
எழுத்தாளர் மாலன் தலைமையில்
தமிழ் உலகம் குழுமம் மூலம்
என் அன்புடன் இதயம் கவிதைத்தொகுப்பு இணையத்தில்
உலகிலேயே முதன் முதலாக வெளியிடப்பட்டது.
அது பற்றி மாலனின் தலைமை
உரையிலிருந்து சில வரிகள் கீழே:
வரலாற்றின்
வைர மணித் துளியில்
வாழ்கின்ற
பேறு வாய்த்திருக்கிறது நமக்கு.
இந்திய
மொழிகளில் எந்த மொழிக்கும்
இந்தப்
பெருமை இதுவரை சொந்தமில்லை.
அயல்
மொழிகள் முயல்வதற்குள்
ஆரம்பித்து
விட்டோ ம் நாம்.
சென்ற
தலைமுறைக்கு இந்தச் சிறப்பு இல்லை.
அடுத்த
தலைமுறைக்கு இதை நாம்
அனுமதிக்கப்
போவதில்லை.
என்று
குறிப்பிட்டுள்ளார்.
2004 ஜூன்,
நிலாவிலும் கற்கள் என்ற பெயரில்
திஸ்கி எழுத்துருவில் செயல்பட்டுவந்த என் வலைத்தளத்தை முழுவதும்
ஒருங்குகுறித் தமிழுக்கு மாற்றினேன்.
http://anbudanbuhari.com என்ற முகவரியில் வெளிச்ச
அழைப்புகள் என்ற தலைப்பில் அது
இயங்கி வருகிறது.
2005 மார்ச்
7 இல்,
முழுவீச்சில் செயல்படும் 'அன்புடன்' யுனித்தமிழ் கூகுள் குழுமத்தை உலகிலேயே
முதன் முறையாகத் தொடங்கினேன். அது வெற்றிநடை போட்டுக்கொண்டு
திஸ்கி எழுதும் அனைவரையும் யுனித்தமிழுக்கு
வரவேற்ற வண்ணம் இருக்கிறது.
2005 ஏப்ரல், http://anbudanbuhari.blogspot.com/ என்ற முகவரியில் ஒரு
வலைப்பதிவும் தொடங்கினேன்.
2005 மே,
என் மூன்றாவது கவிதைத் தொகுப்பான 'சரணமென்றேன்'
என்ற காதல் கவிதைகளின் தொகுப்பை மாலன் தலைமையில் வெளியிட்டேன்.
2005 மே,
பச்சை மிளகாய் இளவரசி என்ற
என் நான்காவது கவிதைத் தொகுப்பு அச்சேறியது.
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள்
இதற்கான அணிந்துரையை வழங்கியுள்ளார்.
2005 மே
9 ஆம் தேதி சென்னை நியூ
உட்லண்ட்ஸ் ஓட்டலில் மாலன் தலைமையில் எனக்கு
அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் வாழ்த்துரை வழங்குவதற்குக் கவிப்பேரரசு வைரமுத்து வருகை தந்தார். இதழியல் துறையைச் சார்ந்தவர்களும்
கவிஞர்களும் பார்வையாளர்களாக வந்து சிறப்பித்தார்கள். கவிஞர்
இந்திரன், அமுதசுரபி ஆசிரியர் கவிஞர் அண்ணா கண்ணன்,
படித்துறை ஆசிரியர் கவிஞர் யுகபாரதி, கவிஞர்
வைகைச் செல்வி ஆகியோர் சரணமென்றேன்
என்ற என் மூன்றாவது கவிதை
நூலைத் திறனாய்வு செய்து பேசினார்கள்.
2005 அக்டோபர்
1, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்
ஆதரவில், சரணமென்றேன் என்ற என் மூன்றாம்
தொகுதியும் பச்சைமிளகாய் இளவரசி என்ற என்
நான்காம் தொகுதியும் திரு சிவதாசன் தலைமையில்
வெளியிடப்பட்டது. கவிஞர் இரமணன் சிறப்புரையாற்ற,
பல்கலைச் செல்வர் ஆர் எஸ்
மணி, கவிஞர் ஜெயபாரதன், கவிஞர்
குலமோகன், கவிஞர் பொன் குலேந்திரன்
ஆகியோர் கவிதை நூல்களைத் திறனாய்வு
செய்தார்கள். உதயன் ஆசிரியர் ஆர்
என் லோகேந்திரலிங்கம் மற்றும் அதிபர் பொன்
கனகசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர்
அ. முத்துலிங்கம் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.
2010 நவம்பர் 21 சென்னையில்
திரிசக்தி பதிப்பகம் ’காதலிக்கிறேன் உன்னை எப்போதும்’ என்ற
என் ஐந்தாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டது.
2010 நவம்பர் 26 திருச்சியில் உயிர் எழுத்துப் பதிப்பகம்
‘அறிதலில்லா அறிதல்’ என்ற என்
ஆறாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டது.
கனடிய
தொலைக்காட்சிகளில், பட்டிமன்றத் தலைவர், கவியரங்கத் தலைவர்,
தமிழினி போட்டிகளின் நடுவர், தீதும் நன்றும்
பேச்சாளர் போன்று பல நிகழ்ச்சிகளில்
தொடர்ந்து பங்குபெற்றுவருகின்றேன்.
புகாரியின் கவிதைத் தொகுதிகள்:
(1) தலைப்பு: வெளிச்ச
அழைப்புகள்
அணிந்துரை: கவிப்பேரரசு
வைரமுத்து
ஆண்டு: 2002
சிறப்பு: இந்தியத்
தமிழரால், வட அமெரிக்காவில் முதன்முதலில்
வெளியிடப்பட்ட தமிழ் நூல். டொராண்டோ
வில் வெளியிடப்பட்டது. கவிதை
உறவு ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து
வழங்கிய துரைசாமி நாடார் இராஜம்மாள்
விருது சிறப்புப் பரிசு
(2) தலைப்பு: அன்புடன்
இதயம்
அணிந்துரை: கவிநாயகர்
வி. கந்தவனம்
வாழ்த்துரை: இலந்தை
சு. இராமசாமி
(3) தலைப்பு: சரணமென்றேன்
அணிந்துரை: மாலன்
ஆண்டு: 2004
(4) தலைப்பு: பச்சை
மிளகாய் இளவரசி
அணிந்துரை: அ.
முத்துலிங்கம்
(5) தலைப்பு: காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
பதிப்புரை: இசைக்கவி ரமணன்
சிறப்பு: சென்னையில் 2010 நவம்பர் 21 பாரதீய வித்யாபவனில் டாக்டர்
சுந்தரராமன் வெளியிட கவிஞர் கபிலன்
வைரமுத்து பெற்றுக்கொண்டு திறனாய்வு செய்தார்..
(6) தலைப்பு: அறிதலில்லா அறிதல்
ஆண்டு: 2010
சிறப்பு: திருச்சியில் 2010 நவம்பர் 26 ரவி குளிர்சிற்றரங்கில் வெளியிடப்பட்டது..
அன்புடன்
புகாரியின் வரிகளுள் சில:
*
பாலைவனச்
சாலைகளில்
பார்த்ததெலாம்
நெருப்பெனினும்,
ஊளையிடும்
வறுமைபோக்கி
உறவுகளைக்
காத்துநின்று
மாலையிட்டு
மக்களீன்று
மனம்
முழுதும் பசுமை பூக்க,
வேலை
தந்த பாலைவனம்
வேதனையைத்
தீர்த்த தெய்வம்!
பெற்ற
மண்ணை, உறவை, நட்பை,
பிரிந்துவந்த
சோகவிதை
நெற்றிவரி
இழுத்துச்சென்ற
நிலம்விழுந்து
முட்டிமோத
பெற்றதுன்பம்
கொஞ்சமல்ல,
பிரிவென்பதும்
வாழ்வுமல்ல,
கற்றபெரும்
அனுபவங்கள்
கவிதைகளாய்
வெடித்ததடா!
*
வருடங்கள்
மூவாறு
வாழ்வளித்த
பாலையிலே,
உருண்டோடி
விட்டபின்னர்
ஊர்தேடிப்
புறப்பட்டேன்!
அரும்புகளின்
கல்வியெண்ணி,
அப்படியே
திசைமாற்றம்
அருமைநிலம்
கனடாவில்,
அவசரமாய்க்
குடியேற்றம்!
கனவுகண்ட
புதியபூமி
கருணைமனத்
தூயவானம்
இனங்களெலாம்
இணைந்துபாடும்
இனிய ரதம்
கனடியமண்!
குணக்கேடு
மதவெறியர்,
குத்துவெட்டு
பகையில்லா,
மனிதநேயம்
போற்றுமிந்,த
மண்பெருமை
விண்பாடும்!
இணையத்தின்
தமிழுக்கு,
இங்குவந்தே
என்வணக்கம்!
முனைதீட்டிக்
கவிபாட
முத்தமிழின்
புதுச்சங்கம்!
அணையுடைத்துக்
கவிபாடும்,
ஆற்றுவெள்ள
உற்சவம்போல்
இணையமெங்கும்
தமிழ்வாசம்
இதயமெங்கும்
தேரோட்டம்!
குளிர்தீண்ட
கவிகொஞ்சம்
கொட்டும்பனி
கவிகொஞ்சம்
மலர்வண்ணம்
இலைதாவும்
மரக்கிளையின்
கவிகொஞ்சம்!
வளர்தமிழை
விண்ணேற்றி
உலகமெலாம்
மழைபொழியும்
புலம்பெயர்ந்த
ஈழத்தவர்
புகழ்பாடி
கவிகொஞ்சும்!
எழுதியெழுதிக்
கவிதைகளை,
இணையமெங்கும்
தூவினேன்!
எழுதிவைத்த
தொகுப்புகளை
இங்கிருந்தே
வெளியிட்டேன்!
அழகுதமிழும்
கணிமடியும்
அமுதூட்டித்
தாலாட்ட,
அழகழகாய்த்
தேன்மழையாய்
அருங்கவிதை
பொங்குதடா!
குறிப்பு: என்
கட்டுரைகளை எடுத்தாள நேர்ந்தால் எடுத்த இடம் சுட்டுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக