[கு. இரெ. சீனிவாசன் மும்பையில் வாழும் தமிழ் எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் பிறந்தவர். மும்பையில் மெய்ப்புப் பார்ப்பவராகப் பணியில் இணைந்து, பின்னர் வங்கித் தேர்வெழுதி, எழுத்தராக - மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து ‘‘கனிந்த கனவுகள்’என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்].
மும்பை மாநகரம் தமிழ் மக்களுக்கு மிகச் சிறந்த வாழ்விடமாக உள்ளதை அண்மையில் மும்பை சென்றிருந்தபொழுது அறிய முடிந்தது. மும்பையில் தமிழர்கள் பன்னெடுங்காலமாகத் தங்கி, பணியாற்றியும் பல்வேறு தொழில்களை நடத்தியும், தமிழமைப்புகள், பள்ளிகள் பலவற்றை உருவாக்கியும் தங்களை நிலைநிறுத்தியுள்ளனர். எனினும் தாயகமாம் தமிழகத்துடன் தொடர்பில் இருந்து, நல்லுறவைப்பேணி வருகின்றனர். தமிழறிஞர்கள், கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் பலரைத் தமிழகத்திலிருந்து அழைத்துத் தங்கள் தமிழ்ப்பற்றைப் புதுப்பித்தவண்ணம் உள்ளனர். அத்தகு மும்பைத் தமிழ் அன்பர்களுள் கு.ரெ.சீனிவாசன் குறிப்பிடத்தகுந்தவர். கே. ஆர். சீனிவாசன் என்ற பெயரில் நன்கு அறிமுகமான இப்பெருமகனார் பன்மொழி அறிஞராகவும் எழுத்தாளராகவும் இருப்பதை அறிந்து மகிழ்ந்தேன். இவரின் தமிழ்ப்பற்றையும், எழுத்துத் திறனையும் எழுத்தாளர் சு. குமணராசனார் வழியாக அறிந்து அவர்தம் வாழ்வியலைப் பதிந்துவைக்க முனைகின்றேன்.
கு. இரெ. சீனிவாசன் அவர்களின் தமிழ் வாழ்க்கை
கு. இரெ. சீனிவாசன் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ஊரினர். இவர்தம் பெற்றோர் கு. இரா. இரெங்கநாயலு, இராதா ருக்மணி அம்மையார் ஆவர். பட்டு நெசவுத் தொழிலில் புகழ்பெற்ற குடும்பமாக இவரின் குடும்பத்தினர் விளங்கினர். 26.10.1948 இல் பிறந்த இவர் தம் பிறந்த ஊரான அய்யம்பேட்டைப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், அவ்வூர்க் கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரையிலான கல்வியையும் பெற்று, தஞ்சாவூர் பூண்டி திரு. புட்பம் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டப்படிப்பினை நிறைவுசெய்தவர்.
1969 இல் மும்பை சென்று, அங்கு வாழ்ந்த காந்திய நெறியாளரான இரெ. முருகையா அவர்கள் நடத்திய “சேவக்” அச்சகத்தில் மெய்ப்புப் பார்ப்பவராகப் பணியைத் தொடங்கியவர். பின்னர் வங்கிப் பணிக்குரிய தேர்வெழுதி, எழுத்தராகப் பணியில் இணைந்து, மேலாளராகப் பணியுயர்வு பெற்றவர். அவ்வகையில் மும்பைத் தேனா வங்கியில் முப்பது ஆண்டுகள் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். விளம்பரத் துறையிலும் ஈடுபட்டு உழைத்தவர்.
கு. இரெ. சீனிவாசன் 10.06.1981 இல் ஞானாம்பாள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். ஞானாம்பாள் அவர்கள் வள்ளலாரின் நன்னெறிக் கருத்துகளில் பேரீடுபாடு கொண்டவர். இவர்களுக்குக் கார்த்திக் என்னும் பெயருடைய மகன் உள்ளார். இவர் சென்னையில் பணியாற்றி வருகின்றார்.
எழுத்துப் பணி
கு. இரெ. சீனிவாசன்
வங்கி மேலாளராகப் பணியாற்றினாலும் தமிழின் மீதான ஈடுபாட்டுடன் விளங்கியவர். தமிழ்,
ஆங்கிலம், இந்தி, மராத்தி, சௌராட்டிரம் ஆகிய மொழிகளை அறிந்தவர். இவர் எழுதிய ஐம்பதுக்கும்
மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் மும்பை மற்றும் தமிழகத்து ஏடுகளில் வெளிவந்துள்ளன.
அவ்வகையில் தமிழகத்து இதழ்களான கல்கி, கலைமகள், அமுதசுரபி, சௌராட்டிர மணி, மொதிரெத்து, மும்பை இதழ்களான தமிழ் இலெமுரியா, தென்னரசு, மும்பை
துடிப்பு, மராத்திய முரசு, போல்டு இந்தியா முதலான இதழ்களில் இவரின் சிறுகதைகள், கட்டுரைகள்
இடம்பெற்றுள்ளன.
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறு திரு. ஸ்ரீநிவாஸ் லட்சுமன் அவர்களால் (திரு. ஆர். கே. லட்சுமன் அவர்களின் புதல்வர்) ஆங்கிலத்தில் Dreams to Reality என்ற தலைப்பில் எழுதப்பட்ட. நூலினைத் தமிழில் ‘‘கனிந்த கனவுகள்’ என்ற பெயரில் கு. இரெ. சீனிவாசன் மொழியாக்கம் செய்துள்ளார். இந்த நூல் சிறுவர் படைப்புகளை வெளியிடுவதில் புகழ்பெற்ற நவநீத் பதிப்பகத்தின் வழியாக வெளிவந்துள்ளது.
தமிழ்ப் பணிகள்
மும்பையின் கோரேகான் தமிழ்ச் சங்கம் 1976 முதல் புத்துயிர் பெற்று, இயங்கி வருகின்றது. சற்றொப்ப 30 ஆண்டுகள் இத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக இருந்து கு. இரெ. சீனிவாசன் பணியாற்றியவர். தற்போது துணைத் தலைவராகவும் இவரின் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
• 7000 மாணவர்களைக் கொண்டுள்ள விவேக் வித்யாலயா, மற்றும் கல்லூரியை நடத்துகின்ற விவேக் கல்வி நிறுவனத்தின் நிருவாகக் குழுவில் உறுப்பினராக 30 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருபவர். சிறிய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் இயன்ற அளவில் சமூகத் தொண்டினையும் செய்துவருபவர்.
கு. இரெ. சீனிவாசனின் தமிழ்ப்பணியைப் போற்றும் வகையில் 25.01.2025 இல் மும்பையில் நடைபெற்ற தமிழ் இலெமுரியா அறக்கட்டளை விழாவில் இவருக்குத் “தொல்காப்பியர் விருது - 2024” வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளது.
கு. இரெ. சீனிவாசன் நீடு வாழ்ந்து, தமிழ்ப்பணிகளைத் தொடர்ந்து செய்யுமாறு வாழ்த்தி மகிழ்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக