பிற்பகல் உணவிற்குப் பிறகு வகுப்புக்குச் செல்ல மணி அடித்தது.விரைவாக வகுப்பிற்குள் நுழைந்தேன்.கல்லூரி வழக்கத்திற்கு மாறாகப் பரபரப்பாகக் காணப்பட்டது.சில
மணித்துளிகளுக்கு முன் வேறொரு வகுப்பறையைப் புறக்கணித்த இரு மாணவர்கள் அக்கல்லூரியின் சுற்று மதிலில் ஏறிக் குதித்துத் தப்பிச் சென்றுள்ளனர். இதனைத்
தூரத்திலிருந்து கவனித்த பாதுகாவலர் உள்ளிணைப்புத் தொலைபேசி வழியாக அருகில் இருந்த காவலருக்குத் தகவல் தந்தார். கட்டுப்பாட்டிற்கும் கண்டிப்பிற்கும்
பெயர்பெற்ற அந்தத் தனியார் கல்லூரியில் நான் பணிபுரிந்த பொழுதுதான் இது நடந்தது
நிருவாகத்திற்கு விடை சொல்லவேண்டுமே என நினைத்துக் கலங்கிய அனைத்துக் காவலர்களும், ஏவலர்களும் சுற்று மதிலுக்கு அருகிலிருந்த பல காணி அளவுள்ள
கரும்புத் தோட்டத்தைச் சுற்றித் தேடிப் பார்த்தனர். அம் மாணவர்கள் பளிச்செனத் தெரியும்படியான கல்லூரியின் சீருடை அணிந்திருந்தனர். அவ்வாறு சீருடை இருந்தும் அவர்களை இரண்டுமணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கோடை வெயிலின் கொடுமை தொடங்கியிருந்ததால் அக் கரும்புச் சுணையில் மாணவர்கள் மிகப்பெரிய துன்பம் அடைந்திருக்க வேண்டும்.வகுப்பறையை எதற்குப் புறக்கணித்தனர்? யாராலும் உண்மைச் சம்பவத்தை உணரமுடியவில்லை.மறுநாள் அந்த இரு மாணவர்களும் என்னைத் தனியே கண்டு உண்மையைச் சொன்னார்கள்.
குறிப்பிட்ட ஒரு பேராசிரியரின் வகுப்பில் இருக்கப் பிடிக்கவில்லை என்றனர்.வகுப்பு அறுவையாக இருந்தால் நூலகம் செல்லலாமே! அதை விட்டு விட்டுக் கரும்புச்
சுணையில் எதற்குச் சென்று துன்பப்பட வேண்டும் என்றேன்.அந்த ஆசிரியர் நடத்தும் பாடமும் தேவையற்ற கண்டிப்பையும் விட கரும்புச் சுணையன்றும் அவ்வளவு
கொடுமை தரவில்லை என்றனர் அம் மாணவர்கள்.
ஆம்! சில ஆசிரியர்கள் வகுப்பிற்கு வரமாட்டார்களா? என மாணவர்கள் ஏங்குவதும் உண்டு.சில ஆசிரியர்களை நினைத்து வகுப்புகளைப் புறக்கணித்துவிடுவதும் உண்டு. அறிஞர்கள் இரா.பி.சேதுபிள்ளை, மு.வ, அ.ச.ஞா, மு.அருணாசலம்பிள்ளை, அ.சிதம்பரநாதன்செட்டியார்,தமிழ்மறவர்பொன்னம்பலர்,வ.சுப.மாணிக்கனார்,க.வெள்ளைவாரணனார்,சோ.ந.கந்தசாமி,தி.வே.கோபாலையர், கு.சுந்தரமூர்த்தி,க.ப.அறவாணன் உள்ளிட்டவர்களிடம் கற்ற அவர்தம் மாணவப் பெருமக்கள் இன்றும் அப்பெருமக்களின் வகுப்புகளையும் பாடம் நடத்தும் முறைகளையும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வது உண்டு.
இதற்குக் காரணம் வகுப்பிற்குச் செல்லும் பேராசிரியர்கள் தாம் நடத்தும் பாடங்களை நன்கு கற்றவர்களாகவும் பாடம் சொல்வதில் கைதேர்ந்தவர்களாகவும் இருந்ததே காரணம்!
பல நூல் பயிற்சி,பன்மொழிப்புலமை,உலக நடப்புகளுடன் பாடத்தை இணைத்துக்காட்டும் ஆற்றல்,மனப்பாடத் திறன்,பாடம் நடத்தும் பகுதியைச் சார்ந்து ஆயத்தப் பணிகள், மாணவர்களின் உள்ளம் உணர்ந்து நடத்தும் திறன்,எந்தப் பாடத்தை எந்த நேரத்தில் எந்த வகையில் நடத்தவேண்டும் என்று மாணவர்களின் உளத்தியல் அறிந்து நடத்தும் பாங்கு இவற்றால் பாடம் நடத்துவதில் வெற்றிபெறுகின்றனர்.ஆசிரியக்கலை ஒரு தொழிலாகத் தாழ்த்தப்படக்கூடாது.அது ஒரு பெரும்பணி; புனிதப்பொறுப்பு;இலட்சியத்தொண்டு என்பர் அறிஞர் இராதாகிருட்டிணர்.(மீரட் கல்லூரி வைரவிழா,1953,திசம்பர் 20).
ஆசிரியர்களுள் சிலர் பாடம் நடத்துவதில் ஒன்றித் தாமே கதை மாந்தர்களாக மாறிவிடுவர்.கதைத்தலைவனாக,எதிர்த்தலைவனாக,தாயாக,தந்தையாக,ஆணாக,பெண்ணாக மாறித் தம் குரல் வளத்தால் ஏற்ற,இறக்க ஒலிப்பு முறைகளால் வகுப்பறையை நாடக மேடைபோல் அமைத்துக்கொள்வார்கள்.சேக்சுபியர் நாடகங்களை நடத்தும் பேராசிரியர்கள் அப் பாத்திரமாகவே மாறி நின்று பேசுவார்கள்.அவர்களின் ஆங்கிலமொழி உச்சரிப்பு வகுப்பறையில் அமர்ந்திருப்பவர்களைக் கட்டிப்போட்டுவிடும்.சில பேராசிரியர்கள் சங்க இலக்கியங்களை நடத்தும்பொழுது மாணவர்கள் தலைவன் தலைவியகவே தங்களை எண்ணிக்கொள்வது உண்டு.அதுபோல் இலக்கணங்களை நடத்தும்பொழுது இலக்கண வகுப்பு என்பையே மறந்து இலக்கியவகுப்புகளில் சிரித்து மகிழ்வதுபோல்
சில பேராசிரியர்களின் வகுப்பு அமையும்.
சான்றாகப்புலவர் கி.த.பச்சையப்பன் நன்னூல் விருத்தியுரையும்,தொல்காப்பியச் சேனாவரையமும்,பாடங் கற்பிக்கையில் நகைச்சுவையுடன் மாணாக்கர் உளங்கொளச் சொல்வார் என அவரிடம் கற்ற மாணவர்கள் சொல்கிறார்கள்.அறிஞர் கு.சுந்தரமூர்த்தி போன்றவர்கள் வகுப்பறையில் சிலப்பதிகாரம் பாடம் நடத்தினால் மாணவர்களைக் காவிரி கலக்கும் பூம்புகாருக்கே தம் ஆற்றலால் அழைத்துச் சென்று அமரவைத்துவிடுவர். கோபாலையர் போன்றவர்கள் பாடம் நடத்தும்பொழுது தமிழின் உரையாசிரியர்கள், பக்திமான்கள் அவரிடம் வந்து கைகட்டி ஏவல் செய்வார்கள்.
மிகச்சிறந்த ஆசிரியர்கள்தான் மிகச்சிறந்த மாணவர்களை உருவாக்கமுடியும்.அத்தகு மாணவர்கள் அவ்வாசிரியர்களை என்றும் நன்றியுடன் நினைவுகூர்வர். ஆசிரியர்களிடம் அமர்ந்து படிப்பது மட்டும் பாடமல்ல.அறிஞர்களின் நூல்களைக் கற்று அதன் தாக்கத்தால் அவர்களை ஆசிரியர்களாக ஏற்றுக்கொள்பவர்களும் உண்டு.அறிவியலாளர் ஐன்சுடீன் அவர்கள் மிகப்பெரிய சார்பியல் தத்துவக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய பொழுது அவரைச் செய்தியாளர்கள் வினவிய பொழுது,"எனக்கு முந்திய ஆசிரியர்களான நியூட்டன்,லாரன்சு,சேம்சு கிளார்க் மாக்சுவெல்ட்டு இவர்களின் தோள்களின்மீது நின்று பார்த்ததனால்தான் இத்தகு கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடிந்தது என்று அடக்கமுடன் சொன்னார். தனக்கு வழிகாட்டிய பெரியோர்களை நன்றியுடன் நினைவு கூறும் தன்மையை இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.
மிகச்சிறந்த ஆசிரியர்கள் நெறிப்படுத்தும்பொழுதே மாணவர்கள் வல்லவர்களாக மலர முடியும்.உயர்வானதைச் சிந்திக்கும் வண்ணமும்,நல்லவர்களின் துணையுடனும் மிகச்சிறந்த
வெற்றியை ஈட்டமுடியும் என்பதற்குத் தக நல்ல ஆசிரியர்களை அடையாளம் கண்டு மாணவர்கள் முன்னேற வேண்டும்.யாரும் தனியாகச் செல்ல முடியாது என்பதற்காகத்தான் நிழல் உடன்வருகிறது என்பதற்கேற்பத் தக்கவர்களைத் துணையாக, முன்னோடியாகக் கொண்டு ஆசிரியர்களும் மாணவர்களும் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.
வகுப்பறையில் பாடம் கற்பிப்பவர்கள் வெற்றி பெறுவதில் பல கூறுகள் உள்ளன.இவற்றில் தோற்றம் மிக முக்கியம்.அதுபோல் நேரம் தவறாமை அதைவிட முக்கியம். நேற்று நிறுத்திய இடங்களிலிருந்து தொடங்கும் பொழுது மாணவர்கள் ஆசிரியர்களின் நினைவாற்றல் அறிந்து வியப்பர்.ஆசிரியர் பாடம் கற்பிப்பதால் மட்டும் வகுப்பறை ஆளுமையில் வெற்றி பெற்றுவிட முடியாது.தோற்றம், நடை,உடை, பாவனை, குரல்வளம், மாணவர்களிடம் நடந்து கொள்ளும் முறை, வகுப்பறையைத் தோழமையுணர்வுடன் அமைத்துக்கொள்ளல், மாணவர்களின் பெயர்சொல்லி அழைக்கும் முறை,ஒவ்வொரு மாணவரின் பின்புலம் அறிந்து நடத்தும் அருங்குணம் இவற்றால் பாடம்கற்பிப்பதில் வல்லவர்காளக மாறமுடியும்.
ஆசிரியர் சிலர் பகட்டு உடை அணிந்து வந்து மாணவர்கள் தங்களை அணுகமுடியாதபடி வேறுபட்டு நிற்பர்.சிலர் பொருத்தமற்ற உடைகளை அணிந்துவந்து மாணவர்கள் தம்மைப் பார்த்து இரங்கும்படியாக வருவர்.பொதுவாக எளிய உடையாயினும் பொருத்தமான உடையணிந்து வருவதையே மாணவர்கள் விரும்புகின்றனர்.சிலர் தங்களுக்கெனச் சீருடை போன்று ஒரு கொள்கைப் பிடிப்போடு உடையணிந்து வருவர்.பழங்காலத்தில் ஆசிரியர்கள் வேட்டியை மடித்துக்கட்டி,கையில் குடையுடன் வந்த காலம் உண்டு.செருப்புகளில் குறிப்பிட்ட வகையைத் தேர்ந்தெடுத்து அணிந்துவருவர்.
சிலர் மேனாட்டு உடையணிந்து பக்தி நூல்களைப் பாடம்சொல்ல வந்தால் அவையினருடன் வேறுபட்டு நின்று தங்கள் பணியில் வெற்றிபெறு முடியாமல் போகும்.எனவே அளவான ஒப்பனையும்,பொருத்தமான உடையமைப்பும், குரல்வளமும்,பாடத்தை எடுத்துரைக்கும் பாங்கும், அருவியென, ஆற்றொழுக்கெனத் தொடர்புடைய செய்திகளை எடுத்துரைக்கும் பொழுது மாணவர்கள் ஆசிரியர்களை விரும்புவர்.பாடத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குரிய பாடங்களையும், செய்திகளையும், நற்பண்புகளையும் எடுத்துரைப்பதுடன் நாமும் அவ்வாறு நடந்துகாட்டும்பொழுது மாணவர்களின் உள்ளத்தில் உறையும் கடவுளாக மாற முடியும்.
சில ஆசிரியர்கள் பாடத்தில் நல்ல அறிவு அமையாமல் தம் பிற திறமைகளைக் காட்டி நல்லவர்களாகப் பெயர் எடுப்பது உண்டு.சில ஆசிரியர்கள் மிகப்பெரும் அறிவாற்றல் பெற்றிருந்தும் எடுத்துரைக்கும் ஆற்றல் இல்லாததால் மாணவர்களிடம் நல்ல பெயர் வாங்கமுடியாமல் தடுமாறுவர்.வகுப்பறையில் நுழைந்தவுடன் சிலர் பாடத்தை உடனே தொடங்கி,மணியடிக்கும்வரை பிற பகுதி பற்றிச் சொல்லாமல் பாடத்தை மட்டும் வாந்தி எடுப்பதுபோல் முழங்குவர்.இவர்களின் செயல் தமக்கும் வகுப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுபோல் இருக்கும்.
திறமை வாய்ந்த சில ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் யாரும் கவனிக்காத வகையில் வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு விடுவர். நேற்று வராமல் இன்று வந்தவர்களை அடையாளம் காண்பர்.இன்று வராதவர்கள் யார் என மனத்திற்குள் கணக்கிட்டு வைத்துக்கொள்வர்.இடம் மாறி அமர்ந்தவர்களை அடையாளம் காண்பர். இவ்வாறு வகுப்பறைச் சூழலைக் கவனித்து பொது அறிவு, உலக நடப்புகளை நினைவூட்டி எப்பொழுது பாடத்திற்குள் நுழைகின்றோம் என்பது தெரியாதபடி கல்லூரி வகுப்பறைகளில் பாடம் நடத்துவதை மாணவர்கள் விரும்புகின்றனர். அதுபோல் எப்பொழுது பாடத்தை முடிக்கின்றோம் என்பது தெரியாதபடி பாடத்தை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும்.
பாடம் தொடங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கும் நமக்கும் இடையில் ஓர் உறவு ஏற்படும் வகையில் அவர்களின் நலன் சார்ந்த செய்திகளைப் பேசிப் பாடத்திற்குள் செல்லவேண்டும்.
வகுப்பறைகளில் பாடம் சொல்வதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடைமுறைகளப் பின்பற்றுகின்றனர்.சில ஆசிரியர்கள் இருக்கையில் அமர்ந்துகொண்டு பாடம் நடத்துவர். அதாவது புத்தகத்தைப் படித்துப் பொருள் சொல்வார்கள்.ஒருமணிநேரம் ஆடாமல் அசையாமல் அவர்கள் புத்தகத்தைப் படித்துப் பொருள் சொல்லும் பொழுது மாணவர்கள் இவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பர்.
சில ஆசிரியர்கள் மேசைமேல் ஏறி அமர்ந்துகொண்டு படித்துக் காட்டுவர். இவ்வாறு அமரும்பொழுது மாணவர்கள் பாடத்தில் முழுக்கவனம் செலுத்தாமல் இருப்பதை அறியமுடிகிறது. எனவே வகுப்பறையில் நின்றபடி,அல்லது இயங்கியபடி 180 பாகையில் அனைத்து மாணவர்களையும் அவர்களின் அசைவுகளையும் கவனித்தபடி பாடத்தை நடத்த வேண்டும்.பாடம் நடத்தும்பொழுது தேவையான இடங்களில் நகைச்சுவையை இணைக்கலாம்.நல்ல குரல்வளம் உடையவர்கள் பாடிக்காட்டலாம். நடிப்புத்திறன் உடையவர்கள் நடித்துக்காட்டலாம்.இவையெல்லாம் இயற்கையாக நடைபெறவேண்டும். செயற்கைத் தன்மை வெற்றி தராது.
மாணவர்களின் முகங்களே நமக்கு மணிப்பொறிகளாகும்.ஒரு மாணவன் கொட்டாவி விட்டாலோ, கால்மேல் கால்போட்டு அமர்ந்தாலோ,வழிச் செல்வோர்களைக் கவனித்தாலோ, சோம்பல் முறித்தாலோ,பாடத்தைக் கவனிக்காமல் கரிக்கோல் சீவுவது,பக்கத்து மாணவர்களிடம் எழுதிக்காட்டும் செயல்களில் ஈடுபட்டாலோ மாணவர்களுக்குச் சோர்வு உண்டாகிவிட்டது என உணர வேண்டும்.அத்தகுச் சூழலில் பாடத்தின் கடுமையைக் குறைத்து, எளிய செய்திகள், நகைச்சுவைகள், உலக நடப்புகளைச் சொல்லி அவர்கள் அறியாமல் அவர்களுக்கு ஊக்கம் உண்டாக்க வேண்டும்.
சில ஆசிரியர்கள் வகுப்பில் இருக்கும்பொழுது புதைப்பிட அமைதி நிலவும்.பாடத்தில் ஈர்ப்புண்டு மாணவர்கள் இருக்கும்பொழுது இத்தகு நிலை ஏற்படுவதும் உண்டு.ஆசிரியர்களின் மருட்டல்,அச்சமூட்டல்,செய்ம்முறை மதிப்பெண்களால் இவ்வாறு இருப்பதும் உண்டு. உண்மையில் வகுப்பு என்பது அமைதியும் இருக்க வேண்டும்.மகிழ்ச்சி உருவாகும் பொழுது ஆர்ப்பாட்டமாகவும் இருக்கவேண்டும் .
ஆர்ப்பாட்டம் அடுத்த வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியருக்கு எள்முனை அளவுகூட இடையூறாக இருக்கக்கூடாது. மாணவர்கள் வகுப்பில் பாடத்தை ஆர்வத்துடன் கேட்கும்படி நடத்தவேண்டும்.'செவி வாயாக நெஞ்சுகலனாக' என்று நன்னூல் இதனைத்தான் குறிப்பிடுகின்றது.'சித்திரப்பாவையின் அத்தக அடங்கி' என்றும் மாணவர்கள் பாடம் கற்கும் முறையை மேலும் நன்னூல் குறிப்பிடும்.
வகுப்பறை நாற்றங்கால் போன்றது.நன்கு அறிவு விதைகளை விதைத்தால்தான் நல்ல விளைச்சலைப்பெற முடியும். உழவன் வயலைப் பன்மடங்கு உழுது,அளவே எருஇட்டு, போதியநீர் வைத்து,நல்ல விதைகளைப் பாதுகாத்து,காலத்தில் அளவே ஊறவைத்து, நீர் வடிகட்டி, நாற்றங்காலில் இலகுவாக வீசி,குறிப்பிட்ட நேரம் நீர்தேக்கி, விதைமணிகள் நன்கு மண்ணில் பொருந்திய பிறகே நாற்றங்கால் நீரை மறுநாள் வெளியேற்றுவான். தேவையற்ற நீர் சிறிது இருந்தாலும் அதனைப் பல உத்திகளைப் பயன்படுத்தி வெளியேற்றுவான்.திடுமென மேகம் கறுத்து இடிமழை வந்தால் மீண்டும் நீர்கோலிப் பாதுகாப்பான்.அதுபோல் மாணவப் பயிர்களை வகுப்பறையின் புறச்சூழல்கள் குலைத்தாலும் ஆசிரியன் உழவனைப்போல் அப் பிஞ்சுப் பயிர்களைப் பாதுகாக்கவேண்டும்.நெல் நாற்றுகள் ஒருமுறை விளைச்சலை மட்டும் தரும். மாணவ நாற்றுகளோ அடுத்தடுத்த ஊழிக்காலம் கூடப் பயன்தருவார்கள்.
நனி நன்றி : தமிழ் ஓசை 22.06.2008 சென்னை
2 கருத்துகள்:
நீங்கள் குறிப்பிடும் ஆளுமைகள் தமிழுக்காக இனத்திற்காக உழைத்தவர்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்றிருந்தவர்கள். ஆனால், இன்றைக்கு ஆசிரிப்பணியை தேர்ந்தெடுப்பதன் நோக்கம் பலருக்கும் வேறானது. அரசுப்பள்ளி ஆசிரியர்களை நினைத்தால் வேதனை பொங்குகிறது. ஆசிரியர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கிறது.ஆசிரியர்கள் சிந்திப்பார்களாக...
தங்கள் பதிவிற்கு நன்றி.
தங்கள் மதிப்பீடும் சரியாக உள்ளது.
மு.இ
கருத்துரையிடுக