நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 16 மே, 2007

சங்க கால நவிரமலை

வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்ப் 'பல்குன்றக் கோட்டம்' என்று வழங்கப்பட்டது. பல்குன்றக் கோட்டத்தைச் சிறப்புடன் ஆட்சி செய்தவன் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் என்னும் அரசனாவான். இவனுடைய தலைநகரம் 'செங்கண்மா' எனப்பட்டது. இன்றைய 'செங்கம்' என்னும் ஊரே முன்பு 'செங்கண்மா' எனப்பட்டது. செங்கம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரில் நன்னனின் கோட்டையும், அரண்மனையும், பல்வேறு படைப்பிரிவுகளும் இருந்தன. நன்னனின் வீரத்தையும், கொடைத்திறனையும் அவனின் நாட்டு வளத்தையும் அறிந்த இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் என்ற புலவர் 'மலைபடுகடாம்' என்ற நூலை இயற்றி நன்னனின் வரலாற்றை நிலைபெறச் செய்தார்.

'மலைபடுகடாம்' எனும் நூலுக்குக் கூத்தராற்றுப் படை என்ற வேறு பெயரும் உண்டு.(கூத்தன் என்னும் சொல் நூலில் எந்த இடத்திலும் இடம் பெறாததை நினைவிற் கொள்க). மிகச் சிறந்த வள்ளலாகிய நன்னனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் கூத்தன் ஒருவன், வழியில் கண்ட தன்னையொத்த வறுமை நிலையில் இருந்த கூத்தனுக்கு நன்னன் நாட்டு இயல்பையும், மலை வளத்தையும், நன்னனின் கொடை வளத்தையும் சொல்வதாக இந்நூலைப் பெருங்கௌசிகனார் பாடியுள்ளார்.

நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேரிசை நவிர மேஎ யுறையும்
காரி உண்டிக் கடவுள தியற்கையும் (மலை.81-84)

எனவும்,

கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென (மலை,579)

எனவும் நவிரமலை மலைபடுகடாம் நூலில் பாடப்பட்டுள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புலவரால் நவிர மலை எனக் குறிப்பிடப்பட்ட நன்னனின் மலை இன்று பர்வதமலை, திரிசூலகிரி என்று அழைக்கப்படுகிறது. காரியுண்டிக் கடவுள் என்று இலக்கியங்களில் அழைக்கப்பட்ட அம்மலையில் உள்ள கோயிலின் சிவக் கடவுள் பின்பு, காளகண்டேசுரர் என அழைக்கப்பட்டு இன்று மல்லிகார்ச்சுன ஈசுவரர், பர்வதநாதர் என்று அழைக்கப்படுகின்றார். அம்மையின் பெயர் பிரம்மறாம்பிகை எனவும் அழைக்கப்படுகின்றார். இம் மலைக்கோயிலைத் தென்கயிலாயம் என அழைக்கும் மரபும் உள்ளது.

பர்வத மலையை ஒட்டி நன்னன் நாட்டை வளப்படுத்திய அவனது சேயாறு(செய்யாறு) ஓடுகிறது. இந்த ஆறு இன்று சவ்வாது மலைப் பகுதிகளில் தோற்றம் பெற்று திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் வழியாக ஓடுகிறது.

நவிரமலை என்ற பர்வதமலையைப் போளூர் - செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) சாலையில் உள்ள தென்மாதிமங்கலம் என்னும் ஊரில் இறங்கி அடையலாம். தென்மாதி மங்கலத்தை அடைய போளூரிலிருந்தும் (18. கி.மீ) செங்கத்திலிருந்தும் (32.கி.மீ) பேருந்துகள் நிறைய உள்ளன. திருவண்ணாமலையிலிருந்து (34 கி.மீ) மேல் சோழங்குப்பம் அல்லது வீரளூர் செல்லும் பேருந்துகளில் ஏறி அடையலாம்.

தென்மாதிமங்கலத்தில் இறங்கி மலைப் பயணத்திற்குத் தேவையான தண்ணீர், உணவு, சிற்றுணவுகளை வாங்கிக் கொண்டு 4 கி.மீ நடந்தால் மலையடிவாரம் வரும். மலையடி வாரத்திலிருந்து மேலே ஆறு கி.மீ நடந்தால் மலையுச்சியை அடையலாம்.

மலையடிவாரத்தை அடைவதற்குள் சிறு தெய்வக் கோயில்கள் சில உள்ளன.  அவற்றுள், பச்சையம்மன்கோயில், வீரபத்திரசுவாமிக்கோயில், வனதுர்க்கையம்மன், இரேணுகாம்பாள் கோயில் குறிப்பிடத்தக்கன. இரேணுகாம்பாள் கோயிலை அடுத்து மலைவழிப் பாதை தொடங்குகிறது.

மலைவழியில் சிறிது தூரம் நடந்தால் அண்ணாமலையார் பாதம் எனும் பகுதி வரும். அதனைத் தொடர்ந்து நடந்து சென்றால் தண்ணீர்ப் பள்ளம் என்ற இடம் வரும். இப்பள்ளத்தின் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும். இத் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மழைக்காலத்தில் இத்தண்ணீர் குடிக்க உதவும். அங்கிருந்து நாம் மேலே நடந்தால் பாதிமண்டபம் வருகிறது. முற்காலத்தில் மலையில் செல்பவர்கள் மழையில் ஒதுங்கி, ஓய்வெடுத்துச் செல்ல இம்மண்டபத்தைக் கட்டி வைத்துள்ளனர். அங்கிருந்து மேலே செல்லும்பொழுது மரங்கள் நமக்கு இருபுறமும் நின்று அழகிய காட்சி தரும். தோரணவாயில் போன்று மரங்கள் நிற்கும் அப்பகுதியில் சில்லென்ற காற்று இதமாக வீசும். மழைக்காலத்தில் மிகுந்த குளிர்ச்சியும், வெயில் காலத்தில் இதமான காற்றையும் அப்பகுதியில் உணரலாம்.

இங்குக் குமரிநெட்டு எனும் செங்குத்தான பகுதி உள்ளது. கரடுமுரடான இப்பகுதியைக் கடக்க வேண்டும்.அங்கிருந்து நாம் பயணத்தைத் தொடர்ந்தால் காண்பவர்களுக்கு மிகுதியான வியப்பினையும், அச்சத்தையும் தரும் கடப்பாறை நெட்டு எனும் பகுதி வரும். இங்குச் செங்குத்தான பாறைகளைக் கடக்க வேண்டும். இதற்கு வசதியாக இரும்புத் தொடரிகள், இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. மிகக் கவனமாக இதில் ஏறிச் செல்ல வேண்டும். தலைச்சுற்று, மயக்கம் உள்ளவர்கள் இதில் ஏறிச் செல்ல நினைப்பது பெரும் ஆபத்தாக இருக்கும். அதுபோல் உயரே ஏறிச் செல்லும்பொழுது கீழே பார்த்தல் கூடாது (இப்பகுதியைத்தான் மலைபடுகடாம் குறவரும் மருளும் குன்றம் என்றது போலும்). .


ஏணிப்படிகள் போல் அண்மைக் காலத்தில் பதிக்கப்பெற்ற பாதையில் ஏறி மேலே செல்லும்பொழுது தண்டவாளங்கள் பதிக்கப்பட்ட பாதை உள்ளது. இரண்டு பாறைகளுக்கு நடுவே இத்தண்டவாளம் உள்ளது. தண்டவாளத்தின் கீழே மிகப்பெரிய - ஆழமான பள்ளம் உள்ளது. தண்டவாளத்தைக் கடந்து மேலே செல்லும் பொழுது நாம் அங்கு ஒரு மண்டபத்தைக் காணலாம். மலைமீதுள்ள இறைவனை வழிபடவரும் பெண்கள் வீட்டு விலக்கானால் தங்கியிருப்பதற்காக அம்மண்டபம் உள்ளதாகச் செவிவழிச் செய்தி உள்ளது. அங்கே நாம் சிறிது இளைப்பாறிச் செல்லலாம்.

அம்மண்டபம் கடந்து மேலே ஏறிச் சென்றால் பாதாளச்சுனை எனும் பகுதி காணப்படும். அங்கு ஒரு நீர்ச்சுனை உள்ளது. மழைக் காலங்களில் நீர் நிரம்பியிருக்கும். அச் சுனைப்பகுதி செங்கற்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இச் சுனை நீர் மூலிகைத் தன்மை கொண்டதால் மருத்துவக்குணம் உடையதாக விளங்குகிறது. குடிப்பதற்குச் சுவையாக இச் சுனைநீர் இருக்கும். வெயில் காலங்களில் சுனைநீர் இருக்காது. சுனையின் தென்புறம் பாழடைந்த கோட்டையின் சுவர் உள்ளது. அங்கு நன்னனின் கோட்டை இருந்ததாகவும், காவலுக்கு அவனின் வீரர்கள் இருந்தார்கள் எனவும் மலைபடுகடாம் நூலில் குறிப்பு உண்டு. மக்களும் செவிவழியாகச் சொல்கின்றனர். சுனையின் வடபுறம் உள்ள வழியாக மேலே ஏறிச் சென்றால் அங்குத் தென்புறமாக மிகப் பெரிய பள்ளம் இருக்கிறது. அங்கு மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டும். அப்பகுதியை அடுத்துப் பிள்ளையார் நெட்டு எனும் பகுதியும், கணக்கச்சி ஓடை எனும் பகுதியும் இருக்கும். (மலையுச்சியில் நடந்து சென்ற கணக்கர் ஒருவர் தவறி விழுந்து இறக்க, அவரின் மனைவி மலையிலிருந்து பாய்ந்து உயிர்விட்ட இடம் எனவே கணக்கச்சி ஓடை எனப்பட்டது).

இப்பகுதியிலிருந்து வேகமாகக் குரல் எழுப்பி ஓசையிட்டால் மலைகளில் நம்குரல் எதிரொலிக்கக் காணலாம். (இக்குரலொலி அழகில்தான் சங்கப் புலவன் மயங்கியிருக்கக் கூடும்) அப்பகுதியைக் கடந்து சென்றால் சிறுசிறு கற்களால் படிபோன்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். அருகே காரியுண்டிக் கடவுளின் கோயிலை அடையலாம். இக் கோயிலை அடைய மலையடிவாரத்திலிருந்து ஏறத்தாழ மூன்று மணிநேரம் நடக்க வேண்டியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து மிக உயர்ந்த இடத்தில் இக்கோயில் உள்ளதால் மழைக்காலங்களில் இடியின் பாதிப்பு இருந்தது. இப்பொழுது இடிதாங்கி அமைப்பும், கோயிலை ஒட்டிச் செயற்கையாக வீடு ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. கரடுமுரடான காடு, மலைகளைக் கடந்து சரளைக் கற்களை எதிர்கொண்டு மலைக்குச் சென்று மலையின் மேலிருந்து சுற்று வட்டாரக் காட்சிகளைக் காணும்பொழுது நாம் அடைந்த உடல் வருத்தம் மறைந்து விடும். சவ்வாது மலையின் கருநீல நிற அழகுக் காட்சிகளும், கிழக்குத் தொடர்ச்சிமலைத் தொடரும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

மலை முகட்டில் சிவன், அம்மை சிலைகளும், போகர் முனிவரின் சிலையும் உள்ளன. கோயிலுக்குக் கதவுகள் இல்லை. ஆண்டு முழுவதும் கோயில் திறந்தே இருக்கும். நாமே வழிபாடு நிகழ்த்தலாம். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் மக்கள் வருகின்றனர். பௌர்ணமி மற்றும் திருவிழாக் காலங்களில் மக்கள் கூட்டம் மிகுதியாக இருக்கும். பகலில் கோயிலுக்குச் சென்று திரும்புபவர்களும் உண்டு.இரவில் கோயிலில் தங்கி வழிபட்டு மறுநாள் காலை திரும்புவதுபோல் பயணத்திட்டத்துடன் செல்பவர்களும் உண்டு.

மலைவழியில் வழிபாட்டுப் பொருள்கள், தேநீர், ரொட்டி, குளுகோஸ் முதலியன விற்கின்றன. அவை விலை அதிகம். மலைவழியில் நச்சு உயிரிகளோ, கொடிய விலங்குகளோ இல்லை. எனினும் குழுவாகவோ, இரண்டு மூன்று பேராகவோ சேர்ந்து செல்வது நன்று.

மலையடிவாரத்தில் இறை வழிபாட்டு நம்பிக்கையுள்ளவர்கள் கொண்டு வந்து தரும் அரிசி முதலியவற்றைக் கொண்டு கஞ்சி செய்து, வரும் மக்களுக்கு இலவசமாக வழங்கும் பணியை வீரபத்திரசாமிக் கோயிலில் செய்கின்றனர். இம்மலையில்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நன்னனின் குடிமக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். மலையில் கிடைக்கும் பல்வேறு பொருள்களைக் கொண்டு வளமாக வாழ்க்கை நிகழ்த்தினர். மலைவழியில் செல்லும் விருந்தினர்களுக்குப் பலவாறு விருந்து உபசரித்தனர். வழி தெரியாமல் திகைக்கும்பொழுது முன்பே பழகியவர்களைப் போல் உதவி செய்தனர். பாதைகளுக்கு அடையாளமாகப் புல்முடிச்சுகளை இட்டு வைத்தனர்.

நன்னனின் மலையில் அருவியாடும் பெண்களின் ஓசை, யானை விரட்டும் ஓசை, முள்ளம் பன்றியால் குத்துப்பட்டவர்களின் ஓசை, புலி பாய்ந்து கீறியதால் தம் கணவனைக் காக்கும்படி கொடிச்சியர் பாடிய பாடல் ஓசை, தேனெடுப்போர் எழுப்பும் ஓசை, கானவர்களின் ஓசை, குரவை ஒலி, அருவி ஓசை, யானையைப் பழக்கும் பாகர் ஓசை, கிளி விரட்டும் பெண்ணின் ஓசை, காளைமாடுகளை மோதவிடும் கோவலர் ஓசை, கடாவடிஓசை, கரும்பாலை ஓசை, வள்ளைப்பாட்டு ஓசை, பன்றிப்பறை அடிப்பார் ஓசை இவையெல்லாம் அம்மலையில் எதிரொலித்ததால் மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்ப என்று புகழப்பட்ட இம்மலை மிகப்பெரிய வரலாற்றுச் சுவட்டைச் சுமந்து கொண்டு நிற்கிறது.


தொடர்புடைய பதிவு

1 கருத்து:

செல்வா சொன்னது…

நவிர மலை பற்றியும், அங்கு செல்லும் வழிகளில் உள்ள காட்சிகள், இடர்ப்பாடுகள் பற்றியும் மிக அற்புதமாக எழுதியுள்ளீர்கள். இப்படி இலக்கியத்தில் குறிப்பிடப் பெற்ற இடங்களைப்பற்றி எழுதுவது ஒரு அரும்பெரும் பணி. நெஞ்சார்ந்த பாராட்டுகள். நல்வாழ்த்துகள். நல்வாய்ப்பாய் இன்றுதான் காண நேர்ந்தது!