புதன், 6 மார்ச், 2013

பேராசிரியர் மது. ச. விமலானந்தம் அவர்கள்



பேராசிரியர் மது.ச.விமலானந்தம் அவர்கள்(பழைய படம்)

பேராசிரியர் மது. ச. விமலானந்தம் அவர்களை நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அறிவேன். அவர் இராசமன்னார்குடியில் பணியாற்றியபொழுது சென்று சந்தித்தமை நினைவுக்கு வருகின்றது(1991-92). அதன் பிறகு நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்ற விழாவில் பேராசிரியர் மது.ச.வி. அவர்களின் கையால் சான்றிதழைப் பெற்று வாழ்த்துப்பெற்றேன்.

அதன் பிறகு நான் புதுச்சேரியில் படிக்க வந்தபொழுது ஒருநாள் எங்கள் அறைக்குப் பேரா.மது.ச.வி. வந்தார். நானும் நண்பர் சு.தமிழ்வேலு அவர்களும் (மயிலாடுதுறைக் கல்லூரிப் பேராசிரியர்)  புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவர்களாக இருந்தபொழுது ஒன்றாக அறையில் தங்கியிருந்தோம். அப்பொழுது எங்களுடன் பேராசிரியர் மது.ச.வி. அவர்கள் ஓரிருநாள் தங்கியிருந்தார். புதுவைக் கடற்கரையில் காலார நடந்து மகிழ்ந்தோம். குளிக்கும் முன்பாக நாங்கள் புதிய மழிதகடுகளைக் கொடுத்தபொழுது வேண்டாம் என்று நாங்கள் ஒதுக்கிய தகடுகளைக் கேட்டுப்பெற்று முகம் மழிப்புச் செய்தார். எளிமையாக எங்களுடன் பழகியமை கண்டு வியந்துபோனாம்.

மது.ச.வி அவர்கள் மூத்த தமிழறிஞர்களின் வாழ்வியலை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். நூல்பதிப்புகள் பற்றியும், நூல்வெளியீடு பற்றியும் எங்களுக்கு எடுத்துரைத்து ஊக்கப்படுத்தினார். பாவலர் அரிமதி தென்னகன் ஐயா அவர்களின் நூல்வெளியீடு ஒன்று அந்த நேரத்தில் அரும்பார்த்தபுரம் அருகில் நடந்தது. அந்த விழாவுக்கும் எங்களைப் பேராசிரியர் மது.ச.வி. அவர்கள் அழைத்துச் சென்றார். அந்த விழாவில் பேரா. மது.ச.வி அவர்கள் உலகு குளிர எனத்தொடங்கும் என்னும் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழிலிருந்து ஒரு பாடலை இனிய குரலில் பாடி அவையோரை மகிழ்ச்சிப்படுத்தினார்.

 என்னையும் நண்பர் தமிழ்வேலு அவர்களையும் நண்பர்களைப் போல் நடத்தினார். நாங்கள் அவரை அண்ணன் என்று அழைக்கும் அளவுக்கு உறவுபோற்றி நின்றோம். தமிழ்வேலு அவர்களை அ.சிம்பரநாதன் செட்டியார்போல் உள்ளதாகக் கூறினார். என்னை வேறொரு அறிஞரின் சாயலில் இருப்பதாக மகிழ்ந்து உரைத்தார். எங்கள் ஒவ்வொரு அசைவுகளையும் கூர்ந்தறிந்து நெறிப்படுத்தினார்.

பேராசிரியர் மது.ச.வி. அவர்கள் அவ்வப்பொழுது அஞ்சலட்டை விடுத்து ஊக்கப்படுத்துவார். ஒருமுறை தஞ்சை சென்று பேராசிரியர் அவர்களைச் சந்தித்துள்ளேன். நான் சென்னையில் பணியிலிருந்தபொழுது ஒருமுறை சென்னை வந்ததாகவும் நினைவு உள்ளது. நான் எழுதும் நூல்களை அவ்வப்பொழுது அனுப்பிவைக்கும்படி எனக்கு அஞ்சலட்டை வந்துசேரும். நானும் அனுப்பிவைப்பேன். சான்றிதழ் ஒன்று எனக்கு ஆங்கிலத்தில் வழங்கியதை இங்குக் குறிப்பிட்டாகவேண்டும். அந்தச் சான்றில் என்னை மதித்த பாங்கினை அழகிய வரிகளில் செறித்து எழுதியிருந்தார். காலங்கள் உருண்டோடின.

முனைவர் பட்டம், பணி, புதுவைப் பணி …. இவற்றிற்கிடையே ஒருநாள் புதுவை வருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் அந்த வருகை தடைப்பட்டதுபோலும். பலவாண்டுகளாக எங்கள் பேராசிரியர் அண்ணன் மது.ச. அவர்களைக் காணாமல் உள்ளேன்.

பேரா. மது.ச.வி அவர்கள் வாழ்க்கை பற்றிய தெளிவுகொண்டவர். தம் ஓய்வு ஊதியப் பணத்தையெல்லாம் அறக்கொடை நிறுவித் தமிழறிஞர்களின் பெயரில் தொடர்ந்து பொழிவுகள் நடக்கப் பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஏற்பாடு செய்துள்ளார்.





தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் என்ற அரிய நூலின் வழியாகப் பேராசிரியர் அவர்கள் உலகத் தமிழறிஞர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அந்த நூலை விரிவுப்படுத்திப் பல தொகுதிகளாக வெளியிட வேண்டும் என்பது பேராசிரியரின் எதிர்காலத் திட்டமாக இருந்தது. தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் எழுதவும் பேசவுமான ஆற்றல்பெற்றவர். நட்பைப் போற்றுவதில் பேருவகை அடைபவர். மடல் எழுதுவதில் ஆர்வம்காட்டுபவர். இளைஞர்களை ஊக்கப்படுத்துவதை வாழ்க்கை நோக்கமாகக் கொண்டவர். தம் மாணவர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் நினைவில் வைத்திருப்பவர். தம்முடன் பழகியவர்களைக் கண்டு உரையாடுவது இவர் விருப்பமாக இருக்கும். தமக்குப் பாடம் போதித்த அறிஞர்களை மிக உயர்வாகப் பொற்றும் பாங்கை இவரிடம் கண்டு மகிழ்ந்துள்ளேன். பேரா. மது.ச.வி. அவர்களின் தமிழ்வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

பேராசிரியர் மது.ச.விமலானந்தம் அவர்களின் தமிழ்வாழ்க்கை

மது.ச.விமலானந்தம் அவர்கள் தஞ்சாவூரில் 27.09.1935 இல் பிறந்தவர். பெற்றோர் மது. சச்சிதானந்தம் திருமதி அம்மணி அம்மாள். தஞ்சை தூய பேதுரு பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றவர். திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் படித்து பி.ஏ.பட்டம் பெற்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் படித்து முதுகலைப்பட்டம் பெற்றவர். பேரா.மது.ச.வி. அவர்கள் 12.06.1964 இல் கண்ணா எனப்படும் காஞ்சனமாலா அவர்களை மணந்துகொண்டார். இவர்களுக்கு விசயானந்தம் என்ற ஆண்மகன் பிறந்தார்.

மது.ச.விமலானந்தம்  அவர்கள் தஞ்சாவூர் சரபோசி கல்லூரியில் 25.06.1958 இல் விரிவுரையாளராகப் பணியில் இணைந்தார். அதன் பிறகு சென்னை மாநிலக் கல்லூரி, நந்தனம் கல்லூரி, மாநிலக் கல்லூரி, இராசிபுரம் கல்லூரி, குடந்தை அரசு கல்லூரி, இராசமன்னார்குடி கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மது, மகிழ்ச்சி, விமலன், விமல், மாசில் மகிழ்நன் என்ற புனைபெயர்களிலும் எழுதியவர்.

மது.ச.விமலானந்தம் அவர்கள் பவானந்தர் கழகம் நிறுவிய பவானந்தம் பிள்ளையின் பெயரன் என்ற பெருமைக்குரியவர். நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் உறவினருமாவார்.

திறனாய்வுத்தென்றல்(1982), முத்தமிழ் ஏந்தல்(1984) என்னும் பட்டங்களைப் பெற்றவர்.

பேராசிரியர் மது.ச.விமலானந்தம் அவர்களின் தமிழ்க்கொடை
1.   சிலம்புப் புதையல் 1962
2.   பாட்டும் சபதமும் 1963
3.   தமிழ் இலக்கிய வரலாறு 1965
4.   இலக்கிய ஜோதி 1975
5.   கட்டுரைக் கனிகள் 1980
6.   தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் 1987
7.   ஆனந்தகுமாரசாமி 2002
8.   பண்பாளர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் 2001
9.  மணவாழ்க்கை உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.






2 கருத்துகள்:

  1. இராசிபுரம் அரசு கல்லூரியில் அறிஞர் மது.ச வி.யுடன் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவன் நான்.

    மற்றவர்கள் அரட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பார்.

    சிறந்த அறிஞர்.

    இப்பதிவைப் படித்து மிகவும் மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் -மது. ச. விமலானந்தம் புத்தகம் எங்கே கிடைக்கும்?

    பதிலளிநீக்கு