பேராசிரியர் சரசுவதி வேணுகோபால்
தமிழகத்தில்
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நாட்டுப்புறவியல் ஒரு பாடமாக அமைக்கப்பட்டு, மாணவர்கள்
கற்று வருகின்றனர். பலர் இத்துறையில் ஆய்வுகளைத் தொடர்ந்து நிகழ்த்திவருகின்றனர். பல்கலைக்கழகங்களில்
நாட்டுப்புறவியல் தனித்துறையாகச் செயல்படுவதையும் இங்கு நினைவிற்கொள்ளவேண்டும். தமிழக
நாட்டுப்புறவியல் துறை ஆய்வாளர்களுள் பேராசிரியர் சரசுவதி வேணுகோபால் அவர்கள் குறிப்பிடத்தகுந்த
பங்களிப்பு நல்கியவர் ஆவார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுசெய்து
பட்டம் பெற்றவர். அப்
பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து, நாட்டுப்புறவியல் ஆய்வு செழிக்க அருந்தொண்டாற்றியவர். பன்னூலாசிரியர். பல ஆய்வுத்திட்டங்களை வகுத்து, நிறைவுசெய்தவர். அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளைச் சார்ந்த மாணவர்களுக்குக் கல்வி கற்பித்த பட்டறிவாளர். கடந்த ஐம்பதாண்டுகளாக வளர்ந்துவரும் நாட்டுப்புறவியல் துறைசார்ந்த தம் பட்டறிவுகளைச் சற்றொப்ப இரண்டரை மணிநேரம் என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள்.
இந்த நேர்காணலில் நாட்டுப்புறவியல் துறை தமிழகத்தில் எவ்வாறு வளர்ந்தது என்பதை மிகச் சிறப்பாக நம் பேராசிரியர் அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். அயல்நாட்டு அறிஞர்கள் தமிழக நாட்டுப்புறவியல் துறை ஆய்வுக்குச் செய்துள்ள பங்களிப்புகள், தமிழகத்தில் நிகழ்ந்துள்ள மிகச் சிறந்த நாட்டுப்புறவியல் ஆய்வுகள் என யாவற்றையும் தம் நினைவிலிருந்து பகிர்ந்துகொண்டார்கள். தமிழகத்தின் மூத்த அறிஞர் பெருமக்களின் தமிழ்ப்பணிகளும் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளன. பேராசிரியர்கள்
தெ.பொ.மீ, முத்துச்சண்முகனார், மு.வ., வ.சுப.மாணிக்கம், தமிழண்ணல், வெள்ளைவாரணனார்
உள்ளிட்டோர் தம் ஆய்வுக்குத் துணைநின்ற பாங்கினை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
என் வேண்டுகோளை ஏற்று, நேர்காணலுக்கு உதவிய பேராசிரியர் சரசுவதி வேணுகோபால் அவர்களுக்கும், அவர்களின் கணவர் முனைவர் விசய வேணுகோபால் ஐயா அவர்களுக்கும் தமிழுலகின் சார்பில் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எங்களின் ஆவணமாக்கும் முயற்சிக்குத் துணைநிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
தமிழக
நாட்டுப்புறவியல் என்ற தலைப்பிலும், தொல்காப்பியத்தில் நாட்டுப்புறவியலின் தாக்கம்
என்ற தலைப்பிலும் இரண்டு நேர்காணலைப் படத்தொகுப்பு செய்து, இணையவெளியில் இணைத்துள்ளேன்.
நாட்டுப்புறவியல் ஆர்வலர்கள் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.
தமிழக நாட்டுப்புறவியல் காணொளியைப் பார்க்க இங்கு அழுத்துக.
தொல்காப்பியத்தில் நாட்டுப்புறவியல் கூறுகள் காணொளியைப் பார்க்க இங்கு அழுத்துக.
பேராசிரியர் சரசுவதி வேணுகோபால் அவர்களுடன் மு.இளங்கோவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக