ஞாயிறு, 9 மே, 2021

பேராசிரியர் அருணபாரதி மறைவு!

பேராசிரியர் அருணபாரதி

 பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் அருணபாரதி அவர்கள் 08.05.2021 இரவு 10.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த துயருற்றேன். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பேராசிரியர் அருணபாரதி அவர்களுடன் தொடர்புகொண்டிருந்தேன். அவர் பற்றி 2016 இல் என் வலைப்பதிவில் எழுதி, அறிஞர் உலகத்திற்கு அவர்தம் தமிழ்ப்பணியை நினைவூட்டியிருந்தேன். அந்தப் பதிவிலிருந்து…..

  நாகை மாவட்டம் குமாரக்குடி (பூம்புகார் - தரங்கம்பாடி சாலையில் உள்ள ஊர்) என்னும் ஊரில் திருவாளர்கள் நல்லசேவு, ஜெகதாம்பாள் ஆகியோரின் அன்புமகனாக ந. அருணபாரதி 15.06.1947 இல் பிறந்தவர். ஆக்கூர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிவகுப்பு வரை பயின்றவர். பின்னர் ஓராண்டு புகுமுக வகுப்பினை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இளங்கலைத் தமிழ்ப் பட்டத்தினையும் (1966-1969), முதுகலைத் தமிழ்ப் பட்டத்தினையும் (1969-1971) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்று விளங்கிய மொழியியல் துறையில் 1971 முதல் 73 வரை பயின்று மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கன்னடம், தெலுங்கு, சீனம் உள்ளிட்ட மொழிகளைப் பயின்று பட்டயச் சான்று பெற்றவர்.

  1974 ஆம் ஆண்டு பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியில் இணைந்தவர்.  11 ஆண்டுகள் விரிவுரையாளராகவும், எட்டாண்டுகள் இணைப் பேராசிரியராகவும், 19 ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 பனாராசு இந்துப் பல்கலைக்கழகத்தில் இவர் பணியாற்றியபொழுது ஐரோப்பியர்கள், சிங்களர்கள், மலேசியர்கள், சப்பானியர்கள், அமெரிக்கர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இவரிடம் தமிழ் கற்றுள்ளனர்.

 தமிழை எவ்வாறு எளிமையாகப் பிற மொழியினருக்குக் கற்பிப்பது? என்ற துறையில் மிகச்சிறந்த புலமையுடைவராக நம் பேராசிரியர் அருணபாரதி விளங்குபவர். இதுவரை மூன்று நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். பயன்பாட்டில் உள்ள 4000 மொழியியல் சொற்களுக்குத் தமிழ் விளக்கம் தரும் வகையில் இவர் உருவாக்கிய Glossary of linguistics English- Tamil, (Madras, Tamil Nulagam, 1976) என்னும் நூல் இவர்தம் உழைப்புக்குக் கட்டியம் கூறும் நூலாகும். மேலும் அடிப்படைத் தமிழ்க்கல்வி பயில்வதற்குரிய இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார். இதில் தமிழ்ப்படிப்புக்கு உதவும் வகையில் 29 பாடங்களைக் கொண்ட தமிழ் ரீடர் என்னும் நூல் பிறமொழி மாணவர்கள் தமிழைப் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் ஏற்ற வகையில் எழுதப்பட்ட நூலாகும்.

 மேலும் அறிய என் வலைப்பதிவுக்கு வருக!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக