புலவர் சி.இராமலிங்கம் அவர்கள்
புதுச்சேரியில்
வாழும் தமிழ் அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் புலவர் சி.இராமலிங்கம் அவர்கள் ஆவார்.
எளிமையும் அன்பும் கொண்ட இவர் புதுச்சேரி மாநிலத்தின் கல்வித்துறையில் முதல்நிலைத்
தமிழாசிரியராக 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். இப்பொழுது புதுவையை அண்மியுள்ள
தவளக்குப்பம் ஊரில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். இவர்தம் பிறந்த ஆண்டு 17-09-1942
ஆகும். பெற்றோர் அலர்மேலம்மாள், சின்னசாமி ஆவர். சி.பெருந்தேவன் என்ற புனைபெயரில் எழுதி
வருகின்றார். பல்வேறு கவியரங்குகள், பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய பெருமைக்குரியவர்.
புலவர்
சி.இராமலிங்கம் அவர்கள் அ) பிரவே(தமிழ்)(-புதுச்சேரி அரசு), ஆ) வித்வான் - (சென்னைப் பல்கலைக்கழகம்),
இ) பி.லிட்- (சென்னைப் பல்கலைக் கழகம்),
ஈ) எம்.ஏ -
(மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்) ஆகிய பட்டங்களைப் பெற்றவர்.
புதுவைப் பாவலர் பண்ணையில் மரபிலக்கணம் பயின்று பைந்தமிழ்ப் பாவலர் பட்டம் பெற்றவர்.
புலவர்
சி.இராமலிங்கம் அவரகள் எழுதியுள்ள திருவள்ளுவர்க்குப் பின் அரசியல் அறம் என்ற நூல்
குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 113 அதிகாரங்களில் 1130 குறட்பாக்களை உரையுடன் இந்த நூலில்
புலவர் சி.இராமலிங்கம் தந்துள்ளார். உரைவிளக்கம் முதலிலும் அடுத்துக் குறட்பாக்களும்
இடம்பெற்றுள்ளன. இந்த நூலுள் சமூகம், அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், கல்வி,
அறிவியல், குடும்பம், காதல் முதலிய அனைத்துப் பொருண்மைகளும் இடம்பெற்றுள்ளன. இந்திய
மக்கள் மேம்பாடுற அரசியல், தொழில்நுட்பத்துறைகளில் முன்னேற வேண்டும் என்பதையும் தூய
மக்கள் தொண்டர்கள் நாட்டை ஆளவேண்டும் என்பதையும் இந்த நூலில் ஆசிரியர் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார்.
“காலத்தை ஓட்டுவதும்
கையூட்டை நோக்குவதும்
சாலப் பெரும்பழிப்பாம்
சாற்று” (பக்கம்.6)
எனவும்,
“கெண்டையைப் போட்டு
வரால்பிடிக்கும் கேடர்களால்
உண்டாமோ நாட்டில்
உயர்வு?” (பக்கம்,20)
எனவும்
“விண்வெளி ஆய்வில்
வெற்றித் தடம்பதித்தல்
மண்ணில் அறிஞர்க்கு
மாண்பு” ( பக்கம் 218)
எனவும் இடம்பெறும்
குறட்பாக்கள் இன்றைய சமூகச்சூழலை மனதில்கொண்டு வரையப்பட்டுள்ளமை பாராட்டிற்கு உரியதாகும்.
மரபுக்கவிதைகள்
சமூக நடப்பியலைச் சித்திரிக்கவில்லை என்பாரின் கூற்றைப் பொய்யாக்கும் வண்ணம் சிறந்த
குறட்பாக்களைத் தந்துள்ள புலவர் சி.இராமலிங்கனார் நம் பாராட்டிற்குரியவர்.
புலவர் சி.இராமலிங்கம்
அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள இலக்கிய நூல்கள்:
1. கருவடிக்குப்பம் ஸ்ரீமத் சித்தானந்த சுவாமிகள் பதிகம்,1966
2. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா,1981
3. அறிவுலகக் காவலர்கள்,1985
4. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் அந்தாதி.
5. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் இரட்டைமணிமாலை,1993
5. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் இரட்டைமணிமாலை,1993
6. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் திருப்பள்ளி எழுச்சி,2002
7. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் திருவருட்பனுவல் திரட்டு , 2003
8. ஆசிரியர் அறம்,2003
9. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் ஆனந்தமாலை,2005
10 கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் போற்றித் திருவகவல், 2006
11. அறத்தின் ஆட்சி,2007
12.கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் திருப்பள்ளி எழுச்சி - தெளிவுரை,2008
13. திருவள்ளுவருக்குப்பின் அரசியல் அறம்,2012
புலவர் சி.இராமலிங்கம் அவர்களின் முகவரி:
69, சின்னசாமி தெரு, தவளக்குப்பம், புதுச்சேரி – 605007
தொடர்புக்கு: + 8940899885
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக