வியாழன், 13 மே, 2021

சிற்றூருக்கு வந்த தமிழ்க்கடல்கள்!


    இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நூல் வெளியீட்டு விழாவை ஒரு சிற்றூரில் நடத்துவது  என்பது அவ்வளவு எளிதன்று. ஆனாலும் பெரும் முயற்சி எடுத்து நடத்திக்காட்டினார் அண்ணன் சிங்கார. மாணிக்கம். எங்களின் குடும்ப நண்பர்; தமிழ்த் தொண்டர்; தந்தை பெரியாருக்கு உள்கோட்டையில் சிலையமைத்த சாதனையாளர். சனதா பல்பொருள் அங்காடியின் நிறுவுநர்; சனதா அரிசி ஆலையையும் அப்பொழுது நிர்வாகம் செய்துவந்தவர்.  உள்கோட்டைப் பள்ளியில் பணிபுரிந்த இரா. அரிதாசு அவர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் துணைநின்றாவர்.

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மேற்கில் ஒரு கல் தொலைவில் உள்ள குருகாவலப்பர்கோவில் ஊரில் அமைந்திருந்த சனதா அரிசி ஆலை வளாகத்தில் 06.01.1996 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு மதுரையிலிருந்து பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் தம் நண்பர் இராம. விசுவநாதனுடன் மகிழுந்தில் நிகழ்ச்சி நடைபெறும் நேரத்துக்கு முன்னதாகவே வந்து, நிகழ்வைச் சிறப்பித்தார். க.ப. அறவாணன், தாயம்மாள் அறவாணன், தம் நட்புச் சுற்றமான அ. அறிவுநம்பி, இளமதி சானகிராமன், புலவர் இ. திருநாவலனார், அரங்க. மு. முருகையன், சு.தமிழ்வேலு, முனைவர் நா. இராசசெல்வம், உள்ளிட்டோருடன் புதுவையிலிருந்து வருகை தந்தனர். என் பேராசிரியர் ம.வே.பசுபதி, பேராசிரியர் மது.ச. விமலாநந்தம், கோ.வீரக்குமரன் (கேரளா வேளாண்மைப் பல்கலைக்கழகம்), திரைப்பா ஆசிரியர் அண்ணன் கே. அறிவுமதி, பாவாணர் பைந்தமிழ்த்தொண்டர் குடந்தைக் கதிர். தமிழ்வாணனார், வாழ்நாள் காப்பீட்டுக் கழக அதிகாரி சுப்பராயன் (நெய்வேலி) என்று பேச்சாளர்களின் பட்டியல் விரிவாக இருந்தது. அனைவரும் குறித்த நேரத்திற்கு வந்து நிகழ்ச்சிக்குப் பெருமைசேர்த்தனர்.

    விடுதலைப் போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள் (தன் வரலாறு), மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்ற இரண்டு நூல்களையும் வெளியிட்டு வாழ்த்திப் பேசுவதுதான் விழாவின் நோக்கம். வெ. துரையனார் அடிகளாரின் மகனார் திரு. திருநாவலர்காந்தி (மயிலாடுதுறை), திரு. அருள்நந்திசிவம் (கும்பகோணம்), திரு. இராமாமிர்தத்தொண்டைமான், திரு. முகிலன் உள்ளிட்ட பெரியோர்களும் குடந்தையிலிருந்து வந்து பெருமைசெய்தனர்.

    என் மாமா திரு. மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் திருச்சியிலிருந்து தம் குடும்பத்தினருடன் வந்து ஆர்வமாகக் கலந்துகொண்டார்.

   திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளனாக நான் அப்பொழுது இருந்ததால் நிகழ்ச்சி நாளன்றுதான் ஊருக்கு வந்தேன். விழாவுக்கான அழைப்பிதழ் அச்சிடல், அழைப்பிதழ் வழங்கல், பதாகை வரைதல், ஒலிபெருக்கி, காணொலிப் பதிவு என்று அனைத்து ஏற்பாடுகளையும் தம்பிமார் சா. வெங்கடாசலம், மணிவேல், அ.பாலசுப்பிரமணியன், ச. முத்துக்குமரன், திரு. மேகநாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். ஓவியர் தாமு அவர்கள் பதாகை வரைவதில் பெருந்துணையாக இருந்தார். 

                     பேராசிரியர் தமிழண்ணல் உரை

              பேராசிரியர் க.ப.அறவாணன் நூலை வெளியிட, 

              புலவர் இ.திருநாவலன்   பெற்றுக்கொள்ளுதல்

  நிகழ்ச்சியின் தொடக்கமாக சிறுவர்கள் நிகழ்த்திய நாட்டிய நிகழ்வு அனைவருக்கும் பெரு விருந்தாக இருந்தது. நிகழ்வுக்கு வந்திருந்தோரைச் சிதம்பரம் மயில்வாகணன் வரவேற்றார். ஆற்றொழுக்காக அமைந்த வரவேற்புரை அரைமணி நேரத்தையும் கடந்தது. அவர் உரையைக் கட்டுப்படுத்த முடியாமல் அவைத்தலைவர் கதிர். தமிழ்வாணன் பொறுமை காக்க வேண்டியிருந்தது. கோடையிடி முழங்கியது போலவும் பெரும் மழை அடித்து ஓய்ந்தது போலவும் வரவேற்புரை நிறைவுக்கு வந்தது. அதனை அடுத்து, கதிர். தமிழ்வாணனார் தம் தனித்தமிழ்க் கொள்கைகளை எடுத்துரைத்து, நூலாசிரியனாகிய என்னையும் என் முயற்சியையும் ஊக்கப்படுத்தி, வாழ்த்தி மகிழ்ந்தார். அதனை அடுத்து நூல் வெளியீட்டு உரையை முனைவர் க.ப. அறவாணன் நிகழ்த்தி, பெருமையும் வீரமும் பொருந்திய சோழமண்ணின் சிறப்பையும், சோழர்குல வரலாற்றையும் எடுத்துரைத்தார். பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் தமிழின் நிலையை எண்ணி, நைந்து, தமிழ் வளர்ச்சிக்குரிய பணிகளில் அனைவரும் ஈடுபடவேண்டும் என்று அரியதோர் உரைப்பெருக்காற்றி, தமிழ்ச் சுடர் ஏற்றிவைத்தார். விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் நூலும், மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் நூலும் வெளியீடு கண்டன. இராம. விசுவநாதன், புலவர் இ. திருநாவலன், திரு. சுப்பராயன் ஆகியோர் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

துரையனார் அடிகளாரின் திருமகனார் திருநாவலர் காந்தி அவர்கள் தம் குடும்பத்தின் சார்பாக இனிய வாழ்த்துகளையும் அன்புமொழிகளையும் தெரிவித்து ஊக்கப்படுத்தினார். பேராசிரியர் ம.வே. பசுபதி, இராமாமிர்தத் தொண்டைமான், மது. ச. விமலாநந்தம், கோ. வீரக்குமரன், சுப்பராயன் உள்ளிட்டோரின் உரைகளும் சிறப்பாக அமைந்தன.

    பேராசிரியர் அ. அறிவுநம்பி அவர்களின் பேச்சு தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. பேருந்தில் பயணித்த தாம் குருகாவலப்பர்கோவிலில் இறங்காமல் மு.இளங்கோவன் பிறந்த ஊரைப் பார்க்கவேண்டும் என்று உள்கோட்டை சென்று அந்த மண்ணில் காலார நடந்து திரும்பினேன் என்று பேசிய பேச்சு எம் மக்களை உணர்வுமயமாக்கிவிட்டது. 

                        பாவலர் அறிவுமதி சிறப்புரை

                  தமிழண்ணல் வெளியிடும் நூலினை, 

              சுப்பராயன் அவர்கள் பெற்றுக்கொள்ளும் காட்சி.

  அண்ணன் அறிவுமதி அவர்கள் சிறைச்சாலை படத்திற்குப் பாடல், உரையாடல் எழுதிய காலம் அது ஆதலால் அவர்தம் உரையைக் கேட்க அனைவரும் ஆர்வமாக இருந்தோம். மிகச் சிறப்பானதோர் இன எழுச்சியுரையாற்றி எம் நெஞ்சில் அறிவொளி ஏற்றி வைத்தார். சற்றொப்ப இரவு ஒன்பது மணியளவில் நிகழ்வு நிறைவுக்கு வந்தது. என் ஆசிரியர் சிங்கார. சுந்தரேசன் அவர்கள் நன்றியுரையாற்றி மகிழ்ந்தார்.

 உள்கோட்டை அஞ்சலகத்துக்குத் தமிழ்ப் பெயர்ப்பலகைத் திறப்பு, குழந்தைக்குத் தமிழ்ப்பெயரிடல், தூய தமிழ்ப் பெயர்சூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கைப்பை வெளியீடு என இந்நிகழ்வை ஒட்டிப் பல நிகழ்வுகள் நடைபெற்றன. 

        க.ப.அறவாணன் பெயர்ப்பலகையினைத் திறந்துவைத்தல்

                மு.இ, சிங்கார.மாணிக்கம், திருநாவலர் காந்தி

மருத்துவர் என். மாசிலாமணி (ச.ம.உ), பொறியாளர் இரா. கோமகன், தியாக. மோகன், பி. தியாகராசன், காசி. அன்பழகன், க. முல்லைநாதன்,  ஆசிரியர் வேங்கைப்புலியன், தமிழாசிரியர் இராசகோபால் உள்ளிட்ட உறவினர்களும் நண்பர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரைச் சிறப்பித்து, வழியனுப்பிவைத்தனர். என் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் எனத் திரண்டு நடத்திய அந்த விழாவின் காணொலியை அண்மையில் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மூத்தோர் பலர் இன்று நம்முடன் இல்லை. நிகழ்வுகளும் வரலாறும் அவர்களின் இருப்பை நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

                                பார்வையாளர்கள்


 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக