நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 23 அக்டோபர், 2015

ஐ.நா. அவையினை நோக்கி..




ஐ.நா. அவை முன்றிலில் மு.இ.(செனீவா)


ஈபில் கோபுரத்தை ( Eiffel Tower) இரண்டாவது முறையாகப் பார்ப்பதற்குப் புறப்பட்டோம். இரவுப்பொழுது என்பதால் பாரிசு நகரம் வெளிச்சம் போர்த்திக் காட்சி தந்தது. இரவு பத்து மணியளவில் ஈபில் கோபுரத்தின் அடிமனையை அடைந்தோம். குளிர் தெரிந்தது. இரண்டு மூன்று உடைகளை அணிந்து என்னைக் காத்துக்கொண்டேன். நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு மேலே ஏறுவதற்கு அணியமானோம்.


பேராசிரியர் இ. பாலசுந்தரம் ஐயா ஓட்டுநருடன் வண்டியில் தங்கிவிட்டார்கள். நான், அண்ணன், அண்ணியார், பொறியாளர் சுரேஷ், திரு. தட்சணாமூர்த்தி ஐவரும் சென்றோம். காலையில் பார்த்து வியந்த ஈபில் கோபுரத்தில் இப்பொழுது தூக்கி (lift) வழியாக ஏறினோம். குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு, வேறொரு பயணமாக அடுத்த உயரத்தை அடைந்தோம்.

ஒவ்வொரு நிலையிலும் ஈபில் கோபுரம் குறித்த விவரங்கள், உலகின் பிற உயர்ந்த கோபுரங்கள், அதன் அளவுகள், கட்டிமுடிக்கப்பெற்ற விவரங்கள் அழகாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பொறியாளர் சுரேஷ் வேண்டிய அளவுக்குப் படம் எடுத்துக் குவித்தார். ஈபில் கோபுரத்திற்கு ஏதேனும் பழுது ஏற்பட்டாலும் நம் சுரேஷ் அவர்களிடம் உள்ள படத்தைக் கொண்டு மீட்டெடுத்துவிட முடியும். அந்த அளவுக்கு ஈபில் கோபுரத்தின் ஒவ்வொரு கணு, இணைப்பு என அனைத்தையும் படமாக எடுத்தார்; எங்களையும்தான். பின்னாளில் எங்களுக்குக் கிடைக்கவும் செய்தார்.

கோபுர உச்சிக்குச் சென்றதும் அண்ணன் அவர்கள் தேநீர் வேண்டும் என்று கேட்டார். இருநூறு உருவா மதிப்புக்குத் தொகையைப் பெற்றுக்கொண்டு ஒரு குவளை அளவு சுடுநீர் கொடுத்தார்கள். நம் ஊரில் உள்ளதுபோல் உருவா ஒன்று பெறுமானமுள்ள பொட்டலத்தில் தேநீர் தூள் கொடுத்தார்கள். இனிப்பைச் சேர்த்துத் தேநீராக்கி உண்டோம். விலையை நம் இந்திய உரூபாயில் கணக்கிட்டுப் பார்த்தபொழுது அதிர்ச்சியாக இருந்தது. பிரான்சு நாட்டைக் கடக்கும்வரை இனித் தேநீர் குடிப்பதில்லை என்று நினைத்துகொண்டேன். இரவு 12 மணிவரை ஈபில் கோபுரத்தின் அழகினையும், கோபுரத்தின் மேலிருந்து தெரிந்த பிரான்சு நாட்டின் விளக்கொளி அழகினையும்  கண்டுகளித்தோம். இவை என்றும் நினைவைவிட்டு அகலாது நெஞ்சில் நிலைத்திருப்பவையாகும்.

ஈபில் கோபுரத்திலிருந்து இறங்கி, நண்பர்களுக்கு விடைகொடுத்தோம். நானும் அண்ணனும் அண்ணியும் மட்டும் மகிழ்வுந்தில் அமர்ந்துகொண்டு சுவிசர்லாந்துக்குச் செல்லும்படி ஓட்டுநர் அருள் அவர்களுக்குச் சொன்னோம். அருள் ஈழத்தமிழர்; ஐரோப்பிய நாடுகளைத் தம் ஓட்டுநர் பணியால் அளந்து வைத்திருந்தார். அவருடனான பயணம் அரியசெய்திகள் பலவற்றைத் தெரிந்துகொள்ள உதவியது. ஈழமக்களின் இன்றைய புலம்பெயர் வாழ்க்கை பற்றியும் பிரான்சுநாட்டில் ஈழத்தமிழர்கள் பல்வேறு வணிகத்தில் ஈடுப்பட்டு முன்னேறியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

மகிழ்வுந்து சுவிசு நோக்கி ஓட்டமெடுத்தது. முன்னிருக்கையில் அண்ணனும், இடையிருக்கையில் நானும், பின்னிருக்கையில் அண்ணியாரும் அமர்ந்துகொண்டோம். உரையாடுவதும் தூங்குவதுமாகப் பயணம் இனித்தது. வைகறைப் பொழுதில் பிரான்சு எல்லையைக் கடக்கும்பொழுது காவல் துறையினர் எங்கள் ஆவணங்களை ஆய்வு செய்தனர். நாங்கள் வண்டியிலேயே அமர்ந்திருந்தோம். இனித்த முகமும், பனித்த சொற்களும், நாகரிக நடைமுறைகளும் எங்களுக்கு இளங்காலைப் பொழுதில் உவகையை உண்டாக்கின. அனைத்தும் சரியாக இருந்ததால் எங்களைச் செல்லும்படி சொன்னார்கள். மீண்டும் மகிழ்வுந்து புறப்பட்டது.
சுவிசு எல்லையை அடைந்ததனை ஓட்டுநர் அருள் எங்களுக்கு நினைவூட்டினார். முதலில் செனீவாவில் உள்ள ஐ.நா. அரங்கைப் பார்க்கும் எங்கள் விருப்பத்தை அண்ணன் அவர்கள் சொன்னார்கள். .நா.அரங்கிற்கு முன்னதாக காலைச் சிற்றுண்டியாக மென்மாவு (பன்) ஒன்றும், குளம்பியும் உண்டோம். அந்தக் கடையின் பணிப்பெண்ணுடன் நின்று நினைவுக்காகப் படம் ஒன்றினை எடுத்துக்கொண்டோம்.
                                       ஐ.நா. முன்றிலில் மு.இ.

காலை 8 மணிக்கு ஐ.நா. அரங்கின் முன்றிலில் நின்றோம். இந்த இடம்தானே உலகின் கவனத்தை ஒவ்வொரு நிமையமும் ஈர்க்கின்றது. நினைவுகள் நெஞ்சில் நிழலாடின. இங்குதானே என் தமிழர் எத்தனையோ முறை ஒன்றுதிரண்டு தங்கள் உரிமைக்குக் குரல் கொடுத்தனர். எத்தனை முறைக் கதறியும் உலகின் செவிட்டுக் காதுகளில் எம்மவரின் கூக்குரல் கேட்கவில்லையே என்று உள்ளம் குமைந்தபடி அங்கிருந்த நீரூற்றுகளையும், உடைந்த நாற்காலியையும், . நா. அவையின் முன்றிலையும் பார்வையிட்டோம்.

எங்களைப் போல் உலகின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுச்செலவு மேற்கொள்வோர் ஆர்வமாக முன்றிலில் நின்று படமெடுத்துக்கொண்டனர். அங்கு நடந்த பன்மொழி மாந்தரின் பன்னாட்டு மொழிகளும் கலந்த உரையாடல்கள் .நா. அவை முன்றிலில் உலக ஒற்றுமைக்கு அத்திவாரம் இட்டன.
அரவணைப்பு அறக்கட்டளையின் நிறுவுநர்கள்
ஐ.நா. அவை எதிரில் செயற்கை நீரூற்றுகள்


அடுத்துத் தரச்சான்று வழங்கும் சில நிறுவனங்களைப் பார்க்க அண்ணன் அவர்கள் விரும்பினார்கள். இடத்தைக் கண்டுபிடிக்க நேரம் ஆனது. மிக உயர்ந்து நிற்கும் சில கட்டடங்களைக் கண்டு அதுவா இது? என்ற முறையில் வினவிப் பார்த்தோம். தரச்சான்று அலுவலகங்களைப் பார்க்க நேரத்தை வீணாக்காமல் அடுத்து ஆல்ப்சு மலையை நோக்கி வண்டி விரைந்தது.

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பயண விவரங்களும்
காட்சிகளும் அருமை ஐயா
தொடருங்கள்