அறிஞர் மு. வரதராசனார்
படைப்புகளை மூத்த தலைமுறையினர் படித்து,
நல்வழியில் நடந்தனர் என்பதை இன்றைய இளைஞர்கள்
பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பேரிரைச்சல் ஊடகங்களும், புழுதியை வாரி ஒருவர்மீது ஒருவர் வீசிக்கொள்ளும் படைப்பாளிகளும்
மண்டிக் கிடக்கும் இத் தமிழ்ச் சமூகத்தில் மு. வ. வின் படைப்புகள் தமிழ்ப் படிப்பாளிகளைத்
தன்வயப்படுத்தி வைத்திருந்ததை நன்றியுடன் இங்கு நினைத்துப் பார்க்கின்றேன். தமிழ்ப்
பேராசிரியர் மு. வரதராசனாரின் சிறப்புகளைப் போற்றி அவர்தம் மாணவர்களால் சற்றொப்ப ஐம்பதுக்கும்
மேற்பட்ட நினைவு நூல்கள் வரையப்பட்ட பெருமை நம் மு. வ. அவர்களுக்கே உண்டு. தந்தையின்
பாசத்தைத் தெ.பொ.மீ. அவர்களிடமும் தாயின் பாசத்தை மு. வ. அவர்களிடமும் காணலாம் என அறிஞர் இரா. மோகன் குறிப்பிடுவார்.
மு.வ. அவர்களின் திருக்குறள் தெளிவுரையின் இடத்தையும், தமிழ் இலக்கிய வரலாற்றின் இடத்தையும்
வேறொரு நூல் பெறவில்லை என்பதை நினைக்கும்பொழுது இந்த நூல்களின் சிறப்பு நமக்குப் புலனாகும்.
சிந்தனையில் தெளிவு கொண்டவர் மு. வ.
என் பேராசிரியர் நா. ஆறுமுகம் அவர்கள் தம் உயிருக்கு
நிகராக மு.வ. அவர்களை நேசித்தவர். பொன். சௌரிராசனார்,
சி.பாலசுப்பிரமணியன், இரா. தண்டாயுதம், இரகுநாயகம், தெ. ஞானசுந்தரம் என மு. வ. அவர்களின்
மாணவர் பட்டியல் நீளும். மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் மு.வ. அன்பர்கள் நிறைந்து
காணப்படுகின்றனர்.
மு.வ. அவர்களின் மாணவர்கள், மு. வ. வின் படைப்புகளில்
மூழ்கித் திளைத்தவர்கள் என மு. வ. வின் தாக்கம்பெற்றவர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளதை
அண்மையில் அறிய நேர்ந்தது.
அண்மையில் மலேசியா சென்றிருந்தபொழுது, உலகத் தொல்காப்பிய
மன்றத்தின் தொடக்க விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அரசியல் ஈடுபாடு கொண்ட அன்பர்
ஒருவர் வருகின்றார் என்று நண்பர் முனியாண்டி ஐயா சொன்னபொழுது ஒரு வகையான தயக்கம் எனக்கு
முதலில் ஏற்பட்டது. நிகழ்வுகள் தொடங்கிச் சிறப்பாக நடந்துகொண்டிருந்தபொழுது அந்தச்
சிறப்பு விருந்தினர் உரையாற்றத் தொடங்கினார். அறிஞர் மு. வ. வின் படைப்புகளில் தாம்
மிகுந்த ஈடுபாடுகொண்டுள்ளதையும், தம் வாழ்க்கையில் மு. வ. வின் கொள்கைகள் அதிகம் படிந்திருப்பதையும்
குறிப்பிட்டுத் தமிழுக்கும் தமக்குமான உறவினை வெளிப்படுத்தினார். அவரின் உரை எனக்குப்
பெரும் வியப்பினைத் தந்தது. தனித்து உரையாட நேரம் கேட்டேன். அவரும் நேரம் தந்து, ஓர்
உணவு விடுதியில் நண்பர்களுடன் காத்திருந்தார். இணைந்து உண்டபடியே உரையாடினோம். அவர்
தமிழ் வாழ்க்கை இதுதான்..
கி.
இராசசேரன்...
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்துப் பந்திங் வட்டாரத்தில்
அனைவருக்கும் அறிமுகமான நல்லாசிரியர் கி.இராசசேரன்தான் மு.வ. படைப்புகளில் மூழ்கித்
தம் வாழ்க்கையை நெறிமுறையுடன் அமைத்துக்கொண்டவர். சுங்கை சீடு என்ற ஊரில் 1964 ஆம்
ஆண்டு, ஏப்பிரல் 12 ஆம் நாள் பிறந்தவர். இவருடன் பிறந்தோர் எழுவர். பள்ளிப்படிப்பை
முடித்த இவர் சிறீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்.
25.06.1984 ஆம் ஆண்டு தம் ஆசிரியர் பணியைத் தொடங்கிய இவர் 05.01.1998 முதல் கேரித்தீவு
கிழக்குத் தமிழ்ப்பள்ளியிலும், 01.12.1990 முதல் கேரித்தீவு மேற்குத் தமிழ்ப்பள்ளியிலும்,
01.07.1998 முதல் தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளியிலும் பணியாற்றியவர்.
16.03.2008 இல் சுங்கை மங்கீசு தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியர் பணியைத் தொடங்கியவர்.
16.06.2010 இல் கேரித்தீவு தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய பின் மீண்டும்
சுங்கை மங்கீசு தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராக
01.02.2016 முதல் பணியாற்றிவருகின்றார். மாணவர்கள், உடன் பணியாற்றும் ஆசிரியர்களின்
உள்ளம்கவர்ந்த ஆசிரியராகக் கடமையாற்றும் இராசசேரன் ஐயா அவர்களை நன்னெறிப்படுத்தியது
மு. வ. நூல்கள் என்பதால் மு.வ. இலக்கிய வட்டம் என்ற அமைப்பைத் தொடங்கித் தமிழ்ப்பணியாற்றி
வருகின்றார்.
சுங்கை சீடு தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் செயலாளர்,
தலைவர் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட நடத்தியவர். சிறுநீரகம் செயலிழந்திருந்த திரு.
நடராசன் என்பவருக்கு உதவும் வகையில் இருபதாயிரம் மலேசிய வெள்ளியைத் திரட்டி வழங்கிய
கருணை உள்ளம்கொண்டவர் இவர். பந்திங் பகுதியில் நடைபெறும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில்
கலந்துகொண்டு, அனைவரின் உள்ளமும் நிறைவடையும் வகையில் அறிவிப்பு வழங்கும் இயல்புடையவர்.
பல்வேறு ஆலயங்களின் அறப்பணிகளில் தம்மை இணைத்துக்கொண்டு பணிபுரிந்தவர். பல்வேறு கருத்தரங்குகள்,
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இலக்கியப் பணியாற்றும் இராசசேரன் நம்மைச் சுற்றியுள்ளவர்களை
அரவணைத்து வாழ வேண்டும், நன்றியுணர்வுடன் இருக்கவேண்டும், குறைகூறாமல் இருக்கவேண்டும்
என்ற உயரிய நெறிகளுடன் வாழ்ந்துவருகின்றார்.
1991 ஆம் ஆண்டு அக்டோபர் 20 இல் திருவாட்டி சாந்தி அம்மையாரை மணந்து,
இல்லறப் பயனாக அருணன், அபிராமி என்ற இரண்டு மக்கள்செல்வங்களைப் பெற்றுள்ளார்.
தம் வாழ்க்கையைத் திருத்தி, நல்வழிப்படுத்தியவை
மு. வரதராசனார் நூல்கள் என்று குறிப்பிடும் இராசசேரனைப் போன்ற முன்மாதிரி ஆசிரியர்கள்
இன்றைய தமிழுலகுக்கு மிகுதியாகத் தேவைப்படுகின்றார்கள்.
வாழ்க கி.இராசசேரன் ஐயா!
2 கருத்துகள்:
நீங்களே ஒரு முன்மாதிரி ஆசிரியர். நீங்கள் ஒரு முன்மாதிரி ஆசிரியரை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். உங்களது தமிழ்ப்பணி தொடரட்டும்.
உற்றுழி உதவியும் உருபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே என்ற புறநானூற்றின் வரிகளுக்குச் சொந்தக் காரர் எங்கள் தலைமையாசிரியர் திருமிகு இராஜசேரன் அவர்கள்...
கருத்துரையிடுக