புதன், 24 ஆகஸ்ட், 2022

சிங்கைத் தொல்காப்பிய அன்பர்கள் சந்திப்பு (21.08.2022)

 

சிங்கைத் தொல்காப்பிய அன்பர்கள் சந்திப்பு

  தமிழின் முதல் இலக்கண நூலாகக் கிடைத்துள்ள தொல்காப்பியத்தைப் பரப்பும் நோக்கில் சிங்கைத் தொல்காப்பிய அன்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிங்கப்பூர், சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள சந்திர மகால் அரங்கில் 21.08.2022(ஞாயிறு) முற்பகல் 11 மணியளவில் தொடங்கியது

 பேராசிரியர் சுப. திண்ணப்பன் அவர்கள் தலைமையில் சந்திப்பு நடைபெற்றது.  தொல்காப்பியத்தின் முதன்மையையும் தொல்காப்பியத்தைத் தமிழர்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதன் தேவையையும் பேராசிரியர் சுப. திண்ணப்பன் அவர்கள் எடுத்துரைத்தார். தொல்காப்பியத்தின் உள்ளடக்கச் செய்திகளைப் பேராசிரியர் சுப.தி. அவர்கள் விளக்கியமை அனைவருக்கும் தொல்காப்பியத்தின் மீது மிகுந்த ஈடுபாட்டை உருவாக்கியது. 

 நிகழ்ச்சிக்கு வந்திருந்த அன்பர்களைப் பொறியாளர் வி.காமராசு அவர்கள்  வரவேற்று உரையாற்றினார். 

 தொல்காப்பிய அன்பர்கள் சந்திப்பு நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகைபுரிந்த முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிறப்பினையும் அமைப்பினையும் உள்ளடக்கத்தையும் எடுத்துரைத்து உரையாற்றினார். மேலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி இதுவரை செய்துள்ள பணிகளை நினைவுகூர்ந்தார். தொல்காப்பிய அறிஞர்களின் பேச்சுகள் ஒளிவடிவில் பாதுகாக்கும் முயற்சி குறித்தும், தொல்காப்பியத்துக்குத் தனி இணையதளம் உருவாக்கியுள்ளமை குறித்தும், தொல்காப்பிய முத்துகளை உருவாக்கி வெளியிட்டு வருவதையும் எடுத்துரைத்து, அனைவரும் தொல்காப்பியப் பரவலுக்குத் துணைநிற்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். 

  தொல்காபியம் – கைக்கிளை குறித்து நூலெழுதிய புலவர் முத்துக்கிருட்டினன் அவர்கள் இந்த நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டார். 

 கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, செம்மொழி ஆசிரியர் இலியாஸ், பொறியாளர் மூர்த்தி, புரவலர் மாமன்னன், தங்க. வேல்முருகன், மோகன்ராசு உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்தனர். 

 நிகழ்வில் பங்கேற்றத் தொல்காப்பிய அன்பர்கள் அனைவரும் தொல்காப்பியப் பரவலுக்கு உரிய பல்வேறு நெறிகாட்டல்களை வழங்கினர். இந்த நிகழ்வில் 19 அன்பர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. 

 பொறியாளர் அ. இளங்கோவன் அவர்கள் நன்றியுரை கூறினார். 

 தொல்காப்பிய அன்பர்கள் சந்திப்புக்கான அனைத்து முயற்சிகளையும் வி. காமராசு அவர்களும் அவர்களின் வாழ்விணையர் நித்யா மணி அவர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

 


 

பேராசிரியர் சுப. திண்ணப்பன் அவர்கள் சிறப்பிக்கப்படுதல்


திரு. மாமன்னன் சிறப்பிக்கப்படுதல்


திரு. பிச்சினிக்காடு இளங்கோ உரை

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் மறைவு!

  


முனைவர் கு. சிவமணி

 பேராசிரியரும் கரந்தைக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான முனைவர் கு. சிவமணி அவர்கள் இன்று (12.08.2022) மாலை நான்கு மணியளவில் புதுச்சேரியில் உள்ள அவரின் இல்லத்தில் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். இவருக்கு வயது. 90. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, தமிழ்நாட்டரசின் தேவநேயப்பாவாணர் விருது உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர். 

 தஞ்சாவூரில் வாழ்ந்த புலவர் கரந்தை சிவகுப்புசாமி, பருவதத்தம்மைக்கு  மகனாக 01.08.1932 இல் பிறந்தவர். 1950-52 இல் இடைநிலை வகுப்பையும், 1953-55 இல் தமிழ்ச் சிறப்பு வகுப்பையும், முதுகலைப் பட்டத்தையும் (1958), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர். பி.டி. பட்டத்தைச் சென்னை சைதாப்பேட்டையிலும், பி.ஜி.எல். என்னும் சட்டப் படிப்பைச் சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பயின்றவர். முனைவர் பட்ட ஆய்வைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தியவர்

 கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலும், பாபநாசம் திருவள்ளுவர் கலைக் கல்லூரியிலும் கல்லூரி முதல்வராகவும், குமாரபாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணிசெய்தவர். சென்னை, மதுரைப் பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு, தேர்வுக்குழு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குழுக்களில் இருந்து பணிபுரிந்துள்ளார்

 தமிழக அரசின் தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மொழிபெயர்ப்பாளராகவும், புதுச்சேரி அரசின் சட்டத்துறையில் மொழிபெயர்ப்பு அலுவலராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றியவர்.  புதுவை மொழியியல் நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராக விளங்கியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரகரமுதலி சீராய்வுத் திட்டத்தின் பதிப்பாசிரியராக விளங்கியவர். 

  தமிழ் ஆங்கில மொழிகளில் பெரும்புலமை பெற்ற கு. சிவமணி இந்திய அரசுக்காக இந்திய அரசமைப்பு (அதிகாரமுறைத் தமிழாக்கம்) மொழிபெயர்ப்பினைச் செய்தவர். .சட்டச் சொல் அகராதி (சென்னைப் பல்கலைக்கழகம்), சட்ட - ஆட்சியச் சொற்களஞ்சியம் (புதுவை அரசு வெளியீடு) ஆகிய அகராதிகளை உருவாக்கியவர். 

 முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் உள்ளிட்டவர்களுடன் நெருங்கிப் பழகியவர். 

 1965 இல் கரந்தைப் புலவர் கல்லூரியை மூடும் சூழல் உருவானபொழுது அதனைத் தடுத்து நிலைநிறுத்திய பெருமை பேராசிரியர் கு.சிவமணிக்கு உண்டு. 

 1969 இல் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இயங்கிய வள்ளுவர் செந்தமிழ்க்கல்லூரி ஏற்புடைமை இழந்த சூழலில் திருவள்ளுவர் கலைக்கல்லூரியாக உயிர்ப்பித்து வளர்த்த பெருமையும் பேராசிரியர் கு.சிவமணிக்கு உண்டு

 1959 இல் தமிழகத் தமிழாசிரியர் கழக மாநாட்டில் தமிழ்க் கல்லூரிகளையும் கலைக்கல்லூரிக்கு நிகராகக் கருத வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தவர்

 சிதறிக் கிடந்த தமிழ்க்கல்லூரிகளை ஒன்று திரட்டி, தமிழக மொழிக் கல்லூரிகள் மன்றம் உருவாகக் காரணமாக அமைந்தவர்

 தமிழ்க் கல்லூரிகளைக் கலைக்கல்லூரிகள் போல் கருதவேண்டும் எனவும், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு ஏனைய பேராசிரியர்களுக்கு வழங்கும் ஊதியம் வழங்க வேண்டும் எனவும் தமிழ் வித்துவான் பட்டத்திற்குப் பதிலாக பி.லிட் பட்டம் வழங்க வேண்டும் எனவும் அரசுடன் பேசி, தமிழ்க்கல்லூரிகளின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்.

தொடர்புடைய பதிவு இங்கு!