நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 24 அக்டோபர், 2012

கனடியத் தமிழர்களின் கைவிளக்கு - செந்தியின் தமிழன் வழிகாட்டி…



கனடாவிலிருந்து நண்பர் செந்தி அவர்கள் வெளியிடும் தமிழன் வழிகாட்டி கையேடு ஒவ்வொரு ஆண்டும் எனக்கு அனுப்பி வைக்கப்படுவது உண்டு. முன்பெல்லாம் என் அறிவுத் தந்தையாகப் போற்றப்படும் ஈழத்துப்பூராடனார் அவர்கள் தம் சொந்தப் பொறுப்பில் அனுப்பி வைப்பார்கள். அவர்கள் இயற்கை எய்திய பிறகு நண்பர் செந்தி அவர்கள் தொடர்ந்து அனுப்பி வைப்பது உண்டு.

தமிழன் வழிகாட்டி கையேடு எங்கள் வீட்டின் வரவேற்பறையில் பார்வையில் இருப்பதால் வீட்டிற்கும் வரும் விருந்தினர்கள் இந்தக் கையேட்டின் சிறப்பைக் கண்டு உடன் படித்துத் தருவதாக எடுத்துச் சென்றுவிடுவார்கள். அவ்வாறு செல்லும் கையேடு பல வீடுகளுக்குச் சென்று மீண்டும் என் கையினுக்கு வருவதற்குப் பல மாதங்கள்கூட ஆவது உண்டு. இந்த ஆண்டுக்கான கையேடும் வழக்கம்போல் முன்பே வந்துவிட்டது. பல நண்பர்களின் கையினுக்கு மாறி மீண்டும் இன்று என் கையினுக்கு வந்தது.

வழக்கம்போல் கையினுக்குக் கிடைக்கும் நூலினை உடன் ஒரு புரட்டு புரட்டிவிடுவேன். ஓய்வு கிடைக்கும்பொழுது மீண்டும் ஆழமாகப் படிப்பது உண்டு. அந்த வகையில் இரண்டாம் முறையாகச் செந்தியின் தமிழன்வழிகாட்டியைப் படித்துப் பார்த்து வியப்புற்றேன்.

தமிழன் வழிகாட்டிக்கு ஒரு வரலாறு உண்டு. கனடாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களுள் செந்தி அவர்களும் அவரின் குடும்பமும் அடங்கும். மிகக் குறைந்த பணத்துடன் கனடாவில் தஞ்சம் புகுந்த செந்தி, தம் கடும் உழைப்பால் புகழ்பெற்ற மாந்தராக இன்று விளங்குகின்றார். அவர் ஆண்டுதோறும் நடத்தும் வணிகக் கண்காட்சி கனடாவில் புகழ்பெற்ற ஒன்றாகும். அதுபோல் அவர் ஆண்டுதோறும் தொய்வில்லாமல் வெளியிடும் தமிழன்வழிகாட்டியும் சிறப்பிற்கு உரிய ஒன்றகாக் கனடாவில் வாழும் தமிழர்களால் போற்றப்படுகின்றது என்பதை இதில் இடம்பெற்றுள்ள பலதுறை விளம்பரங்களைக் கொண்டு மதிப்பிட முடிகின்றது.

கனடா தேசத்திற்குள் நுழையும் தமிழர் கையில் தமிழன் வழிகாட்டி கையேடு இருந்தது என்றால் அவர்கள் எந்த உதவிக்கும் தொல்லைப்பட வேண்டிய அவசியம் இல்லை. வீடு வாங்க, விற்கத் தொடங்கி, வாழ்நாள் காப்பீடு, திருமணம், நிதியகச் சேவை, வீட்டுமனை வாங்க விற்க, அவசர காலத் தொலைபேசி எண்கள், நேர்ச்சிகால(விபத்து)உதவித்தொகை பெறுதல், கணக்குத் தணிக்கை, விளம்பர உதவி, உந்துவண்டிப் பழுதுபார்ப்பு, வங்கி, வெதுப்பகம்(பேக்கரி), வழக்கறிஞர்கள், புத்தகப் பதிப்பாளர்கள், அழகுநிலையங்கள், கட்டுமானப் பொறியாளர்கள், பேருந்து வசதிகள், நாற்காலி வாடகை, திரைப்படம், கல்லூரி, கணினி, இணைய நிலையங்கள், மருத்துவர்கள், மருத்துவமனைகள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள், துணி வெளுப்பகங்கள், கலை, கல்வி, கல்விக்குரிய நிதிக்கடன், மரச்சாமான்கள், முடித்திருத்தகங்கள், உள்ளரங்க அழகுநிலையங்கள், நகைக்கடைகள் குறித்த பல விளம்பரங்கள் உள்ளன. 

மேலும்  கராத்தே பழகுமிடம், நூலகம், பணப்பரிமாற்று இடங்கள், இசைக்குழுக்கள், செய்தி ஏடுகள், கண் கண்ணாடிக்கடைகள், வண்ணப்பூச்சுகள், திருவிழாக்களுக்குப் பொருட்களை வாடகைக்குவிடுவோர் குறித்த விவரம்,  அடகுக்கடை நடத்துவோர், மருந்தகம், குழாய்ப்பதிப்புப் பணியாளர்கள், அச்சகத்தினர், வானொலி நிலையம், வீட்டுமனை வணிகர்கள், பத்திரப்பதிவர்கள், தொலைக்காட்சிகள், கோயில்கள், கோயில் குருக்கள், துணிக்கடைகள், மொழிபெயர்ப்பாளர்கள், பயண ஏற்பாட்டக முகவர்கள், காணொளிக் கடையாளர்கள், இணையதள வடிவமைப்பாளர்கள், யோகாப்பயிற்சி, உணவகம், என்று பலநிலைப்பட்ட விவரங்களைத் தாங்கித் தமிழன் வழிகாட்டி வெளிவந்துள்ளது.

கனடாவில் வாழும் புகழ் பெற்ற அறிஞர்கள், அரசியல் ஆர்வலர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், வணிகர்கள் பற்றிய குறிப்புகளைப் படத்துடன் வெளியிட்டுள்ளமை இந்தக் கையேட்டின் தனிச்சிறப்பபாகும்.

சேலைகட்டுதல் தொடங்கி ஆண்கள் கழுத்துபட்டை அணிவது,  வரையிலான அன்றாடத் தேவைகள் காட்சி விளக்கப் படமாகத் தரப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. கனடாவில் வெளியிடப்பெற்ற அஞ்சல் முத்திரைகள் பற்றிய விவரங்கள் இந்தக் கையேட்டில் போற்றும்படி உள்ளது. முதன்மையான தொலைபேசி எண்கள் பெரிய எழுத்தில் படிக்கும் தரத்தில் உள்ளன.

கனடாவில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள் குறித்த பட்டியல் திரைத்துறை ஆய்வாளர்களுக்குப் பயன்படும்.

தமிழர்கள் கனடாவில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில்களில் மேம்பட்டு இருக்கும் இவர்கள் நிகழ்த்திய முதல் செயல்பாடுகள் மிகச்சிறப்பாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன:
அவற்றுள் சில:

முதன்முதல் கனடாவில் தமிழரால் வெளியிடப்பட்ட ஆங்கிலப்பத்திரிகை: Monsoon: D.B.S.ஜெயராஜ்

முதன்முதலில் கனடாவில் தமிழ்ச்சிறுவனின் பெயர் சூட்டப்பட்ட பூங்கா: Birunthan Park.

முதன்முதல் கனடாவில் வெளியிடப்பட்ட தமிழ் சஞ்சிகை: குறிஞ்சிமலர்

முதன்முதல் கனடாவில் தமிழர்களிடையே நடத்தப்பட்ட சமயச்சடங்கு இல்லாத திருமணம்: இராசேந்திரன்-இந்துமதி திருமணம்.(1994)

முதன்முதல் கனடாவில் தமிழ்த்திரைப்பட வரலாறு 60 தொகுதிகளாக வெளியிட்டவர்கள்: றிப்ளக்சு குடும்பத்தைச் சார்ந்த ஜோர்ஜ் இதயராஜ்-எட்வேட் இதயச்சந்திரா சகோதரர்கள்

முதன்முதலில் ஆதிக் கிரேக்க காப்பியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்: ஈழத்துப்பூராடனார்.

கனடாவின் முதல் தமிழ்த்திரைப்படம்: ஏமாற்றம்,தயாரிப்பாளர் முருகு.

இவ்வாறு பல அரிய செய்திகள் இந்தக் கையேட்டில் உள்ளன. தமிழர்கள் அனைவருகுகமான பொது அறிவுப்போட்டிக்கு உதவும் தரத்தில் பல செய்திகள் உள்ளன.

1996 இல் 174 பக்கத்தில் வெளியான தமிழன் வழிகாட்டி இன்று  1040 பக்கங்களில் மிகச்சிறந்த வண்ண அச்சில் வெளிவந்துள்ளமை தமிழன் வழிகாட்டியின் வளர்ச்சியையும் தமிழர்களின் வளர்ச்சியையும் காட்டுகின்றது.

வருங்கால வரலாறு எழுதுகின்றவர்களுக்குத் தமிழன் வழிகாட்டித் தகவல் களஞ்சியமாக இருந்து தமிழர் வரலாற்றை எழுத உதவும் என்பது என் நம்பிக்கை.

தமிழன் வழிகாட்டி வெறும் ஏடாக மட்டுமல்லாமல் இயக்கமாக மாறித் தாயக மக்களுக்கு உதவியுள்ளமையும் இந்த ஏட்டில் பதிவாகியுள்ளது.

தொடரட்டும் செந்தியின் தமிழ்ப்பணி…

தமிழன் வழிகாட்டி முகவரி
மின்னஞ்சல்: tamilsguide@rogers.com
இணையதளம்: www.tamilsguide.com
பேசி: + 416.615.4646
ஒளிநகல்: + 416.615.2414


2 கருத்துகள்:

முனைவர் சத்யாசெந்தில் - Dr SathyaSenthil சொன்னது…

அருமையான பதிவு...
மிக்க நன்றி அய்யா..

பெயரில்லா சொன்னது…

என்னங்க இது ஒரு அதிசயமே இல்லீங்க, இது போல கையடுகள் பல தமிழில் இருக்கு இங்கே ! தமிழ் மட்டுமல்ல பல மொழி மக்களிடமும் இருக்கு !!! இங்குள்ள தமிழர்கள் தமிழுக்கு ஆற்ற வேண்டியவை நிறைய இருக்கு, டொரோண்டொ பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் துறையை நிறுவ முயலவேண்டும் !!!