சனி, 1 ஜூன், 2024

புத்தர் சிலை ஆராய்ச்சியாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம்

 

முனைவர் பா. ஜம்புலிங்கம்

[முனைவர் பா. ஜம்புலிங்கம் தஞ்சாவூரில் வாழ்ந்துவரும் அறிஞர் ஆவார். தட்டச்சர், சுருக்கெழுத்தர் எனப் பணியைத் தொடங்கி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர் வரை பதவி உயர்வு பெற்று, பணியாற்றியவர். சோழநாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் வல்லவர். புத்தர் சிலைகள் பலவற்றைக் களப்பணிகள் வழியாகக் கண்டறிந்தவர். தமிழகத்தில் பௌத்தம் குறித்து, தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருபவர். மிகச் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பாளர்]

  தமிழகத்துப் பல்கலைக்கழக ஆய்வேடுகளின் தரம் குறைந்து வருகின்றது என்று கல்வியாளர்கள் குறைபட்டுக்கொள்வது உண்டு. இக்கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆயினும் தரமான ஆய்வாளர்கள் தோன்றித் தரமான ஆய்வேடுகளை வழங்கி வருவதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். அவ்வகையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சராகவும், சுருக்கெழுத்தராகவும் பணியைத் தொடங்கிப் படிப்படியே தம் அயராத உழைப்பாலும் ஆர்வத்தாலும் முனைவர் பட்டம் வரை ஆய்வு செய்து பட்டம் பெற்று, அப் பல்கலைக்கழத்தின் உதவிப் பதிவாளர் வரை உயர் பொறுப்புகளைப் பெற்ற முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள் கடந்துவந்த பாதை, ஆய்வுத்துறையில் ஈடுபட விரும்பும் ஆய்வாளர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் என்பது என் நம்பிக்கை. 

பா. ஜம்புலிங்கம் அவர்கள் 1959 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள் கும்பகோணத்தில் பிறந்தவர். பெற்றோர் பெயர் பாலகுருசாமி - தர்மாம்பாள். பெற்றோரின் கண்டிப்பால் மட்டும் பள்ளிக்குச் சென்ற இவருக்குப் படிப்பில் நாட்டம் இல்லை. நாளும் வகுப்பாசிரியர் “பிடிவாரண்டு” போட்டுதான் இவரைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னாளில் குடும்பச் சுமையுணர்ந்த பா. ஜம்புலிங்கம் கல்வியில் கவனம் செலுத்தலானார். 

பா. ஜம்புலிங்கம் தொடக்கக் கல்வியைத்  கும்பகோணம் திருமஞ்சன வீதியில் உள்ள ஆரம்பப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியைக்  கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர் (1972-75). பள்ளியில் படிக்கும்பொழுதே தட்டச்சு, சுருக்கெழுத்து, இந்தி மொழி முதலியவற்றைக் கற்றுக்கொண்டவர். எனவே, ஆசிரியர்கள் பாடம் நடத்துவதைக்கூடச் சுருக்கெழுத்தில் பதிவுசெய்துகொள்ளும் பேராற்றல் இவருக்கு இளமையில் வாய்த்தது. கல்லூரிப் படிப்பினைக் கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் பயின்றவர் (1975-79) . இவரின் இளங்கலைப் படிப்பு பொருளாதாரம் ஆங்கிலவழிக் கல்வியாக அமைந்ததால் ஆங்கில அறிவும் இவருக்குச் சிறப்பாக வாய்த்தது. 1973 ஆம் ஆண்டு முதல் ஆங்கில இந்து நாளிதழைப் படிக்கத் தொடங்கியதால் இவருக்கு ஆங்கிலப் பயிற்சியும் மொழிபெயர்ப்பு ஈடுபாடும் சிறப்பாக வாய்த்தன. 

கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தை இளம் அகவை முதல் நன்கு பயன்படுத்தி அக்காலத்தில் புகழுடன் விளங்கிய புதினங்களையும் இலக்கியங்களையும் ஆர்வமுடன் கற்றவர். 

கல்லூரிப் படிப்புக்குப் பிறகு குடும்பத்தின் பொருளாதாரத் தேவையை நிறைவுசெய்யும்பொருட்டுப் பல்வேறு தனியார் நிறுனவனங்களில் தற்காலிகப் பணியில் இணைந்து, நிறுவனத்தார் வியக்கும் வகையில் தம் பணிகளைத் திறம்படச் செய்தவர். அவ்வகையில் கீழ்வரும் இடங்களில் பணியாற்றியுள்ளார். 

v  சென்னை (தட்டச்சுச்சுருக்கெழுத்தர்) ஜூன் 1979 முதல் நவம்பர் 1979 வரை 

v  தஞ்சாவூர் (தட்டச்சுச்சுருக்கெழுத்தர்) நவம்பர் 1979 முதல் ஆகஸ்டு 1980 வரை 

v  சென்னை (சுருக்கெழுத்தர்) ஆகஸ்டு 1980 முதல் நவம்பர் 1980 வரை 

v  கோவை (எழுத்தர் மற்றும் தட்டச்சர்) நவம்பர் 1980 முதல் ஆகஸ்டு 1982 

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட சூழலில் 16.8.1982  இல் தட்டச்சுச் சுருக்கெழுத்தராகப் பணியில் இணைந்து முதல் துணைவேந்தர் வ. அய். சுப்பிரமணியம் முதல் பல்வேறு துணைவேந்தர்களின் கீழ் பணியாற்றிய பட்டறிவு உடையவர். அதுபோல் பதிவாளராகப் பணியாற்றிய்ய முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன் முதல் பல பதிவாளர்களிடம் பணியாற்றிய சிறப்பும் இவருக்கு உண்டு. அலுவலகம், பதிப்புத்துறை என்று பல்வேறு முதன்மையான பணிகளை மனம் உவந்து செய்தவர். பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது அவரின் பணிகளுக்குத் துணைசெய்த பெருமை பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கு உண்டு. கா. சிவத்தம்பியின் Literary History in Tamil என்னும் ஆங்கில நூலினைத் தட்டச்சுச் செய்தபொழுது கா.சிவத்தம்பியின் ஆங்கில அறிவையும் பல்துறைப் புலமையையும் அறிந்துகொள்ள முடிந்தது என்று குறிப்பிடுவார். 

முனைவர் ஐராவதம் மகாதேவன் ஒருங்கிணைத்த சிந்துவெளிக் கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு கருத்தரங்குகளில் அலுவலகப் பணிகளை ஆர்வமுடன் செய்தவர். கோவை இளஞ்சேரன் அவர்கள் பதிப்புத்துறையில் பணியாற்றியபொழுது அச்சான பல்வேறு நூல்களின் அச்சுப்பணிகள் குறித்த வரலாறுகளை அறிந்தவர் பா.ஜம்புலிங்கம். அவ்வகையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூற்றுக்கணக்கான நூல்களின் பதிப்புகள் குறித்த விவரங்களை அறிந்தவர். 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பா.ஜம்புலிங்கம் அவர்கள் பணியாற்றிகொண்டிருந்தபொழுது அலுவலகப் பணியாளர்கள் ஆய்வுப் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம் என்ற நடைமுறை செயலுக்கு வந்தபொழுது, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இணைந்து Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur district என்ற தலைப்பில் ஆய்வுசெய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்(1995). தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு, சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் ஆய்வேட்டினை வழங்கி முனைவர் பட்டம் பெற்றவர்(1999). 

பா.ஜம்புலிங்கம் அவர்களின் ஆய்வுமுறைகள் 

ஆய்வுத்துறையில் ஈடுபடுபவர்கள் இருக்கையில் அமர்ந்து, கையில் கிடைக்கும் நூல்களைக் கொண்டு தம் ஆய்வேடுகளைத் தயாரித்துவிடுவது உண்டு. அத்தகைய ஆய்வேடுகளும் ஆய்வாளர்களும் தம் முயற்சிக்குப் பெரும் உழைப்பைச் செலுத்தாமல் போனால் அவர்கள் ஆய்வுலகத்தால் புறக்கணிக்கப்படுவார்கள். ஆனால் இலக்கிய ஆய்வுகளுக்கும் வரலாற்று ஆய்வுகளுக்கும் களப்பணி கண்டவர்கள் என்றும் போற்றப்படுவது உண்டு. அவ்வகையில் தமிழ்த்தாத்தா உ.வே.சா, பேரறிஞர் சதாசிவப்பண்டாரத்தார், மயிலை சீனி. வேங்கடசாமி, பேராசிரியர் மா. இராசமாணிக்கனார் உள்ளிட்ட பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன்பட்டுள்ளது. அத்தகு சான்றோர் வரிசையில் களப்பணி வழியாகத் தாம் மேற்கொண்ட ஆய்வுத்துறைக்குப் பெருமைசேர்த்தவராக அறிஞர் பா. ஜம்புலிங்கம் அவர்களைப் பார்க்கின்றேன். 

களப்பணியில் பா. ஜம்புலிங்கம்

                                    களப்பணியில் பா. ஜம்புலிங்கம்


                                                        களப்பணியில் பா. ஜம்புலிங்கம்

பா. ஜம்புலிங்கம் அவர்கள் புத்தர் என்ற ஒற்றைப் பொருண்மையைத் தம் உள்ளத்துள் வரித்துக்கொண்டு இளம் முனைவர் பட்ட ஆய்வுக் காலத்திலும், முனைவர் பட்ட ஆய்வுக் காலத்திலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அலைந்து திரிந்து ஆய்வுத் தரவுகளைத் திரட்டியுள்ளமை நமக்கு வியப்பையும் மலைப்பையும் ஏற்படுத்துகின்றன. புத்தர் குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்கள் பலரும் பா. ஜம்புலிங்கம் அவர்களின் நூல்களையும் கருத்துகளையும் மேற்கோள் காட்டுவது இவர்தம் பெருமையை உரைக்கும் கட்டளைக்கல் ஆகும். 

அறிஞர் சந்திப்பு, நூலகம், களப்பணி, முன்னோடி ஆய்வாளர்களை அறிதல் என்று தம் ஆய்வுக்கான செல்நெறிகளை அமைத்துக்கொண்டு அவர் இயங்கிய இயக்கம் இளம் ஆய்வாளர்கள் கற்றுப் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன். குடந்தை சேதுராமன் உள்ளிட்டவர்களைச் சந்தித்துத் தம் ஆய்வு எல்லைக்கு உட்பட்ட செய்திகளை அறிந்துகொண்டமை, நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளைப் பின்தொடர்ந்து சென்று, உண்மைகளை உலகுக்கு அறிவித்தமை, தாம் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளை உடனுக்குடன் செய்தி ஏடுகள் வழியாக அறிஞர் உலகத்துக்கு அறிவித்து, அவர்களின் எண்ணங்களை அறிந்துகொண்டமை யாவும் இவர் ஒரு மிகச் சிறந்த ஆய்வாளர் என்பதற்கு அடையாளங்கள் ஆகும். 

பா. ஜம்புலிங்கம் அவர்கள் ஆய்வில் ஆர்வம் உடையவர் என்பதுபோல் மொழிபெயர்ப்புத் துறையிலும் ஆர்வம் உடையவர். ஒவ்வொரு நாளும் ஆங்கிலத்தில் பயன்பாட்டில் உள்ள சொற்களை அறிந்துகொள்வதை இயல்பாகக் கொண்டவர். தமக்குத் தெரியாததைத் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது இவர் இயல்பு. ஆங்கிலம் வல்லாரைச் சந்தித்துத் தம் ஐயங்களைப் போக்குவதுபோல் தம் பிள்ளைகளுக்கும் ஆங்கிலத்தில் நல்ல பயிற்சி வழங்கி அவர்களையும் ஆங்கிலத்தில் திறன்பெற்றவர்களாக உருவாக்கியுள்ளார். 

பா. ஜம்புலிங்கம் அவர்களுக்கு 01.09.1985 இல் திருமணம் நடைபெற்றது. மனைவியின் பெயர் பாக்கியவதி என்பதாகும். இவர்களுக்கு பாரத், சிவகுரு என்னும் இருவர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். இருவரும் சென்னையில், தனியார்   நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். 

பா. ஜம்புலிங்கம் அவர்கள் தம் ஆய்வுகுறித்த செய்திகளையும், தமிழாய்வுக்கு வளம் சேர்க்கும் செய்திகளையும் தம் வலைப்பதிவில் எழுதி, உலகப் புகழ்பெற்றவர் (சோழ நாட்டில் பௌத்தம் https://ponnibuddha.blogspot.com/), முனைவர் ஜம்புலிங்கம் https://drbjambulingam.blogspot.com). அதுபோல் விக்கிப்பீடியா தளத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதித் தமிழுக்கு வளம்சேர்த்து வருபவர். அவ்வகையில் தமிழ் விக்கிப்பீடியாவில் 1320 கட்டுரைகளையும் ஆங்கில விக்கிபீடியாவில் 340 கட்டுரைகளையும் வரைந்துள்ளார். விக்கிப்பீடியா பொதுவகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒளிப்படங்களைப் பதிவேற்றியுள்ளார். முன்னணி நாளிதழ்கள், ஆய்விதழ்களில் 600 – க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.   இவர்தம் உழைப்பையும், அறிவாற்றலையும் மதிக்கும் வகையில் பல அமைப்பினர் விருதுகளை வழங்கியும் பாராட்டுகளை நல்கியும் போற்றியுள்ளனர். 




பா. ஜம்புலிங்கம் பெற்ற விருதுகள்:

Ø  சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை, 1997),

Ø  அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், தஞ்சாவூர், 1998),

Ø  பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை 2001),

Ø  முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, வலைப்பதிவர் திருவிழா 2015),

Ø  விக்கிக்கோப்பை வெற்றியாளர் மூன்றாமிடம் (விக்கிப்பீடியா, 2017),

Ø  வேங்கைத்திட்டம் 2.0 மூன்றாமிடம் (விக்கிப்பீடியா, 2020),

Ø  பௌத்த மரபு ஆய்வாளர், அருண்மொழி விருது (சோழர் வரலாற்று ஆய்வு சங்கம், 2021),

Ø  நிகரிலி சோழன் விருது (சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, 2022).

Ø  தகைசால் விருது (தமிழ்நாடு புலவர் பேரவை, 2023),

Ø  மும்முடிச்சோழன் விருது (சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, 2023)


பா.ஜம்புலிங்கம் தனியாகவும், பிற ஆய்வாளர்கள், அறிஞர்களோடும் கண்டுபிடித்தவை. 

புத்தர் சிலைகள் (20)+ செப்புத்திருமேனி (1)

அரியலூர் மாவட்டம் (2)

1.குழுமூர் (2006)

2. பிள்ளைபாளையம் (2019) (இடுப்புக்குக் கீழ் இல்லை)

 

தஞ்சாவூர் மாவட்டம் (5+1)

1.முழையூர் (1999) தலைப்பகுதி மட்டும்

2.அய்யம்பேட்டை (நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி) (1999)

3.கோபிநாதப்பெருமாள்கோயில் (2002) தலையின்றி  

4.கோபிநாதப்பெருமாள்கோயில் (2002) இடுப்புப்பகுதி மட்டும்

5.மணலூர் (2015) தலையின்றி

6. பழையாறை (2023) தலைப்பகுதி மட்டும்

 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் (2)

1.மங்கலம் (1999) மீசையுடன் கூடிய புத்தர் சிலை

2.திருச்சி (2008)

 

திருவாரூர் மாவட்டம் (6)

1.புதூர் (2000)

2.சீதக்கமங்கலம்  (2002) தலைப்பகுதி மட்டும்

3.திருநாட்டியத்தான்குடி (2003)

4.உள்ளிக்கோட்டை (2005)

5.வளையமாபுரம் (2007) தலையின்றி

6. கண்டிரமாணிக்கம் (2012)

 

நாகப்பட்டினம் மாவட்டம் (2)

1. கிராந்தி (2013) 

2. சந்தைத்தோப்பு (2013) 

 

மயிலாடுதுறை மாவட்டம் (1)

1.குத்தாலம் (1999)

 

பிற மாவட்டங்கள் (2)

1.சுந்தரபாண்டியன்பட்டனம், இராமநாதபுரம் மாவட்டம்  (2002)

2. ராசேந்திரப்பட்டினம், கடலூர் மாவட்டம் (2007)

 

சமண தீர்த்தங்கரர் சிலைகள் (13)

அரியலூர் மாவட்டம்

1.ஜெயங்கொண்டம் (டிசம்பர் 1998)

 

தஞ்சாவூர் மாவட்டம்

1.தஞ்சாவூர் (ஜுன் 1999)

2.அடஞ்சூர் (மார்ச் 2003)

3.செருமாக்கநல்லூர் (ஜுன் 2009)

4.சுரைக்குடிப்பட்டி (பிப்ரவரி 2010)

 

திருவாரூர் மாவட்டம்

1.காரியாங்குடி (நவம்பர் 1998)

2.செங்கங்காடு (பிப்ரவரி 1999)

3.பஞ்சநதிக்குளம் (ஆகஸ்டு 2010)

4.தோலி (நவம்பர் 2011)

 

புதுக்கோட்டை மாவட்டம்

1.ஆலங்குடிப்பட்டி, (மே 1999)

2. கவிநாடு (அக்டோபர் 2013)

3. நாட்டாணி (மார்ச் 2015)

 

பெரம்பலூர் மாவட்டம்

1.பெருமத்தூர் (மார்ச் 1999)

 

பிற கண்டுபிடிப்புகள்

கல்வெட்டு, ஓவியம்

1.குடவாசல் தூண் கல்வெட்டு (2009)

2. சீதக்கமங்கலம் கல்வெட்டு (2012)

3.தென்னமநாடு சிவலிங்கம் மற்றும் பிற சிலைகள் (2014)

4.பனையக்கோட்டை அப்பர் ஓவியம் (2014)

5.பெருமகளூர் மோடி கல்வெட்டு (2019)

6.காளையார்கோயில் கல்வெட்டு (2019) 

பா. ஜம்புலிங்கம் அவர்களின் தமிழ்க்கொடைகள்: 

v  வாழ்வில் வெற்றி (சிறுகதைத்தொகுப்பு, பிட்டி விஜயகுமார், சென்னை, 2001),

v  படியாக்கம் (தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2004),

v  தஞ்சையில் சமணம் (மணி.மாறன், கோ.தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்து, ஏடகம், தஞ்சாவூர், 2018),

v  விக்கிப்பீடியா 1000:  பதிவு அனுபவங்கள் (மின்னூல், 2020),

v  சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 2022), 

பா. ஜம்புலிங்கம் அவர்களின் ஆங்கில நூல்கள் 

v  Judgement Stories of Mariyathai Raman (2002), Tantric Tales of Birbal (2002),

v  Jesting Tales of Tenali Raman (2005),

v  Nomadic Tales from Greek (2007) (Translations, New Century Book House (P) Ltd, Chennai)

v  Buddhism in Chola country, Pudhu Ezuthu, Kaveripattinam

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக