வெள்ளி, 2 செப்டம்பர், 2016

தவத்திரு விபுலாநந்த அடிகளார் பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் அவர்களுக்கு எழுதிய கடிதம்!







விபுலாநந்த அடிகளார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது க. வெள்ளைவாரணனார் மாணவராகப் பயின்றவர் ஆவார். இவர் விபுலாநந்தரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவராக விளங்கியவர். விபுலாநந்தரின் யாழ்நூல் வெளியீட்டுக்கு உற்றுழி உதவியவராக க. வெள்ளைவாரணர் விளங்கியுள்ளார். யாழ்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் வரைந்தவர் நம் க. வெள்ளைவாரணர் ஆவார். இவர்களுக்கு இடையே நடைபெற்ற மடல் போக்குவரவை அறியும் வகையில் அண்மையில் சில மடல்கள் கிடைத்தன. யாழ்நூல் வெளியிட நம் விபுலாநந்த அடிகளார் பட்ட பாடுகளை இந்த மடல்கள் நமக்குக் காட்டுகின்றன. சான்றுக்குச் சில மடல்களை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கின்றேன். விபுலாநந்தர் மடல்களைத் தேடியபொழுது வெள்ளைவாரணர் அவர்களுக்கு உ.வே.சாமிநாதையர், நாவலர் சோமசுந்தர பாரதியார், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் வரைந்த மடல்களும் கிடைத்தன. ஓய்வில் அனைத்தையும் பார்வைக்கு வைப்பேன்.

விபுலாநந்தர் 23.09.1943 இல் எழுதிய மடல்:

முதல் பக்கம்:

ஆண்டவன் திருவருளை முன்னிட்டு அன்புள்ள தம்பி வெள்ளைவாரணத்துக்கு ஆசிர்வதித்து எழுதுவது. 17.08.43 கடிதம் உரிய காலத்திற் கிடைத்தது. 11.08.43 முதலாகப் பல்கலைக்கழகத்திலே பணியாற்றிவருகிறேன். தொடக்கமாதலினாலே நிரைப்பிடிக்க வேண்டியன பலவுள. பொதுவாகப் பல்கலைக்கழக முன்னேற்றத்திற்கும், சிறப்பாகத் தமிழ்ப் பகுதியின் ஆக்கத்திற்கும் செய்ய வேண்டிய பணிகள் பல. ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலமாகப் பிறநாட்டாருக்குத் தமிழின் பெருமையினை அறிவுறுத்தும்பணி இப்பல்கலைக்கழகத்தின் சிறப்பியல்பாக அமையலாம். நிற்க.

நமது அண்ணாமலைப் பல்கலைக்கழக றிஜிஸ்டிறார் அவர்கள் இசை சார்பாக  மூன்று சிறப்பு விரிவுரைகள் செய்யவேண்டுமென்று கேட்டு எழுதியிருந்தார்கள். 2ஆந்தேதியிடப்பட்ட அவர்கள் கடிதம் 6ஆந்தேதி கோயம்புத்தூருக்குப் போய் 7 ஆந்தேதி அங்கிருந்து திரும்பி 9ஆந்தேதி கொழும்பிற்கு வந்தது. 12 ஆந்தேதி விடையெழுதினேன்.

பக்கம் 2

இம்மாதம் 25 க்கும் 28 க்கும் இடையில் விரிவுரைகளை வைத்துக்கொள்ளலாம் என்பது விடை. கடிதம் பிந்துதல்கூடுமாதலின் தந்திச்செய்தி அனுப்பினேன். அக்டோபர் 18 இன் பின் தேதி குறிக்கும்படி றிஜிஸ்டிறார் அவர்கள் எழுதினார்கள். அக்டோபர் 12 இல் இங்கு கலாசாலை தொடங்கிறபடியால் டிசம்பர் 11 இன் பின்வரலாம் என விடையெழுதினேன். இப்பொழுது வந்தால் ‘யாழ்நூல்’ பதிப்பையும் தொடங்கிவிட்டு வரலாமென எண்ணியுள்ளேன். அவ்வெண்ணம் முற்றுப்பெற்றிலது. உருவப்படங்கள் சில தயாராகியிருக்கின்றன. யாழ்க்கருவியை ஓரளவிற்கு உருப்படுத்தி அதிலிருந்து உருவப்படம் செய்யவேண்டுமென முயன்றுகொண்டிருக்கிறேன். அச்சிற்கு வேண்டிய தாள் கொஞ்சம் வாங்கப்பட்டிருக்கிறது, இன்னும் வாங்க வேண்டுமெனத் திரு. அ. க. அவர்கள் எழுதினார்கள். அச்சுப்பிரதி மாதிரித்தாள் அனுப்புவதாகச் சொன்னார்கள். அதுவுங் கிடைத்திலது.

அண்மையிலே யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் போகிறேன்.

பக்கம் 3

இக்கடிதத்திற்கு விடை கீழே தந்திருக்கும் மேல்விலாசத்திற்கும் எழுதலாம். கொழும்புத் தமிழன்பர்கள் நகரமண்டபத்திலே பெருந்தொகையினராகக் கூடி வாழ்த்துரை பகர்ந்தார்கள். யாழ்ப்பாணம், மட்டக்களப்பிலும் அவ்வாறு செய்ய அங்குள்ளோர் முயன்றுகொண்டிருப்பதாக அறிந்தேன். பல்கலைக்கழக ஏழை மாணவர் நிதிக்குப் பணம் திரட்டும் வாயிலாதல் கருதி நானும் இவ்வாழ்த்துக் கூட்டங்களுக்கு உடன்படலாயிற்று.

அன்புள்ள

விபுலாநந்தர்

தவத்திரு விபுலாநந்தர் அவர்கள் க. வெள்ளைவாரணருக்காக வரைந்த பரிந்துரைக் கடிதம்



நன்றி: பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் குடும்பத்தினர்

1 கருத்து:

  1. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வெள்ளைவாரணர் ஐயா அவர்களுடன் பழகும் பேறு பெற்றோரில் நானும் ஒருவன். அவருக்கு விபுலானந்த அடிகளார் அவர்கள் எழுதிய கடிதங்களைக் காணும் வாய்ப்பினை உங்களால் பெற்றேன். நன்றி.

    பதிலளிநீக்கு