தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கனின் நூல்களைப் புதுச்சேரி முதலமைச்சர் வே. நாராயணசாமி வெளியிட, சமூகநலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் இரா. சிவா, திரு. ஜான்குமார் உள்ளிட்டோர் படிகளைப் பெற்றுக்கொண்டனர்.
புதுச்சேரி, தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கனின்
14 நூல்கள் வெளியீட்டு விழா, புதுச்சேரி செயராம் உணவகத்தில் 24. 01. 2019 மாலை 6 மணி
முதல் 8 மணிவரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்
புதுச்சேரி முதலமைச்சர் வே. நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 14 நூல்களையும்
வெளியிட்டு, நூலாசிரியரின் தமிழ்ப்பணியைப் பாராட்டிப் பேசினார். சமூகநலத்துறை அமைச்சர்
மு. கந்தசாமி, புதுச்சேரி அரசின் தில்லிச் சிறப்புப் பிரதிநிதி அ. ஜான்குமார், புதுவை
அரசின் தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா, த.
தனமாலா தமிழியக்கன் ஆகியோர் நூலின் படிகளைப் பெற்றுக்கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து
நூலின் சிறப்புப் படிகளைப் புதுவைத் தமிழறிஞர்கள் பெற்றுக்கொண்டனர்.
ஆல்பா கல்வி நிறுவனங்களின் தாளாளர் வ. பாசிங்கம்,
தொடக்கவுரையாற்றினார். மு.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். புலவர் கலியபெருமாள் தலைமையில்
நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் இ. பட்டாபிராமன், சீனு. இராமச்சந்திரன்,
துரை மாலிறையன், பாவலர் இலக்கியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் தமிழியக்கன்
ஏற்புரை வழங்கினார். புதுவைத் தமிழ்நெஞ்சன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை கு.அ.
தமிழ்மொழி தொகுத்து வழங்கினார். புதுவைத் தமிழறிஞர்கள் மிகுதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக