சனி, 8 பிப்ரவரி, 2025

பேராசிரியர் மா. வயித்தியலிங்கன்

 

மா.  வயித்தியலிங்கன்
(29.11.1935 – 22.05.2022) 

[மா.  வயித்தியலிங்கன் குடந்தையில் பிறந்த  தமிழிசை அறிஞர்; திண்டுக்கல்லில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இராமலிங்கர் பணிமன்றத்தின் செயலராகப் பணியாற்றியவர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் மாணவர். இலால்குடியில் இயங்கிவரும் நாடுகாண் குழுவினைச் சுந்தரேசனாரின் மறைவுக்குப் பிறகு வழிநடத்தியவர். இவர் பன்மொழி அறிஞர். வானொலி, தொலைக்காட்சிகளில் தமிழிசை குறித்து நிகழ்ச்சிகள் நடத்தியவர். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலியவற்றை இசையுடன் பாடிப் பரப்பியவர்.] 

தமிழும் இசையும் அறிந்த அறிஞராக விளங்கியவர் பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் ஆவார். கும்பகோணத்தின் ஒரு பகுதியாக விளங்கும் பேட்டை நாணயக்காரத் தெருவில் வாழ்ந்த வயி. மாசிலாமணி செட்டியார் – மா. மீனாட்சி அம்மாள் ஆகியோரின் மகனாக 29.11.1935 இல் பிறந்தவர்.  (இவர்களின் குடிவழியினர் சோழபுரம் செட்டியார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சென்னை, திருவான்மியூரில் அமைந்துள்ள சோழபுரம் தெரு இவர்களின் உறவினர்கள் வதியும் தெருவாகும்). கும்பகோணத்தில் அமைந்துள்ள நகர உயர்நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆனர்சு, முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். ஆய்வியல் நிறைஞர் படிப்பினை மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்றவர். திண்டுக்கல்லில் உள்ள G.T.N கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக 1965 முதல் 1994 வரை பணியாற்றி ஓய்வுபெற்றவர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சமற்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழி அறிஞராக விளங்கியவர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரிடம் பண்ணிசையைப் பயின்ற பெருமைக்குரியவர். இவரின் உடன் பிறந்த தம்பி மா. கோடிலிங்கம் அவர்களும் தமிழிசை பயின்ற பெருமகனார் ஆவார். 

மா. வயித்தியலிங்கன் தமிழகத்தின் திருக்கோவில்கள், கல்வி நிறுவனங்கள், தமிழ் அமைப்புகளில் இசை குறித்தும், சமயம் குறித்தும், கலைகள் குறித்தும் அறுபது ஆண்டுகளாகச் சொற்பொழிவுகள், கருத்துரைகள் இசைநிகழ்ச்சிகள் நல்கிய பெருமைக்குரியவர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் இசைத்தமிழ் குறித்த பாடத்திட்டங்களை வகுத்து வழங்கிய அறிஞராகவும் போற்றப்படுபவர். 

சைவ சித்தாந்தத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்தவர். இராமலிங்கர் பணி மன்றம், பொங்கு தமிழ்ப் பண்ணிசை மன்றம், சென்னை இசைச் சங்கம், தமிழ் இசைக்கல்லூரிகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து தமிழிசை வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும், சிறப்புரைகள் வழங்கும் பேராசிரியராகவும் விளங்கியவர். இராணி மேரிக் கல்லூரியில் இசைத்துறைத் தேர்வாளராகவும் கடமையாற்றியவர். 

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் வழியில் தொல்காப்பியம், சங்க இலக்கியம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவற்றை இசையுடன் பாடி, மக்கள் மனத்தில் தமிழிசை உணர்வினை ஊட்டியவர். சென்னை வானொலியில் இவர்தம் இசையுரைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சன் தொலைக்காட்சி, செயா தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி, பொதிகைத் தொலைக்காட்சி, சங்கரா தொலைக்காட்சி, தென்றல் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் தமிழிசையைப் பாடி, இசைத்துறைக்குத் தொண்டாற்றியவர். 

செம்மொழி நிறுவனத்துக்காகப் பத்துப்பாட்டு, தொல்காப்பியம், திருக்குறள் முதலானவற்றை இசைவட்டுகளில் பாடி, உலகம் முழுவதும் தமிழிசை பரவுவதற்கு வழிசெய்தவர். 

தமிழ் வள்ளல் பொள்ளாச்சி அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்கள் நிறுவிய இராமலிங்கர் பணி மன்றத்தின் செயலராகப் பதினெட்டு ஆண்டுகள் பணிபுரிந்து சென்னை, திருச்சிராப்பள்ளி, கோவை முதலிய ஊர்களில் தமிழிசை பரவுவதற்கும் வள்ளலார், காந்தியக் கொள்கைகள் பரவுவதற்கும் தொண்டாற்றியவர். 

மக்கள் காவலர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களால் நிறுவப்பட்ட பொங்கு தமிழ்ப் பண்ணிசை மன்றத்தின் ஆண்டு விழாக்களில் இசையறிஞர்களை அழைத்து, அந்த நிகழ்வுகளைத் திறம்பட நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. 

சென்னைக் கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ள இறைப் பணி மன்றத்தின் சார்பில் இறைத்தொண்டும் இசைத்தொண்டும் செய்தவர். 

இலால்குடி எனப்படும் திருத்தவத்துறையில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களால் நிறுவப்பட்ட நாடுகாண் குழுவின் பணிகளில் அவர் மறைவுக்குப் பிறகு இருபத்தைந்தாண்டுகளாகப் பணியாற்றியவர். கமலத் தியாகராசன் உள்ளிட்ட அறிஞர்களை அழைத்து விருதளித்துப் போற்றிய பெருமைக்குரியவர். 

தமிழர் பண்பாடு, ஓம் சக்தி, ஞானத்திரள் உள்ளிட்ட ஏடுகளில் தொடர்ந்து தம் எண்ணங்களை எழுத்துகளாக்கி வழங்கியவர். 

மக்கள் தொலைக்காட்சிக்காகப் பண் இசை வித்தகர்கள் என்ற தொடரினை டாக்டர் சுந்தர், இசைக்கவி இரமணன் ஆகியோருடன் இணைந்து உருவாக்கி மக்கள் மன்றத்துக்குப் படைத்தவர். இந்தத் தொடர் உலக அளவில் போற்றப்பட்ட இசைத்தொடாராகும். 

சிலப்பதிகாரத்தைப் பல்வேறு இசை வடிவங்களில் ஊடகங்களில் வெளியிட்டு, சிலப்பதிகார இசை பரவுவதற்குத் தொண்டாற்றியவர். 

திண்டுக்கல்லில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியபொழுது தெய்வ நெறி சங்கம் என்ற அமைப்பை நிறுவி, மாணவர்களின் துணையுடன் அனைவருக்கும் இலக்கிய ஆர்வம் ஏற்படும் வகையிலும் நன்னெறிக்கருத்துகள் கிடைக்கும் வகையிலும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளையும் பட்டி மன்றம் உள்ளிட்ட இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி, தமிழகத்து அறிஞர்களை அப்பகுதியில் வாழ்ந்த  அனைத்து மக்களும் அறியும் வகையில் தொண்டாற்றியவர். 

பரதநாட்டியக் கலைஞர் அனிதா ரத்தினம், நாடக அறிஞர் இராமானுஜம் உள்ளிட்டவர்களுடன் இணைந்து “கைசிகி நாடகம்” அரங்கேறுவதற்கு உதவியாக இருந்தவர். சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, “புறஞ்சேரி” என்னும் இசைநாடகம் புதிய நாடக உத்திகளுடன் இவரால் உருவாக்கப்பட்டு, இந்தியாவின் பல பகுதிகளில் நடிக்கப்பட்டது. 

ஆத்திரேலியா நகரின் சிட்னியில் இவருக்குத் திருக்குறள் தொண்டர் என்ற விருதினை உலகத் தமிழர் கழகம் வழங்கிப் பாராட்டியது. இவர்தம் இசையுரையைச் சிட்னியிலும் மெல்பர்னிலும் வாழும் தமிழார்வலர்கள் விரும்பிக் கேட்டனர். 

மா. வயித்தியலிங்கன்

பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் அவர்கள் 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குத் தம் தம்பி மா. கோடிலிங்கம் அவர்களுடன் சென்று, டெக்சாசு, மாநிலத்தின் முருகன் ஆலயத்தில் இசையுரை வழங்கியுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகம், பாஸ்டன் காளிகாம்பாள் ஆலயம் உள்ளிட்ட இடங்களில் இவரின் இசைப்பொழிவுகள் நடந்துள்ளன. 

மா. வயித்தியலிங்கன் அவர்களின் இல்லற வாழ்க்கை: 

மா. வயித்தியலிங்கன் அவர்களுக்கு 1960   இல் திருமணம்  நடைபெற்றது. இவர் மனைவியின் பெயர் வயி. நாகரத்தினம் என்பதாகும். இவர்களுக்கு வயி.சிவசங்கரன், வயி. சிவகுமாரன், வயி. சிவசுப்பிரமணியன் என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் பெற்ற விருதுகள்: 

பேராசிரியர் மா. வயித்தியலிங்கனின் இசைப்பணியையும், சமயப்பணியையும் போற்றிப் பல்வேறு நிறுவனங்களும் ஆதீனங்களும் விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கியுள்ளன. அவற்றுள் சில: 

1.   குன்றக்குடி ஆதீனம்: தமிழாகரர்

2.   திண்டுக்கல் சிவபுர மடம்: தமிழ் விரகர்

3.   கோவிலூர் மடம்: சிலம்பிசைச் செல்வர்

4.   சிருங்கேரி மடம்: சைவப் பேரிசைககடல்

5.   திருவாவடுதுறை ஆதீனம்: சம்பந்தர் தமிழ்நெறிச் செல்வர்

6.   சன்மார்க்க சங்கம், விழுப்புரம்: சன்மார்க்க நெறிபரப்பும் சீலர்

7.   கோவைத் தமிழ்ச்சங்கம்: தமிழ்நெறிச் செம்மல்

8.   இராமலிங்கர் பணி மன்றம்: இசைக்கலைச் செல்வர்

9.   ப. சு .நாடுகாண் குழு: பெரும்பாண நம்பி

10. பொங்குதமிழ் மன்றம், பண் இசை மாமணி

11. தமிழ்நாடு அரசு: இளங்கோ அடிகள் விருது…. 

பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் அவர்களின் நூல்கொடை:

1.   வடிவுடை மாணிக்க மாலை

2.   விண்ணப்பக் கலிவெண்பா

3.   அருள் விளக்க மாலை

4.   பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி உரை

5.   நலந்தரு பதிக உரை

6.   மூத்த பிள்ளையார் பிரபந்த திரட்டுத் தொகுப்பு 

அச்சில்:

7.   பண் வகுத்தது எப்படி?

8.   அய்யனார்

9.   மாரிமுத்தா பிள்ளை பிரபந்த திரட்டு

10. சைவ நியமம்

11. பெரிய புராணம் வினா-விடை

12. கட்டுரைத் திரட்டு 

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாருக்குச் சென்னையில்  நூற்றாண்டு விழா எடுத்தும் மலர் வெளியிட்டும், பண்ணாராய்ச்சி வித்தகர் பாடியிருந்த ஒலிநாடாக்களில் இருந்த பாடல்களை ஒலிவட்டில் தந்தும் தமிழிசைத்துறைக்குப் பெருந்தொண்டாற்றிய பெருமகனார் மா. வயித்தியலிங்கன் 22.05.2022 இல் இயற்கை எய்தினார். இவர்தம் தமிழிசைப் பங்களிப்பு உலகம் உள்ளவரை நினைவுகூரப்படும். 


தொடர்புடைய பதிவு இங்கு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக